Tuesday, April 2, 2019

தொழிற்சங்க முன்னோடி எம்.எல்.எப். ஜார்ஜ் மறைவுக்கு வைகோ இரங்கல்!

திராவிட இயக்கத் தொழிற்சங்க வரலாற்றில் முழு ஈடுபாட்டுடன் தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஜார்ஜ் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன்.
ஜார்ஜ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, எழுபதுகளில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பணிகளில் முழுச்சுடன் தன்னை இணைத்துக்கொண்டவர்.
தொழிலாளர் முன்னேற்றச் சங்க தலைவராக காட்டூர் கோபால் அவர்கள் இருந்தபோது, சங்கப் பணிகளுக்கு சுருக்கெழுத்து - தட்டச்சர் தேவைப்பட்ட காலகட்டத்தில் ஆற்காடு வீராசாமி அவர்கள் மூலமாக பணியில் சேர்ந்தவர் ஜார்ஜ். காட்டூர் கோபால் அவர்கள் சங்கப் பணிகளுக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்யும் போது ஜார்ஜ் அவர்களை உடன் அழைத்துச்சென்று கடிதங்கள் டிக்டேசன் கொடுப்பார். அவர் சொல்லி முடித்தவுடன், அடுத்த ஊரில் காரைவிட்டு இறங்கி, சுருக்கெழுத்தில் எழுதி எடுத்து வந்ததை தட்டச்சு செய்து தயாராக வைத்திருந்து காட்டூர் கோபால் அவர்கள் வந்தவுடன் கையொப்பம் பெற்று அனைத்து துறைகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைப்பார். ‘உழைப்பாளி’ பத்திரிகைகளுக்கான கட்டுரைகளையும் அவர் தட்டச்சு செய்து கொடுத்து காட்டூர் கோபால் அவர்களுக்கு செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தவர். பத்மநாபன் அவர்களும், ஜார்ஜ் அவர்களும் தொ.மு.ச. பணிகளில் தங்களை முழுமையாக ஒப்படைத்து இருந்தனர்.
மிசா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது தொழிற்சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதைக் கலைஞரிடம் தெரிவித்து, அன்பகத்திலே தொழிற்சங்கப் பணிகளைத் தொய்வின்றி செய்து வந்தார். அக்காலகட்டத்தில் கலைஞர் அவர்களுக்குக்கூட சில கடிதங்களை தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானபோது கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தொடங்கப்பட்டது முதல் 25 வருடங்களாக தொழிற்சங்கப் பணிகளை செவ்வனே செய்து வந்தார். நமது தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் கூறுவார்.
ஜார்ஜ் சிறந்த தொழிற்சங்கவாதியாக மட்டும் அல்லாது கழக மேடைகளில் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றுவார். கழக பாடகர்களுடன் இணைந்து பொதுக்கூட்ட மேடைகளில் சிறப்பாக பாடல்களும் பாடுவார். அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகவும் திறம்பட செயலாளற்றினார். கழக வெளியீட்டு அணி மாநிலத் துணைச்செயலாளராகவும் பணியாற்றினார். கழகத் தோழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தானே முன்னின்று தீர்த்து வைத்து அரவணைத்துச் செல்வார். கழகம் நடத்திய அறப்போராட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வார். எப்பொழுதும் சிரித்த முகத்துடனேயே வரவேற்பார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் இல்லாமல் சென்னை ராஜீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் அறிந்து, தலைமை மருத்துவரிடம் கூறி உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் சென்ற மாதம் நடைபெற்ற பொதுக் குழுவில்கூட கலந்துகொண்டிருக்கிறார்.
தன்னலம் கருதாமல் தொழிற்சங்கப் பணிகளுக்காகவும், கழகப் பணிகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜார்ஜ் அவர்கள் மறைவு தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் அல்ல, கழகத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
ஜார்ஜ் அவர்களை இழந்து துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது இரங்கலை அறிக்கையாக இன்று 02-04-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment