Tuesday, July 16, 2024

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு முறை விமானம் இயக்கப்பட்ட உள்ளதாக தகவல்! வரவேற்கத்தக்க செய்தி!

கடந்த 01.07.2024 அன்று ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து திருச்சி விமான சேவைகள் தொடர்பாக சில கோரிக்கைகள் வைத்தேன்.

அதில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டடம் பிரதமர் மோடி அவர்களால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதிகள் இல்லை. எனவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்.

அதேப்போல, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். இதன்மூலம், திருச்சி மற்றும் அருகமை மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என குறிப்பிட்டு இருந்தேன்.

இந்நிலையில், தற்போது திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு முறை இண்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இது வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. இதன்மூலம் திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
16.07.2024

Sunday, July 14, 2024

தினமலர் இட்டுக்கட்டிய பொய் செய்தி. வைகோ MP கண்டனம்!

திருச்சி தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தினமலர் சென்னைப் பதிப்பில் இன்று(14.07.2024) வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கட்சி நிர்வாகிகளிடம்,“திமுக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைத்திருந்தால் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன்” என்று கூறியதாகவும், இந்தத் தகவல் பரவி திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் வெற்றிக்காக உழைத்தக் கூட்டணி கட்சியினருக்கு திருச்சி காஜாமலையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, துரை வைகோவுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார்” என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி திமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிட வாய்ப்பளித்து வெற்றியை ஈட்ட முழு முதல் காரணமானவர் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை மறுமலர்ச்சி திமுக நன்றி பாராட்டுகிறது.

திருச்சியில் மூன்று இலட்சத்திற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி பெற, அன்புச் சகோதரர் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் பங்களிப்பும் உழைப்பும் அளவிடற்கரியது.

அதே போல அமைச்சர் தம்பி மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் தி மு க மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் உழைப்பும் தேர்தல் பணிகளும் நன்றிக்கு உரியன ஆகும்.

இதனை தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த கனத்திலிருந்து ஊடகங்களுக்கும், ஏடுகளுக்கும் அளித்த நேர்காணல்களில் எடுத்துரைத்து துரை வைகோ திமுகவிற்கு இதயமார்ந்த நன்றியைக் கூறினார்.

ஆனால் தினமலர் ஏடு சென்னைப் பதிப்பில் இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு இருப்பது பத்திரிக்கை தர்மம் ஆகாது.

தினமலர் சென்னைப் பதிப்பில் இது போன்ற செய்திகளைப் பரப்பி அவதூறு செய்து திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் பிரச்சனை உருவாக்க வேண்டும் என்று கருதினால் அந்த நினைப்பில் மண் விழும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் காவல் அரண்களாகத் திகழும் பத்திரிக்கை ஊடகங்கள் அறநெறி தவறி செய்திகளை வெளியிடும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
14.07.2024

Saturday, July 13, 2024

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக முதல்வர் மறுப்பு. வைகோ MP கண்டனம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது.


அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் 27.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அங்கு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஜூன் 24-ஆம் தேதிவரை 4 அணைகளுக்கும் 7.236 டிஎம்சி நீர் வந்துள்ளது.


இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஜூன் 24-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கர்நாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்.


கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.


இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து இரு மாநில அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிக்கிறேன்” எனக்கூறி, கூட்டத்தை ஒத்திவைத்தார்.


டெல்லியில் நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ஆம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.


காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.


இந்தக் கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நிகழாண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளது.


ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.


நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி, கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது.


நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 9 டிஎம்சி-யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி-யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1-ஆம்தேதி முதல் தற்போதுவரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.


கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது அடாவடித் தனமானது; கண்டனத்துக்குரியது.


வறட்சி காலம், மற்றும் மழைக் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.


இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது.


ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.


ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கு நீரைத் திறக்க கர்நாடக மாநிலத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.


தமிழ்நாடு அரசு கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

13.07.2024

Wednesday, July 10, 2024

சிதம்பரம் கே.இராதாகிருஷ்ணன் மறைவு. வைகோ MP இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கே.இராதாகிருஷ்ணன் (வயது 66) அவர்கள் நேற்று (09.07.2024) உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் சகோதரி கே.மல்லிகா அவர்களின் சகோதரரான கே.இராதாகிருஷ்ணன் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் திடல் வெளிப்பகுதியில் தனியார் தொழிலகம் நடத்தி வந்தார்.
கே.இராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், சகோதரரை பிரிந்து துயரில் வாடும் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், மறைந்த இராதாகிருஷ்ணன் அவர்களின் துணைவியார் சங்கவி அவர்களுக்கும், சங்கீதா, சற்குணா, கனிமொழி ஆகிய அவரின் மகள்களுக்கும் ஆறுதலையும் மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.07.2024

Saturday, July 6, 2024

மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள். வைகோ MP கண்டனம்!

2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து, மூன்று சட்டங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், மேற்குவங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

நாடு முழுக்க உள்ள வழக்கறிஞர்கள் இந்தச் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். பா.ஜ.க.வைத் தவிர்த்த பல அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்களோடு விவாதித்து, கருத்தை அறியாமல் அவர்களை அவையிலிருந்து வெளியேற்றிவிட்டு, அரசியல் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசு எதேச்சதிகாரமாக உருவாகியதுதான் இந்த மூன்று சட்டங்கள்.

மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராகவும், நீதிமன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் இருப்பதோடு, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அரசியல் கட்சியினரை கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்லும் வகையிலும், ஆயுதப் பயிற்சி, ஊர்வலங்களை நடத்த அனுமதிக்கும் வகையிலும், விசாரணை நாட்களை அதிகமாக்கும் வகையிலும் ஒன்றிய அரசு இந்த மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றன. இது அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானதாகும்.

எனவே, இந்தச் மக்கள் விரோதச் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதனை எதிர்த்து நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு அளிப்பதோடு, மறுமலர்ச்சி தி.மு.க.வும் அத்தகைய கிளர்ச்சிகளில் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.07.2024

உலகத் தமிழினம் பெருமை கொள்கிறது! இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு வைகோ வாழ்த்து!

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்தத் தேர்தலில் ஸ்ட்ரா போர்ட் அன்ட் பவ் தொகுதியிலிருந்து உமா குமரன் என்ற தமிழீழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி 19,145 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியினை ஈட்டியுள்ளதைக் கண்டு உலகத் தமிழினம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளால் அங்கிருந்து புலம் பெயர்ந்து இலண்டனில் தஞ்சம் அடைந்த உமா குமரனின் பெற்றோர்கள் 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

குயின்மேரி பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்த உமா குமரன், 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்ற விவகார துணை இயக்குநராகவும் பணியாற்றி ஆழ்ந்த அனுபவங்களைப் பெற்றவர் ஆவார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய உமா குமரன் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.கழகமும், தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழ் மக்களும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக் கூறி மகிழ்கிறார்கள்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் இங்கிலந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உமா குமரன் அவர்களுக்கு தமது வாழ்த்தினை  மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி இருக்கிறார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.07.2024

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை! வைகோ MP இரங்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மிக இளம் வயதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங் .

படுகொலைக்குக் காரணமான உண்மையான கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கூலிக்குக் கொலை செய்யும் கும்பல் சர்வ சாதாரணமாக நடமாடுவதும், படுகொலைகளை நிகழ்த்தி வருவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி வருகின்றது.

தமிழ்நாட்டின் நலனுக்காக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு  அபாய அறிவிப்பாக சட்டம்  ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கு காவல்துறையினர் இடமளிக்கக் கூடாது.

பொதுவாழ்வில் இன்னும் மக்கள் பணி ஆற்ற வேண்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.07.2024

Wednesday, July 3, 2024

நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ கன்னிப் பேச்சு..!

இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியது. ஜூன் 25 ஆம் தேதி மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நான் பதவியேற்றுக் கொண்டேன்.

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (02.07.2024) பங்கேற்று எனது கன்னிப் பேச்சை பதிவு செய்தேன்.

கடந்த இரண்டு நாட்களாக நான் கடுமையாக திட்டமிட்டு தயாரித்த உரையின் சுருக்கம்:
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பிரச்சனைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவின் பொறியியல் ஆற்றல் மையமான திருச்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக பேச விரும்புகிறேன்.

பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன்.

இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும் வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலையை கூற விரும்புகிறேன்.

இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நமது மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 7000 கோடி இதற்கு தேவைப்படும் நிலையில் தமிழக அரசு தனது சிறிய ஆதாரங்களுடன் இப்பணியை ஏற்னவே முன்னெடுத்துள்ளது. எவ்வாறாயினும் தீபகற்ப நதிகளை இணைக்கும் முழுத் திட்டத்தை தொடங்கவும், நிதி அளிக்கவும் ஒன்றிய அரசு முன் வரும் என நம்புகிறேன். இதனால் ஐந்து மாநிலங்களின் வறட்சி பாதித்த பகுதிகள் குறிப்பாக, எனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் பயனடையும். தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள். ஆகவே, தேவையான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையான வெய்யிலிலும், மழையிலும், பட்டியினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. விவசாயிகள் தாக்கப்பட்டனர். அவர்கள்மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்றுத்தரவும், விவசாயிகளுக்கு நிலையான சூழலை உருவாக்கவும் ஒன்றிய அரசு தவறிவிட்டது. அவர்களின் போராட்டங்களை ஒன்றிய அரசு புரிந்துகொள்ளவில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மற்றும் இதர தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை நீக்குவதற்கு உண்டான வழிமுறைகள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறாததற்கு வருந்துகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா 2022 -க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு, ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நான் மதிமுக சார்பிலோ,
இந்தியா கூட்டணி சார்பிலோ,
எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை.

ஆனால் நான்,
சாமானியர்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவும் பேசுகிறேன்.

அரசியல் எல்லைகள், சித்தாந்தங்களை தாண்டி சாதாரண மக்களுக்கு சேவை செய்வோம். அவர்களை அரவணைப்போம் என இந்த அவையின் முன்பு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க சமூக நீதி,
வாழ்க சமத்துவம்,
வாழ்க மதச்சார்பின்மை,
வாழ்க சகோதரத்துவம்,
வாழ்க உலகளாவிய சகோதரத்துவம்!

இவ்வாறு உரையை தயாரித்து இருந்தேன்.

உரையாற்றுவதற்கு ஐந்து நிமிடங்கள் வாய்ப்பு தரப்படும் என தெரிவித்து இருந்த நிலையில், இரண்டு நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

நான் உரையாற்றும்போது, தரவுகளை தவிர்த்து கையில் எந்த குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் உரையாற்ற வேண்டும் என நினைத்து இருந்தேன்.

ஆனால், இரண்டு நிமிடங்கள் மட்டுமே தரப்பட்டதால் தயாரித்து வைத்திருந்ந உரையின் பல பகுதிகளை விட வேண்டியதாயிற்று. முழுமையாக பேச முடியவில்லை.

உரையை நிறைவு செய்வதற்கு உள்ளாகவே பேச்சை நிறுத்தும்படி ஆயிற்று.

கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் எனது கன்னிப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். கழகத் தோழர்கள் உனது உரையை கேட்டு மகிழ்ந்தார்கள் என தெரிவித்தார். ஆனால், எனக்கு நிறைவு இல்லை என அவரிடம் சொன்னேன்.

'இதுபோன்ற அவைகளில் நீ இதற்கு முன்னால் உரையாற்றியது இல்லை. இது தான் முதல் உனது முதல் உரை. பெரிய பேச்சாளர்களே முதல் வாய்ப்பில் தடுமாறுவார்கள். ஆனால் நீ சிறப்பாக பேசி இருக்கிறாய்' என தலைவர் அவர்கள் பாராட்டினார்.

திட்டமிட்டபடி உரையாற்ற முடியாவிட்டாலும் உங்கள் அனைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முயன்று இருக்கிறேன்.

அன்புடன்,
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.07.2024

Tuesday, July 2, 2024

ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்த இரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார். வைகோ MP இரங்கல்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி மூச்சு அடக்கும்வரை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சர்வதேச அளவிலும் குரல் கொடுத்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள் தன் 91 ஆம் வயதில் 30.06.2024 அன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆறாத் துயர் அடைந்தேன்.

1956 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியில் இணைந்த அவர், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக இருப்பதைக் கண்டித்து, கருப்பு ஜூலை எனும் தமிழினப்படுகொலை நடந்த 1983 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற அவைகளை புறக்கணித்தது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து இரா.சம்பந்தன் விலக்கி வைக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட போது, மீண்டும் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கைத் தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்போது வலியுறுத்தியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர், இணைப் பொருளாளர் ஆகிய பொறுப்புகளில் இவர் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில் இலங்கை தமிழர் கட்சி, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இவர் தலைமையில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களை வென்றது.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக நாவலர் அ.அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர் உரிமைக்காகவும், சிறுபான்மையினரான இசுலாமியர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். 

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் துயரத்திற்குப் பின்னர், தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும், ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம், சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலம் என ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து இவர் குரல் கொடுத்தார்.

இரா.சம்பந்தன் அவர்களது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் பரிதவிக்கும் அவருடைய தமிழரசு கட்சியினருக்கும், அவரது இல்லத்தினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
02.07.2024

Monday, July 1, 2024

ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு ராம்மோகன் நாயுடு அவர்களுடன் சந்திப்பு..!

ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு ராம்மோகன் நாயுடு அவர்களை இன்று (01.07.2024),
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் எம்.எம்.அப்துல்லா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் முரசொலி ஆகியோருடன் நானும் இணைந்து சென்று, நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் நாங்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், 

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தோம்.

இரண்டாவதாக, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூர், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவையை பயன்படுத்துகின்றன. இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூர், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன.

எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும் என, கோரிக்கை வைத்தோம்.

அதேப்போல, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இல்லை. ஆகவே, டெல்லியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம்.

இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட மக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும்.

ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு ராம்மோகன் நாயுடு அவர்களின் தந்தை காலஞ்சென்ற கிஞ்சராபு எர்ரான் நாயுடு அவர்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்கள், தலைவர் வைகோ அவர்களின் உடல் நலத்தை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்ததோடு, தலைவர் அவர்கள் டெல்லிக்கு வரும்போது நேரில் வந்து சந்திக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
01.07.2024