Friday, December 31, 2021

வைகோ MP புத்தாண்டு வாழ்த்து!

2021 ஆம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட முள்ளை அகற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய விடியலை தமிழக முதல்வர் பிரகடனம் செய்தது நூற்றாண்டு கால திராவிட இயக்கத்திற்கு ஒளி சேர்ப்பதாகும்.

ஆனால், இலங்கைத் தீவை வளைத்து, தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவந்து அநீதி விளைவிப்பதற்கு சீன அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இதைத் தடுப்பதற்கு மோடி அரசு சிறு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை.

ஈழத் தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னும் நின்றபாடு இல்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2022 உதயத்தில் சூளுரைப்போம்.

கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும்.

சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
31.12.2021

Friday, December 24, 2021

கிறிஸ்துமஸ் வாழ்த்து! - வைகோ MP!

உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நன்னாள், மனித குமாரனாக மண்ணில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த புனித குமாரனின் வருகையைப் போற்றி உலகமே கொண்டாடும் திருநாள்.

நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று ஆறுதல் கூறி துன்பத்தில் துடித்தோரை அரவணைத்தவர் ஏசுபெருமான்.

ஒருவனின் தாய் மகனைத் தேற்றுவதைப் போல நான் உன்னைத் தேற்றுவேன் என்று பேசியவர், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்று உடைந்த உள்ளங்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர் ஏசுபெருமான்.

கிறித்தவப் பாதிரியார்களும், பெருமக்களும் செந்தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றினர். திராவிட மொழிகளின் மூல மொழி தமிழ் என்பதை ஆதாரங்களோடு கால்டுவெல் நிலைநாட்டினார். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை அரவணைத்துக்கொண்டு ஆறுதல் வழங்கினார்கள்.

இரட்சகர் ஏசுபெருமான் மலைமேல் நின்று அமுதமொழிகளாகப் பொழிந்த கருத்துக்கள் மோதல்களும், அக்கிரமங்களும், சுயநலப் பேராசையும், அலைக்கழிப்பும் கொண்ட இன்றைய உலகத்துக்கு நல்வழி காட்டுகின்றன. சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாக சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ வேண்டும் என்றும், அப்படி வாழ்கின்றவர்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கலவரங்களும், இரத்தக் களறிகளும் மனித சமுதாயத்திற்குப் பேராபாயமாக அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கு ஏசுநாதரின் அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், அன்பின் சிகரமாகவே திகழ்ந்தார்.

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, கிறித்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.12.2021

நீலகிரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நலன் காக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன? வைகோ MP கேள்வி: அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2284 (17.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, வணிகம், தொழில்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க, குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் நலன் காக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்; அதுகுறித்து, கடந்த 3 ஆண்டுக்காலப் புள்ளிவிவரங்கள் தருக.

2. மருத்துவக் கருவிகள், உயர்கல்வி, குறிப்பாக, தமிழ்நாட்டின் நீலகிரி மலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள் குறித்த விவரங்கள் தருக.

3. இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக.

வணிகம், தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் அளித்த விளக்கம்

1 முதல் 3 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் நல்வாழ்விற்கான நடவடிக்கைகள், 1951 தோட்டத் தொழிலாளர் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் சட்டத்தின்படி, வேலை தருவோர், தொழிலாளர்களுக்கு, வீடு, மருத்துவ வசதிகள், பேறுகால உதவிகள் மற்றும் இதுபோன்ற சமூகநல உதவிகளை வழங்குதல் வேண்டும். தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, குடிநீர், உணவகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் மனமகிழ் மன்ற நிகழ்வுகள் போன்ற வசதிகள், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர் சட்டம் தவிர வேறு பல பாதுகாப்புச் சட்டங்களும் உள்ளன.

1. உழைப்போருக்கான இழப்பு ஈட்டுச் சட்டம் 1923 (Workmen s Compensation Act,1923)

2. பணிக்கொடைச் சட்டம் (Payment of Gratuity Act 1972)

3. பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் (The Emloyees Provident fund & Miscellaneous Provisions Act 1952)

4. அசாம் தேயிலைத் தோட்ட வருங்கால வைப்பு நிதி, ஓய்வு ஊதிய நிதி, மற்றும் வைப்பு இணைக்கப்பட்ட காப்பு ஈட்டு நிதிச்சட்டம் 1955 (அசாமுக்கு மட்டும்) Assam Tea Plantation Provident Fund, Pension fund and Deposit Linked Insurance Fund Scheme Act 1955)

ஊக்கத்தொகை வழங்கும் சட்டம் 1965 (Payment of Bonus Act 1965),

ஊதியச் சட்டம் 1936 (Payment of Wages Act 1936),

ஆகிய சட்டங்களின்படி, தோட்டத்தொழிலாளர்களுக்குப் பல்வேறு உதவிகள், பணிக்கொடை, ஊக்கத்தொகை, வருங்கால வைப்பு நிதி, சம ஊதியம் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சட்டங்களின் விதிகள், இப்போது தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலைநிலைமைகள் குறியீடு 2020, சமூகப் பாதுகாப்புக் குறியீடு, தொழில்துறை உறவுகளின் குறியீடு 2020 மற்றும் ஊதியக் குறியீடு 2020 ஆகிய நான்கு குறியீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நிகழும் ஆண்டில், தேயிலை வாரியம் மற்றும் காபி வாரியம் ஆகியவை, நீலகிரி மலைப்பகுதியில் மேலும் பல நலத்திட்டங்கள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சிகள், நீலகிரி மலை தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தேயிலை விரிவு மற்றும் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த காபி வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ஏற்பாடு செய்துள்ளன.

மேற்கண்ட திட்டங்களின்படி, தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு உடல்நலன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.12.2021

Tuesday, December 21, 2021

தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிப்பு; வேலைவாய்ப்புகள் இழப்பு! வைகோ MP அறிக்கை*

தமிழ்நாடு அரசின் பாடநூல்களை அச்சிடுகின்ற சிறு, குறு அச்சுத் தொழிற்கூடங்கள்,  சென்னை, சிவகாசி மற்றும் பல ஊர்களில் இயங்கி வருகின்றன. கொரோனா முடக்கக் காலத்திலும், எத்தனையோ இடையூறுகளுக்கு நடுவே பணியாற்றி, புத்தகங்களை அச்சிட்டு, தமிழ்நாடு முழுமையும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றனர். அச்சுத் தொழிற்கூடங்கள் மட்டும் அன்றி, அது சார்ந்த ink. plate, chemical போன்ற பல்வேறு சிறு தொழிற்கூடத்தினரும், அரசின் தேவை கருதி, உழைத்து இருக்கின்றனர்.

தீப்பெட்டிகள், பட்டாசுகள் மட்டும் அன்றி, சிவகாசி தொழில் நகரம், அச்சுக் கலையிலும், புகழ்பெற்று இருக்கின்றது. ஜப்பான், ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளில் இருந்து புதிய கருவிகளை இறக்குமதி செய்து, ஏராளமான அச்சகங்கள் இயங்கி வருகின்றன.

வானம் பார்த்த மண்ணாகிய சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மேற்கண்ட தொழில்களின் மூலமாக இலட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தையே சார்ந்து இயங்கி வருகின்றனர். ஆனால், முழுமையான வாய்ப்புகள் கிடைக்காமல், தொழில் கடனுக்காக வங்கிகளுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் உள்ள அச்சகங்களிலும் புத்தகங்களை அச்சடித்து, கன்னியாகுமரி வரையிலும் அவர்களே புத்தகங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் ஏற்பாடுகள் செய்து இருக்கின்றது. இதனால், தமிழக அரசுக்கு 6 கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்படுகின்றது. தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில், அண்டை மாநிலங்களுக்கு ஒரு விழுக்காடு பணிகள் மட்டுமே தரப்பட்டன. அப்போது, சிவகாசியில், 53 சிறு குறு அச்சகங்கள் மட்டுமே இருந்தன. அவர்களே, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்குத் தேவையான 99 விழுக்காடு நூல்களை, குறித்த காலத்திற்குள் அச்சிட்டு, மாநிலம் முழுமையும் பள்ளிகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால், தற்போது, 48 வெப் ஆப்செட் அச்சகங்கள், 51 ஆப்செட் அச்சகங்கள் ஆக மொத்தம் 99 அச்சகங்கள் இயங்கி வருகின்றன; சென்னையில் 30 அச்சகங்கள் உள்ளன; அவற்றின் அச்சிடும் திறன் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள், மேலும் வங்கிக் கடன் பெற்று, புதிய கருவிகளை நிறுவி இருக்கின்றனர். பட்டதாரிகள், பொறியாளர்கள், கணினிப் பொறியாளர்கள் என புதிதாக பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த அச்சகங்களில், பாடநூல்களைத் தவிர்த்து, வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாது.

அண்டை மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அச்சகங்கள் மட்டுமே, அரசின் டெண்டர்  பட்டியலில் உள்ளன; தமிழ்நாட்டு அச்சகங்கள் பங்கு பெற முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே, பிற மாநில அச்சகங்களும் பங்கேற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டு அச்சுக்கூடங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்; சிறு குறு அச்சுத் தொழிற்கூடங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.12.2021

Monday, December 20, 2021

பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. வைகோ MP அறிக்கை!

தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை, நேற்று இலங்கைக் கடற்படை கைது செய்து இருக்கின்றது; அவர்களுடைய 6 மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்து கொண்டு போயிருக்கின்றனர்.

1980 களில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது.

அன்று முதல் இன்று வரையிலும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், இதுகுறித்து நான் பேசி வருகின்றேன்; கேள்விகள் கேட்டு வருகின்றேன். இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில்கூட, நான் கேட்டு இருந்த கேள்விக்கு, அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார். (கேள்வி எண் 1350; நாள் 9.12.2021).

இலங்கைப் பிரதமருடன் இந்தியத் தலைமை அமைச்சர் பேசினார்; அயல் உறவுத்துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்று பேசினார்; அயல் உறவுத்துறைச் செயலர் இலங்கைக்குச் சென்று பேசினார்; கூட்டுப் பணிக்குழு அமைத்து, நான்கு சுற்றுகள் பேசி இருக்கின்றோம்; ஐந்தாவது சுற்று பேசப்போகின்றோம் என, அயல் உறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

இதுவரை நடந்த பேச்சுகளில் என்ன தீர்வு கண்டீர்கள்? இனி எதற்காகப் பேச வேண்டும்?

குஜராத் மீனவர் ஒருவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கியது என்றவுடன், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, அயல் உறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து, கண்டனத்தைப் பதிவு செய்கின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்?

கேரளத்தில் இரண்டு மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலியர்களைச் சிறைப்பிடித்து, அந்த நாட்டிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்கள். அதுபோல, இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்தது இல்லை. அந்தக் கோரிக்கையைப் பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை.

கேளாக் காதினராக ஒன்றிய அரசு இருக்கின்றது; ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கைத்தான் அரசு கடைப்பிடித்து வருகின்றது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை; தீர்வு எதுவும் இல்லை; இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை.

லண்டனில் உள்ள லிபிய நாட்டுத் தூதரகக் காவலர்கள், தவறுதலாக இங்கிலாந்து காவலர் ஒருவரைச் சுட்டுக்கொன்றதற்காக, அந்த நாட்டுடன் தூதரக உறவுகளை உடனே முறித்துக் கொள்வதாக இங்கிலாந்து நாடு உடனே அறிவித்தது.

நேற்று இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்த 55 மீனவர்களை இன்றைக்கே விடுதலை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், இலங்கை அரசுடன் தூதரக உறவுகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்; தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருவதற்கு,  பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.12.2021

Sunday, December 19, 2021

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என அரசாணை! மு.க.ஸ்டாலின் அரசுக்கு வைகோ MP பாராட்டு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், அவை விதி எண்: 110 ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது” என்று பெருமிதம் கொண்டார்.

அதே நிலை தற்போதும் தொடர்வதற்கான பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது திமுக அரசு.

இனி தமிழே தெரியாமல் எவரும் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய விதிகள் மாற்றப்பட்டு, டிசம்பர் 1 ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கபட்டது.

அதற்கு முன்பு நவம்பர் மாதம் 1 ஆம் நாள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் இருபது விழுக்காடு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது, தமிழ்த்தாய்  வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்து இருப்பது மு.க.ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசுகிறது.

தமிழ் தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பறைசாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய “நீராருங்  கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இனி அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயம் பாடப்பட வேண்டும்.

பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைவட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப் பாட்டாக பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றும்  அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது வாழ்த்திப் போற்றத்தக்கது.

இந்த அரசாணையின் மூலம், திமுக அரசு தமிழ் அரசு; தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலைநாட்டி இருப்பதற்கும், இந்த ஒற்றை அரசாணையின் மூலம் “நாம் யார்?“ என்று ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்து இருப்பதற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.12.2021

பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா? வைகோ MP கேள்வி; அமைச்சர் விளக்கம்!

உடுக்குறிக் கேள்வி (starred question) எண் 164  (13.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. எக்சைஸ் வரியைக் குறைத்தபின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் தேவை.

2. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன?

3. மேலும் விலையைக் குறைக்க முடியாததற்குக் காரணங்கள் என்ன?

4. பொதுமக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையை, ஜிஎஸ்டி வரி வரையறைக்குள் கொண்டு வரும் திட்டம் உள்ளதா? இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக.

பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அளித்த விளக்கம்

1 முதல் 3 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.

பெட்ரோல், டீசல் விலையை, சந்தை நிலவரப்படி தீர்மானிக்க, 26.06.2010 மற்றும் 19.10.2014 ஆகிய நாள்களில் அரசு முடிவு செய்தது. அன்று முதல், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பன்னாட்டு நிலவரத்திற்கு ஏற்பவும், வரிக் கட்டமைப்பு, அயல்நாட்டுச் செலாவணி மதிப்பு, உள்நாட்டுப் போக்குவரத்து மற்றும் இதுபோன்ற காரணிகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, அவ்வப்போது மாற்றி அறிவித்து வருகின்றன. எனவே, பன்னாட்டுச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறுகின்றது. 2017 ஆம் ஆண்டு, ஜூன் 16 ஆம் நாள் முதல், நாடு முழுமையும், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஆய்வு செய்து, மாற்றங்களை அறிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

2021 இல் ஒன்றிய அரசு, பெட்ரோலுக்கு ரூ 5, டீசலுக்கு ரூ 10 விலைக் குறைப்பு செய்தது. பொருளாதார  நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், ஏழை, எளிய மக்கள் நுகர்வினை மேம்படுத்தவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்கள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன; இதர மாநிலங்கள் குறைக்கவில்லை.

நவம்பர் 3 ஆம் நாள் நிலவரப்படி, வரிக்குறைப்பிற்குப் பிந்தைய, பெட்ரோல், டீசலின் சில்லறை விலை, மாநிலவாரிப் பட்டியல், இணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 நிலவரப்படி, வாட் வரியைக் குறைத்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல், இணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளது.

கேள்வி 4 க்கான விளக்கம்:

அரசு அமைப்புச் சட்டம் பிரிவு 279A இன் படி, பெட்ரோலியக் கச்சா எண்ணெய், உயர்தர டீசல், மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), இயற்கை எரிகாற்று மற்றும் வான் ஊர்திகளுக்கான எரிபொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை, எந்த நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ஜிஎஸ்டி மன்றம்தான், முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

மேலும், ஒன்றிய ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(2) இன் படி, மேற்கண்ட பொருள்களை, ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு, ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால் இதுவரை, அத்தகைய பரிந்துரை எதுவும், ஜிஎஸ்டி மன்றத்திடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.12.2021

Wednesday, December 15, 2021

அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களுடன் வைகோ MP சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று மாலை 7.00 மணி அளவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அவர்களை, சா°திரி பவன் அலுவல் அகத்தில் சந்தித்தார். 

அப்போது அவர் அளித்த கோரிக்கை விண்ணப்பம்.

மாண்புமிகு அமைச்சர் அன்புச்சகோதரர் மாண்புமிகு ஹர்தீப் சிங் புரி அவர்களுக்கு,
வணக்கம்.

தமிழ்நாட்டில், எண்ணெய் மற்றும் எரிகாற்றுக் குழாய்கள் பதிக்கும் பணிகள்,  கீழ்காணும் இடங்களில் விரைவில் தொடங்க இருக்கின்றன.  

1. இருகூர் - தேவனகொந்தை - பாரத் பெட்ரோலியம்.

2. கொச்சி - கூட்டநாடு கெயில்

தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், இந்தக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அந்தக் குழாய்களை, விவசாய நிலங்களுக்கு உள்ளே பதிக்க இருக்கின்றார்கள். இதனால், விளைநிலங்களும்,  வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும். மேற்கண்ட மாவட்டங்களில் வேளாண் நிலங்களின் சந்தை மதிப்பைச் சார்ந்து வாழ்கின்ற 30000 விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கெயில் திட்டம், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, இன்றுவரையிலும் செயல்படுத்த முடியவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பை உணர்ந்து, 2013 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாடு முதல் அமைச்சர், கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூட்டநாடு திட்டத்திற்காக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில், ஓரமாகப் பதிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினார். அவ்வாறு, இதற்கு முன்பு எத்தனையோ இடங்களில், சாலைகளின் ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அண்மையில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி-தர்மபுரி இடையே, 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலை ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இரு திட்டங்களும், வணிக நோக்கம் கொண்டவை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.  

எனவே, பாதிக்கப்படுகின்ற உழவர்களின் சார்பில், கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்:

1. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அருகில், பயன்பாட்டுத் தாழ்வாரங்களை உருவாக்க (Utility Corridors) வேண்டும்.

2. அதைப் பயன்படுத்தி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இருகூர்-தேவனகொந்தை மற்றும் கெயில் நிறுவனத்தின் கொச்சி -கூட்டநாடு எண்ணெய் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே பதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ அவர்கள் இவ்வாறு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.12.2021

Friday, December 10, 2021

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தஅரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன? வைகோ கேள்வி: சட்ட அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 598 (2.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, சட்ட அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. கீழமை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துக் கூறி இருக்கின்றார். அவ்வாறு இருப்பின், அதுகுறித்து, அரசின் விளக்கம் என்ன?

2. கீழமை நீதிமன்ற வளாகங்களில், பெண்களுக்குத் தனி ஒதுங்கிடங்கள், எந்த அளவில்  உள்ளன?

3. நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, அரசு மேற்கொண்ட முயற்சிகள் யாவை?

4. அந்த முயற்சிகள் நிறைவேற, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு ஒதுக்கி இருக்கின்ற நிதி எவ்வளவு?

சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த விளக்கம்

1 முதல் 4 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அடிப்படைப் பொறுப்பு, மாநில அரசுகளின் கடமை ஆகும். மாநில அரசுகளின் வளங்களைப் பெருக்க, ஒன்றிய அரசு, ஏற்கனவே வகுக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறைமைகளின் அடிப்படையில், நீதித்துறைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை அளித்து வருகின்றது. இந்தத் திட்டம், 1993-04 நிதி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ், இன்றுவரையிலும், 8709 கோடி ரூபாய், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. நீதிமன்ற அறைகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வீடுகள் மற்றும் துணை நீதிமன்றங்களுக்கு, இந்தத் தொகை செலவிடப்படுகின்றது.

இந்தத் திட்டத்தை, 01.04.2021 முதல் 31.03.2026 வரையிலான, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இருக்கின்றது; அதற்காக, ரூ 9000 கோடி நிதி ஒதுக்கி இருக்கின்றது; அதில் ஒன்றிய அரசின் பங்கு 5307 கோடி ரூபாய் ஆகும். மேலும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் ஒதுங்கிடங்கள், கணினி அறைகள், வழக்குஉரைஞர்கள் அமரும் கூடம் ஆகியவற்றைக் கட்டும் வகையில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றப் பதிவாளரின் கணக்குப்படி, நாடு முழுமையும் 26 விழுக்காடு நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்குத் தனி ஒதுங்கிடங்கள் இல்லை. உயர்நீதிமன்றங்களின் கணக்குப்படி, 20,565 நீதிமன்ற அறைகள், 18,142 குடியிருப்புகள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்ற வளாகங்களில் உள்ளன. இது, 31.10.2021 வரையிலான கணக்கு. மேலும், 2841 நீதிமன்ற அறைகள், 1807 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

‘தாயகம்’                                            தலைமை நிலையம்
சென்னை - 8                                      மறுமலர்ச்சி தி.மு.க
10.12.2021

Thursday, December 9, 2021

வைகோ MP கோரிக்கை ஏற்பு!

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனைக் குழு கூட்டம் (Consultative Committee Meeting) நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இன்று (08.12.2021) காலை 9 மணிக்கு, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பங்கேற்றார்.

அமைச்சர், அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியில் பேசினர்.

அப்போது வைகோ குறுக்கிட்டு, “இங்கே எல்லோரும் இந்தியில் பேசுகின்றார்கள; நான் எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

“மூத்த உறுப்பினர் ஆகிய தாங்கள் இன்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமாக வரவேண்டிய மொழிபெயர்ப்பாளர் இன்று வரவில்லை.

எனவே, உங்கள் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என சொன்னார்.

அதன் பிறகு பேசிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், வைகோ அவர்களை வரவேற்றுப் பேசினர். 

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில், மொழிபெயர்ப்பாளர் ஒருவர், மொழி பெயர்த்துச் சொல்வது வழக்கம்.

உறுப்பினர்கள் காதுகளில் ஒலிபெருக்கி அணிந்துகொண்டு அதன் வழியாக மொழிபெயர்ப்பைக் கேட்க முடியும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
08.12.2021

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது. வைகோ MP அறிக்கை!

இந்த உலகில் பழம்பெருமை மிக்க இடங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்து இருக்கின்ற, மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்றது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே கடுமையான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. யானைகளின் காட்டு வழித் தடத்தை மறித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலா விடுதிகளை, முழுமையாக இடித்துத் தகர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது. 

இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை  குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடை இன்மைச் சான்றை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுத் தீர்ப்பில், திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்றும் ஆனால், தேசிய காட்டு உயிர் வாரியத்தின் தடை இன்மைச் சான்று  பெறாமல் (NBWL)  திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டு இருந்தது.

திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்ற பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு, விசாரணையில் இருக்கின்றது. 

இந்த நிலையில், கடந்த மே 20ஆம் தேதி, இத்திட்டத்திற்கான காட்டு உயிர்கள் பாதுகாப்பு வாரியத்தின் தடை இன்மைச் சான்று கோரி, தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH விண்ணப்பித்துள்ளது. 

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இத்திட்டத்தை, Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA)  கூறிய போதிலும், திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என மாற்றி,  தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து, ஒன்றிய அரசே நேரடியாக  சுற்றுச்சூழல் சான்று வழங்கி இருந்தது.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியை மட்டும்  தவிர்த்து விட்டு, பிற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைகின்றது. 

தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். நியூட்ரினோ வழக்கு எண். WP(MD) 733/2015 வழக்கு  தாக்கல் செய்த நாள் 20.01.2015, மேற்படி வழக்கு இறுதியாக மாண்புமிகு நீதிபதிகள்  தமிழ்வாணன், ரவி  ஆகியோர் முன்பு 26.03.2015அன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் அரசு தரப்பில் தடையின்மைச் சான்று (Clearance Certificate) வாங்கவில்லை என பதில் மனு  தாக்கல் செய்து இருந்தனர்.  ஆகவே,  நீதிமன்றம் தடை ஆணை  வழங்கி உள்ளது

2018 ஆம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில் 13 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டோம். இந்த நடைபயணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார் என்பதையும், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தி இருந்தார் என்பதையும் நினைகூர விரும்புகின்றேன். 

எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது; ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு  அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து உரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும், தமிழ் நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்து  வருகின்றது. எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
08.06.2021

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு**உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்!

08.12.2021
கேள்வி எண்: 1160

கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. அண்மையில், தமிழ்நாட்டில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறிப்பாக கடற்கரைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி கோரி, தமிழ்நாட்டு அரசிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பம் ஏதேனும் வந்ததா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் நிலை என்ன?

3. எத்தனை பேர் இறந்தார்கள்? எவ்வளவு மதிப்பு சொத்துகள் சேதம் அடைந்தன?

4. பாதிப்புகளைக் கண்டு அறியவும், எவ்வளவு உதவிகள் வழங்கலாம் எனப் பரிந்துரை செய்யவும், ஒன்றிய அரசின் சார்பில் ஏதேனும் குழு அனுப்பப்பட்டதா?

5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்

1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

ஆமாம். தமிழ்நாடு அரசு ஒரு கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து இருக்கின்றது. பலத்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, ரூ 549.63 கோடி நிதி உதவி கேட்டு இருக்கின்றார்கள். 54 பேர் இறந்தனர்; 6871 கால்நடைகள் இறந்தன; வீடுகளுக்கும், 51025.64 ஹெக்டேர் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.

பேரிடர் மேலாண்மைப் பொறுப்புகள், மாநில அரசின் கடமை ஆகும். அதன்படி, மாநில பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து, (State Disaster Response Fund (SDRF) ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இசைவு பெற்று, மாநில அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.  

கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திற்காக, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, கடுமையான பாதிப்புகளுக்கு, ஒன்றிய அரசின் அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்படும் குழுவின் பரிந்துரையின்படி, நிதி உதவி வழங்கப்படுகின்றது.

அதன்படி, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய, ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்து இருக்கின்றது.  அந்தக் குழு, நவம்பர் மாதம், 21 முதல் 24 வரை  தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது.

அந்த குழு அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் விதிமுறைகளின்படி நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் 2021-22 நிதி ஆண்டில், தமிழ்நாடு அரசுக்கு, SDRF நிதியில் இருந்து, 1088 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.“அதில் ஒன்றிய அரசின் பங்கு 816 கோடி; மாநில அரசின் பங்கு 262 கோடி. ஒன்றிய அரசின் பங்கு, முன்னதாகவே இரண்டு தவணைகளில் 408 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றது.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
09.12.2021

Monday, December 6, 2021

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்!

இன்று 6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து இருப்பதை எதிர்த்து, இன்று அவையின் நடவடிக்கைகளை நடத்தக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், மாநிலங்கள் அவையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்று உறுப்பினர்கள். முழக்கங்களை எழுப்பினார்கள். குறிப்பாக. வைகோ அவர்கள் உரத்த குரல் எழுப்பினார். கடந்த கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களுக்காக, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் அவையில் இருந்து நீக்கி வைத்து இருப்பது ஜனநாயகப் படுகொலை என்று குறிப்பிட்ட வைகோ, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்; கொல்லாதே கொல்லாதே ஜனநாயகத்தைக் கொல்லாதே என தமிழில் முழக்கங்களை எழுப்பினார். தமிழ்நாடு. கேரளா, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் இணைந்து கொண்டனர். வைகோ எழுப்பிய முழக்கங்கள் அவை முழுமையும் எதிரொலித்தது,

கூட்டத்தை நடத்த முடியாமல், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4.00 மணிக்கு, அவை மீண்டும் கூடியபோது, நாகாலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க அறிக்கை வாசித்தார்.

அப்பொழுது வைகோ குறுக்கிட்டு, நாகாலாந்தில் உங்கள் இராணுவம் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கின்றது; இங்கே உங்கள் அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்கின்றது என்று கூறினார்.

ஒவ்வொரு முறை சபை ஒத்திவைக்கப்பட்டபோதும், இதே நிலை நீடித்தது. எனவே, நாளை வரை, அவையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.12.2021

சட்ட மாமேதைக்கு வைகோ MP புகழ் வணக்கம்!

அரசு அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில்‌ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொதுச்செலாளர் வைகோ MP மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செய்தனர்.

Saturday, December 4, 2021

வைகோ MP கோரிக்கை. நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழி!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். 

அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு...

1. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி கிராமத்தில், 4500 பேர் வசிக்கின்றார்கள். சுற்றி உள்ள, சிவஞானபுரம், வாகைத்தாவூர், காப்புலிங்கம்பட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி,இடைசெவல், சவலாப்பேரி ஆகிய கிராமங்களுக்கு மையமாக இருக்கின்றது. சுமார் 10000 மக்கள் வசிக்கின்ற பகுதி. 

இந்தக் கிராமங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, வியட்நாம், நியூசிலாந்து, மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பணிபுரிகின்றார்கள். ஆண்டு வரவு செலவு 50 கோடி வரை புரள்கின்றது. 

எனவே, வங்கிக்குச் செல்ல வேண்டுமானால், 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி அல்லது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கயத்தாறு ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். 

தற்போது வில்லிசேரியில் ஒரு கூட்டுறவு சொசைட்டி மட்டுமே உள்ளது. தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிக் கிளை எதுவும் இல்லை. 

எனவே, வில்லிசேரி கிராமத்திற்கு கனரா அல்லது ஐஓபி வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

2. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்,நடுவக்குறிச்சி

100000, வல்லராமபுரம், கே.வி.ஆலங்குளம், குத்தாலப்பேரி, அருணாசலபுரம், தர்மத்தூரணி, சூரங்குடி, புதுக்கிராமம், தட்டாங்குளம், சந்திரகிரி, வென்றிலிங்காபுரம், சக்கரைக்குளம் ஆகிய ஊர்களுக்கு மையமாகத் திகழ்கின்றது. மொத்தம் 20000 பேர் வசிக்கின்றார்கள். 

இந்தப் பகுதியில் தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கி எதுவும் கிடையாது. 

எனவே, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரன்கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும். 

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 700 பேர் இந்தியப் படையில் பணிபுரிகின்றார்கள். வளைகுடா நாடுகளில் 750 பேர் வேலை செய்கின்றார்கள். ஆண்டு வரவு செலவு 25 கோடிக்கு மேல் நடைபெறுகின்றது. 

எனவே, நடுவக்குறிச்சியில் கனரா வங்கி அல்லது ஐஓபி வங்கியின் தேசிய அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

3. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தேல்புரம், ஒரு பரபரப்பான வணிக மையம் ஆகும். சுற்றிலும் உள்ள, சேனன்விளை, செம்பொன்விளை, மேற்கு நெய்யூர், வழுதை அம்பலம், கோணங்காடு, படுவர்கரை, களிமார், நெய்யூர் மேக்கன்கரை, வர்தன்விளை உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு மையமாக பெத்தேல்புரம் விளங்குகின்றது. ஒட்டுமொத்தமாக 20000 மக்கள் வசிக்கின்றார்கள். பெத்தேல்புரத்தில், அரசு மருத்துவமனை, மேனிலைப்பள்ளி, அஞ்சல் அலுவல் அகம், கிராம நிர்வாக அலுவல் அகம், முந்திரி ஆலைகள், காய்கறிச் சந்தை, கூட்டுறவு பால் சொசைட்டி, சிபிஎ°இ என எத்தனையோ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்தப் பகுதியில் வங்கிக் கிளைகள் எதுவும் இல்லை. கடந்த 29.07.2021 அன்று, பெத்தேல்புரத்தில் வங்கிக் கிளை அமைத்துத் தரக் கோரி ஏற்கனவே மின்அஞ்சல் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளேன். எனவே, கனரா வங்கி, இந்தியன் அல்லது இந்தியன் ஓவர்சீ° வங்கி என ஏதேனும் ஒரு வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

இவ்வாறு வைகோ கேட்டுக்கொண்டார். 

வங்கிக் கிளைகள் அமைத்துத் தருவதாக நிதி அமைச்சர் நிர்மலா உறுதி அளித்தார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.12.2021

ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! நாடாளுமன்றத்தில் வைகோ MP கோரிக்கை!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இன்று (03.12.2021) சுழிய நேரத்தின்போது, (Zero Hour) வைகோ ஆற்றிய உரை.

இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் வழங்கினார்.

அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம்’ எனக் கூறி உள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.

இது ஒரு அடக்குமுறை ஆகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகின்றது.

மேலும், ஒன்றிய அரசு அறிவிக்கின்ற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங்களுக்காக, ஒன்றிய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டி வந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கின்றது.

எனவே, அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார்.

அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது.

இவ்வாறு வைகோ பேசினார்.

அவரது பேச்சுக்கு இடையூறுகள் எழுந்தன. ஆனால், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தென் மாநிலங்களைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் வைகோவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மறுமலர்ச்சி தி.மு.க
தலைமை நிலையம்
‘தாயகம்’                                                   
சென்னை - 8                                             
03.12.2021

Friday, December 3, 2021

தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும்; அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை முற்றுமுழுதாக எதிர்க்கின்றேன்! மாநிலங்கள் அவையில் வைகோ MP!

அவைத்தலைவர் அவர்களே,

அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இது, பொறுத்துக் கொள்ள முடியாத, இந்தியக் கூட்டு ஆட்சிக்கு எதிரான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும்.

மனித குலத்திற்கான ஒழுக்க நெறிகளை வகுத்த திருவள்ளுவர், திருக்குறளின் வான் சிறப்பு எனும் அதிகாரத்தில், மழையின் சிறப்பை வரையறுத்துக் கூறுகின்றார்.

நீர் இன்றி அமையாது உலகு எனின், யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு.

இதன் பொருள்:
நீர் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை.
அதுபோல் மழை இல்லை என்றால், மனித வாழ்க்கை இல்லை.

பக்ரா நங்கல் அணைக்கட்டைத் திறந்து வைத்து உரை ஆற்றிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், ‘அணைகளே இந்த நாட்டின் ஆலயங்கள்’ என்று சொன்னார்.

இப்போது உலகில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அணைகளைக் கட்டி இருக்கின்றது இந்தியா. இங்கே, 5254 அணைகள் உள்ளன. 44 அணைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பு, சென்னை மாகாண அரசில், பல அணைகள் கட்டப்பட்டன. ஆந்திர, கர்நாடக, கேரள மக்களை, நாங்கள் உடன்பிறப்புகளாகவே, அண்ணன், தங்கைகளாகவே கருதுகின்றோம். ஆனால் இப்போது அவர்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கின்றார்கள்; கழுத்தை நெரிக்கின்றார்கள்.

இந்த அணைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழ்நாடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இது அணைகள் பாதுகாப்புச் சட்டம் அல்ல; பேரழிவை ஏற்படுத்தும் சட்டம்.

வலுஇழந்த அணைகள், உடையக் கூடும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தமிழகத்தில் சோழப் பெருவேந்தன் கரிகாலன் கட்டிய கல் அணை, இன்றைக்கும் அப்படியே பயன்பாட்டில் இருக்கின்றது. அதைப் பார்த்த ஜெர்மானியப் பொறியாளர்கள், ‘இந்த அணையை எப்படிக்  கட்டினார்கள்?’ என வியந்து போற்றினார்கள்.

கல்அணை, உலக அதிசயங்களுள் ஒன்று. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக நிற்கும்.

19 ஆம் நூற்றாண்டில், கடுமையான வறட்சி தாக்கியபோது, இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள். எனவே, கர்னல் பென்னி குயிக், சர் ஆர்தர் காட்டன், பொறியாளர் மெக்கன்சி போன்ற ஆங்கிலப் பொறியாளர்கள், பல அணைகளைக் கட்டினார்கள்.

கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் பரிதவித்துக் கொண்டு இருந்த விவசாயிகளுக்கு வாழ்வு அளித்து இருக்கின்றது.

ஆனால் நான் வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன்: ‘முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும்; வெள்ளத்திற்குள் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள்’ என்று, கேரள மாநிலத்தில் தவறான தகவல்களைப் பரப்புகின்றார்கள். அது உண்மை அல்ல.

எனவே, இரண்டு மாநிலங்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அவர்கள் இரண்டு அறிஞர்கள் குழுவை அமைத்தார்கள். ஒன்று எஸ்.எஸ்.பிரார் குழு, மற்றொன்று டி.கே. மிட்டல் குழு. இறுதியாக, நீதிபதி ஆனந்த், நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், நீதிபதி தாமஸ் ஆகிய மூவர் குழு, அணையைப் பார்வையிட்டது. எத்தகைய நில நடுக்கத்தையும் தாங்கக்கூடிய அளவிற்கு அணை வலுவாக இருக்கின்றது என அறிக்கை தந்தனர்.

ஆயினும், தவறான பரப்பு உரைகளின் விளைவாக, ‘அணையை உடைப்போம்; மக்களைக் காப்போம்’ என்ற முழக்கங்கள் கேரளத்தில் எழுப்பப்படுகின்றன.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; தமிழகம் கேட்டுக்கொண்டபடி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம்; பிறகு 152 அடிக்கு உயர்த்தலாம் என்று சொன்னது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகளை புதிதாகக் கட்டி இருக்கின்றார்கள். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அந்தக் கட்டுமானங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக, அவர்கள்தான் அணையின் உறுதித்தன்மை குறித்து பொய்யான தகவல்களை மக்கள் இடையே பரப்புகின்றார்கள். எனவே சிலர், சுத்தியல் இரும்புத் தடிகளோடு சென்று, அணையைத் தாக்கித் தகர்க்க முயற்சித்தார்கள்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், எங்களுடைய மாநில எல்லைக்கு உட்பட்ட பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என, கேரளச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியது.

இப்போதும் அவர்கள், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள்.

அப்படி அணை உடைக்கப்பட்டால், அதன்பிறகு அவர்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மாட்டார்கள். தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்கள் பாலை மணல்வெளியாக மாறிவிடும்.

1960 களில், பரம்பிக்குளம் ஆழியாறு தொடர்பாக, தமிழ்நாடு கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, முல்லைப்பெரியாறு ஆகிய நான்கு அணைகள், கேரள மாநில எல்கைக்குள் அமைந்து இருந்தாலும், அவற்றின் மீதான தமிழ்நாடு அரசின் உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. எனவே, கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும், முல்லைப்பெரியாறு அணையின் உரிமையாளர் தமிழக அரசுதான்.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, மாநிலங்களுக்கு இடையே நீர்ப்பங்கீடு குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், நடுவண் அரசின் அணைகள் பாதுகாப்பு மன்றத்திடமே இருக்கும் என்றாலும், பேரழிவு மேலாண்மை ஆணையமும் ஒற்றுமையாக இணைந்தே செயல்பட வேண்டும்.

எங்களுடைய கர்நாடகத்து உடன்பிறப்புகள், அண்ணன் தங்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், காவிரியின் குறுக்கே, மேகே தாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

அதற்காக, கர்நாடக அரசு 5962 கோடி ரூபாய்களை ஒதுக்கி இருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8 ஆகிய நாள்களில், கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஒருவரது இல்லத்தில், கமுக்கமாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அப்போதைய, நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சரும் பங்கேற்றார்.

“மேகே தாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை நாங்கள் வெளிப்படையாகத் தர மாட்டோம்; ஆனால், நீங்கள் அணையைக் கட்டிக் கொள்ளலாம்” என்று அவர் அந்தக் கூட்டத்தில் உறுதி அளித்தார்.

எனவே, கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.  இது, சென்னை மாகாணத்திற்கும், மைசூரு மாகாணத்திற்கும் இடையே, காவிரி நீர்ப்பங்கீடு குறித்து, 1924 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைந்த, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் கர்நாடகம் மதிக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டு மக்கள் அறவழிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

ஆந்திர மாநிலம் தன் பங்கிற்கு, பாலாறின் குறுக்கே தடுப்பு அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுக்கின்றது. பலநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் பெற்று வந்த தண்ணீர் இப்போது கிடைப்பது இல்லை என்பதை, நான் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றேன்.

வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, தமிழகத்தில் தென்பெண்ணை என அழைக்கப்படுகின்ற, கர்நாடகத்தின் மார்கண்டேயா ஆற்றில், ஒரு புதிய தடுப்பு அணையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைக் கர்நாடக அரசு செய்து வருகின்றது.

கர்நாடகத்தின் நந்தி மலைகளில் இருந்து புறப்பட்டு வருகின்ற தென்பெண்ணை ஆறு, கொடியாலம் என்ற இடத்தில் தமிழநாட்டுக்கு உள்ளே நுழைந்து, 320 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், கேஆர்பி மற்றும் திருஅண்ணாமலை மாவட்டத்தின் சாத்தனூர் அணைகளுக்கான தண்ணீர் அந்த ஆற்றில் இருந்துதான் வருகின்றது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கின்றது.

1892 ஆம் ஆண்டு, சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு மாகாண அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஒப்புதல் இன்றி தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை எதுவும் கட்ட முடியாது. அதை மீறி, கர்நாடகம் புதிய அணை கட்டினால், அதன்பிறகு, தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்கள் பாலை மணல்வெளியாக மாறிவிடும்.

இந்த அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு குறித்து, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை எதிர்த்து, அன்றைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கடிதம் எழுதினார். டிசம்பர் 6 ஆம் நாள் நான் தில்லிக்கு வந்து, ஒரு சகோதரனாக என் மீது அன்பு காட்டும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்தேன்.

“இந்தச் சட்டத்தை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ஒன்றியம் சிதறியது போல, இந்தியாவிலும் நடக்கும். அதன்பிறகு, சோவியத் ஒன்றியம் எங்கள் நாட்டு எல்லைக்குள் ஆக்கி இருக்கின்ற சொத்துகள் அனைத்தும், எங்களுக்கே சொந்தம் என உக்ரைன் நாடு அறிவித்தது போல, இந்தியாவிலும் நடக்கும்.

தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள தண்ணீரை, அண்டை மாநிலங்கள் தர மறுத்தால், நாளை ஒருநாள் எங்கள் பேரப்பிள்ளைகள் சொல்லுவார்கள்: தமிழ்நாட்டுக்குள் இருக்கின்ற விஜயநாராயணம் கடற்படைத் தளம் எங்களுக்கே சொந்தம்; நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, திருச்சி படைக்கலன் தொழிற்சாலை எல்லாம், எங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் காலம் வரும்”

என்று சொன்னேன்.

டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்கள். அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளைக் கைவிட்டார்கள்.

இப்போது நீங்கள் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினால், கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடுதான். எனவே, நான் இந்தச் சட்ட முன்வரைவை, முற்று முழுதாக எதிர்க்கின்றேன்.

இவ்வாறு வைகோ MP அவர்கள் 02-12-2021 ல் நாடாளுமன்றத்தில் (ராஜ்யசபா) உரையாற்றினார்கள்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.12.2021

Thursday, December 2, 2021

89 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஆசிரியர் அண்ணன் மானமிகு கி.வீரமணி வாழ்க! வைகோ MP வாழ்த்து!

டிசம்பர் திங்கள் 2 ஆம் நாளில் பிறந்தநாள் விழா காணும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் இனிக்கும் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கம்போல இந்த ஆண்டும் அவரின் பிறந்தநாள் சுயமரியாதை நாளாக நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவு மணம் கமழும் நூல்கள் பெரியார் திடலில் வெளியிடப்பட உள்ளது.

8 வயதிலேயே அறிவாசான் பெரியாரிடம் அடைக்கலமாக சென்று அவருக்கு தொண்டு ஊழியம் செய்து அவரது கொள்கைகளை நாடு முழுக்க பரப்பி அவர் நிறுவிய திராவிடர் கழகம் எனும் தமிழர் உரிமை காக்கும் பாசறையை உயிர்த்துடிப்போடு இயக்கிவரக் கூடிய அண்ணன் கி.வீரமணி அவர்கள் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு உரியவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார்.

“வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூகநீதிக் கொள்கை பளிங்கு சமாதிக்குப் போயிருக்கும். அதிலிருந்து வீரமணியின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது. தமிழக பொதுவாழ்வில் அவருக்கு பெரிய வடிவமும் அமைந்துவிட்டது. அவருடைய தலைமையில் திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டம் எதுவாக இருந்தாலும் ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் நடப்பது வழக்கமாகிவிட்டதால் திராவிடர் கழகம் தனி மரியாதையை பெறுவது சகஜமாகிவிட்டது” என்று மண்டல் குழு அறிக்கை நிறைவேற்றப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளேடு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனிச் சிறப்பை எடுத்து விளக்கியது.

“உலகத்தில் தமிழ் இனம், திராவிடப் பாரம்பரியம் எங்கிருந்தாலும் மகிழ்வோடும், இன்ப முகிழ்வோடும் வாழ வேண்டும் என்பதனை உயிர் மூச்சாய் கொண்டு வாழும் ஒப்பற்ற தலைவர் கி.வீரமணி. தமிழ்ச் சமுதாயம் எழுச்சியுடன் வாழ வேண்டும் என சிந்தித்த தந்தை பெரியாரின் விரிவாக்க சிந்தனையாளர் அவர். தமிழகத்தில் எதையும் படித்து ஆய்ந்து ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் கருத்து வளமிக்க கரிபால்டி அவர். அவர் உயிர் வாழ்வது தமிழர்களுக்காக, உணர்வு பொங்க அவர் பேசுவது, தமிழர் மேம்பாட்டுக்காக ஓய்வின்றி உழைப்பது ஆகியவைகள் அவரின் அரும்பெரும் குணநலன்கள்” என்று மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நேசன் எனும் நாளேடு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு புகழ் மாலை சூட்டி பெருமைப்படுத்தியது.

இவ்வாறு கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களும் பாராட்டி பெருமை சேர்க்கும் பெரியாரின் கொள்கை வாரிசு - பெரியாரின் கொள்கை முரசு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்கள் ஆயிரம் பிறை கண்டு நூறாண்டுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழினம் காக்கும் தூய பணியை தொய்வின்றி தொடர வேண்டும் என்ற விழைவுடன் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
01.12.2021