Saturday, June 19, 2021

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக. வைகோ MP கோரிக்கை!

தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள்.  இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றார்கள். 

கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்கின்ற பொது நிகழ்ச்சிகள் இவைகளில் மேடை மெல்லிசைக் கச்சேரிகள் நடந்து வந்தன. கொரோனா பொது முடக்கம், அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு முடக்கி விட்டது. 

இந்தத் தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யமுடியாத செய்ய தெரியாத கலைஞர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இசைநிகழ்ச்சிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டதால், அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.  உணவகங்களிலும் சிறு கடைகளிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றார்கள். 

கலைகளை வளர்த்த தமிழகத்தில், இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கின்ற வகையில், காவல்துறையின் உரிய அனுமதியுடன் இசைக்கச்சேரிகள் நடத்துவதற்கு உரிய அனுமதி தர வேண்டும். 

தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கு, உதவித் தொகைகள் கிடைத்திட வேண்டும்; அவர்களுக்குத் தனி நல வாரியம்அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.06.2021

No comments:

Post a Comment