Saturday, March 11, 2023

மதுரை இரயில்வே கோட்ட அளவிலான இரயில்வே வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்!

10.03.2023-மதுரை

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வைகோ அவர்கள் நேரில் கலந்து கொண்டு வலியுறுத்திய கோரிக்கைகள்
1.திருநெல்வேலி - தாம்பரம் (வ.எண். 06003/04) (வழி தென்காசி) வாரந்திர இரயிலை தினசரி ரயிலாக இயக்கி வேண்டும்.
2.திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் (வண்டி எண். 06023/30) வழி தென்காசி வாராந்திர இரயிலை, தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
3. நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் உள்ள திருநெல்வேலி மைசூரு வழி தென்காசி, மதுரை, பெங்களூரு வழித்தடத்தில் விரைவு இரயில் இயக்கிட வேண்டும்.
4. வாரத்தில் மூன்று நாட்கள் தற்போது இயக்கப்படும் சென்னை - மானாமதுரை - செங்கோட்டை வரை இயக்கப்படும் சிலம்பு அதி விரைவு இரயிலை (வ.எண். 20681/82) தினசரி இரயிலாக இயக்கிட வேண்டும்.
5.சிலம்பு அதி விரைவு இரயில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் 3 பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு குளிர்பதன வசதியுடன் 2 பெட்டிகளும் கூடுதலாக இணைக்க வேண்டும்.
6. ஹைதராபத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12759/60) இரயிலையோ அல்லது ஹைதராபாத்தில் இருந்து வேறு ஏதேனும் ஒரு இரயிலையோ தென்மாவட்ட மக்களின் வசதிக்காக திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை இயக்கிட வேண்டும்.
7.குருவாயூர் - புனலூர் (வ.எண். 16327/28) விரைவு இரயிலை தென்காசி வழியாக மதுரை வரை விரிவுபடுத்தி இயக்கிட வேண்டும். இது IRTTC 2022 கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த இரயில் சேவையில் மதுரை சென்னை
தேஜஸ் விரைவு இரயிலுக்கு இணைப்பு வசதி கிடைக்கும். 8. திருநெல்வேலி பாலக்காடு (வழி தென்காசி) பாலருவி விரைவு இரயிலை (வண்டி எண். 16791/92) தூத்துக்குடி வரை நீட்டித்திட வேண்டும்.
9. மதுரை - செங்கோட்டை சிறப்பு விரைவு இரயிலை (வண்டி எண். 06503/04) கொச்சுவேலி அல்லது திருவனந்தபுரம் வரை வழி கொல்லம்) விரிவுபடுத்தினால் தென்காசி மாவட்ட மக்களுக்கு கேரள மாநில தலைநகருடன் முதல் தொடர்பு இரயில் சேவையாக அமையும்.
கீழ்க்கண்ட இரயில் நிலையங்களில் இரயில் நிறுத்தங்கள் அவசியமாகும் : 1. சென்னை - கொல்லம் விரைவு இரயிலுக்கு (வ.எண். 16101/02) சிவகாசியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
2.பாலருவி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16791/92) இரயிலுக்கு பாவூர்சத்திரம், கீழக்கடையம் இரு வழி நிறுத்தம் வேண்டும்.
3. மதுரை - புனலூர் (வண்டி எண். 16729/30) விரைவு இரயிலுக்கு சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
4. சென்னை-கன்னியாகுமரி விரைவு இரயிலுக்கு (வ.எண். 12633/34) சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
5. சென்னை - திருச்செந்தூர் விரைவு இரயிலுக்கு (வண்டி எண். 16105/06) சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
6.கோயமுத்தூர் நாகர்கோவில் விரைவு இரயிலுக்கு (வ.எண். 22667/68) சாத்தூரில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
7.திருநெல்வேலி - தாம்பரம் (வ.எண். 06004/03) கடையநல்லூர், பாம்புக் கோவில் சந்தை, சங்கரன்கோவில் ஒரு நிமிட இரயில் நிறுத்தம் வேண்டும்.
8. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண். 12662/61) திருமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்.
இரயில் நிலையம் சீரமைத்தல்:
தென்காசி- விருதுநகர் வழித்தடத்தில் சங்கரன்கோவில் - இராஜபாளையம் இடையே அமைந்துள்ள கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் புதுப்பித்து இயங்கச் செய்திட வேண்டும்.
இதர கீழ்கண்ட வசதிகள் செய்யப்பட வேண்டும் :
1. விருதுநகர் செங்கோட்டை திருநெல்வேலி புனலூர் பாதையில் மின்மயமாக்கப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.
2. மதுரை கோட்டத்தில் உள்ள இரயில் நிலையங்களில் நடைமேடைகளை தரம் உயர்த்திடவும் பயணிகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலங்களையும் போதிய அளவு அமைத்திட வேண்டும். நடைபாதை
3. இராஜபாளையம் இரயில் நிலையத்தின் வடமேற்கு பகுதியில் கூடுதல் நுழைவாயில் மற்றும் பார்க்கிங் வசதி செய்திட வேண்டும்.
4. செங்கோட்டை - அச்சன்கோவில்; சங்கரன்கோவில் - புளியங்குடி சாலைகளில் இரயில்வே பாலம் அமைத்திட வேண்டும்.
5. சென்னிகுளம் கரிவலம்வந்தநல்லூரி) சோழபுரம், ராஜபாளையம் இரயில் பாதையில் கடந்து செல்ல அடிமட்ட பாதைகள் அமைக்க வேண்டும். 6.செங்கோட்டை ரயில் நிலையத்தில் Stabling Lines அதிகரிக்க வேண்டும்.
7. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் இரயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரைகளை விரிவுப்படுத்தி அமைக்க வேண்டும்.
8. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களில் பெட்டிகள் நிற்கும் இடங்களை தொடுதுறையில் தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.
9. 24 பெட்டிகள் நிற்கத்தக்க அளவு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் இரயில் நடைமேடைகளை மேம்படுத்த வேண்டும்.
10. MEMY Shed - மதுரையில் கட்டப்பட வேண்டும்.
11. திருச்செந்தூர் இரயில் நிலைய நடைமேடைகள் விரிவுபடுத்துவதுடன் கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
12. பாவூர்சத்திரம் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு உதவியாளர் சிப்ட் முறையில் நியமித்திட வேண்டும்.
13. நாகர்கோவில் வள்ளியூர் இடையே அமைந்துள்ள காவல்கிணறு ரயில் 1 நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
14. திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே உள்ள காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை பணிகளை விரிவுபடுத்தி முடிக்க வேண்டும். -
15. கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பெருகி வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு தானியங்கி நகரும் படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைத்திட வேண்டும்.
16. திருநெல்வேலி புறநகர், கன்னியாகுமரி இரயில் நிலையப் பகுதிகளை மதுரை கோட்டத்தில் இணைத்திட வேண்டும்.
17. ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் இடையே கரிவலம் வந்தநல்லூர் ரயில் நிலையம் மீண்டும் வேண்டும்.
விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல இரயில் பாதையாக மாற்றிய போது, கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த ரயில் நிலையத்தை தங்கள் பயணத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதி பயணிகள் ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ராஜபாளையம் & சங்கரன்கோவில் இடையே உளள் தூரம் 33 கி.மீ இந்த 33 கி.மீ நீளமான பிளாக் பிரிவு காரணமாக நிர்வாகமும் பல செயல்பட்டு சிரமங்களை எதிர்கொள்கிறது. கரிவலம் வந்தநல்லூர் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலையத்தை உடனடியாக இரயில் நிலையமாகத் திறக்க வேண்டும். இது பொதுமக்களுக்கு உதவுவதோடு, நிர்வாக ரீதியான சிரமத்தையும் குறைக்கும்.
18. ரயில்வே தேர்வு வாரியத்தின் (RRB சென்னை) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை கோட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB திருவனந்தபுரம்), தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. சேலம் கோட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, புதிய சேலம் கோட்டம் அமைப்பதற்கு, கேரளத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசியலை அமைதிப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் சிலவற்றை ரயில்வே நிர்வாகம் செய்தது.
(i) பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு நிலையங்கள் மதுரை கோட்டத்தில் இருந்து பிரித்து பாலக்காடு கோட்டத்திடம் ஒப்படைத்தது. (ii) மதுரை கோட்டத்தின் காலி பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இரண்டு அறிவிப்புகளம் வெளியானபோது, நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போது மேற்கண்ட இரண்டு உத்தரவுகளையும் திரும்பப்பெற்று மதுரை கோட்டத்தை நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோருகிறேன்.
19. திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே மின்சாரத்தால் குறைந்த மற்றும் நடுத்தர தூரம் வரை இயங்கும் MEMU ரயில் வேண்டும்.
தற்போது திருநெல்வேலி -சென்னை எழுப்பூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் நான்கு ஜோடி மெமு சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு அவ்வாறு இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.
20.கொங்கன் இரயில்வே வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் சுதந்திரத்திற்குப் பிறகு ரயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் இரயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் இரயில்வேயைப் பயன்படுத்தவில்லை. தற்போது ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22630/22629) திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே கொங்கன் ரயில்வே வழியாக அதிக ஆதரவுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே மும்பையை அடைய தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட வேண்டும்.
21. திருமங்கலத்தில் ரயில் எண். 12662/12661 பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்.
இப்போது ரயில் எண். 12694 தூத்துக்குடி - சென்னை முத்து நகர் விரைவு வண்டி திருமங்கலத்தில் நின்று செல்கிறது. ஆனால் மறு மார்கத்தில் வரும் போது நிற்பதில்லை. இந்த ரயிலின் நேரம் திருமங்கலத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்றதாக இல்லை. எனவே முத்து நகருக்கு பதிலாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் திருமங்கலத்தில் நின்று செல்ல ஆவண செய்ய ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.
22.தெற்கு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட அனைத்து இரயில் நிலையங்களிலும் இரயில் பெட்டிகள் நிற்கும் இடங்கள் நடைமேடையில் கணினி திரையில் காட்டப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் திரு. வைகோ எம்.பி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

துரை வைகோ முயற்சியில் கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்!

"ஆதாயமில்லா மக்கள் பணி

சமரசமில்லா மக்கள் நலன்"
என்று நான் முன்வைத்த எனது பொதுவாழ்வு குறிக்கோளுடன் எனது பயணமும், தொண்டும் தொடர்கிறது...
அரசியல் பொதுவாழ்வு
எனும் கருவியின் துணையோடு
மக்கள் நலப் பணிகளை செய்திடுவோம்!
தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தலில்,
தலைவர் வைகோ அவர்களின் அனுமதியோடு, நான் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய போது;
மது ஒழிப்புப் போராளி
பாட்டி மாரியம்மாள் பிறந்த கரிசல்குளம், ஆலமநாயக்கர் பட்டி கிராமங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தேன்..
அப்போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு
21 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஊரில் இருந்த A.548 கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சில பல காரணங்களால் கலைக்கப்பட்டு விட்டது என்றும்,
விவசாயிகள் உரங்கள் பெறுவதற்கும்,
அன்றாட வரவு செலவு மேற்
கொள்வதற்கும், நகைக்கடன் வாங்குவதற்கும், இதர அரசின் உதவிகளை பெறுவதற்கும் பெரும் சிரமப்படுவதாகவும், இந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு மீண்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கொண்டுவரப்பட்டால் கரிசல்குளம், ஆலமநாயக்கர்பட்டி, ஆலடிபட்டி, அய்யாபுரம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3500 குடும்பங்களுக்கும் அருகில் உள்ள இதர கிராமங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்..
இந்த கோரிக்கையை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றித் தருகிறேன் என வாக்குறுதி அளித்தேன்.
தேர்தல் முடிந்தது..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலை மனதில் எழுந்தது.
அன்றைய கூட்டுறவு துறை அமைச்சர்
அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை திண்டுக்கல் சென்று சந்தித்து
இக்கோரிக்கையினை வலியுறுத்தினேன்.
இதற்காகவா சென்னையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வந்தீர்கள்?
என்று கேட்டார்..
ஆம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எப்படியும் நிறை வேற்ற வேண்டுமே என்ற அக்கறையிலும், கவலையிலும் இது ஒரு முக்கிய வேலை என்று கருதித்தான் தங்களை தேடி வந்தேன் என்றேன்.
தலைவர் வைகோ அவர்களும் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
மிகுந்த அக்கறையுடன் பேசிய அமைச்சர் அவர்கள், நிச்சயம் செய்து தருகிறேன் என்று கூறினார்..
அப்போது திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சகோதரர் என்.செல்வராகவன் அவர்களும் உடன் இருந்தார்.
தொடர்ந்து நான் மூன்று முறை அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை சந்தித்து வலியுறுத்திக்
கொண்டே இருந்தேன்.
தலைவர் வைகோ அவர்களும் ஏழு, எட்டு முறை அமைச்சரிடம் பேசி நினைவூட்டி வந்தார்...
நமது இயக்கத் தோழர்கள் யாரேனும் ஏதேனும் கோரிக்கைகளுக்காக அமைச்சரை சந்திக்க நேர்ந்த வேளைகளில் கூட, கரிசல்குளம் சொசைட்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதை வைகோ அண்ணனிடமும், தம்பி துரை வைகோவிடம் சொல்லிடுங்க என்று சொல்கிற அளவிற்கு ஊர் பெயர் அமைச்சர் அவர்களுக்கே மனப்பாடம் ஆகிவிட்டது...
இதற்கிடையே மகள் பட்டம் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஊருக்கு அழைத்து வர நான் கனடா சென்றிருந்தேன். அப்போதும் இந்த கோரிக்கை என்னவாயிற்றோ என்று கவலை எழுந்தது..
கூட்டுறவு துறையில் அந்த கோப்பு என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்..
எனது விருப்பத்தின் பேரில் துணை பொதுச்செயலாளர் சகோதார் தி.மு.இராசேந்திரன் சென்னை சென்று கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் திருநெல்வேலி இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து சொன்னார்..
ஊர் திரும்பிய சில தினங்களில்
மீண்டும் அமைச்சரை சந்தித்தேன்..
உடனடியாக அமைச்சர் அவர்கள்,
"வைகோ அண்ணன் தாயார் பிறந்த ஊர், வைகோ அண்ணன் பையன் துரை என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்;
தமிழ்நாட்டில் மூடப்பட்ட சங்கங்களில் முதலில் தொடங்கப்படும் சங்கமாக கரிசல்குளம் சங்கம் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து சங்கத்தை தொடங்குவதற்
கான சட்டபூர்வ கடமைகளை அன்றைய திருநெல்வேலி சரக இணைப்
பதிவாளர், அதன் பின்னர் புதிதாக உருவான தென்காசி சரக இணைப்பதிவாளர், சங்கரன்கோவில் சரக துணைப் பதிவாளர்,
நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி பிரதிநிதி, கலைத்தல் அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டனர்.
இவர்கள், கிராமத்திற்கு வந்து, சங்கத்தை தொடங்குவதற்கு உரிய சட்டபூர்வ கடமைகள் குறித்து சங்கத்தின் பழைய உறுப்பினர்
களிடமும், பொது மக்களிடமும்
விவரித்தனர்.
அதன்படி,
1) கலைக்கப்பட்ட சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி சங்கத்தை உயிர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.;
2)ரூபாய் ஆறு லட்சம் வைப்பு நிதி செலுத்த வேண்டும்;
3)ஏழு பேர் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்...
4)செவல்குளம் சங்கத்தில் இருந்து இந்த சங்கத்தை பிரிக்க ஆட்சேபமில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்..
5) பழைய கட்டிடம் பழுதடைந்துவிட்டதால் சங்கம் இயங்கிட பாதுகாப்பான கட்டிடமும், கிட்டங்கி ஒன்றும் வேண்டும்
இந்த சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றிட, பயன்பெறும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொது நலப் பார்வை கொண்ட பிரதிநிதிகளை அழைத்து மீண்டும் பேசினேன்..
கட்சி, சாதி, கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்து சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்திடுங்கள் என
வேண்டுகோள் விடுத்தேன்..
செவல்குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் சகோதரர் முருகேஸ்வரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனே தீர்மானம் நிறைவேற்றித் தந்து உதவினார்.
எனது விருப்பதற்கு இணங்க
கிராமத்தில் நடந்த ஒவ்வொரு ஆய்விலும், கூட்டத்திலும் துணைப் பொதுச்செயலாளர்
தி.மு.இராசேந்திரன் கலந்து கொண்டு தலைவரும், நானும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பொது மக்களிடம் விவரித்து வந்தார்..
கழக ஒன்றியக்குழு உறுப்பினர் சகோதிரி திருமதி சங்கீதாவும், அவரது கணவர் தம்பி சு.கணேஷ் குமாரும்,
ஊர் நலனில் அக்கறை கொண்ட பல இளைஞர்களும், பெரியோர்களும்
நான்கு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்கண்ட சட்டக் கடமைகளை செய்து முடித்தனர்.
வைப்பு நிதியினையும் மக்கள் மனமுவந்து வழங்கினர்.
இந்த ஊரைச் சேர்ந்தவரும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி
வருபவருமான தலைமைக்கழக வழக்கறிஞர் சகோதரர் பா.சுப்பாராஜ் அவர்களும்; கலைக்கப்பட்ட சங்கத்தால் இழப்புக்கு ஆளானவர்களில் ஒருவரான அண்ணன் கரிசல்குளம்
மாரியப்பன் அவர்களும்
இம்முயற்சிகளுக்கு உதவியாக இருந்தனர்.
(இதற்காக ஒத்துழைத்த ஒவ்வொருவரையும் உரிய நேரத்தில் பாராட்ட திட்டமிட்டு உள்ளேன்)
இதற்கிடையே, கூட்டுறவுத் துறையின் புதிய அமைச்சராக அண்ணன் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்...
ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு
விடக்கூடாதே என்ற கவலை மீண்டும் மனதில் எழ அண்ணன் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள் கூட்டுறவுத்
துறைக்கு பொறுப்பேற்ற சில தினங்களிலேயே சந்தித்து இக்கோரிக்கை குறித்து முழுமையாக விவரித்து முறையிட்டேன்..
கோப்பினை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள், எல்லா நடைமுறைகளை
யும் சட்டப்படி நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நிச்சயமாக கரிசல்குளம் சொசைட்டி மீண்டும் இயங்கும்;
அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று திட்டவட்டமாகத் கூறினார்..
இதனால் என் மனதில் எழுந்த கவலை நீங்கி மகிழ்ச்சி ஏற்பட்டது.
அப்போது நீங்களே ஊருக்கு வந்து கரிசல் குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முறைப்படி தொடங்கி வைத்திட வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்தேன்...
இயக்கத் தந்தை வைகோ அவர்களும் அலைபேசி வழி அழைப்பு விடுத்தார்கள்.
நிச்சயமாக உங்கள் விருப்பப்படி
நானே அந்த கிராமத்திற்கு நேரில் வந்து தொடங்கி வைக்கிறேன்.. ஈரோடு தேர்தல் முடிந்த உடன் தேதியை முடிவு செய்து கொள்வோம் என்று கூறினார் அமைச்சர்..
நாட்கள் சென்று கொண்டு இருந்தது..
எனக்கும் ஓயாத பணிகள்...
என்றாலும் தொடக்க விழா தேதியை உறுதி செய்திட இன்று காலை அமைச்சர் அவர்களை தலைவர் வைகோ அவர்களும், நானும் தொடர்பு கொண்டு பேசினோம்..
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள்,
எமது வேண்டுகோளை ஏற்று, வருகின்ற 2023 மார்ச் 26 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆலமநாயக்கர் பட்டி கரிசல்குளம் கிராமத்திற்கு நேரில் வந்து மீண்டும் உதயமாகும்
கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தொடங்கி வைத்திட அன்புடன் இசைவளித்து உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
எந்தக் குற்றச்சாட்டுகளுக்காக இந்த கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டதோ அதே குற்றச்சாட்டுகளுக்காக கலைக்கப்பட்ட எந்த ஒரு சங்கமும் தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கப்பட
வில்லை. ஒரே விதிவிலக்காக அ.கரிசல்குளம் தொ.வே.கூ.சங்கம் தான் தொடங்கப்படுகிறது...
அதற்கு காரணம், நமது பரிந்துரை நூறு விழுக்காடு மக்கள் நலன் சார்ந்தது என்று தமிழ்நாடுஅரசும், கூட்டுறவு துறை அமைச்சரும் நம் மீது கொண்டிருக்கும் ஒற்றை நம்பிக்கை தான்.
சுமார் 15 மாத கால இடைவிடாத தொடர் முயற்சியின் காரணமாக நான்கு கிராம மக்களிடம் உறுதி அளித்த தேர்தல் வாக்குறுதியை இதோ.. நிறைவேற்றி தந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது...
அரசியல் பொதுவாழ்வு எனும் கருவி இதுபோன்ற மக்கள் நலப்
பணிகளைச் செய்திட துணையாக விளங்குகிறது...
அந்த கருவியின் துணை கொண்டுதான், நாடு முழுவதும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்ற பல்வேறு பொதுநல கோரிக்கைகளை உரிய துறைகளில் முறையிட்டு என்னால் இயன்றமட்டும் பொதுநல நோக்கோடு தீர்வுகாண கடமையாற்றி வருகிறேன்..
"ஆதாயமில்லா மக்கள் பணி
சமரசமில்லா மக்கள் நலன்"
என்று நான் முன்வைத்த எனது பொதுவாழ்வு குறிக்கோளுடன் எனது பயணமும், தொண்டும் தொடர்கிறது...
தொடங்கப்பட உள்ள கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை எவ்வித தவறுக்கும் இடம் தராமல் முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில், பொறுப்பேற்கும்
நிர்வாகத்தினரும், கூட்டுறவுத்துறையினரும், சங்க உறுப்பினர்களும் ஒருமித்த உணர்வோடு நடத்திட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..
மாண்புமிகு தமிழ்நாடு முதல்அமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையிலான ஆட்சியில், 21 ஆண்டுகளுக்கு பிறகு கலைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மீண்டும் உயிர்ப்பித்து இயக்கிட நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், அண்ணன் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களுக்கும், பொறுப்பாக கடமையாற்றி உதவி வருகின்ற தென்காசி கூட்டுறவு துறை இணைப் பதிவாளர், சங்கரன்கோவில் துணைப் பதிவாளர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும், சீரிய ஒத்துழைப்பை நல்கி வரும் நான்கு கிராம பொது மக்களுக்கும், தன்னார்வத்துடன் இதற்காக பாடுபட்டுவரும் நான்கு கிராம இளைஞர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கின்றேன்.
அன்புடன்
துரை வைகோ
தலைமைக கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.03.2023

Thursday, March 9, 2023

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்:திருப்பி அனுப்பியது ஆளுநரின் அதிகார மமதை. வைகோ MP கண்டனம்!

தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022 அக்டோபர் 1 ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டத்துக்கு மாற்றாக அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு, 2022 அக்டோபர் 28 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்கள் மவுனத்திற்குப் பிறகு, இந்தச் சட்டம் குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு நவம்பர் 27 இல் ஆளுநர் இரவி கடிதம் அனுப்பினார். உடனடியாக 24 மணி நேரத்தில் அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. டிசம்பர் 02, 2022 இல் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கக் கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு, ஆளுநர் ஆர்.என். இரவியை, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதனால் ஆளுநர் ஆன்லைன் ரம்பி தடைச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஐந்து மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டார்.

இந்நிலையில், நேற்று மார்ச் 8 ஆம் தேதி,  இச்சட்ட முன்வரைவு மீது சில கேள்விகளை எழுப்பி அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.இரவி அதிகார மமதையில்  கிடப்பில் போட்டதன் விளைவாக இவர்களின் உயிர் பறிபோனது. இதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், அதனைத் தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்திட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்தது.

இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, ஏற்கனவே உள்ள விதிகளின்படி இதைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அதன்பின்னர்தான் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட முன்வரைவு ஒன்றை உருவாக்கியது.

அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன்பாக சட்ட முன்வரைவை நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் ஆர்.என்.இரவி 142 நாட்கள் கழித்து தற்போது திருப்பி அனுப்பி வைத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட முன்வரைவில் எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். அப்படி மீண்டும் அனுப்பினால் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200இன் படி ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 21 சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி தனது கடமையை நிறைவேற்றாமல், இந்துத்துவ சனாதன சக்திகளின் பிரச்சார செயலாளராக செயல்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
09.03.2023

Wednesday, March 8, 2023

உலக மகளிர் நாள். வைகோ வாழ்த்து!

மார்ச் 8-ஆம் நாள் உலக மகளிர் நாளாகும். அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே பெண்கள் உரிமைக்களுக்காகப் போராடினார்கள். கிளாராஜெட்கின்ஸ் அம்மையாரின் தலைமையில் பெண்களின் உரிமை காக்கும் இயக்கம் தோன்றியது. பல ஆண்டுகள் போராடிய பின்னரே இங்கிலாந்து நாட்டில் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள்.

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்றார் திருவள்ளுவர். சங்க காலத்திலேயே பாடல்கள் புனைகின்ற பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். வேந்தனின் அரசவையிலேயே கோவலன் கொலைக்கு நீதி கேட்டு எரிமலையாய்ச் சீறிய கண்ணகியின் காப்பியத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாகப் படைத்தார்.
20-ஆம் நூற்றாண்டில் பெண் உரிமைக்காக தந்தை பெரியார் சங்கநாதம் எழுப்பினார். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் பிரகடனம் செய்தார். அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார்.
இடைக்காலத்தில் பல்வேறு அடிமைத் தளைகள் பூட்டப்பட்டன. அவைகளை அடித்து நொறுக்கி, பெண்களை வீரத் தமிழச்சிகளாக உயர்த்திட்ட பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும்.
வாரிசு உரிமை, மணவிலக்கு, மறுமணம், வரதட்சணை ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு என அடுக்கடுக்கான மகளிர் நலச் சட்டங்களை இயற்றியும், தேர்தலில் வாக்கு அளிக்கவும், வேட்பாளர்களாகப் போட்டியிடவும் பெண்களுக்கு வாய்ப்புத் தந்து பெருமைப்படுத்தியதும் திராவிட இயக்க ஆட்சிதான்.
பெண்களுக்கு பெருமை தரும் வாய்ப்புக்களை தற்போது ஏற்படுத்தி இருப்பது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய திராவிட மாடல் ஆட்சிதான். அதில்தான் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவிகிதமாக இருந்ததை, 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்கள் நலன் காக்க 9 மாத பேறுகால விடுமுறை, 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் 33 சதகிவித இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்க வேண்டும் என்று திராவிட இயக்க ஆட்சி தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருக்கிறது. அதுவும் நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது. தமிழ் இனத்தின் வரலாற்றில் பெண்கள் உன்னதமான மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள். பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு, உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
07.03.2023

மதிமுக நடத்திய சர்வதேச மகளிர் தின விழா!

மார்ச் 08, சர்வதேச மகளிர் தின விழா தலைமை அலுவலகம் தாயகத்தில் இன்று (08.03.2023) காலை மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர்.ரொஹையா ஷேக் முகமது தலைமையில் நடைபெற்றது.

நமது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துரை வழங்கினார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய ஆளுமை சாவித்திரிபாய் புலே அவர்களின் பெருமையைப் பற்றியும் அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களுக்காக போராடி பெண் கல்வி,பெண் சுதந்திரம் ஆகியவற்றுக்காக போராடி வெற்றி கண்ட அன்பின் சிகரம் அன்னை சாவித்திரிபாய் புலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பயணத்தை குறிப்பிட்டு கருத்துரை வழங்கினேன்.
அரங்கம் நிரம்பி வழிய அமர்ந்திருந்த மகளிர் அணியினரிடம் ஆண் பிள்ளைகளுக்கு நிகரான அனைத்து சுதந்திரத்தையும் பெண் பிள்ளைகளுக்கும் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.
நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திருமதி மல்லிகா தயாளன்,திருமதி சந்திரா ஜெகநாதன், திருமதி ராணி செல்வின், திருமதி கிரிஜா சுப்பிரமணியன், நள தமயந்தி,திருமதி ஜானகி, மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஆனந்தி ராமதாஸ், உஷா ஜெயச்சந்திரன், ராஜேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமி ஜீவா,கௌசல்யா ரவி,சந்திரவதனி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி, திருமதி பத்மா பழனிச்சாமி, திருமதி கௌரி கருணாகரன், குருவிகுளம் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், நகர் மன்ற தலைவர் சுமதி முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவி ராஜகோபால், அமுதா செல்வம், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வி காளிமுத்து, சித்ரா தங்கவேல், சித்ரா வெள்ளிங்கிரி,!வனிதாமணி ஜெயக்குமார், ஜெ.காயத்ரி, ராமு அம்மாள், சுகந்தி துரைசிங்கம்,நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி ஆறுமுகசாமி, உஷாராணி, கீதா, சுப்புலட்சுமி, நஜிமா பானு, பேரூராட்சி உறுப்பினர்கள் மாரியம்மாள் கணேசன், முருகேஸ்வரி சுரேஷ்,லதா, ராதா ருக்மணி கணபதி, குறிஞ்சி,வனிதா, ஜீவா, லதா பழனிச்சாமி,ஊராட்சி குழு உறுப்பினர்கள் சித்ரா சங்கர், சங்கீதா கணேஷ்குமார்,சுகுணா கனகராஜ், முருகேஸ்வரி கோட்டியப்பன், வீரலட்சுமி செல்வக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
08.03.2023.

Tuesday, March 7, 2023

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை!

சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது.

தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா அவர்கள் இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்ப்படுத்தி இருக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ என்பதை பூமிப்பந்தில் வாழும் பத்துக் கோடித் தமிழர்களும் நன்கு அறிவார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981 ஆம் ஆண்டிலிருந்து வீரமுழக்கமிட்டு வருபவர் தலைவர் வைகோ.
பாலஸ்தீனப் போராளிகளை அங்கீகரித்த இந்தியா, ஈழ விடுதலைப்புலிகளை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியவர்;
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு என்று நாற்பது ஆண்டுகளாக கூறி வருபவர்;
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் என இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் சொல்ல வைத்த தலைவர்;
இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தார்.
இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களை வேட்டையாடிய போது நாடாளுமன்றத்தில் எரிமலையாக வெடித்தவர் தலைவர் வைகோ.
போரில் காயம் பட்டு கை,கால்களை இழந்து தாயின்மடி என்று வந்த விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் தந்து, மருத்துவ சிகிச்சை அளித்ததால் தலைவரின் தம்பி வை.இரவிச்சந்திரன் தடா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார்.
இவையெல்லாம் திருமா அவர்கள் அறிந்ததுதான்;
தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயச் சுவர்களில் தமிழீழ விடுதலைப்போராட்டமும், புலிகள் தலைவர் பிரபாகரனும் கல்வெட்டாய் பதிந்து இருப்பதற்கு தலைவர் வைகோ தான் காரணம் என்பதை பல மேடைகளில் திருமாவளவன் அவர்களே சுட்டிக் காட்டி இருக்கிறார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல இழப்புகளை சந்தித்தவர் தலைவர் வைகோ என்பதை மறுக்க முடியாது.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாட்கள் வேலூர் வெங்கொடுமை சிறையில் வாடியவர் வைகோ.
பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் அரசியல் செய்தார்கள் என்று திருமா அவர்கள் குறிப்பிடுவது வேதனை தருகிறது.
ஈழத்தமிழர்களை பூண்டோடு கருவறுக்க கொலைப்பாதகன் ராஜபக்சே மூர்க்கத்தனமான போரை கட்டவிழ்த்து விட்டு அப்பாவித் தமிழர்களை ரசாயன குண்டுகளைப் போட்டு கொன்று குவித்தபோது, இந்திய அரசு போரை தடுக்காதது மட்டுமல்ல, சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகளை அளித்தது.
ஆயுதங்கள், ராடார் வழங்கி சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சியும் கொடுத்தது.
உலக நாடுகள் பலவும் சிங்கள இனவாத அரசுக்கு உதவி செய்தன. ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் போரில் பங்கேற்றன. இந்தியாவும் போரில் பங்கேற்று ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு துணை போனது. இந்திய அரசின் இந்தக் கொடும் பிழையை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது
தலைவர் வைகோ அவர்கள் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை எட்டு முறை சந்தித்து, சிங்கள அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட வேண்டாம்; ஆயுத உதவிகள் அளிக்க வேண்டாம் எனக் கோரினார்.
ஆனால் இந்தியா போரை நிறுத்த முயற்சிக்கவில்லை. போர் முடிந்ததும், எங்களுக்காக இந்தப் போரை இந்தியாதான் நடத்தியது என்றான் ராஜபக்சே.
அந்தக் காலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்தவர் தலைவர் வைகோ அவர்கள்.
இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு, தலைவர் வைகோ அவர்கள் மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்?.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தலைவர் வைகோ மீது அளவு கடந்த பாசமும் நேசமும் கொண்டிருந்தவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுத் தலைவர்களை விமர்சனம் செய்தார் என்று திருமாவளவன் குறிப்பிடுகின்ற காலகட்டத்தில் தலைவர் வைகோ, பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள்தான் ஈழப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தனர்.
சத்தியம் தொலைக்காட்சி நெறியாளர் தலைவர் வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்ட போதும் அண்ணன் திருமா அதை கடந்து போனது வருத்தம் அளிக்கிறது.
2002 இல் சமாதானக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் அழைப்பை ஏற்று திருமா உட்பட சிலர் ஈழம் சென்ற போது, தலைவர் வைகோ வேலூர் சிறையில் இருந்தார் என்பதும்,
சிங்கள அரசு தலைவர் வைகோ இலங்கை செல்ல தடை போட்டிருந்தது. அந்தத் தடை இன்றும் நீடிக்கிறது என்பதும் நேர்காணல் செய்த நெறியாளருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.
அப்போது, எம்.ஜி.ஆர் பற்றி உயர்வாக கூறினார் பிரபாகரன் என்று கூறிய திருமா, மற்ற தமிழ்நாட்டு தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறினாராம். யார் யார் என்று நெறியாளர் கேட்க தனியாக சொல்கிறேன் என்று திருமா கூறுகிறார்.
தலைவர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் கூறியதைப் போன்று நிறுவுகிறார் திருமா. இது நியாயம்தானா?
இந்திராகாந்தி சொல்லிதான் எம்.ஜி.ஆர் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி வழங்கியதாக திருமா கூறுகிறார். இந்திராகாந்தி இறந்தது 1984 இல். எம்.ஜி.ஆர். நிதி கொடுத்தது 1986 இல். இதுவும் முரணான தகவல்.
போரை நிறுத்தக் கோரி தாம் செங்கற்பட்டில் உண்ணாவிரதம் இருந்த போது, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்து பார்த்தனர், என்னை யாரும் ஊக்கப்படுத்தவில்லை என்று திருமா கூறியதும், நெறியாளர் முக்தார் வைகோ வெளிநாட்டில் இருந்தாரா? என்று நக்கலாகக் கேட்கிறார். அதையும் இவர் ஆமோதிக்கிறார்.
ஈழத்தில் போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த போது, அந்த குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கியது தலைவர் வைகோ மட்டுமே என்பது உண்மை.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க நீதிமன்றத்தில் தொடந்து வாதாடி வருவது தலைவர் வைகோ அவர்கள்தான் என்பதை மறைக்க முடியாது.
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இன்றைய உலகச் சூழலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு ஒன்றேத் தீர்வு என பெல்ஜியம் மாநாட்டில் முதன் முதலில் முன்வைத்த தலைவர் வைகோ அவர்கள் இன்றும் அந்த இலட்சியத்துடன் செயலாற்றி வருகிறார்.
பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிலிருந்து உரிய அனுமதி பெற்று சென்னைக்கு அனுப்பி வைத்தார் சிவாஜிலிங்கம். இதிலும் வைகோ அவர்கள் மீது வீண் பழி போடுவது எதற்காக?
1989 ஆம் ஆண்டு தலைவர் வைகோ தனது உயிரை துச்சமாகக் கருதி, யுத்தக் காலத்தில் வவுனியா காட்டிற்கு சென்று மாவீரர் திலகம் மேதகு பிரபாகரன் அவர்களை சந்தித்தார். குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் 21 நாட்கள் தங்கி இருந்து விட்டு தலைவர் வைகோ ,கடலில் புலிகள் பாதுகாப்புடன் தமிழ்நாடு திரும்பிய போது மேதகு பிரபாகரன் தனது கைப்பட முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பி இருந்தார்.
அதில், “வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும், எனது சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்துள்ள துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது” என்று மேதகு பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.
இதை விட வேறு எவரிடமிருந்தும் தலைவர் வைகோ அவர்களின் தமிழ் இனப் பற்றுக்கு சான்றிதழ் தேவை இல்லை.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைப்பற்றி பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நோக்கம் தடம் புரண்டு விடும்.
இந்துத்துவ சனாதன சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியதுதான் தற்போதைய முகாமையான சிந்தனை,குறிக்கோளாக இருக்க வேண்டும்.
தி.மு.இராசேந்திரன்
துணைப் பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.03.2023

Tuesday, October 25, 2022

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை தாக்குதல். வைகோ கடும் கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46),  சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.

பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? போதைப் பொருட்கள் ஏதும் கடத்துகிறீர்களா? என கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர்.


இலங்கை கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர்.


ஆனால், இந்தியில் பேசச் சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கியவர்கள் இந்திய கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டு இருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


படகில் சென்ற மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டியிடச் செய்துள்ளனர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற இந்திய கடற்படை காவலர்கள் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கி உள்ளனர்.


மீனவர்களை தரையில் அமரச் சொல்லி காலணி காலால் அவர்கள் மீது ஏறி நின்றும், கைகளை பின்னால் கட்டி மண்டியிடச் செய்தும் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்குள்ளே இந்தியில் பேசிக்கொண்டு, இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஷூ காலால் எட்டி உதைப்பதுமாக நடந்துள்ளனர்.


பின்னர் அனைவரின் ஆதார் கார்டுகளையும் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்று கூறி இழிவான வார்த்தைகளால் மீனவர்களை திட்டியுள்ளனர்.


சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி எப்படி நடந்து கொண்டதோ அதை விட கொடூரமாக இந்திய கடற்படையினர் நடந்து கொண்ட தகவல் கேட்டு இரத்தம் கொதிக்கிறது.


இந்திய கடற்படையினர் இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை எட்டி உதைத்து, காலால் மிதித்து ஏளனமாக நகைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்திய எல்லைக்குள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இந்த செயல் நியாயப்படுத்தவே முடியாத கடும் கண்டனத்துக்குரியது ஆகும்.


இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திதான் இந்தியா என்று பேசுவதால் இராணுவத்தினர் கூட இந்தி மொழி பேசாதவர்களை அந்நியர்களாக நினைக்கும் அக்கிரமம் தலை தூக்கி உள்ளது. இதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.


இந்தி மொழி தெரியாததால் தமிழ்நாட்டு மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஒன்றிய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

25.10.2022

Wednesday, October 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுக! வைகோ அறிக்கை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் 100 ஆவது நாளான 2018 மே 22 அன்று பொதுமக்கள் அணிதிரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிவழியில் பேரணி நடத்தியபோது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.


அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக், ஜான்சி, செல்வசேகர், காளியப்பன், ஜெயராமன் ஆகிய 13 பேர் பலியானார்கள்.


இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிவிசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று (18 அக்டோபர்2022) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.


தூத்துக்குடியை ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றிய அன்றைய அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி வேண்டும்; அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.


துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டோரின் இல்லங்களுக்கு நான் நேரில் சென்று ஆறுதல் கூறினேன். காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் சொன்னேன்.


அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.


தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தைத் தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது.


துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.


அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர் என்று ஆணையம் கூறி இருக்கிறது. எனவே தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் ஐயமில்லை.


சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்;


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை மற்றும் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்பைச் சிதைத்து வெளியே வந்திருக்கிறது.


இடுப்புக்குக் கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது, கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.


விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைஅலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


வைகோ 

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

19.10.2022

Tuesday, October 11, 2022

நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தி வெறி வைகோ கடும் கண்டனம்!

இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது.


ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது.


ஏனெனில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி நாள்’ விழாவில் உரையாற்றியபோது, “ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பா.ஜ.க. அரசின் நோக்கம்” என்று அறிவித்தார். உள்துறை அமைச்சரின் இந்தித் திணிப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுமலர்ச்சி திமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் நாள் சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணைத் தலைவரான ஒடிசா பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த பார்த்ருஹரிமஹ்தப், குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை குறித்து விளக்கி இருக்கிறார்.


அதில், “தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது மாநில மொழி இருக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.


மேலும் பிரிவு ‘ஏ’ மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். அது நூறு விழுக்காடு பின்பற்றப்படவும் வேண்டும்;


இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்திதான் இருக்க வேண்டும். பயிற்சி நிறுவனங்களிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட வேண்டும்.


பணியாளர் தேர்வுகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வினாத் தாளில் ஆங்கில மொழியை அறவே நீக்கிவிட்டு, இந்தி மொழியில்தான் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.


உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும்.


இந்தி பேசுகின்ற மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இந்தி மொழியில் பேசவும், எழுதவும் தெரியவில்லையெனில் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணியாளர்களின் பணி குறித்த மதிப்பீட்டு ஆண்டறிக்கையில் இதனைப் பதிவு செய்திட வேண்டும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும்.


ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களின் துறை சார்ந்த கடிதப் போக்குவரத்து, தொலைநகல், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியிலும், தேவைப்பட்டால் மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும். இவற்றில் ஆங்கில மொழியின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும்.


உயர்கல்வி நிறுவனங்களான பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகங்களில் தற்போது இந்தி மொழி 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இக்கல்வி நிறுவனங்களில் நூறு விழுக்காடு இந்திதான் பயன்படுத்தப்பட வேண்டும்.


மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 37 ஆவது கூட்டத்திற்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.


இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, “ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.


அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.


எனவே ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்

சென்னை - 8

11.10.2022