Monday, October 7, 2019

மேகேதாட்டு அணை; மத்திய அரசு அனுமதி கூடாது! வைகோ வலியுறுத்தல்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டி முடிக்க வேண்டும் என்பதில் கர்நாடக மாநிலம் முனைப்பாக இருக்கின்றது. கர்நாடக அரசின் சார்பில் அதன் நிர்வாக நிறுவனம் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகத்தின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 ஆம் ஆண்டில் மைசூர் மாகாணத்திற்கும் - சென்னை மாகாணத்திற்கும் இடையே உருவான ஒப்பந்தம், 1924 இல் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே, காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்து இருக்கின்றன.

1892 ஒப்பந்தத்தின்படி மைசூர் மாகாணத்தின் முதன்மையான ஆறுகள் என்று ஒரு அட்டவணை உருவாக்கப்பட்டு, அந்த 'ஏ' அட்டவணையில் காவிரி, துங்கபத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வடபினாகினி, சித்திராவதி உள்ளிட்ட 15 ஆறுகள் சேர்க்கப்பட்டன.

சென்னை மாகாண அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு மேற்கண்ட 'ஏ' அட்டவணை ஆறுகளில் அணைகள் கட்டக் கூடாது; இந்த ஆறுகளில் புதிய நீர்த்தேக்கமோ, அணைக்கட்டோ கட்ட விரும்பினால் மைசூர் மாகாண அரசு - சென்னை அரசுக்கு அது குறித்த திட்ட விவரங்களை தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும், என்று 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் திட்டவட்டமாக கூறுகிறது.

அதே போன்று 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமும் அதையே குறிப்பிடுகிறது. இந்த ஒப்பந்த விதி 10 இல் 15 உட்பிரிவுகளில் இரு மாநிலங்களும் புதிய நீர்த்தேக்கங்களை கட்டிக் கொள்வது, நீரை பகிர்ந்து கொள்வது குறித்த நடைமுறைகளை வரையறுக்கின்றன.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பும், 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் உருவான ஒப்பந்தத்தின் விதிகளையே அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொகுதி - ஏ, பாகம் 9 இல், பிரிவு ஓஐ இல் கீழ்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

மேல் பாசன மாநிலம், கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு அட்டவணையில் ஒதுக்கி உள்ள தண்ணீரின் அளவை பாதிக்கும் செயலைச் செய்யக் கூடாது. ஆனால் தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் கலந்து பேசி - ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று மேல்பாசன மாநிலம் தண்ணீர் திறந்து விடும் முறையில் மாறுதல் செய்து கொள்ளலாம்.

இதன்படி கர்நாடகம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பும் அனுமதிக்கவில்லை.

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகளிலும், கர்நாடகம் தன்னிச்சையாக அணைகள் கட்டிக் கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் உள்ள பெரிய அணை கிருஷ்ணராஜசாகர் அணை ஆகும். அதன் கொள்ளளவு 46 டி.எம்.சி.; மற்ற அணைகளான ஹேமாவதி, கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 114 டி.எம்.சி. ஆகும்.

தற்போது கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி, கபினி அணை நிரம்பி, அர்க்காவதி அணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறினால் அந்த நீர் வேகமாக மேட்டூர் அணை வந்து சேரும். இடையில் கர்நாடக எல்லைக்குள் தடுப்பு அணை கிடையாது. அந்த நீரை மேட்டூருக்கு வரவிடாமல் தடுக்க கர்நாடகம் போட்டிருக்கின்ற திட்டம்தான் ‘மேகேதாட்டு'வில் 67.14 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணை கட்டும் திட்டம் ஆகும்.

மேகே தாட்டு அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும்.

தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது எநன்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 07-10-2019 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, October 5, 2019

இராமர் பெயரில் படுகொலைகள் கூடாது; சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திடுங்கள் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த அறிஞர்கள் மீது, தேசத்துரோக வழக்கு! வைகோ கடும் கண்டனம்!

கடந்த மே மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல் நாள், மத்தியப் பிரதேச மாநிலம் செனாய் பகுதியில் பசுக் காவலர்கள் என்ற போர்வையில், சுபம்சிங் என்ற மதவெறியன் தலைமையில் ஒரு மதவாதக் கும்பல், மாட்டுக்கறி வைத்து இருப்பதாகக் கூறி, இஸ்லாமியப் பெண் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கினர். அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கும்படி மிரட்டி அடித்தனர். அந்தக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மை பெற்றதால் ஊக்கம் பெற்ற சங் பரிவாரங்கள், சிறுபான்மை, தலித் மக்கள் மீது தொடர்ந்து கொலை வெறித் தாக்குதல்களை மேற்கொண்டன.
மே 26 ஆம் தேதி, பிகாரின் பெகுசராய் மாவட்டத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ராஜிவ் யாதவ் என்பவர், முகமது காசிம் என்ற இஸ்லாமிய இளைஞரிடம், உனக்கு இங்கு என்ன வேலை? பாகிஸ்தானுக்குப் போ என்று மிரட்டித் துப்பாக்கியால் சுட்டார்.
பிரதமர் மோடி, உலக யோகாநாள் விழாவில் கலந்த கொள்ள, கடந்த ஜூன் 23 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் சென்றார். அதே நாளில், ஈத் பெருநாளுக்காக, வெளியூரில் பணியாற்றும் தப்ரோஸ்அன்சாரி என்ற 24 வயது முஸ்லிம் இளைஞர், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரைப் பிடித்துக் கட்டி வைத்த மதவெறிக் கும்பல், ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் என்று முழங்கச் சொல்லி, இரத்தம் சொட்டச் சொட்டக் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். 12 மணி நேரம் அந்த இளைஞர் மீது ஈர இரக்கம் இன்றி நடத்திய கொடூரத் தாக்குதலைப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ந்தது அந்தக் கும்பல்.
உயிருக்குப் போராடிய நிலையில், நான்கு நாள்களில் தப்ரோஸ்அன்சாரி மரணம் அடைந்தார்.
ஜூன் 27 ஆம் தேதி, மும்பை தானே பகுதியில் இந்துத்துவக் கும்பல் ஒன்று, ஓலா வாடகை மகிழுந்து ஓட்டுநர், ஃபைசல் உஸ்மான் எனும் 25 வயது முஸ்லிம் இளைஞரைப் பிடித்து, ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு தாக்கியது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாக்பூர் அருகே மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள், முகமது முக்தார், தில்பர் உசேன், நவுசார் அலி, என்தாம் அலி ஆகியோரை, ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு தாக்கினர்.
அதே கொல்கத்தாவில், மதரசாவில் பணியாற்றும் ஹபீஸ்முகமது என்ற ஆசிரியரையும் ஜெய் ஸ்ரீ ராம் கூறும்படித் தாக்கியது மட்டும் அல்லாமல், தொடரியில் இருந்து வெளியே தள்ளி விட்டது.
ஜூன் 28 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, பாரா பகுதியில் வசிக்கும் முகமது தாஜ் என்னும் 16வயது முஸ்லிம் இளைஞர், பள்ளிவாசலில் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பியபோது, காவிக்குண்டர்கள் வழிமறித்து, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லும்படித் தாக்கினர்.
ஜூலை 19 ஆம் தேதி பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் எனற் ஊரில், அதிகாலை 4.30 மணிக்கு, கால்நடைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட மூன்று இஸ்லாமிய இளைஞர்களை, இந்துத்துவ வெறிக்கும்பல் அடித்தே கொன்றது.
ஜூலை 30 ஆம் தேதி, உ.பி. மாநிலம் சந்தாலி மாவட்டத்தில் 15 வயது முஸ்லிம் இளைஞரை, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லக்கூறி அடித்துத் துவைத்த கும்பல், அவரை உயிரோடு எரித்துக் கொன்றது.
இவ்வாறு இந்தியா முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கக்கூடாது என்று, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு வெளிப்படையாக மடல் எழுதினர்.
2019 ஜூன் 23 ஆம் தேதி, திரைப்பட இயக்குநர் அபர்ணா சென், வரலாலற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி, ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் கஷ்யப், டாக்டர் பினாயக் சென், சோமிதோரா சட்டர்ஜி, கொங்கணா சென், சுபா முட்கல், அனுபம் ராய், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள், பல்துறை விற்பன்னர்கள் கையெழுத்து இட்டு இருந்தனர்.
அக்கடிதத்தில்,
வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தின் பெயரால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றார்கள். தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில், ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கத்திற்காகவும், பசு வதை என்கிற பெயராலும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகுந்த வேதனை தருகின்றது. தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்குவோர் மீது, பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என்று எந்தப் பொருளும் இல்லை. ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகளை, தேசத்துக்கு எதிரானதாகக் கருதக் கூடாது. எதிர்ப்புக் கருத்துகளுக்கும் இடம் தருகின்ற நாடுதான் வலிமையானது.
பெரும்பாலான மக்கள் போற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை, போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். மேற்கண்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து, நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. ‘ராம்’ என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிகை எடுக்க வேண்டும்”
என வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பிகார் மாநில காவல்துறை பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
நாட்டில் மத சகிப்புதன்மை தொடர வேண்டும்; சிறுபான்மை தலித் மக்கள் மீது மதவாத சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்து மடல் எழுதியதற்காக, தேசத்துரோக சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும்.
இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 10-05-2019 தெரிவித்துள்ளார்.

Friday, October 4, 2019

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை உடனே வழங்குக! வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள், இடுபொருட்கள் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறை அனைத்தையும் எதிர்கொண்டு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு கொள்முதல் விலையை, உற்பத்தி செலவுகளுடன் 50 விழுக்காடு அதிகரித்துத் தரவேண்டும். அதற்குக் கொள்முதல் விலையாக ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு தீர்மானித்த கொள்முதல் விலையைக் கூட வழங்காமல், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை அலைக்கழிக்கின்றன.
கடந்த 5 ஆண்டு காலத்தில் கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத் தராமல், தமிழக அரசு அலட்சியமாக இருக்கிறது. 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகை ரூ.1430 கோடி உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையைக்கூட ஆலைகள் தரவில்லை. கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி கரும்பு வெட்டிய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்குரிய விலையைத் தர வேண்டும். ஆனால், அதுபோல் தருவது இல்லை.
நடப்பு ஆண்டில் மட்டும் தனியார் ஆலைகள் ரூ.281 கோடி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் ரூ.125 கோடி என மொத்தம் ரூ.406 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை வைத்திருக்கின்றன. இதையும் சேர்த்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.1836 கோடி ஆகும். இதனைப் பெற்றுத் தருவதாக ஒப்புக்கொண்ட தமிழக அரசு, இதுவரையில் அதனை நிறைவேற்ற முன்வரவில்லை.
இந்நிலையில், கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், மத்திய-மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை அரசு விருந்தினர் இல்லத்தில் நடைபெற்று இருக்கிறது.
இக்கூட்டத்தில், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவை, வங்கியில் கரும்பு பயிர்க்கடன் பெறுவதில் உள்ள பிரச்சினைகள், சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த தங்களது கோரிக்கைகளை கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அவற்றை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.
2016-17 அரவைப் பருவத்தில் மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2550 உடன், தமிழக அரசு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.200 சேர்த்து வழங்க முன்வந்தது. இந்த ஆண்டு மத்திய அரசு 2017-18 அரவைப் பருவத்தில் டன் ஒன்றுக்கு கரும்பு கொள்முதல் விலையாக ரூ.2612.50 ஆக தீர்மானித்துள்ளது. இதனுடன் தமிழக அரசு ஊக்கத் தொகையாக ரூ.137.50 சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆக கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2750 என்று நிர்ணயம் செய்திருப்பது எந்த வகையிலும் விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாது.
எனினும் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கிட ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.
கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 04-10-2019 தெரிவித்துள்ளார்.

Thursday, October 3, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும். வைகோ எச்சரிக்கை!

காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழக மக்களின் கோரிக்கைகளைத் துச்சமாக அலட்சியப்படுத்தி வரும் மோடி அரசு, கடந்த மே மாதம் காவிரிப் படுகை பகுதிகளை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளித்தது. இதன்படி பிரிவு 1 இல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு 2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைப்பதற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் மற்றும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் மோடி அரசு அனுமதி அளித்தது.
அதன்பின்னர் ஜூலை மாதம் திறந்தவெளி அனுமதி கொள்கையின் கீழ் தமிழகத்தில் நாகப்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டங்களில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்திட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் கடந்த ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் - மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், கரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் போராடி வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேலும் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் -2, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, காரைக்காலில் 3, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் என மொத்தம் 20 கிணறுகள் 459 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திட தற்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருக்கிறது.
காவிரி பாய்ந்தோடும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதிகளை பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்து, பாலைவனம் ஆக்கும் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருவதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு கள்ளத்தனமாக துணை போய், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்துக்கு உரியது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும். மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 03-09-2019 தெரிவித்துள்ளார்.