Tuesday, August 30, 2022

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்கிடுக. வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைலான ஆட்சியில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக கடந்த 24.08. 2022 அன்று ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015 ஆம் ஆண்டிலிருந்து தரப்படவில்லை. எனவே தொழிலாளர் தோழர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு ஏதுவாக பஞ்சப்படி எனும் DAவை விரைவில் அளித்திடுமாறு தமிழக அசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
30.08.2022

Thursday, August 18, 2022

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை: பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி! வைகோ MP கடும் கண்டனம்!

நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை சில கயவர்கள் தீ வைத்து எரித்ததால், அதில் பயணம் செய்த 59 பயணிகள் உயிரோடு கருகிச் சாம்பல் ஆகினர்.


அதற்குப் பின்னர் ஒரு வார காலம் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப்பட்டனர். குஜராத் மாநிலம் இரத்தத் தடாகத்தில் மிதந்தது. முஸ்லிம் மக்கள் மீது இந்துத்துவ மதவெறிக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலால் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.


2002 மார்ச் 3 ஆம் நாள், ஒரு கும்பல் கொடூர ஆயுதங்களுடன் ரன்திக்பூர் கிராமத்தில் நுழைந்து பில்கிஸ் பானு என்ற பெண்ணையும், அவரது இரண்டு வயது குழந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் மீது தாக்குதல் நடத்தினார்கள். 11 பேர் கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ்பானு மதவெறிக் கயவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.


குஜராத் இனப் படுகொலை வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ., 25.02.2004 அன்று உச்சநீதிமன்றத்தில் தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் கலவரக்காரர்கள் பில்கிஸ் பானு உள்ளிட்ட 17 முஸ்லிம் பெண்களைச் சுற்றிச் சூழ்ந்தனர். தாய்மைப் பேறு அடைந்திருந்த பில்கிஸ் பானு உள்ளிட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். 11 பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை குஜராத் காவல்துறை மூடி மறைக்க முயற்சி செய்தது என்று சி.பி.ஐ. சுட்டிக் காட்டியது.


இக்கொடூர கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கு 2008 இல் சி.பி.ஐ. நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2018 இல் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.


இந்நிலையில், கொலையாளிகள் தங்களை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, 11 பேரை வெட்டிக் கொன்ற கொலையாளிகளை 75 ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி குஜராத் மாநில பா.ஜ.க. அரசு முன் விடுதலை செய்திருந்தது. இது மன்னிக்கவே முடியாத மாபாதகச் செயலாகும்.


குஜராத் மாநில பா.ஜ.க. அரசின் இத்தகைய செயல் வெட்கி தலைகுனியச் செய்கிறது. இது ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி.


நாட்டின் 75ஆவது விடுதலை நாள் விழாவில் செங்கோட்டையில் தேசியக் கொடியை உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, அதிகாரமளித்தல் போன்றவற்றை குறிப்பிட்டார். ஆனால் இவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் துளிகூட தொடர்பு இல்லாதவர்கள் என்பதை குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை மூலம் மீண்டும் நிருபணம் ஆகிவிட்டது.


குஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை கடும் கண்டனத்திற்குரியது. குஜராத் மாநில அரசு தமது உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வன்முறை நடத்திய கொலையாளிகளை மீண்டும் சிறையில் தள்ள வேண்டும்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

18.08.2022

Wednesday, August 17, 2022

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் தடுத்து நிறுத்துக! வைகோ MP வலியுறுத்தல்!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து உருவாகும் கொசஸ்தலை ஆறு, ஆந்திர பகுதியான நகரி வழியாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சிவாடா, ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரிக்கு வந்தடைகிறது. சென்னை நகருக்குள் 16 கி.மீ. தொலைவிற்கு ஓடும் இந்த ஆறு எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.

வேலூர், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் நீர்பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக கொசஸ்தலை ஆறு விளங்கி வருகிறது.
ஆந்திர மாநில அரசு ஏற்கனவே சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் கொஸ்தலை ஆற்றுக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடுத்து தேக்கிவிட்டது.
தற்போது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேலும் இரண்டு புதிய தடுப்பு அணைகள் கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு ரூ.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆந்திர மாநிலம் கத்திரிப்பள்ளி என்ற இடத்திலும், மற்றொன்று நகரி மண்டலம் மொக்கலகண்டிகை என்ற இடத்திலும் கட்டப்பட உள்ளன.
கத்திரிப்பள்ளி பகுதியில் கட்டப்படும் அணைக்கு ரூ.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 500 ஏக்கரில் அணையைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போன்று மொக்கலகண்டிகை என்ற இடத்தில் அமையும் அணை 420 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதற்கு ரூ.72.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்ட பிறகு 4,428 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், கத்திரிப்பள்ளி தடுப்பு அணை மூலம் 4,629 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்றும் ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அணை கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கிருஷ்ணாபுரம் பகுதியில் தடுப்பு அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு வரும் நீரைத் தடுத்துவிட்ட ஆந்திர மாநில அரசு, தற்போது மேலும் இரண்டு தடுப்பு அணைகளைக் கட்டுவதற்கு திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தத் தடுப்பு அணைகள் கட்டப்படுமானால், தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர்கூட கிடைக்காது. இதனால் வேலூர், திருவள்ளூர் மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும். நிலங்கள் வறண்டு போகும் நிலை உருவாகும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டுவிடும்.
கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் 8 ஊராட்சிகளில் மட்டுமே பாய்கிறது. இந்த ஆற்றின் தண்ணீரை திருப்பிவிட மேலும் இரண்டு அணைகளை கட்ட ஆந்திர மாநிலம் முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆந்திர மாநில அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
17.08.2022

Monday, August 15, 2022

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக! வைகோ MP வலியுறுத்தல்!

இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்திக் கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.

சீனாவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்க் -5, விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்தக் கப்பலின் மூலம் வான்வழி 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அதிகமாக உளவு பார்க்க முடியும். ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் அமைந்துள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகிற அணு ஆராய்ச்சி மையங்களை இந்தக் கப்பலின் மூலம் கண்காணிக்க முடியும். மேலும் கேரள, ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய துறைமுகங்கள் உள்ளிட்டவற்றையும் உளவு பார்க்க முடியும்.
இந்துமாக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாக் நீரிணைக்கு அருகில் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவின் தென் எல்லையில், நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கின்ற அறைகூவல் ஆகும். சீனக் கப்பல் அங்கு நிறுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக செய்திகள் வந்தபோதே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கடும் கண்டனங்கள் எழுந்தன.
மாநிலங்களவையில், ஆகஸ்டு 3 ஆம் தேதி தேதி பூஜ்ய நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன்.
“சீனாவின் உளவுக் கப்பல் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் போர்க்கப்பல் ஆகும். இப்போர்க் கப்பலின் வருகை நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இலங்கையின் பொருளாதார பேரழிவைச் சமாளிக்க இந்தியா 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி உதவி செய்துள்ள போதும், இலங்கை அரசு, இந்தியா கவலை கொள்ளும் செயலில் ஈபட்டிருக்கிறது.
சீனா உளவு பார்க்காமல் இருக்கவும், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு, இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்” என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால், தற்போது இலங்கை வெளியுறவுத் அமைச்சகம், சீனாவின் யுவான் வாங்க்-5 உளவுக் கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 ஆம் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக இந்தியா தீவிரம் கவனம் செலுத்தி சீனக் கப்பல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2022

தகவல் தொழில்நுட்பத் துறையில் மனிதவள திட்டமிடலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

கேள்வி எண். 2346

(அ) 2021-22 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட தொழில்நுட்பத்தில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(ஆ) தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதால், இந்த வளர்ச்சி தொடர்ந்து செயலாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டிஜிட்டல் திறன்களில் எதிர்காலப் பணியாளர்களை மேம்படுத்துவதற்கான மறுதிறன் திட்டங்களின் விவரங்கள் என்ன?
(இ) கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த வருவாய், ஆண்டு வாரியாக எவ்வளவு?
(ஈ) தகவல் தொழில்நுட்பத் திறன்களில் முதன்மை நிலையை அடைய மேகக் கணிமம், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் இணையதள விஷயங்கள் ஆகியவற்றில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதவள திட்டமிடலுக்குத் தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் 05.08.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ): தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தகவலின் படி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 2021-22 நிதியாண்டில் நேரடியாக சுமார் 51 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்கள்.
(இ): இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த வருவாய் 2019-20 ஆண்டில்190, 2020-21 ஆண்டில் 196, 2021-22 ஆண்டின் மதிப்பீடு 227 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
(ஆ) மற்றும் (ஈ): தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கக் கூற்றுப்படி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி தொடர்ந்து செயலாற்ற 2026 ஆம் ஆண்டுக்குள் மனிதவளத் தேவை சுமார் 95 லட்சமாக இருக்கும். அதில் மேகக் கணிமம், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் இணையதளம் போன்ற முக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு 55 இலட்சம் தொழில்நுட்பப் பொறியாளர்கள் தேவை.
தொழில்துறையால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளில், புதிய பணியாளர்களை அதிகப்படுத்துதல், இரண்டாம், மூன்றாம் தர நகரங்களுக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்களில் எதிர்கால பணியாளர்களை உருவாக்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் இணைந்து “எதிர்காலத் திறன் (மறுதிறன்/மேல்திறன் திட்டம்(PRIME) என்ற தலைப்பில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன. வேலைவாய்ப்புக்கான தகவல் தொழில்நுட்ப மனிதவளம் மறு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது
எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக திறன் (FutureSkills PRIME) மறுதிறன் திட்டத்தின் கீழ் இதுவரை 8.20 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.36 லட்சம் பேர் தங்கள் படிப்புகளை முடித்துள்ளனர். மேலும், தேசிய மென்பொருள் மற்றும்சேவை நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மறுதிறன் திட்டங்கள் ஆகியவற்றில் பணியாளர் தளம், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிப்பதற்காக தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் கல்வியாளர்கள் இணைந்து செயல்பட திட்டமிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
11.08.2022

Thursday, August 11, 2022

ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு வைகோMP மரியாதை!

மாலை முரசு அதிபர் மறைந்த ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் எண்பத்தி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் அவர்கள் உடன் இருந்தார்.

Wednesday, August 10, 2022

சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? வைகோ MP கேள்விக்கு அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதில்!

கேள்வி எண். 1717

(அ) தொழில்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, தொழில் துறைக்கு, குறிப்பாக கொரோனா தொற்று முடக்கத்தின்போது ஏதேனும் பிணை எடுப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதா?
(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும், உயிர்வாழ்வதற்கும் சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன?
(இ) ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் உரியவர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கண்டறிய ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(உ) இல்லையெனில், துறை புத்துயிர் பெற சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
மேற்கண்ட வைகோ அவர்களின் கேள்விகளுக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒன்றிய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா அவர்கள் 01.08.2022 அன்று அளித்துள்ள பதில்
(அ) மற்றும் (ஆ): கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்காக (MSME) ஒன்றிய அரசு ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பை அறிவித்து செயல்படுத்தியுள்ளது. இதில் பின்வரும் முக்கிய திட்டங்கள் உள்ளன:
1) அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS): குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட வணிகங்களுக்கு பிணைய இலவச தானியங்கு கடன்களை வழங்குவதற்காக மே, 2020 இல் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில், உத்தரவாதத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பு ரூ. 3 லட்சம் கோடி. பின்னர் ரூ. 4.5 லட்சம் கோடி. 2022-23 நிதிநிலை அறிவிப்பின்படி, ரூ. 5 லட்சம் கோடி என்பதாக மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படுகிறது. கூடுதல் உத்தரவாதத் தொகை ரூ. 50,000 கோடி விருந்தோம்பல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
2) சுயசார்பு இந்தியா (SRI) நிதி: 2020 ஆம் ஆண்டு மே மாதம் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக, சுயசார்பு இந்திய நிதி என்ற பெயருடன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் சமபங்கு நிதியாக உட்செலுத்துவதற்காக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ந்து பெரிய அளவில் மாறுவதற்கான சாத்தியமும், நம்பகத்தன்மையும் இருக்கிறது. இந்த முயற்சியானது குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையின் தகுதியான பிரிவுகளுக்கு வளர்ச்சி மூலதனத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3) கடன் உத்தரவாதத் திட்டத்தின் துணை கடன் (CGSSD): இந்த திட்டம் மே 2020 இல் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அழுத்தத்திற்கு ஆளான குறு, சிறு, நடுத்தரத் தொழில் ஊக்குவிப்பாளர்களுக்கு, கடன் வசதியை வழங்கும் நோக்கில், சிறப்புக் குறிப்புக் கணக்கு (SMA)-2 மற்றும் செயல்படாத சொத்துக் கணக்குகள் (NPA), கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி மறுசீரமைக்கத் தகுதியுடையவை. இத்திட்டத்தின் கீழ், ஊக்குவிப்பாளர் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் உள்ள வருமானத்தில் அரை பங்கு துணைக் கடனாக செலுத்துவார்கள்.
(ஈ) முதல் (உ): குறு, சிறு, நடுத்தரத் தொழில் அமைச்சகம், 7 செப்டம்பர் 2021 அன்று வகைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ஒரு ஆய்வை வழங்கியது. இதன்படி கொரோனா பெருந் தொற்று நோயின் தாக்கத்தால இத்துறையில் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பிடுவதும், மேற்கூறிய ஆய்வின் விதிமுறைகளில் அடங்கும். கணக்கெடுக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் சுமார் 65 சதவீதம் பேர், அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் பலன்களைப் பெற்றுள்ளனர் என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது.
நிதிச் சேவைகள் துறை (DFS) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் (NIBM), NOMURA மற்றும் Trans Union CIBIL ஊஐக்ஷஐடு மூலம் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான ஆதரவின் தாக்கத்தை மதிப்பிட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன்கள் பெறுவது மிகவும் எளிதானது, செலவு குறைந்தது, குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியாக இருந்தது, பணப்புழக்கச் சுமை குறைக்கப்பட்டது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரத் துறை நெருக்கடியை சமாளிக்க உதவுவதில் வெற்றிகரமாக உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் குறித்த 06.01.2022 தேதியிட்ட ஆய்வு அறிக்கையை அக்குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வெளியிட்டுள்ளார். அதில், “கிட்டத்தட்ட 13.5 லட்சம் குறு, சிறு, நடுத்தர கணக்குகள் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தால் (மறுசீரமைக்கப்பட்டவை உட்பட) சேமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 93.7 சதவீதம் கணக்குகள் குறு மற்றும் சிறு வகையைச் சேர்ந்தவை” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
09.08.2022

ஜிப்மர் செவிலியர்கள் வேலை வாய்ப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி புறக்கணிப்பு! வைகோ MP கண்டனம்!

ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செவிலியர் காலிப் பணியிடங்களுக்காக 2022, ஜூலை 13 ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

அதன்படி 21.07.2022 முதல் 11.08.2022 அன்று வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் 28.07.2022 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்களை திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது.
எனவே ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக இணைக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
10.08.2022

Monday, August 8, 2022

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி!

கேள்வி எண்.1895

(அ) உக்ரைனில் போர் காரணமாக, மருத்துவக் கல்வியை தொடர முடியாமல், தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி தேசிய மருத்துவ ஆணையத்தின் முன் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் டெல்லி வந்து போராட்டம் நடத்தினார்களா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
(இ) உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்காக எம்.பி.க்கள் மற்றும் பொது பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதா? அப்படியெனில், அதன் விவரங்கள் மற்றும் அதற்கு என்ன பதில் தரப்பட்டது?
(ஈ) போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மறுசேர்க்கை வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள் என்ன?
மேற்கண்ட வைகோ அவர்களின் கேள்விகளுக்கு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் அவர்கள் 02.08.2022 அன்று அளித்த பதில்:-
(அ) முதல் (ஈ) வரை: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு “திறன் தணிக்கை தேர்வு (Screening Test) விதிமுறைகள்- 2002” அல்லது “வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிமம் விதிமுறைகள்- 2021” கீழ் வருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 இன் படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இந்திய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள திட்டத்தின் கீழ், இளங்கலை மருத்துவப் படிப்பின் கடைசி ஆண்டில் (கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக, வெளிநாட்டு மருத்துவ நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது) இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தனர். இதன்படி, அந்தந்த நிறுவனத்தால் படித்து முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது
இந்திய மருத்துவ ஆணையம் அறிவித்த பின்பு, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMG) தகுதி பெற்றவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாய சுழற்சி மருத்துவப் பயிற்சி (CRMI) பெற வேண்டும். அதன்பிறகு, இந்திய நிலைமைகளின் படி மருத்துவப் பயிற்சிகள் வழங்கப்படும்.
வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சுமூகமான முறையில் வழங்குவதற்காக, கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து பல்கலைக் கழகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அவற்றைத் தீர்ப்பதற்கும், மாணவர்களுக்கு உதவுவதற்கும் தூதரகத்தின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
08.08.2022

Saturday, August 6, 2022

வைகோ எம்பிக்கு நூல் வழங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி!

நாடாளுமன்ற் வளாகத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி அவர்கள், தனது கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான, “The Birthing Hut and Other Stories” என்ற புத்தகத்தினை, மதிமுக பொதுச் செயலாளர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், திரு. #வைகோ MP அவர்களிடம் வழங்கினார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தியாகவேங்கை கணேசமூர்த்தி அவர்கள்.

'மிஷன் வாத்சல்யா’ திட்டத்திற்காக தன்னார்வக் குழுக்களுடன் கூட்டு சேர ஒன்றிய அரசு திட்டமிடுகிறதா? ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானியிடம் வைகோ கேள்வி!

கேள்வி எண்.2079

(அ) கைவிடப்பட்டவர்கள் அல்லது காணாமல் போன குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்திற்காக தனியார் துறை மற்றும் தன்னார்வக் குழுக்களுடன் கூட்டு சேர ஒன்றிய அரசு திட்டமிடுகிறதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்போடு இத்திட்டம் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, அதன் விவரங்கள்?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி அவர்கள் 03.08.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ) முதல் (இ) வரை : மிஷன் வாத்சல்யா திட்டம் என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைந்த, வளர்ச்சி மற்றும் குழந்தை பாதுகாப்பு முன்னுரிமைகளை அடைவதற்கான ஒரு வரைபடமாகும். இது குழந்தை உரிமைகள், மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மேலும் ‘குழந்தைகளை விட்டுவிடாதீர்கள்' என்ற முழக்கத்துடன், சிறார் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் - 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் - 2012 ஆகியவை இந்தப் பணியைச் செயல்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குகின்றன. மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிதி வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதும் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிதிப் பகிர்வு முறையே ஒன்றிய, மாநிலங்களுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவைகளுக்கு நிதிப் பகிர்வு முறை 90:10 என்ற விகிதத்தில் உள்ளது.
சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதம் ஒன்றிய அரசு பங்காகும்.
மிஷன் வாத்சல்யா திட்டமானது, தனியார் உதவியுடைய பங்களிப்பின்கீழ் நிறுவன சாரா பராமரிப்பு மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவ முடியும். குழந்தை மற்றும் குழந்தைகள் குழு, நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யும் தனிநபர்கள், பொது / தனியார் துறை நிறுவனங்களை, ஊக்குவிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். இத்தகைய ஏற்பாடுகள் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 மற்றும் அதன் விதிகளின்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டது ஆகும்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
06.08.2022

தமிழ்நாட்டில் உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? ஒன்றிய இரயில்வே அமைச்சரிடம் வைகோ கேள்வி!

கேள்வி எண். 1570

(அ) ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக நாள்தோறும் 15 முதல் 45 நிமிடங்கள் வரை இரயில்கள் தாமதமாக வருகின்றனவா? தமிழ்நாட்டில் பல்வேறு இரயில்வே கோட்டங்களில் உள்ள ஒற்றை வழிப் பாதைகளின் எண்ணிக்கையைக் கண்டறிய இரயில்வே ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியதா?
(ஆ) அப்படிப்பட்ட இரயில் நிலையங்களில், குடிநீர் வசதிகள், வாகன நிறுத்துமிடம் இல்லாமை, சுகாதாரமற்ற கழிவறைகள், போதிய பணியாளர்கள் இல்லாதது போன்ற அடிப்படைக் கட்டமைப்புப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா?
(இ) அவ்வாறாயின், நிலைமையை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரட்டைப் பாதையை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு இரயில்வே அமைச்சர் அ°வினி வைஷ்ணவ் அவர்கள் 29.07.2022 அன்று அளித்துள்ள பதில்:-
(அ) ஒற்றை வழிப் பாதைப் பிரிவுகளில் இயக்கப்படும் இரயில்கள் உட்பட இந்திய இரயில்வேயில் உள்ள இரயில்கள், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பட்டியலிடப்பட்டு, அதற்கேற்ப இரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இரயில்களின் ஒற்றைப் பாதை என்பது காரணமாக இருக்க முடியாது.
(ஆ) நாடு முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்குவது ரயில்வேயின் முயற்சியாகும். தேவையை நிறைவு செய்ய தமிழகத்தின் ஒற்றை வழி இரயில் பாதைகள் உட்பட அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேவை மற்றும் அனுசரணையின் அடிப்படையில் மேலே உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகளில் சாத்தியமான அனைத்து இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள இரயில் பாதைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(இ) இரயில்வே திட்டங்கள் பல்வேறு மாநில எல்லைகளில் பரவி இருப்பதால், இரயில்வே திட்டங்கள் மண்டல வாரியாக ஒப்புதல் கொடுத்து எடுக்கப்படுகின்றன. திட்டங்களின் வருமானம், நெரிசலான மற்றும் நிறைவுற்ற பாதைகளின் அதிகரிப்பு, இரயில்வேயின் சொந்த செயல்பாட்டுத் தேவை, வள ஆதாரங்களின் இருப்பு, ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திட்டம் மற்றும் ஒட்டுமொத்த நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இரட்டைப் பாதை அமைக்கப்படுகிறது.
01.04.2022 நிலவரப்படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14190 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 1234 கிமீ நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் இரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
06.08.2022

Friday, August 5, 2022

நாட்டில் 5ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? வைகோ கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

கேள்வி எண். 139

(அ) நாட்டில் 5ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?
(ஆ) 5ஜி அலைக்கற்றையின் ஏலச் செயல்பாட்டின் போது ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் வைப்புத்தொகை வசூலிக்கப்படுமா? படாதா?
(இ) வசூலிக்கப்படவில்லை எனில், காரணம் என்ன? அரசுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு?
(ஈ) கருவூலத்திற்கு எதிர்பார்க்கப்படும் பெரும் இழப்பைக் கருத்தில் கொண்டு, அரசு விசாரணைக்கு உத்தரவிடுமா? முழு டெண்டர் நடைமுறைகளையும் மறுபரிசீலனை செய்யுமா?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 29.07.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ) தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களால் (TSPs) 2022-23 ஆம் ஆண்டில் 5ஜி அலைபேசி சேவை தொடங்கப்படலாம். நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருவதால், 5ஜி சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
(ஆ) முதல் (ஈ) வரை: ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் (SUC) சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் சராசரி சதவீதமாக கணக்கிடப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்பட்டபோது, இது ஏலத்திற்கு முன் தேதியிட்ட மரபு ஆகும்.
தொலைத்தொடர்புத் துறையில் கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பணப் புழக்கத்தை எளிதாக்கவும் ‘தொலைத்தொடர்புத் துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆதரவு தொகுப்பு’க்கு ஒன்றிய அமைச்சரவை 2021 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR), வங்கி உத்தரவாதத் தேவைகளின் முறைப்படுத்துதல், தாமதமாகக் கொடுப்பவைகளுக்கான வட்டி விகிதத்தை முறைப்படுத்துதல், எதிர்கால ஏலங்களில் கூடுதல் நிதிச்சுமை இல்லாமல் ஸ்பெக்ட்ரம் பகிர்வு போன்றவை சீர்திருத்த நடவடிக்கைகளில் அடங்கும்.
வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும், உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்கும், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பணப் புழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், தொலைதொடர்பு சேவை வழங்குபவர்கள் மீதான ஒழுங்குமுறைச் சுமையைக் குறைப்பதற்கும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
11.4.2022 தேதியிட்ட தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரையில் கூறியதாவது:
i) வருங்கால ஏலங்களில் பெறப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மீதான வரியை ரத்து செய்தது கால தாமதமான சீர்திருத்தமாகும்.
ii) எதிர்கால ஏலங்களில் ஸ்பெக்ட்ரம் மீதான பயன்பாட்டுக் கட்டணங்கள் நீக்கம், தொலை தொடர்பு சேவை வழங்குபவர்களின் ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கப் பயன்படும்.
ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது அனைத்து ஏலதாரர்களுக்கும் தெரியும். 2022 ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவும், குறிப்பிடத்தக்க அளவில் ஸ்பெக்ட்ரம் வருமானம் வளர்ச்சிக்கு செப்டம்பர் 2021 இல் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் காரணம் ஆகும்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
05.08.2022

Wednesday, August 3, 2022

விலைவாசி உயர்வு குறித்த விவாதம்: மாநிலங்கள் அவையில் வைகோ உரை!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு 02.08.2022 அன்று ஆற்றிய உரை வருமாறு:-
வைகோ: அவைத் தலைவர் அவர்களே,
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு: தங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது.
வைகோ: இது அதிகமான நேரம்தான்!
அன்றாடத் தேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நம் நாட்டு மக்களை மெதுவாகக் கொல்லும் ஒரு விஷம் ஆகும்.
உணவு தானியங்களின் விலை 7.56 சதவீதமும், குறிப்பாக காய்கறிகள் 17.37 சதவீதமும், மசாலாப் பொருட்களின் விலை 11.04 சதவீதமும், சமையல் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விலை 9.36 சதவீதமும் அண்மையில் உயர்ந்துள்ளது.
பணவீக்க விகிதம் 2 முதல் 6 சதவிகிதம் வரை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் இலக்கு இருந்தபோதிலும், பணவீக்க விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தாங்கள் இரண்டு நிமிடம் மட்டும் பேச அனுமதி வழங்கியதால், என்னுடைய உரையைக் குறைத்து, முக்கியமானவைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சாதாரண குடிமக்கள் இப்போது விலைவாசி உயர்வு என்கிற தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கிறது.
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் சூறையாடப்படுகிறது.
மீனவ சமூக மக்களும் தங்கள் கைவினைப் படகுகள் மற்றும் இழுவை படகுகளுக்கு டீசலைப் பயன்படுத்துவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கடலில் கடினமான வானிலை வெளிப்படும் நேரங்களில் மீன் பிடித்தும், சில சமயங்களில் வெறுங்கையோடும் மீனவர்கள் திரும்ப வேண்டியது இருக்கும். நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை தாக்கி துன்புறுத்துவதும் அச்சுறுத்துவதும் வாடிகக்கையாக உள்ளது. சில சமயங்களில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டு உள்ளார்கள்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலையை உயர்த்துகிறோம் என்று ஒன்றிய அரசு சாக்குப்போக்கு கூறி வருகிறது. ஆனால் 50 சதவீதத்திற்க்கும் அதிகமான கலால் வரி மற்றும் சுங்க வரி ஆகியவற்றைக் குறைக்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதத்தை ஒன்றிய அரசு அண்மையில் சிறிதளவு குறைத்துள்ளது. பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்த நிவாரணம் சாமானிய மக்களுக்கு ஒரு அடையாள நிவாரணம் மட்டுமே ஆகும்.
அரிசி, கோதுமை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு ஜிஎ°டி வரி விதித்துள்ளது அவமானமாகும். இது பொருளாதாரத்தில் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவமனையில் வாடகைக்கு எடுக்கப்படும் ஐசியூ அறைக் கட்டணத்துக்குக் கூட வரி விதிக்கப்படுகிறது. வரி விதிப்பில் ஒன்றிய அரசு துரதிஷ்டவசமாக யாரையும் எதனையும் விட்டுவைக்கவில்லை.
தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக, எண்ணெய் இறக்குமதி கட்டணம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன.
எனவே, உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎ°டி வரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பால் மற்றும் பால் பொருட்கள் மீதான வரியையும் திரும்பப் பெற வேண்டும்.
சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான சுங்கம் மற்றும் கலால் வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
ஒன்றிய அரசு, எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 2014 இல் இருந்த விலையையே நிர்ணயிக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளையும் கண்காணித்து கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
நீங்கள் அனுமதி அளித்த நேரத்திற்கு உள்ளாகவே நான் என் பேச்சை முடித்துவிட்டேன்.
இவ்வாறு வைகோ அவர்கள் உரையாற்றினார்கள்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு: இங்குள்ள இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வெளிப்படையான செய்தி என்னவெனில், இந்தியாவில் உள்ள வலிமை மிக்கப் பேச்சாளர்களில் திரு வைகோ அவர்களும் ஒருவர் என்று கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால், அவர்களின் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை இந்த அவையில் குறைவாக இருப்பதால், அவருக்குப் பேச ஒதுக்கிய நேரத்தை நான் அதிகப்படுத்த முடியாமல் உள்ளேன். நான் காலவரையறைப்படி செல்ல வேண்டியது உள்ளது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
03.08.2022

Monday, August 1, 2022

பத்திரிகையாளர்களின் சுதந்திரத்திரம் பறிக்கப்படுகிறதா? வைகோ கேள்வி தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பதில்!

கேள்வி எண். 1359

அ) உலகப் பத்திரிகை சுதந்திர வழிகாட்டுக் கொள்கையின்படி, ஊடக கண்காணிப்பு அமைப்பால் பராமரிக்கப்படும் 180 நாடுகளில், இந்தியா 30 இடம் பெற்றுள்ளது உண்மையா?
ஆ) அப்படியானால், பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான குறியீட்டிற்கான விரிவான காரணங்கள் யாவை?
இ) தேசிய பாதுகாப்புச் சட்டம், தேச துரோகச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் மூலம் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களது சுதந்திரத்தைப் பறித்து பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்களா?
ஈ) அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய அரசு மற்றும் பிர° கவுன்சில் மூலம் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
உ) புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், ஆண்டு வாரியாக விவரங்கள் என்ன?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் 28.07.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ) மற்றும் (ஆ): உலக பத்திரிக்கை சுதந்திர வழிகாட்டுக் கொள்கை, ‘எல்லைகளற்ற பத்திரிகை நிருபர்கள்’ என்ற வெளிநாட்டு அரசு சாரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மிகக் குறைந்த மாதிரி அளவு, ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் இல்லா நெறிமுறை, கேள்விக்குரிய வெளிப்படையற்ற நெறிமுறை உள்ளிட்ட காரணங்களால் அரசு அதன் கருத்துகளையும் மற்றும் நாட்டின் தர வரிசையையும், முடிவுகளையும் ஏற்கவில்லை.
(இ) முதல் (உ) வரை: பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான கொள்கையின்படி, பத்திரிகையின் செயல்பாட்டில் அரசாங்கம் தலையிடாது. பிர° கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ), ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பு ஆகும். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மற்றும் நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு 1978 ஆம் ஆண்டு பிர° கவுன்சில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு பிர° கவுன்சில் சட்டப் பிரிவு 13 மற்றும் 1979 ஆம் ஆண்டு பிர° கவுன்சில் (விசாரணைக்கான நடைமுறை) விதிமுறைகளின் கீழ் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிக்கையாளர்கள் மீதான உடல் ரீதியான தாக்குதல் / தாக்குதல் போன்றவற்றின் கீழ் 'பத்திரிகைகள்' தாக்கல் செய்த புகார்களை பிர° கவுன்சில் பரிசீலிக்கிறது. 2018-19 மற்றும் 2020-21 க்கு இடையில், 66 வழக்குகளில் பிர° கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்திரிக்கையாளர்கள் உட்பட நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சட்டத்தை கையில் எடுக்கும் எந்தவொரு நபரும் சட்டத்தின்படி உடனடியாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும் உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பத்திரிகையாளர்கள்/ ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு 2017 அக்டோபர் 20 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
01.08.2022