இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானதும் தனது முதல் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார்.
தற்போது இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்குச் சென்று, கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து, இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தொழில்நுட்பங்களை அளிக்க இந்தியா உறுதி அளித்துள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்று ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜித் தோவல் - கோத்தபய சந்திப்பு குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பதாக அஜித் தோவல் உறுதி அளித்து இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோத்தபய ராஜபக்சே தனது சுட்டுரைப் பதிவில் “இந்தியாவின் பிரதிநிதி அஜித்தோவலிடம் கடல்சார் மற்றும் மண்டல ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினோம்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான கோத்தபய ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டிய நபர் ஆவார். அவரை இந்தியாவுக்கு அழைத்து சிவப்புக் கம்பளம் விரித்து தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய மத்திய பா.ஜ.க. அரசு, இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை ஆகும்.
இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கைச் சிறையில் அடைப்பதும், சித்திரவதை செய்து துன்புறுத்துவதும், மீன் பிடிப் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து 96 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தியக் கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பலில் வந்த சிங்களக் கடற்படையினர் பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சுற்றி வளைத்து, நான்கு மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பொறுப்பு ஏற்றபிறகு, சிங்களக் கடற்படை எல்லைதாண்டி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதும், கைது செய்வதும் தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன.
இலங்கையில், தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட உடைமைகளையும் பறித்து, இராணுவம் முகாம் அமைத்து, தமிழர்கள் 24 மணி நேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதைப் போன்று கட்டுக்காவல் ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து சிங்களக் கொலைகார அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இச்செயல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் பா.ஜ.க. அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.
எனவே இந்திய அரசு, இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க ரூபாய் 355 கோடி நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-01-2020 தெரிவித்துள்ளார்.