Tuesday, November 7, 2023

இராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சி! வைகோ MP கண்டனம்!

தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டே காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.

ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய, ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy - HELP)

அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம்(OALP) மூலம் ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் (இதில் தரைபகுதி – 1259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

தற்போது அந்தப் பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் போன்ற பகுதிகளில் புதிதாக கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது.

தற்போது அந்தப் பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்திலும் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி உள்ளது.

ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.

இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், இராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை அனுமதிக்கக் கூடாது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

No comments:

Post a Comment