Monday, September 30, 2019

கனரா வங்கிப் பணியில், தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் உள்ளிட்ட ‘குரூப் டி’ பணி இடங்களுக்கு, ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு செய்துள்ள 528 பணியாளர்களுள், 475 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; தமிழ்நாட்டு இளைஞர்கள் 53 பேர் மட்டுமே வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேர்களுள், வெறும் 11 பேர் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு செய்துள்ள 300 உதவிப் பொறியாளர்களுள், 36 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் கூறுகிறார்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவில் நீதிபதி பணிக்கு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தேர்வு எழுதலாம் எனக் குறிப்பிட்டு இருக்கின்றது. இதன் மூலம் தமிழே தெரியாத வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியில் சேர்வதற்கு, அடிமை எடப்பாடி அரசு வழி செய்து இருக்கின்றது.
இப்போது, இரயில்வே துறையைப் போன்று, மத்திய அரசு வங்கிப் பணியாளர் தேர்வுகளிலும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையும் படலம் தொடங்கி இருக்கின்றது.
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், எழுத்தர் எனப்படும் (Single Window Operator-SWO) பணி இடங்களில் 464 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.
வங்கித்துறையில் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி இடங்களுக்கு இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், வங்கி உதவியாளர், எழுத்தர் போன்ற பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள எழுத்தர் பணி இடங்களுக்கு, தமிழே தெரியாதவர்களைத் தேர்வு செய்து இருப்பது கண்டனத்திற்குரியதாகும். இதனால், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தியா முழுவதும் வங்கிப் பணிகளில், அந்தந்த மாநில மொழிகளைப் பேசத் தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்வது என்ற நடைமுறையில், தமிழ்நாட்டில் படித்தவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று வந்தனர். இதனை மாற்றி, வெளிமாநிலத்தவரைத் தேர்வு செய்வது, வங்கிக்கு வருகின்ற பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் இவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டால், தமிழ்நாட்டு வங்கிகளில் மீண்டும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்; வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.
தமிழ் மொழி அறியாதவர்களை, மொழி அறிவு இருப்பதாக தகிடுதத்தம் செய்து, கனரா வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை, கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த, அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்றைய 30-09-2019 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, September 28, 2019

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பாடத்திட்டம் மாற்றம் தமிழகத்திற்கு பச்சைத் துரோகம்! வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (Group-2) பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களில் தேர்வு நடத்துகிறது.
முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பட்டப்படிப்புத் தரத்தில் பொது அறிவுப் பகுதி கேள்விகள் மட்டும் வினா - விடை பாணியில் இடம்பெறும்.
இந்தத் தேர்வுகளில் அடுத்தடுத்து வெற்றி பெறுவோர் இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுதான் குரூப்-2 பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைமுறையாக இருக்கிறது.
இதில் முதல் நிலைத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று மொழிப்பாடத்திலும், மீதமுள்ள 100 கேள்விகள் பொது அறிவு பாடத்திட்டமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் பாடதிட்டங்கள் மாற்றப்படுவதாக, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி, 175 கேள்விகள் பொது அறிவுக் கேள்விகளாகவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் இருக்கும். பொது அறிவுப் பகுதி பட்டப் படிப்பு அளவில் உள்ளதாகும். திறனறிவுப் பகுதி 10 ஆம் வகுப்புத் தரத்திலும் இருக்கும். இரண்டு தாள்களும் சேர்த்து மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300 என்றும், குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 என்றும் இருந்து வருகிறது.
இதுவரையில் தனிப் பகுதியாக இருந்த மொழிப்பாடம், முதல்நிலைத் தேர்விலிருந்து நீக்கப்படுவதாகவும், மொழித் தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படுவதாகவும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் எழுதும் குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மொழித்தாள் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம் தமிழே தெரியாமல் ஒருவர் மாநில அரசு பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை இல்லை. ஆனால் பிற மாநிலத்தவர்களும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர டில்லிக்கு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே மாற்றி அமைத்து, தமிழ்நாடு இளைஞர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து இருப்பது மன்னிக்கவே முடியாத மாபாதகச் செயல் ஆகும்.
2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அ.திமு.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில், அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள்) சட்டம் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது. இதன்படி 7.11.2016 இல் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை, தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியில் சேரலாம் என்று தெரிவிக்கிறது.
இதன் பின்னணியில்தான் கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணி இடங்களுக்கு எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 36 பேர் அதாவது 12 விழுக்காடு நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு டெல்லி பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நுழைக்க டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே மாற்றி அமைக்க முனைந்துள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத் திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் 28-09-2019 அன்று தெரிவித்துள்ளார்கள்.

Friday, September 27, 2019

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு வைகோ மலர் மரியாதை!

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 27-09-2019 அன்று மாலையிட்டு மலர் மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.

தமிழக அரசால் பொய் வழக்குப் போடப்பட்ட கழகத்தினர் சிறையிலிருந்து விடுதலை!

தமிழக அரசால் பொய் வழக்குப் புனையப்பட்டு, புழல் சிறையில் இருக்கும் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர், வடசென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பா,ஜெய்கணேஷ், தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கராத்தே பாபு (எ) பூவராகவன், வைகோ சீனு ஆகியோ இன்று 26.09.2019 மாலை 5 மணி அளவில் சிறையிலிருந்து விடுதலை ஆகினர். அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து 27-09-2019 அன்று வாழ்த்து பெற்றார்கள்.

Thursday, September 26, 2019

கோழிக்கோடு வானூர்தி நிலையத்தில் தலைவர் வைகோ அவர்களுடன் கோகுலம் கால்பந்து குழு வீரர்கள்!

கோழிக்கோடு வானூர்தி நிலையத்தில் தலைவர் வைகோ அவர்களுடன் கோகுலம் கால்பந்து குழு வீரர்கள் 26-09-2019 அன்று சந்தித்தார்கள்.

இந்தியாவில் கால்பந்து என்றால் வடகிழக்கு மாநிலங்கள்தான் புகழ்பெற்ற கால்பந்து அணிகள். மோகன் பகான்,ஈஸ்ட் பெங்கால் கிளப். ஃபெடரேசன் கோப்பையை இந்த இரு அணிகள் மட்டுமே மாறி மாறி வென்று வந்தன.  மற்றொரு அணி முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப். பஞ்சாப் பக்வாரா ஜேசிடி மில்ஸ்  சல்கோவ்கர் கோவா கேரளத்தில் கலமசேரி பிரிமியர் டயர்ஸ் ஆகிய அணிகளும் குறிப்பிடத்தக்கவை  கிரிக்கெட்டில் ரஞ்சிக் கோப்பையைப் போன்றது கால்பந்தில் சந்தோஷ் கோப்பை. அதில் மாநில அணிகள் மட்டுமே ஆட முடியும் தனியார் அணிகள் ஆட முடியாது.  இந்தியாவில் கால்பந்து விளையாட்டு என்றால் மேற்கு வங்காளம் முதல் இடம். அடுத்து கேரளம், மணிப்பூர், மிசோரம்.  இந்த மாநிலங்களுக்கு அடுத்துதான் மற்ற அணிகள்.  வடகிழக்கு மாநிலங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் கால்பந்து ஆட்டத்தில் புகழ்பெற்று விளங்குகின்றன.  இன்று தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட இந்த அணி வீரர்கள், மோகன் பகான், கிழக்கு வங்காளம் அணிகளைத் தோற்கடித்து கோப்பையை வென்ற அணி.  அதை அவர்கள் தலைவர் வைகோ அவரிடம் சொன்னபோது வியப்பு அடைந்தார். தான் ஒரு கால்பந்து ரசிகர் என்பதைக் குறிப்பிட்டார்.  அப்போது அவர்கள் ஐயா நீங்கள் வாலிபால் ஆடுவதை நாங்கள் பார்த்து இருக்கின்றோம் என்றார்கள்.

பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது; அடியோடு நீக்கப்பட வேண்டும் - சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டி!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதுபோது அவர் கூறியதாவது:-
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், தத்துவ இயல் பாடத்தின் கீழ் பகவத் கீதையை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகப்பெரிய தவறாகும். பொறியியல் மாணவர்கள் பகவத் கீதையைப் படிக்க வேண்டிய அவசியம் என்ன? சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கும் அதே குறிக்கோளோடு, அனைத்தையும் இந்துத்துவா மயமாக்கும் கொடிய நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.
இது திட்டமிட்ட இந்துத்துவா திணிப்பு. இது விருப்பப் பாடம் என்று சொல்லி மழுப்ப முடியாது. இந்தத் திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும்.
ஆறு விமான நிலையங்களைத் தனியார் மயமாக்குவதற்கான பணிகளை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இரயில்வே துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மிகப்பெரிய ஆபத்து ஆகும். சேவைத் துறையை வர்த்தகத்துறை ஆக்குகின்றார்கள். இதனால் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்வது மட்டுமல்ல, அனைத்துப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கும் காரணமாகிவிடும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
ஏற்கனவே பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருக்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் கூறி இருக்கிறார்.
நிதி ஆயோக் துணைத் தலைவர் அவர்களும், 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்த நிலை, தேக்க நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுகிறார்.
நூறு நாட்களில் மக்களுக்கு வேதனைதான் மிகுந்திருக்கிறதே தவிர, மோடி அரசு சாதித்தபடியாக எதுவும் இல்லை.
பா.ஜ.க. அரசு தங்களுடைய இந்துத்துவா கொள்கைகளைத் திணிப்பதற்கு முயல்கிறது. இப்படிச் செயல்படுவதால் எல்லா இடங்களிலும் தானாக எதிர்ப்பு உருவாகும். இந்துத்துவா போக்கைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
செய்தியாளர்: தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்துக்கொண்டு வந்திருக்கிறோம். தற்போது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றிருக்கிறது என்று பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
வைகோ: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீட் தேர்வு மொத்தத்தில் நமக்கு மிகப்பெரிய அநீதி திட்டம். ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கெல்லாம் ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாய்ப்பு இல்லாமல், அவர்களது வாழ்வில் இருளடையச் செய்துவிட்டது இந்த நீட் தேர்வு. அதுமட்டுமல்லாமல் ஆறு, ஏழு உயிர்களைப் பலிவாங்கிவிட்டது என வைகோ அவர்கள் 26-09-2019 அன்று தெரிவித்தார்.

செண்பகவல்லி அணையைச் சீரமைத்திடுக! வைகோ கோரிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் - வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளில் 15000 ஏக்கர் பரப்பு விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகத் திகழ்ந்து வந்த செண்பகவல்லி தடுப்பு அணையில் உடைப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு தண்ணீர் கிடைக்கவில்லை.
எனவே உடைப்பைச் சீர் செய்வதற்காக, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், தமிழக அரசு கேரள அரசுக்குப் பணம் கொடுத்தது. ஆனால் கேரள அரசு தடுப்பு அணையைச் சீர்படுத்த வில்லை. பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்த பிறகு, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டது.
எனவே,செண்பகவல்லி தடுப்பு அணை உடைப்பைச் சீர் படுத்துவதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். கேரள முதல்வர்கள், அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பினராயி விஜயன் ஆகியோரை நான் நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்கள் கொடுத்து இருக்கின்றேன்.
தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையான பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட அனைத்து நீர்ப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தோம்.
அதன்பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கேரள முதல்வர்கள் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து இருக்கின்றனர். இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சனைகள் குறித்துப் பேசி இருக்கின்றனர். ஆனால், செண்பகவல்லி தடுப்பு அணை குறித்துப் பேசியதாகத் தகவல் இல்லை.
சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பகுதி விவசாயிகள் 25 பேர் நேற்று திருவனந்தபுரம் சென்று இரண்டு முதல்வர்களையும் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுக்க முனைந்துள்ளனர். அவர்களைக் கேரளக் காவல்துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது தவறு ஆகும்.
முதல்வர்கள் சந்திப்பு இன்று நிகழ்வதாக முதலில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி அந்த விவசாயிகள் இன்று அவர்களைச் சந்திக்க முன்கூட்டியே நேரம் கேட்டு ஒப்புதல் பெற்று இருந்தனர். ஆனால் திடீரென சந்திப்பு நேற்றைக்கு மாற்றப்பட்டது. அதற்கு அவர்களால் ஒப்புதல் பெற முடியவில்லை. கோரிக்கை மனுவும் கொடுக்க முடியவில்லை.
செண்பகவல்லி தடுப்பு அணை உடைப்பைச் சீர்படுத்தவும், தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 26-09-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Wednesday, September 25, 2019

தமிழ்நாட்டில் யூரியா உர தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்! மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்த விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது என்று விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆண்டுக்கு ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் டன் யூரியா உரம் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசின் சார்பில் 60 விழுக்காடு விநியோகிக்கப்படும். மீதமுள்ள 40 விழுக்காடு உரம் தமிழகத்தில் ஸ்பிக், மணலி உரத்தொழிற்சாலை மற்றும் மங்களூர் உரத் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும்.
தமிழகத்தில் இயங்கி வரும் ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளின் உற்பத்தி நின்று போனதால், யூரியா உரத்திற்கு கூட்டுறவு வேளாண் மையங்களையே விவசாயிகள் நம்பி இருக்கின்றனர். அங்கும் போதுமான அளவு யூரியா விநியோகிக்கப்படாததால், தனியார் விற்பனை நிலையங்களை நாடுகின்றனர்.
உர உரிமம் பெற்ற சில்லறை நிலையங்களிலும் யூரியா உரம் விற்பனை நடக்கிறது. 45 கிலோ யூரியா அதிகபட்சமாக 266 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து உர நிலையங்களிலும் இருப்பு, விலை விபர விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், உர விற்பனையாளர்கள் நடைமுறையில் செயல்படுத்துவது இல்லை.
தற்போது பருவ மழை பெய்ததால் தென் மாநிலங்களிலும் யூரியா பயன்பாடு அதிகரித்து, தமிழ்நாட்டிற்கு தேவைக்கு ஏற்ப யூரிய உரம் கிடைக்கவில்லை. இதனால் யூரியா விலையை ரூ.50 முதல் 70 வரை கூடுதலாகக் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
உர விற்பனையாளர்கள் யூரியா விலையை அதிகரித்து விற்பதைத் தடுக்க, தமிழக அரசின் வேளாண்துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு, தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி யூரியா கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.
தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கூடுதலாக உரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப யூரியா உரங்கள் கிடைக்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் 25-09-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, September 24, 2019

சிவந்தி ஆதித்தனார் 84 ஆவது பிறந்தநாள் மல்லை சத்யா புகழ் வணக்கம்!

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 84 ஆவது பிறந்தநாளையொட்டி, போயஸ் கார்டன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, பகுதிச் செயலாளர்கள் சு.செல்வபாண்டியன், இ.கோவிந்தராஜ், தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர் இளவழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தி.நகர் ஹரி, மதுரை சங்கையா உள்ளிட்டோர் 24-09-2019 மாலை அணிவித்து, மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

Sunday, September 22, 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் - வைகோ அறிக்கை!


விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு அளவில் களத்தில் பணியாற்றும்.

தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மறுத்துவிட்டதை இரண்டு ஆண்டு காலமாக மறைத்து, தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கழுத்து அறுத்த அதிமுக அரசின் செயலை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை படுகொலை செய்த அதிமுக அரசின் கொடுஞ்செயலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக ஆக்குகின்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு, வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் துணைபோய் இருக்கிறது.

மேற்கு மாவட்டங்களில் மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரீட் கார்ப்ரேஷன், விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைத்து, மிக உயர் அழுத்த மின்சாரத்தைக் கொண்டுசெல்ல, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பணிகளைத் தொடங்கி உள்ளது. இதனை எதிர்த்துப் போராடி வரும் பொதுமக்களையும், விவசாயிகளையும் காவல்துறையின் அடக்குமுறையை ஏவி எடப்பாடி அரசு ஒடுக்கி வருகிறது.

இதே நிலைமைதான் சேலம் - சென்னை எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் நேர்ந்திருக்கிறது.

நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ஜ.க. அரசின் பாதம் தாங்கியாகச் செயல்படும் பழனிச்சாமி அரசு புதிய கல்விக் கொள்கையை முந்திக்கொண்டு நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது.

மத்திய அரசின் ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் வெளிமாநில மக்கள் வந்து குடியேறுவதற்கு இந்த அரசு வழிவகை செய்திருக்கிறது.

தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் பெற்று, தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்புக்களை பறிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோகிறது.

மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்துவிட்டு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ எழுந்துவிட்டது. அதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளித்தார்கள்.

தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் மக்கள் விரோத அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்.

விக்கிரவாண்டி, நாங் குநேரி இடைத்தேர்தல்களில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மறுமலர்ச்சி தி.மு.கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. புதுவை மாநில நிர்வாகிகள், கழகக் கண்மணிகள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 22-09-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, September 21, 2019

தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்; வைகைக் கரை வரலாறு பதியட்டும் - வைகோ அறிக்கை!


வைகைக் கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களைச் சேகரித்து பழம் பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சிதான் கீழடி ஆய்வு. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்தே வருகின்றது.

அதற்காகத் தமிழகம் போராட வேண்டியதிருக்கின்றது.

உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை.

கீழடி ஆய்வுகள் குறித்து 2017 மார்ச் 2017 அன்று அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன்.

பள்ளிப் பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாகக் கற்பித்து வருகின்றார்கள். பண்டித நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாறை, சேர சோழ பாண்டியர்களைப் புறக்கணித்து வருகின்றார்கள்.

இந்த நிலை இனியும் தொடரக்கூடாது.

காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப் படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி எழுத வேண்டும்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் தொல்லியல்துறைக்குப் பொறுப்பு ஏற்ற பின்னர் மேற்கொண்டு வருகின்ற பணிகளையும், கீழடி ஆய்வுகளுக்கு தூண்டுகோலாக இயங்கி வருகின்ற தோழர் வெங்கடேசனையும் பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்காக மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது.

கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட விரிவான ஆய்வுகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 21-09-2019 தெரிவித்துள்ளார்.

Thursday, September 19, 2019

இரயில்வே துறை பணியாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் - வைகோ கண்டனம்!

இரயில்வே துறையில், காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றது.
62,907பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தொழிற் பழகுனர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
அதேபோல தற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் இரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 19-09-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, September 17, 2019

சைதை சுப்ரமணியம் கைதுக்கு மதிமுக ஆர்ப்பாட்டம்!

தனியார் இடத்தை வாடகைக்கு எடுத்து அதற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வைக்க்ப்பட்ட பெரியார் அவர்களின் பொன் மொழிகள் பேனரை கழற்றியதும், அது சம்பந்தமாக நடந்த பிரச்சினையில் மதிமுக தொண்டர் ஒருவரின் கை எலும்பு இடம் பெயர்ந்து, அதற்கு புகார் கொடுத்து அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக தென்சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் திரு.சைதை சுப்பிரமணி மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறைது.

இதை கண்டித்து இன்று 17-09-2019 சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு மதிமுக சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமாக கலந்துகொண்டார்கள்.

பெரியார் சிலைக்கு வைகோ மாலை!

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 17-09-2019 தாயகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்கள்.

உடன் துணை பொதுச் செயலாளர், சட்டதுறை செயலாளர் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.

Monday, September 16, 2019

அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாள் மதிமுக மாநாடு!

மதிமுக நடத்திய அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாள் மாநாடு சென்னை நந்தனம் YMCA திடலில் செப் 15 ல் நடந்தேறியது. இதில் யஸ்வந்த் சிக்ஹா, முக ஸ்டாலின்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறைவுரையாற்றினார். 

அதில் பேசிய வைகோ அவர்கள், மலேசியாவில் தூக்குத்தண்டனை எதிர்நோக்கிய இராமநாதபுரம் இளைஞர்கள் 12பேரை என் வேண்டுகோளை ஏற்றுக் காப்பாற்றியவர் யஷ்வந்த் சின்கா.

காலையில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நின்றேன்; அதேநாள் மாலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஸ்டெர்லைட்டை எதிர்த்து வாதாடினேன்.

5000 கிலோமீட்டர் நடந்திருக்கின்றேன்; 50000 கிராமங்களுக்குச் சென்று இருக்கின்றேன். தமிழ்நாட்டுக்காக என்னை ஒப்படைத்து இருக்கின்றேன்.

நாங்கள் சாதித்ததை யாரும் சாதிக்கவில்லை. சாதிக்கவும் முடியாது.

ட்ராய் மரக்குதிரை போல, பாஜக, மதம் என்ற மரக்குதிரையில் வருகிறது. உள்ளே விட மாட்டோம்.

இந்தியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தன்னந்தனியனாகப் போராடினேன்.

நான் திராவிட இயக்கப் போர்வாள் மட்டும் அல்ல..திருத்தக்கத் தேவர் வருணித்த சலபதியின் வாளும் நான்தான் என்று பேசினார்.