Friday, May 31, 2019

உதவி மின் பொறியாளர் பணிக்கு வெளி மாநிலத்தவர் நியமனமா - வைகோ கண்டனம்!உதவி மின் பொறியாளர் பணிக்கு வெளி மாநிலத்தவர் நியமனமா - வைகோ கண்டனம்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் நேரடித் தேர்வு. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்னர்.
தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை டான்ஜெட்கோ நேற்று வெளியிட்டுள்ளது. உதவி மின் பொறியாளர்கள் 300 பேரில் 36 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உதவி மின் பொறியாளர் மொத்த பணி இடங்களில் 12% பேரை கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தமிழக அரசு தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றபோது, பொறியாளர் பணி இடங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து தேர்வு செய்திருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல் நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமம் ஆகும்.
2013 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வு ஆக வேண்டுமானால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை 2016, செப்டம்பர் 1 இல் சட்டமன்றத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது அதிமுக அரசு. இதன்படி 7.11.2016 இல் கொண்டுவரப்பட்ட புதிய உத்தரவின்படி. தமிழக அரசுப் பணிகள் வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் பணியமர்த்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை 7.11.2017 இல் தமிழக அரசு வெளியிட்டது. அதில் இயந்திரப் பொறியியல் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில். பொதுப்பட்டியலில் 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது 68 விழுக்காடு அயல் மாநில இளைஞர்கள். அதே போன்று மின்னணு தொடர்பியல் துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில் பொதுப்பிரிவில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்.
பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர்கள் தேர்வில் மதிப்பெண் ஊழல் காரணமாக பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று தற்போது மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல.
தமிழக அரசுப் பணிகளில் பொதுப்பிரிவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டால் அது பொதுப் பிரிவினர்களுக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்குத்தான் அரசுப்பணி என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்றி தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நூறு விழுக்காடு பணி வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 31-05-2019 தெரிவித்துள்ளார்.

Thursday, May 30, 2019

மலைகளின் இளவரசி கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பீர்! மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஏற்ப உலக நாடுகளில் இருந்தும், இந்திய மாநிலங்களில் இருந்தும் கோடை வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ் தலங்களில் தஞ்சம் அடைகின்றார்கள்.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் மலைகளின் இளவரசி கொடைக்கானல் வரும் பயணிகள் இனி இங்கு வரக்கூடாது என்கின்ற அளவுக்கு இந்தாண்டு கடுமையான மனவேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசின் சரியான திட்டமிடல் இல்லாததும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய கொடைக்கானல் நகர முழுமைத் திட்டம், ஆண்டுகள் பலவாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததுமே இதற்குக் காரணம்.

கொடைக்கானல் நகராட்சியில் 2500 சதுர அடி வீடு கட்டுவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. வணிக நிறுவனங்கள் அமைப்பதற்கான திட்ட அனுமதியைப் பெறுவதற்கு திண்டுக்கல்லுக்கும், சென்னைக்கும் செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று, வர்த்தக நோக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது. கொடைக்கானல் நகராட்சி மூலமாகவே சம்பந்தப்பட்ட அனுமதி வழங்கினால் தவறுகள் நடக்காமல் இருக்கும்.

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க கட்டட வரைமுறைகள் ஒழுங்கு செய்திட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி கொடைக்கானலில் சுமார் 450 தங்கும் விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல், தங்கள் உடமைகளுடன் சாலை ஓர நடைபாதையில் படுத்து உறங்கி, சமைத்துச் சாப்பிட்டுச் செல்லும் நிலை இருக்கிறது. உணவகங்கள் முடக்கப்பட்டதால், வணிகர்கள் மிகப் பெரிய பொருளாதார முடக்கத்தைச் சந்தித்துள்ளனர். கொடைக்கானல் மக்கள் மீது நீதிமன்றமும், தமிழக அரசும் இரக்கமும் கருணையும் காட்டி இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, கொடைக்கானலில் ஏற்கனவே நகராட்சி அனுமதி பெற்று கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்த கட்டடங்களை வரைமுறை செய்து அங்கீகரித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.

கொடைக்கானல் நகரம் 26.05.1845 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கண்டறியப்பட்டு, 26.05.2020 ஆம் ஆண்டு 175 ஆவது அண்டு கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலாவை ஊக்குவிக்க உள்ளூர் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் சிறப்பு நிதி ஒதுக்கி தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் விழி பிதுங்கும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்திட இருவழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்து, மையத் தடுப்புடன், பாதுகாப்பு தடுப்புச் சுவரை தரமான முறையில் அமைக்கப்பட வேண்டும். வாகனங்கள் நிறுத்த அடுக்குமாடி வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட வேண்டும். கொடைக்கானலிலிருந்து பெருமாள்மலை அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலை, கொடைக்கானல்பேரிச்சம் வழியாக மூணாறு சாலை போன்றவற்றைத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.

சாதாரண ஏழை எளிய சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் நவீன மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். தற்போது உள்ள மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

விடுமுறை நாட்களில் தற்காலிக கழிப்பறைகள், நகரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள கூடுதல் பணியாளர்களை பணியமர்த்திட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் விமான நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். தனியார் பங்களிப்புடன் கேபிள் கார் திட்டம் கொண்டுவர வேண்டும்.

மலைகளில் ஏற்படும் காட்டுத் தீயால் இயற்கை வளங்கள் அழிந்து போவதைத் தடுக்க வெளிநாடுகளில் உள்ளது போல் தீ அணைப்பு ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஹொலிகாப்டர் ஆம்புலென்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் இயற்கை எழில்கொஞ்சும் மலை வாசஸ்தலங்கள், நீர் வீழ்ச்சிகள், 1070 கி.மீ. நீளம் கொண்ட நீண்ட கடற்கரை, வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள், பழமையான வரலாற்று நினைவுச் சின்னங்கள், ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடப்பெற்ற புகழ்பெற்ற சைவ, வைணவ ஆலயங்கள் என்று அங்கிங்கெணாதபடி எல்லாம் இருந்து அன்னியச் செலவாணியை ஈட்டித் தந்து, சுற்றுலாவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தாததால் சுற்றுலாத் துறை நொடிந்து போய் உள்ளது. இதிலிருந்து சுற்றுலாத்துறையை மீட்டுருவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 30-05-2019 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் - வைகோ கேள்வி!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15 ஆம் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டில்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நடந்தது. தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கூறி இருக்கிறார்.

மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவிலல்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

கர்நாடக மாநிலம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத் திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது. மேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள  வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக‌
பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 29-05-2019 தெரிவித்துள்ளார்.

Sunday, May 26, 2019

திருமா, ரவிகுமார், வைகோவுடன் சந்திப்பு!

நாடாளுன்ற உறுப்பினர்களாக 2019 ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல் திருமாவளவன், விழுப்புரம் மக்களவை உறுப்பினர ரவிக்குமார் ஆகியோர் தலைவர் வைகோ அவர்களை அண்ணா நகர் இல்லத்தில் இன்று 26-05-2019 சந்தித்து நன்றி தெரிவித்தனர். வாழ்த்துப் பெற்றனர்.

Thursday, May 23, 2019

தமிழகம், திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி - வைகோ அறிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அண்ணா தி.மு.க. அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள  முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா தி.மு.க. அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அண்ணா தி.மு.க., அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும். 

வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன. 

தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்து இருக்கின்றார்கள். 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் இன்றைய 23-05-2019 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tuesday, May 14, 2019

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? வைகோ கண்டனம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 2013 மே 14 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில், “சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய் சிலை ஒன்று நிறுவப்படும், அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும், கட்டடக் கலை நாகரிகப் பெருமைகளையும் உலகுக்குப் பறைசாற்றும்படி தமிழ்த் தாய் சிலை அமையும்” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பை ஆறு ஆண்டுகள் கழிந்து நிறைவேற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசின் ‘பூம்புகார் நிறுவனம்’ தமிழ் அன்னை சிலை வடிப்பதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை குறித்து ‘பாரம்பரிய விஸ்வகர்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச் சங்கம்’ சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள வேண்டுகோள் மடல் மூலம் தமிழ் அன்னை சிலை உருவாக்கம் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் அன்னை சிலை எப்படி வடித்தெடுக்கப்பட இருக்கிறது என்று, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருக்கின்றது.

“தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது; பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இந்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும், சங்க கால முறையையும் பின்பற்றி சிலை வடித்தெடுக்கப்பட வேண்டும்” என்று பூம்புகார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் ஊடுருவி உள்ள சில நச்சுக் கிருமிகள் தமிழர்களின் கலை இலக்கியம், பண்பாடு அனைத்தையும் இந்துத்துவா மயமாக்க முயற்சித்து வருகின்றன.

உலகமே வியக்கும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். திராவிடர்களின் கட்டடக் கலை மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரையில் பரவிய கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்புக்கு உரியது.

பேரரசர் இராசராச சோழன் எழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோவிலும், அவரது வீர மைந்தன் இராசேந்திரன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழர்களின் புகழை பறைச்சாற்றிக்கொண்டே இருக்கும்.

மாமல்லபுரத்தில் பல்லவர்கள் வடித்த கற்கோவிலும், சிலைகளும் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதவை ஆகும்.

ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் என்று ஆய கலைகள் அறுபதிலும் சிறப்புற்று விளங்கிய தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவு கூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாடு அரசு, பூம்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிலை வடித்தெடுக்கும் பணியை ஒப்படைத்து பளிங்கு கல், பைபர், கண்ணாடியைக் கொண்டு வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்குவோம் என்று திட்டமிடுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். சங்ககால மரபையும், வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும்?

தமிழர்களின் பண்பாடும், வேதகால இந்து பிராமணிய மரபும் ஒருபோதும் இணைக்கவோ பிணைக்கவோ முடியாதது என்கிற வரலாற்று அறிவை இவர்கள் எப்படி இழந்தார்கள்? சனாதன சங்கபரிவார கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி அரசை கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சீரழிக்க நினைக்கிறது.

அதனால்தான் தமிழ் அன்னை சிலைக்குப் பதிலாக ‘ஆரியமாதா’ சிலை வடித்து, சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்று கூறினால், முதல்வர் பழனிச்சாமிக்கு கோபம் வருகின்றது.

திராவிட இயக்கம் தழைத்த இந்த மண்ணில், தமிழர் மரபுகளை, பண்பாட்டு விழுமியங்களை விழுங்கத் துடிக்கும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 14-05-2019 தெரிவித்துள்ளார்.

Monday, May 13, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக; இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும்! வைகோ எச்சரிக்கை!

தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.
சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் ‘நெற்களஞ்சியமான’ காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது. மோடி அரசுக்குக் காவடி தூக்கும் கையாலாகாத எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருகிறது.
காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
2017 பிப்ரவரி 15 இல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, இந்தியா முழுவதும் 8 கடற் பகுதிகள் மற்றும் 23 உள்நிலப்பகுதிகள் அடங்கிய மொத்தம் 31 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
பின்னர் 2018 ஜனவரி 19 ஆம் தேதி நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஏல நடைமுறை தொடங்கப்பட்டது.
இதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ‘நெல்ப்’ (New Exploration Licensing Policy -NELP) எனப்படும் உரிமம் வழங்கும் திட்டத்தை மாற்றி, ‘ஹெல்ப்’ (Hydrocarbon Exploration and Lincesing Policy -HELP) எனும் ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி புதைபடிவ எரிபொருளான மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் மற்றும் நீர்ம உரிவாயு உள்ளிட்ட எந்த வகையாக இருந்தாலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் . தனித் தனியாக உரிமங்கள் பெறத் தேவை இல்லை. இதற்காக ‘திறந்தவெளி அனுமதித் திட்டம்’ (Open Acreage Lincensing Policy -OALP) ஒன்றையும் மத்திய அரசு அனுமதித்து இருக்கின்றது.
மேலும் ஓ.ஏ.எல்.பி. உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் - தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப் பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.
1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.
மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
நீரியல் விரிசல் முறையில் (Hydro Fracking) 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா பக்கங்களிலும் துளை போடப்படும். பின்னர் பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டுத் துளைகளில் செல்லும் நீர் அந்தத் துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே பூமிக்கடியில் அடைபட்டுக் கிடக்கும் எரிவாயு ஒன்றைக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல் பரப்புக்கு எடுத்து வந்த நீரைப் பிரித்துவிட்டு, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும்.
இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.
வேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?
தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.
காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.
எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 13-05-2019 தெரிவித்துள்ளார்.

Sunday, May 12, 2019

தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயலுக்கு வைகோ கடும் கண்டனம்

பொதுஉடைமை இயக்கத்தின் தியாகத் தலைவர் அண்ணன் திரு நல்லகண்ணு அவர்களை, அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசின் நடவடிக்கை, மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அண்ணன் நல்லகண்ணு, மக்கள் போராளியாக உருவெடுத்தார்.

பொதுஉடைமை இயக்கத்தின் தீவிரமான தோழராக இருந்தபோது, நாடு விடுதலை அடைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட சூழலில், காவல்துறை அவரை கைது செய்து, அவரது மீசையையும் பொசுக்கிப் பிய்த்துச் சித்ரவதை செய்தது.

புரட்சிகர சிந்தனைகளுடன் வலம்வந்த நல்லகண்ணு, பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது நீதிமன்றம். ஏழு ஆண்டு காலம் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் அண்ணன் நல்லகண்ணு.

வாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர். நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் போன்றவை நல்லகண்ணு அவர்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியவை ஆகும்.

தென் மாவட்டங்களில் சாதிக் கலவர நெருப்பு பற்றிப் படர்ந்தபொழுது, நல்லகண்ணு அவர்களின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அண்ணன் நல்லகண்ணு அமைதியை நிலைநாட்ட ஆற்றிய அருந்தொண்டுதான் சாதித் தீயை அணைத்தது. தனது மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே அளித்துவிட்டார். அண்ணன் நல்லகண்ணுவின் 80 ஆம் அகவையைக் கொண்டாடி, கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, அதனுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு அளித்துவிட்டார்.

தமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு போராட்டக் களத்தில் முன்னோடியாக இருந்தவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ்கோர்ஸ் அமைக்கும் முயற்சியைத் தடுத்தவர். தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்க மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியவர். தாமிரபரணி ஆற்று நீரை வரைமுறையின்றி பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுரண்டுவதைத் தடுக்கப் போராடியவர். அவரது போராட்ட வரலாறு அத்தியாயங்கள் நீளமானவை.

மக்கள் தொண்டராக எளிய வாழ்வில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வரும அண்ணன் நல்லகண்ணு அவர்கள் தனது வாழ்விணையரையும் இழந்த நிலையில், 94 வயதில் தியாகராயர் நகர் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

2007 ஆம் ஆண்டு ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் நல்லகண்ணு அவர்களுக்கு அரசுக் குடியிருப்பை இலவசமாக ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் அதற்கு குடியிருப்பு வாடகைத் தொகையை அரசுக்குச் செலுத்தி வந்தவர்.

அண்ணன் நல்லகண்ணு அவர்களின் தியாகத்தைப் பற்றியும், மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுத் தொண்டையும் மதிக்கத் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசுக் குடியிருப்பிலிருந்து அவரை வெளியேற்றிய முறை வன்மையான கண்டனத்துக்கு உரியது. மன்னிக்க முடியாதது.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தியாக சீலர் கக்கன் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பிலிருந்து அவரது குடும்பத்தினரை வெளியேற்றி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அண்ணன் நல்லகண்ணு அவர்களுக்கும், கக்கன் குடும்பத்திற்கும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனதௌ அறிக்கையில் இன்று 12-05-2019 தெரிவித்துள்ளார்.

Friday, May 10, 2019

ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநரின் அடாவடித்தனத்திற்கு வைகோ கண்டனம்!

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர், கடந்த28 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடுகின்றனர். குற்றமற்ற நிரபராதிகளான இவர்களின் வாழ்க்கையே நிர்மூலமாக்கபட்டது. இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம். விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று மூவர் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தபோதே அன்றைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.


ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முடிவெடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்தபோது, மத்திய மைய அரசு முட்டுக்கட்டை போட்டது. விடுதலை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் அமர்வு,ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டு இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6 இல் தீர்ப்பளித்தது.


செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரையை செயல்படுத்தாமல், ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வரவில்லை. இவர்கள் விடுதலை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கருத்து கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. மத்திய அரசிடம் இதுபற்றி கருத்து கேட்க வேண்டிய அவசியம் சட்டரீதியாக அறவே கிடையாது. அப்படியானால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து ஆளுநரே நேரடியாக கருத்துக் கேட்டாரா? அல்லது தமிழக அமைச்சரவை மூலம் கருத்து கேட்டாரா? என்பதுதான் எழுந்துள்ள கேள்வியாகும்.


மாநில அரசு அப்படி கருத்து கேட்டிருந்தால் அது சட்டத்திற்கும், நீதிக்கும் விரோதமான மோசடி நடவடிக்கையாகும். அதனால்தான் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை என்னுடைய தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தி கைது செய்யப்பட்டோம். உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று (09.05.2019) தள்ளுபடி செய்துவிட்டது. இதுபற்றிய பிரச்சனை தமிழக ஆளுநரிடம் இருக்கிறது. அங்கு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

 தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில்9-5-2019 தெர்வித்துள்ளார்.

Monday, May 6, 2019

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு உச்சநீதிமன்றத்தின் தடை ஜனநாயகத்தின் வெற்றி என வைகோ கருத்து!

தமிழக அரசியலில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் அவர்கள் எடுத்த நடவடிக்கை தவறானது. அதற்குத் தடை வேண்டும் என்று உச்சநீதின்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன்கோகாய் அவர்கள் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்து இருக்கிறது.


இதை ஜனநாயகத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தாக்கீது கொடுக்கப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு பேரவைத் தலைவர் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி Þடாலின் அவர்கள் எடுத்த முயற்சியால், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தாக்கீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி தோற்றுப்போகும் என்பதைத்தான் சட்ட வல்லுநர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், தீர்ப்பு வந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவர் தான் எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவர் சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 06-05-2019 அன்று தெரிவித்துள்ளார்.

மதிமுக 26 ஆம் ஆண்டு உதய திருவிழா!

மதிமுக தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்து 26 ஆவது ஆண்டை அடியெடுத்து வைத்தது மே மாதம் 6 ஆம் நாள் 2019.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை கழக தொண்டர்கள் வரவேற்று மலர்கொத்து கொடுத்து தாயகத்திற்குள் அழைத்து வந்தனர். தொடர்ந்து கழக கொடியேற்றி கழக கண்மணிகளுக்கு இனிப்பு வழங்கி மதிமுக 26 ஆம் உதய திருநாளை கொண்டாடினார்.

பின்னர் பேசிய வைகோ அவர்கள், எனது இலட்சியம் தமிழர்களுக்கு ஒரு தேசம் அமைய வேண்டும். தமிழீழம் பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழும். அது என் வாழ்நாள் விருப்பம் என என மதிமுக 26 ஆவது உதய தின விழாவில் பேசினார் வைகோ.