மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆவது பொதுக்குழு, இன்று 04.08.2024 காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
2014 ஆம் ஆண்டில் இருந்து பத்தாண்டு காலம் இந்தியாவில் பாசிச ஆட்சியை நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய “இந்தியா கூட்டணி” 18 ஆவது மக்களவைத் தேர்தலில் இந்திய மக்களை அணி திரட்டியதால் மோடி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து, கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியில் நீடிக்கின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு தேர்தல் பாடம் புகட்டி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி வெறும் 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பை புரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி தனது இந்துத்துவா செயல் திட்டங்களை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் என 40க்கு 40 எனும் பெரும் வெற்றியை அளித்திருக்கின்ற வாக்காளர் பெருமக்களுக்கு மதிமுக பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திமுக வேட்பாளர் துரை வைகோ அவர்கள் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 90 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவர் - தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் கழகப் பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்று கழக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களுக்கு கழகப் பொதுக்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கிற நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கழகப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடக்கும் ஊழலும் முறைகேடுகளும் ஒழிக்கப்பட்டு தரமான மருத்துவர்கள் உருவாக நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு கண்டிப்பாக தேவை என்று ஒன்றிய பாஜக அரசு நியாயம் கற்பிக்கிறது. ஆனால் ஆண்டுதோறும் அரங்கேறி வந்த மோசடிகள் தரமான நேர்மையான நீட் தேர்வின் முகத்திரையைக் கிழித்து வந்தன. இந்த ஆண்டில் நீட் மோசடிகள் ஒரு புதிய உச்சத்தை எட்டி விட்டன. மராட்டிய மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியே நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வட இந்திய மாணவர்களும் நீட்டுக்கு எதிராக போராடும் நிலைமை உருவாகியுள்ளது.
பல தேர்வு மையங்களில் நடைபெற்ற மோசடிகள் ஆள்மாறாட்டம் வினாத்தாள் கசிவு என நீட் மோசடி முறைகேடுகள், ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுக்க தொடங்கி இருக்கின்றன. உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வு குறித்து கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று மதிமுக பொதுக் குழு வலியுறுத்துகிறது.
ஒன்றிய பாஜக அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதைக் கண்டித்தும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்று வரும் மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு 14ஆம் தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மதிமுக பொதுக்குழு பிரகடனம் செய்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாளான 2024 செப்டம்பர் 15 அன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை காமராஜர் அரங்கத்தில் பட்டிமன்றம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இந்திய குற்றவியல் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CRPC), இந்திய சாட்சிகள் சட்டம்(IEC) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா,மற்றும் பாரதிய சாக்ஷியா ஆகிய மூன்று சட்டங்களை 2024 ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதும் இன்றி மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்காமல் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உள்ளிட்ட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்கிற சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம் சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்து இருப்பதை இப்பொதுக்குழு வரவேற்கிறது. இந்திய பாஜக அரசு மேற்கண்ட சட்டங்களை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி மாநிலங்களுடன் கலந்து பேசி கருத்தொற்றுமை அடிப்படையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இந்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 26 ஜூன்,2024 இல் தனித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் கல்வி பொருளாதார வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மேலும் 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு தொடங்குவதுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும்.
அப்பொழுதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி அனைவருக்கும் சமத்துவம், சமூக நீதி கிடைக்கும் என்பதை இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மராட்டிய மாநிலம் பீமாகோரேகானில் டிசம்பர், 2017 இல் எல்கர் பரிஷத் எனும் மகர் சமூக ராணுவத்தினர் மராத்தா ஆட்சியாளர்களுக்கு எதிராக போரில் வெற்றி கண்ட 200 வது ஆண்டு விழாவை கொண்டாடியது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியில் இந்துத்துவ கும்பல் வன்முறையை ஏவி விட்டது.
ஆனால் மராட்டிய பாஜக அரசு வன்முறையாளர்களை விடுவித்துவிட்டு, நிகழ்ச்சியை நடத்திய பேராசிரியை சோமா சென், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், மனித உரிமை போராளி சுதிர் தா வாலே, போன்றோரையும், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கௌதம் நவ் லகா, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் அருண் பெரைரோ, வழக்கறிஞர் வெர்னேன் கோன்சல்வேஸ் , பேராசிரியர் ஆனந்த் தெல்தும் தே, பேராசிரியர் ஹனிபாபு, அருட்தந்தை ஸ்டேன் சுவாமி போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் 16 பேரை 2018 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ருஹஞஹ) கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.
இவர்களில் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி தனது 84 வயதில் மும்பை சிறையிலேயே உடல் நலம் பாதித்து மரணம் அடைந்தார். மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மற்றும் 12 பேர் விசாரணை கைதிகளாகவே கொடும் சிறை வாசத்தை அனுபவித்து வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் பீமாகோரே கான் வழக்கு புனையப்பட்ட பொய் வழக்கு ஆகும்.
இஸ்ரேல் நாட்டில் இருந்து பெறப்பட்ட பெகாசஸ் உளவுச் செயலியை பயன்படுத்தி சமூக செயற்பாட்டாளர்களின் கணினியில் ஊடுருவி மின்னஞ்சலில் மாவோயிஸ்டுகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக ஆவணங்கள் செலுத்தப்பட்டன என்பதை அமெரிக்காவின் ஆர்சனர் கன்சல்டிங் நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் ஏடும் அம்பலப்படுத்தின.
பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களை விடுதலை செய்யக்கோரி உலகெங்கும் மனித உரிமை அமைப்புகள் இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஒன்றிய பாஜக அரசும் மராட்டிய மாநில அரசும் இந்த வழக்கில் பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மனித உரிமை போராளிகள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு மரணமடைந்த மனித உரிமை காப்பாளர் ஸ்டேன் சுவாமி இரண்டாம் நினைவு நாளான ஜூலை 5 ,2023 அன்று தமிழ்நாடு மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனித உரிமை காப்பாளர்கள் அங்கீகாரம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றுமாறு கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊழியர்களாக பணியாற்றி கடந்த 2022 டிசம்பர் மாதம் முதல் ஓய்வுப் பெற்ற சுமார் 6000 தொழிலாளர்களுக்கு பணிக்கால பணப் பலன்கள் வழங்கப்படவில்லை.
மேலும் கடந்த 14 மாதங்களாக அகவிலைப்படி மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியும் உயர்த்தப்படவில்லை. தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரந்தர தொழிலாளர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்தவும் இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில், 700 குடும்பங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் நான்கு தலைமுறையாக தேயிலைத் தோட்டங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனம் 2028ல் குத்தகை காலம் முடிவு அடைவதற்குள் தொழிலாளர்களை குடும்பத்தோடு 2024 ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சொந்த நிலமோ, வீடுகளோ இல்லாததால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை கருணையுடன் பரிசீலித்து தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த உரிய வழிவகை காணுமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அங்கு காவிரி ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,
“மேக்கேதாட்டு அணை குறித்து தமிழக அரசுடன் பேசத் தயாராக இருக்கிறோம். மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றாலும், அது குறித்து பேசத் தமிழகம் தயாராக இல்லை. மத்திய அரசு அனுமதி அளித்தால், மேக்கேதாட்டு அணையைக் கட்டி முடிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “மேக்கேதாட்டு அணைத் திட்டம், கர்நாடகத்தின் உரிமையாகும். கர்நாடக எல்லைக்குள் மேகேதாட்டு அணை கட்டப்படும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் பிரச்னை கிளப்பி வருகிறது. வழக்கமான நீர் ஆண்டில் போதிய மழை பெய்தால், காவிரி நதிப்படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பினால், தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடப்படும்” என்றும் கூறியிருக்கிறார்.
கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ள கருத்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானதாகும்.
கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவை நிர்ணயித்தது.
மேலும் வறட்சி காலங்களில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்கும் நடுவர் மன்றம் வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.
இதையெல்லாம் பொருட்படுத்தாத கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விடுவதை தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் காவிரி ஆறு வறண்டு போகும். காவேரி பாசனப் படுகை மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் குடிநீருக்குக் கூட அல்லல்படும் நிலையும், பயிர் சாகுபடிக்கு போதிய நீரில்லாமல் வேளாண் தொழிலையே இழக்க வேண்டிய நிலைமையும் உருவாகும்.
மேக்கேதாட்டு அணை பிரச்சனையில் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தன்னை சந்தித்தபோது கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்தும் ஏற்கத்தக்கதல்ல.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தெளிவாக உள்ள நிலையில், இனி கர்நாடக மாநிலத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையில்லை.
கர்நாடக மாநில அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டுமென மதிமுக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22.07.2024 அன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது ஆகும்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்த நான்கு நாட்டுப் படகுகளுடன் 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து சென்று வங்கக் கடலில் நெடுந்தீவு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் படகு ஒன்றின் மீது சிங்கள கடற்படை கப்பல் மோதியதால் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருவதால், மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்கள் டெல்லியில் ஜூலை 27ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரைச் சந்தித்து, தமிழக மீனவர்கள் சந்திக்கின்ற இடர்பாடுகளை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளதையும் துரை வைகோ எம்பி சுட்டிக்காட்டி உள்ளார்.
டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியிடம் இலங்கை தோற்ற நிiயில், ஆத்திரம் கொண்ட இலங்கைக் கடற்படையினர் கடந்த ஜூலை 31 ஆம் தேதி இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு மீது கடற்படைக் கப்பலை மோதச் செய்து வெறியாட்டம் போட்டனர். படகிலிருந்த மூக்கையா, முத்து முனியன், மலைச்சாமி, இராமச்சந்திரன் ஆகிய நான்கு மீனவர்களும் உயிர்த் தப்ப எண்ணி கடலில் குதித்தனர். இதில், கெடுவாய்ப்பாக மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரன் என்ற மீனவர் காணாமல் போயுள்ளார். மற்ற இரண்டு மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களை திட்டமிட்டு படுகொலை செய்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையின் செயல்களைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழ்நாட்டையே உலுக்கியது.
கள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பதற்கு மதுவிலக்கு சட்டத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளத் திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக் கோரி ஊராட்சிமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, கிராம ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தன. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு முன்மாதிரியாக கலிங்கப்பட்டி விளங்குகிறது.
தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதுடன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைப் போல முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் குக்கிராமங்கள் வரை பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கேரள மாநிலம், வயநாட்டில் சூரல் மலை, முண்டகை பகுதிகளில் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிர்ப்பலி ஆகியுள்ள நிகழ்வு மிகுந்த துயரத்தைத் தருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் கேரள மாநில அரசும், ஒன்றிய அரசும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் மலைக் கிராம மாவட்டங்களை கண்காணிக்கக தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவற்றை பணித்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு மாதவ் காட்கே தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு, கேரளாவில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது. இக்குழு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் சுற்றுச் சூழல் பாதிப்புள்ள பகுதிகள் மற்றும் மண்டலங்களை வகைப்படுத்த பரிந்துரைகளை அளித்திருந்தது.
கல் குவாரிகள் அமைத்தல், கட்டுமானங்கள் ஆகிவற்றிற்கு தடை விதித்திருந்த காட்கில் குழு பரிந்துரைகளை செயல்படுத்தாததால் வயநாட்டில் நிலச்சரிவால் பெரும் துயரம் விளைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மாதவ் கட்கில் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்முயற்சி மேற்கொள்ள மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு முடிவுகளுக்கு எதிரான 20 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட்-1,2024 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது சமத்துவத்திற்கு வழி வகுக்கும்.
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு, முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பட்டியல் இனத்தவரின் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளில் 6 பேர், பட்டியலினத்தவர் - பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இத்தகைய உள் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 14ஆவது பிரிவை மீறவில்லை என்றும் 6 நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இத்தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி இருப்பதுடன், சமூக நீதி தழைக்கவும் வழிவகை செய்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.
இந்தியாவில் பழங்குடி யினர் சமூகத்தில் 705 பிரிவுகள் உள்ளன. மொத்தம் 10 கோடி பேர் உள்ளனர். சமவெளியில் ஒன்றரை கோடி மக்கள் வாழ்கின்றனர். பழங்குடியினர் சமூகத்திற்கு எஸ்டி சான்றிதழ் வழங்க, தாய் - தந்தை, நெருங்கிய உறவினர், கொடி வழி உறவுகள் ஆகியோரின் சான்றிதழ்களை கண்டறிந்து ஆய்வு செய்து, கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்கலாம்.
1989 ஆம் ஆண்டு எஸ்டி சான்றி தழை வட்டாட்சியரே வழங்கலாம் என்று இருந்தது. அதனை மாற்றி 1994 ஆம் ஆண்டு கோட்டாட்சியர் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டாட்சியர்கள் பழங்குடியினர் வாழ்நிலையை அறிந்து சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள் (பழங்குடி) அணிந்திருக்கும் உடையைப் பார்த்து, உருவத்தைப் பார்த்து, பழங்குடியினர் இல்லை என சொல்லக்கூடாது. இதற்காக தமிழ்நாடு அரசின் அரசாணை 59 இல் வழிகாட்டப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு பழங்குடி யினர் பட்டியல் இந்திய குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்டது. பழங்குடியினர் உருவம், ஆடையை கொண்டு பழங்குடியினர் இல்லை என முடிவு செய்யக்கூடாது. அதே போன்று மெய்தன்மையை நிரூபிக்க 50 வருட ஆவணத்தை கேட்கக் கூடாது. எத்தனை அரசாணைகள் வெளியிட்டாலும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் படிப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. ஒருவர் பழங்குடியினர் என முழு திருப்தி அடைந்தாலே கோட்டாட்சி யர் எஸ்டி சான்றிதழ் வழங்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பழங்குடியின மாணவியின் சாதிச் சான்றிதழ் செல்லாது என அறிவித்துவிட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற தில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பின்பற்றி இனச்சான்றி தழ் வழங்க வேண்டும். கல்லூரி யில் மாணவர்கள் சேர்ந்தால் 6 மாதத்திற்குள் சான்றிதழ் சரி பார்ப்பு செய்ய வேண்டும். பழங்குடி மக்கள், குருமன்ஸ் உள்ளிட்ட வர்களுக்கு சான்றிதழ் வழங்க 2023 ஆம் ஆண்டு அரசாணையில் வழிகாட்டுதல்கள் உள்ளன. இதனை கோட்டாட்சியர்கள் பின் பற்றி சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடி மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும், குருமன்ஸ் மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் கிடைக்கவும் மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
ஒன்றிய அரசு பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த அலுவலக குறிப்பாணையில்,
“அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் 30ஆம் தேதி, 1970 ஜூலை 25ஆம் தேதி, 1980 அக்டோபர் 28ஆம் தேதி ஆகிய நாட்களில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நடக்கும் பல்வேறு மதக் கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணமாக இருந்தது என்பதை பல்வேறு ஆணையங்களும், ஆவணங்களும் நிரூபித்து உள்ளன.
மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் கலவரங்களையும் மூட்டி விட்டு குளிர் காயும் கேவலமான அணுகுமுறைகளையும், திட்டங்களையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ்., இத்தகைய ஓர் அமைப்பில் அரசு ஊழியர்கள் உறுப்பினராகலாம் என்பது சாதாரணமானது அல்ல.இதை ஏற்கவும் முடியாது.
அங்கு சுற்றி இங்கு சுற்றி இப்பொழுது அரசு அலுவலகங்களுக்குள்ளேயே அன்றாடம் மதச் சர்ச்சைகளையும், கலவரங்களையும் அரங்கேற்றிட அரசு நிலையிலேயே அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது என்றால் அதன் விளைவு எங்கே போய் முடியும்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு மேற்கண்ட அரசாணையை திரும்பப் பெற மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்துப் போராட வேண்டும் என இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக மலர்ந்து, 31 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மறுமலர்ச்சி தி.மு.க. மலர்ந்த நாளையும், நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியையும் இணைத்து கழகக் கொடியினை உயர்த்தி வைக்கும் முப்பெரும் விழாவாக நாடு முழுவதும் உள்ள கழகக் கண்மணிகள் எழுச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். மரக்கன்றுகள் வழங்குதல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல், குருதிக்கொடை அளித்தல், தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல் என பல வகையிலும் மக்களுக்கு பயன்படும் வகையில் முப்பெரும் விழாவினை சீரும் சிறப்புடன் நடத்திய கழக நிர்வாகிகளுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக சோர்வின்றி உழைத்து வரும் உத்தமத் தலைவர் மாமனிதர் வைகோ அவர்கள் தலைமையில் கழகத்தின் தனித்தன்மையை நிலைநாட்டி, திராவிட இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலிவும் பொலிவும் உடையதாக ஆக்கிட கழகப் பாசறையின் காவல் அரணாகத் திகழும் கழக நிர்வாகிகள் கடமை ஆற்ற வேண்டும் என இப் பொதுக்குழுத் தீர்மானிக்கிறது.
தமிழ் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று ஒழித்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன அழிப்பு செய்த சிங்களக் கொலைவெறி அரசின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், சர்வதேசச் சமூகம் மௌனத்தைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கின்றது.
ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு, இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்;
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்ற சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்; ஈழத் தமிழ் மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் சிங்கள இராணுவத்தின் துணைகொண்டு முறையற்ற வகையில் கபளீகரம் செய்த சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழர்களின் உடைமைகளைத் திரும்பக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, இலங்கை அரசு இதுவரை ஏற்கவில்லை.
தமிழ் ஈழ விடுதலைக்காக 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அமைதிவழி அறப்போராட்டங்களும், மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் வீரம் செறிந்த மறப் போராட்டமும் நடந்தது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தனர்.
இந்நிலையில், தமிழர்களுக்கு மாகாண கவுன்சில் போன்ற ஒப்புக்கு சில அரசு அதிகாரங்களை வழங்குவது எந்தவிதத்திலும் ஈழத்தமிழர் சிந்திய இரத்தத்திற்கு ஈடாகாது. எனவே, சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற பொதுவாக்கெடுப்பு ஒன்றை, ஈழத்திலும், உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களிடமும் நடத்த வேண்டும் என்று, 2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன் முதலாக எடுத்து உரைத்தார்கள். இக்கோரிக்கையை நிறைவேற்றிட, உலகத் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8
‘தாயகம்’
04.08.2024