Saturday, December 4, 2021

ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! நாடாளுமன்றத்தில் வைகோ MP கோரிக்கை!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இன்று (03.12.2021) சுழிய நேரத்தின்போது, (Zero Hour) வைகோ ஆற்றிய உரை.

இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் வழங்கினார்.

அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம்’ எனக் கூறி உள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.

இது ஒரு அடக்குமுறை ஆகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகின்றது.

மேலும், ஒன்றிய அரசு அறிவிக்கின்ற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங்களுக்காக, ஒன்றிய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டி வந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கின்றது.

எனவே, அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார்.

அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது.

இவ்வாறு வைகோ பேசினார்.

அவரது பேச்சுக்கு இடையூறுகள் எழுந்தன. ஆனால், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தென் மாநிலங்களைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் வைகோவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மறுமலர்ச்சி தி.மு.க
தலைமை நிலையம்
‘தாயகம்’                                                   
சென்னை - 8                                             
03.12.2021

No comments:

Post a Comment