இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப் படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. அதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லை பகுதியில் வங்கக்கடலில் நெடுந்தீவு அருகில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கு இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது .
கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலைக் கொண்டு வேகமாக மோதினர். இதில் நிலைகுலைந்த மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது. உடனடியாக வேறு வழியின்றி படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு பேரும் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். பின்னர் இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.
இலங்கை கடற்படை நடத்தி இருக்கும் இப்படுகொலை கடும் கண்டனத்துக்கு உரியது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 10 மீனவர்கள் கடந்த ஜூன் 23ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் தங்கள் படகை மோதினர். ஆனால், அதில் சிங்களக் கடற்படை படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சிங்கள கடற்படை வீரர் விபத்தில் உயிரிழந்தை இலங்கை அமைச்சரும், தமிழ் இனத்திற்கு துரோகம் இழைப்பதையே நோக்கமாக கொண்டிருப்பவருமான டக்ளஸ் தேவானந்தா தமிழக மீனவர்கள் மீது பழி சுமத்தினார்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு இந்திய அரசு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் படகுகளை மோதி மீனவரை படுகொலை செய்த சிங்கள கடற்கரையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
No comments:
Post a Comment