இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்தத் தேர்தலில் ஸ்ட்ரா போர்ட் அன்ட் பவ் தொகுதியிலிருந்து உமா குமரன் என்ற தமிழீழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி 19,145 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியினை ஈட்டியுள்ளதைக் கண்டு உலகத் தமிழினம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளால் அங்கிருந்து புலம் பெயர்ந்து இலண்டனில் தஞ்சம் அடைந்த உமா குமரனின் பெற்றோர்கள் 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
குயின்மேரி பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்த உமா குமரன், 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்ற விவகார துணை இயக்குநராகவும் பணியாற்றி ஆழ்ந்த அனுபவங்களைப் பெற்றவர் ஆவார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய உமா குமரன் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.கழகமும், தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழ் மக்களும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக் கூறி மகிழ்கிறார்கள்.
இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் இங்கிலந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உமா குமரன் அவர்களுக்கு தமது வாழ்த்தினை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி இருக்கிறார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.07.2024
No comments:
Post a Comment