Sunday, December 31, 2017

வைகோ புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு, குறிப்பாக காவிரி நதிநீர் உரிமைக்கு மத்திய அரசின் வஞ்சகப் போக்கால் அபாயமும், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தையும், நியூட்ரினோ நாசகாரத் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ள ஆபத்தான சூழலும் வளர்ந்துள்ள நிலையில், 2018 ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது.

அறிவும், ஆற்றலும் கொண்ட இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகள் இல்லை.

ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கி விடாமல், வாக்குரிமையைப் பயன்படுத்தும் கடமை ஆற்றிட தமிழக வாக்காளர்கள் இப்புத்தாண்டு நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் துன்பத்தை நீக்கும் விடியலான ‘சுதந்திரத் தமிழ் ஈழம்’ எனும் இலக்கை அடைவதற்கு ஈழத்தமிழர்களிடமும், உலகெங்கும் வாழும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும் ஐ.நா. மன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலையை உருவாக்க சூளுரைப்போம்.

இருளுக்குப் பின் வெளிச்சம்; பனிக்காலத்திற்குப் பின்னர் வசந்தம் என்ற உணர்வோடு நம்பிக்கைக் கொண்டு தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என 31-12-2018 அன்று வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, December 27, 2017

இந்திய அரசு, மலேசிய அரசுக்கு கண்டனம்!

வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை விதித்து விமான நிலையத்தில் திரும்ப அனுப்பிய சம்பவம் குறித்து மத்திய அரசு மலேசியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து வைகோ அவர்களுக்கு 2017 டிசம்பர் 7ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடித விவரம் வருமாறு: -

2017 ஜூன் 9 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து பிரதம அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தீர்கள். இந்தப் பிரச்சினை குறித்து கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்து உள்ளது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும், புதுடெல்லியில் உள்ள மலேசிய நாட்டின் தூதரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து இந்திய அரசின் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என மதிமுக தலைமை நிலையம் 27.12.2017 அன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மதிமுக உயர்நிலை குழு ஜனவரி 6, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 7!

*தலைமைக் கழக அறிவிப்பு*

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு,
அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் வருகிற 06.01.2018 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கும்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கும் சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில்  கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
26.12.2017

Monday, December 18, 2017

எஸ்.சி; எஸ்.டி மாணவர்களை தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளிய அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்!

தனியார் கல்வி நிறுவன கல்லூரிகளில் மருத்துவம், சட்டம், பொறியியல் பயிலும் தலித், பழங்குடி இன மற்றும் தலித் கிறித்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி வந்தது.  இதனை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமளவுக்குக் குறைத்துவிட்டது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியல் இன மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புத் தொகை 85 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகயும், உதவித் தொகை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 28 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்விக் கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு பட்டியல் இன மாணவர்கள் கோரிக்கை வைத்ததை தமிழக அரசு அலட்சியப்படுத்திவிட்டது. மத்திய அரசும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 1,350 கோடி கல்வி கட்டண உதவித்தொகையை வழங்காமல் தன் பங்கிற்கு வஞ்சித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால், ஏழ்மையும், வறுமையும் நிறைந்த ஒன்றரை இலட்சம் தலித், பழங்குடி இன மாணவர்கள் ஜனவரி 2, 2018 இல் தொடங்கும் கல்லூரித் தேர்வுகளை எழுத முடியாமல், படிப்பைக் கைவிடும் நிலைமைக்கு ஆளாகி உள்ளதை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளது.

சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தலித், பழங்குடி இன மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் உதவித் தொகையை குறைத்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக அரசு உடனடியாக எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் கல்லூரி கல்விக் கட்டணம், உதவித் தொகையை முழுமையாக வழங்கி, கல்லூரி படிப்பைக் கைவிடும் சூழலைத் தடுக்க வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 18-12-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை