Tuesday, June 25, 2024

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ MP வேண்டுகோள்!

மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்றி சமத்துவமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவினை நியமித்தது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் ஆகியவைகளிடம் இது தொடர்பான கருத்துக்களை பெற்றும், பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் மாணவர்களிடையே சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதற்கான கருத்துக்களை பரிந்துரைகளாக இந்தக்குழு தயாரித்து அதனை முறைப்படி தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி உள்ளது.
கல்வி நிலையங்களிலும், மற்ற பிற இடங்களிலும் சாதிகளின் பெயரால் பகை ஏற்பட்டு அதன் விளைவாக வன்முறை சம்பவங்கள் நடந்து கலவர பூமியாக தமிழ்நாடு மாறிவிடாமல் தடுப்பதற்கான நல்ல முயற்சியாக இந்தக் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளதை வரவேற்று, அவைகளை செயல்படுத்தி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.06.2024

மக்களவை உறுப்பினராக பொறுபேற்றிருக்கிறேன் - துரை வைகோ MP!

இந்திய மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "துரை வைகோ" எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகின்றேன்.

வாழ்க சமூகநீதி அரசியல்..!
வாழ்க சமத்துவம்..!
வாழ்க மதசார்பின்மை..!
பரவட்டும் மனிதநேயம்..!
எனக்கூறி பதவியேற்றார் மதிமுக முதன்மை செயலாளர் அண்ணன் துரைவைகோ.

Monday, June 24, 2024

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! வைகோ கடும் கண்டனம்!

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு 2024-ஆம் ஆண்டு 23.33 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், 13.16 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர். இதில் தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள், அதாவது 720-க்கும் 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.
கடந்த ஆண்டுகளில் முழு மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பார்கள். இதுவரை இல்லாத வகையில் 67 பேர் எப்படி முழு மதிப்பெண்கள் எடுத்தனர் என்று புரியவில்லை.
மேலும் அரியாணா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதுவும் வழக்கத்துக்கு மாறானது என்று ஐயம் எழுந்தது.
பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வின் கேள்வித் தாள் கசிந்த செய்திகள் வெளியாயின.
இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருந்தது.
ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.
இதனால் பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என முதலில் ஒன்றிய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் பிறகு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் ,நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு ஜூன் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம், ‘நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது ஒருவர் அதாவது 0.001% அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர் என்பதை யோசித்துப் பாருங்கள். மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள்’ என கடுமையாகச் சாடியது.
இந்த வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தேசியத் தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வினாத்தாள் கசிவு, முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளின் தொடர்ச்சியாக நேற்று ஜூன் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள தயார் நிலையில் இருந்தனர் . ஆனால் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது.
சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் ஒன்றிய பாஜக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் மட்டும் எழுப்பப்பட்டக் குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.
இதனைப் புரிந்து கொண்டு ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.06.2024

Sunday, June 23, 2024

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும். துரை வைகோ MP!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும். துரை வைகோ MP!

இலங்கை கடற்படையினால் இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இன்று கைது செய்யப்பட்டதோடு அவர்களின் மூன்று விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல, கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 வரை, 150 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு மட்டும் 40 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, 4 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது.
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்து வருவதால்தான் எந்தவித அச்சமும் இன்றி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றார்கள்.
ஒன்றிய பாஜக அரசு இப்பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக அரசும் ஒன்றிய அரசிற்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.06.2024

Thursday, June 20, 2024

கள்ளச்சாரய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ MP அறிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது.
மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும். முழு மதுவிலக்கே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து போராடி வருகிறது.
கள்ளச்சாரய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.06.2024

Wednesday, June 19, 2024

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் - துரை வைகோ MP வேண்டுகோள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்த தேயிலைத் தோட்டத்தை, 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றது.

தேயிலை தோட்டத்தை நடத்தி வரும் தனியார் நிறுவனத்திற்கும் அரசிற்கும் இடையிலான குத்தகை காலம் முடிந்ததும், 2028 ஆம் ஆண்டிற்குள் தமிழக அரசிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றி வந்த 500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை இழப்பீட்டுத் தொகையாக கிடைக்கும். ஜூன் 14 ஆம் தேதி கடைசி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.
மாஞ்சோலை பகுதி மக்கள் நலச் சங்க செயலாளரும், மதிமுக சட்டத்துறை செயலாளருமான வழக்கறிஞர் அரசு அமல்ராஜ் தலைமையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் இன்று (19.06.2024) என்னை சந்தித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை நான் செய்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட நான்கைந்து தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினர்களையும் வேரோடு பிடுங்கி அகற்றுவது என்பது வேதனைக்குரிய செயலாகும். வேறு எந்த தொழிலும் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழக அரசு இவர்களை மனிதாபிமானத்தோடு அணுகி, தேயிலை தோட்ட நிறுவனத்திடம் இருந்து கூடுதல் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவும், அவர்கள் வசிப்பதற்கு போதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் உடனடியாக உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
19.06.2024

Sunday, June 16, 2024

பக்ரீத் திருநாள்! வைகோ MP வாழ்த்து!

ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகத் தங்களையே தியாகம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளும் பண்டிகையாக பக்ரீத் திருநாள் இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது.

அரபி மாதங்களில் கடைசி மாதமான துல்ஹஜ் பத்தாம் நாளில் தங்களின் புனிதக் கடமையை (ஹஜ்) நிறைவேற்றிவிட்டு இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் தனது மகனையும் இறைவனுக்காக அறுத்துப் பலியிட முன்வந்த தியாகத்தைப் போற்றுகின்ற வகையில் உலக முஸ்லிம்கள் தங்களது குர்பானியை நிறைவேற்றிவிட்டு, தியாகத்தைப் போற்றிடும் தியாகப் பெருநாள் பக்ரீத்.

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் பக்ரீத் பண்டிகை நன்னாளில்  அனைவரும் உறுதிகொள்வோம்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’ 

சென்னை - 8

16.06.2024

தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகள்..! துரை வைகோ!

மதங்களின் தாயகமாகத் திகழும் ஆசியா கண்டத்தில் தோன்றிய இஸ்லாம் மார்க்கம் ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் பயணம் என்னும் ஐந்து பெரும் கடமைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தை போதித்த நபி ஹஜ்ரத் இப்ராஹிம் பெருமகனார் ஏக இறைவன் கொள்கையில் தீவிர நாட்டமுடையவர். நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இஸ்மாயில் எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் நபி இப்ராஹிம் அவர்கள் இறைவன் கட்டளையை ஏற்று தன் மகனை பலி கொடுப்பதாக கனவு கண்டார். இதுபற்றி தன்னுடைய மகன் இஸ்மாயிலிடம் தெரிவித்தார். அதற்கு எவ்வித மறுப்புமின்றி இஸ்மாயில் உவகையுடன் உடன்பட்டார். நபி ஹஜ்ரத் இப்ராஹிம் தன் மகன் இஸ்மாயிலை வெட்டி பலி கொடுக்க முயன்றார்.

அந்த நேரத்தில் ஜிப்ரில் தோன்றி இதனை தடுத்ததோடு, இஸ்மாயிலுக்கு பதிலாக 'ஆட்டை பலியிடு, அனைவருக்கும் பகிர்ந்து கொடு' என கட்டளை பிறப்பித்தார். இந்த நாளையே இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பெருநாளாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் இறை பக்தியில் மட்டுமின்றி தியாகத்திலும் ஈகையிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதையே இறை தூதர் நபி இப்ராஹிமின் இந்த செயல்பாடு நமக்கு உணர்த்துகிறது. 

இந்தப் பெருநாளில் அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம் தழைத்தோங்கி சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ உறுதியேற்போம்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில், தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

துரை வைகோ எம்.பி.,

முதன்மைச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக

16.06.2024

Saturday, June 15, 2024

நெல்லையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! வைகோ MP கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன்குமார் (வயது 28), பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதயதாட்சாயினி (வயது 23) இணையர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இந்த இணையருக்கு பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஆதரவாக இருந்ததால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.


அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.


தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

15.06.2024

Friday, June 14, 2024

நடிகர் தம்பி இராமையா இல்லத் திருமண விழா..!

நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் மீது அளவற்ற பற்று கொண்டவர் நடிகர் தம்பி இராமையா அவர்கள்.
சிறந்த கொள்கைப் பற்றாளர். நடிப்பு எழுத்து என பன்முகத் திறமை கொண்டவர். அவரது மகன் உமாபதி ராமைய்யா - ஐஸ்வர்யா அர்ஜூன் அவர்களின் திருமண வரவேற்பு இன்று (14.06.2024) சென்னையில் நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மலர்க் கொத்துடன் வாழ்வியல் அறநெறி நூலான திருக்குறள் நூலை வழங்கி மணமக்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தினேன்.
உடன் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ஜீவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் எஸ். கண்ணன், மாநில ஆபத்து உதவிகள் அணி துணை செயலாளர் விக்டர் எபினேசர், மாவட்ட மாணவரணி செயலாளர் வினோத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
14.06.2024.

Thursday, June 13, 2024

குவைத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை தேவை-துரை வைகோ MP!

குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் என அங்கிருந்து செய்திகள் வருகின்றன. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய அரசு விரைந்து செயல்பட்டு உயிர் இழந்தவர்களின் உடலை அவர்களின் ஊருக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
மதிப்பிற்க்குரிய தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
தீ விபத்தில் பலியான தோழர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
13.06.2024

Wednesday, June 5, 2024

தமிழ்நாடு திராவிட பூமி; மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு!வைகோ MP அறிக்கை!

நடைபெற்று முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் திருநாட்டு மக்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று ஆணவமும் அதிகாரத் திமிரும் கொப்பளிக்க தேர்தல் பரப்புரைகளில் மதவெறி ஊட்டி எதேச்சதிகாரப் போக்குடன் நடந்துகொண்டவர்களுக்கு மக்கள் சக்தி என்றால் என்ன என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தி உள்ளது.


ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம் என்று ஒற்றை இந்துத்துவ தேசியவாதத்தை நிலைநிறுத்த முயன்றவர்களுக்கு 18ஆவது மக்களவைத் தேர்தலில் சரியான அடி விழுந்திருக்கிறது.


பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த இந்தியா கூட்டணி இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.


பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மோடி அவர்கள் பிரதமர் பதவியில் நீடிக்கின்ற தார்மீக உரிமையை இழந்திருக்கிறார்.


ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த இந்தியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது.


இந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.


தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட திருச்சிராப்பள்ளி தொகுதியில் மூன்று இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைத்த தி.மு.கழகத்தின் ஆற்றல் மிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னோடிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

05.06.2024