Tuesday, October 25, 2022

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை தாக்குதல். வைகோ கடும் கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46),  சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.

பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? போதைப் பொருட்கள் ஏதும் கடத்துகிறீர்களா? என கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர்.


இலங்கை கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர்.


ஆனால், இந்தியில் பேசச் சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கியவர்கள் இந்திய கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டு இருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


படகில் சென்ற மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டியிடச் செய்துள்ளனர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற இந்திய கடற்படை காவலர்கள் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கி உள்ளனர்.


மீனவர்களை தரையில் அமரச் சொல்லி காலணி காலால் அவர்கள் மீது ஏறி நின்றும், கைகளை பின்னால் கட்டி மண்டியிடச் செய்தும் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்குள்ளே இந்தியில் பேசிக்கொண்டு, இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஷூ காலால் எட்டி உதைப்பதுமாக நடந்துள்ளனர்.


பின்னர் அனைவரின் ஆதார் கார்டுகளையும் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்று கூறி இழிவான வார்த்தைகளால் மீனவர்களை திட்டியுள்ளனர்.


சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி எப்படி நடந்து கொண்டதோ அதை விட கொடூரமாக இந்திய கடற்படையினர் நடந்து கொண்ட தகவல் கேட்டு இரத்தம் கொதிக்கிறது.


இந்திய கடற்படையினர் இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை எட்டி உதைத்து, காலால் மிதித்து ஏளனமாக நகைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்திய எல்லைக்குள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இந்த செயல் நியாயப்படுத்தவே முடியாத கடும் கண்டனத்துக்குரியது ஆகும்.


இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திதான் இந்தியா என்று பேசுவதால் இராணுவத்தினர் கூட இந்தி மொழி பேசாதவர்களை அந்நியர்களாக நினைக்கும் அக்கிரமம் தலை தூக்கி உள்ளது. இதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.


இந்தி மொழி தெரியாததால் தமிழ்நாட்டு மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஒன்றிய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

25.10.2022

Wednesday, October 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுக! வைகோ அறிக்கை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் 100 ஆவது நாளான 2018 மே 22 அன்று பொதுமக்கள் அணிதிரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிவழியில் பேரணி நடத்தியபோது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.


அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக், ஜான்சி, செல்வசேகர், காளியப்பன், ஜெயராமன் ஆகிய 13 பேர் பலியானார்கள்.


இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிவிசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று (18 அக்டோபர்2022) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.


தூத்துக்குடியை ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றிய அன்றைய அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி வேண்டும்; அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.


துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டோரின் இல்லங்களுக்கு நான் நேரில் சென்று ஆறுதல் கூறினேன். காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் சொன்னேன்.


அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.


தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தைத் தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது.


துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.


அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர் என்று ஆணையம் கூறி இருக்கிறது. எனவே தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் ஐயமில்லை.


சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்;


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை மற்றும் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்பைச் சிதைத்து வெளியே வந்திருக்கிறது.


இடுப்புக்குக் கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது, கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.


விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைஅலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


வைகோ 

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

19.10.2022

Tuesday, October 11, 2022

நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தி வெறி வைகோ கடும் கண்டனம்!

இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது.


ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது.


ஏனெனில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி நாள்’ விழாவில் உரையாற்றியபோது, “ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பா.ஜ.க. அரசின் நோக்கம்” என்று அறிவித்தார். உள்துறை அமைச்சரின் இந்தித் திணிப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுமலர்ச்சி திமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் நாள் சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணைத் தலைவரான ஒடிசா பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த பார்த்ருஹரிமஹ்தப், குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை குறித்து விளக்கி இருக்கிறார்.


அதில், “தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது மாநில மொழி இருக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.


மேலும் பிரிவு ‘ஏ’ மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். அது நூறு விழுக்காடு பின்பற்றப்படவும் வேண்டும்;


இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்திதான் இருக்க வேண்டும். பயிற்சி நிறுவனங்களிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட வேண்டும்.


பணியாளர் தேர்வுகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வினாத் தாளில் ஆங்கில மொழியை அறவே நீக்கிவிட்டு, இந்தி மொழியில்தான் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.


உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும்.


இந்தி பேசுகின்ற மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இந்தி மொழியில் பேசவும், எழுதவும் தெரியவில்லையெனில் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணியாளர்களின் பணி குறித்த மதிப்பீட்டு ஆண்டறிக்கையில் இதனைப் பதிவு செய்திட வேண்டும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும்.


ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களின் துறை சார்ந்த கடிதப் போக்குவரத்து, தொலைநகல், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியிலும், தேவைப்பட்டால் மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும். இவற்றில் ஆங்கில மொழியின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும்.


உயர்கல்வி நிறுவனங்களான பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகங்களில் தற்போது இந்தி மொழி 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இக்கல்வி நிறுவனங்களில் நூறு விழுக்காடு இந்திதான் பயன்படுத்தப்பட வேண்டும்.


மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 37 ஆவது கூட்டத்திற்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.


இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, “ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.


அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.


எனவே ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்

சென்னை - 8

11.10.2022

Monday, October 10, 2022

முலாயம் சிங் யாதவ் மறைவு! தலைவர் வைகோ இரங்கல்!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவரும், என்னிடம் அளவற்ற அன்பு செலுத்திய பண்பாளருமான முலாயம்சிங் யாதவ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியுற்றேன்.
உத்திரப்பிரதேச மாநில முதல்வராகவும், இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய முலாயம்சிங் யாதவ் அவர்கள் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் ஆவார்.
டாக்டர் ராம் மனோகர் லோகியா, முழுப் புரட்சி நாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நாராயணன் ஆகிய தலைவர்களிடம் அன்பு செலுத்தி, அவரது வழியில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர் முலாயம்சிங் யாதவ்.
1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய முலாயம் சிங் யாதவ் அவர்கள், 19 மாத காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தியாக சரித்திரம் படைத்தார்.
திபேத்திய விடுதலையையும், தலாய் லாமா அவர்களையும் ஆதரித்து, திபேத் நாட்டின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை ஆகியவைகளை வற்புறுத்தியவர் முயலாம்சிங் யாதவ்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதியை நிலைநாட்டவும், ஜனநாயக நெறிமுறைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்ட முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி தோழர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
10.10.2022

Saturday, October 8, 2022

மிலாது நபி திருநாள். வைகோ வாழ்த்து!

நாம் அனைவருமே சகோதரர்கள்; நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என முழங்கி, மனிதகுல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை, உலகெங்கும் வாழும் இசுலாமிய பெருமக்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர்.


என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன் என உறுதியுடன் போராடியவர் நபிகள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்டார்.


அத்தகைய மாமனிதரான நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.


இசுலாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

08.10.2022

Tuesday, October 4, 2022

சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் - செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், திடீரென 58 ஊழியர்களை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர்.


தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிய வழக்கு, புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. 


பணியாளர்களின் பணி நிலையில் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படக்கூடாது என்று தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை மீறி அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீ° எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி நிர்வாகம் வேலை நீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.


பணி நீக்கத்தைக் கண்டித்து, தொழிலாளர்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோதமான செயலாகும்.


பதிமூன்று ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் அளிக்காமல், சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 58 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

04.10.2022

Sunday, October 2, 2022

நல்லகண்ணு அவர்களிடம் நலம் விசாரித்தார் வைகோ!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’ நல்லகண்ணு அவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, உயர்திரு நல்லகண்ணு அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். நல்லகண்ணு அவர்கள் நலமாக உள்ளார்கள் என்று வைகோ தெரிவித்தார்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

02.10.2022