புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான பதிவு தொடங்கியதால், கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்துள்ள ஜே.என்.யூ. மாணவர்கள், அறப்போராட்டங்களை நடத்த முனைந்தபோது, காவல்துறை அத்துமீறி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டர்களும், காக்கிச் சட்டைகளுடன் சேர்ந்துகொண்டு மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கினர்.
ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் நேற்று மதவாத வெறி கொண்ட வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்கள் பெரிய பெரிய கற்கள், உருட்டுக் கட்டைகள், இரும்புத் தடிகள் கொண்டு பேரணியில் வந்த மாணவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். படுகாயம் அடைந்த 18 மாணவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் உயிருக்குப் போராடி வருகிறார்.
பல்கலைக் கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் வன்முறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஜே.என்.யூ. மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி.குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 6-1-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment