Friday, August 20, 2021

வீரமணிக்கு சிலை எழுப்புங்கள் என்றார் தந்தை பெரியார்;திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்)நிறுவி இருக்கின்றோம்!தமிழர் தலைவர் வீரமணி சிலை திறப்பு விழாவில் வைகோ MP உரை!

மகிழ்ச்சிக்குரிய இந்த நன்னாளில், 
அறிவாசான் தந்தை பெரியார், 
அன்னை மணியம்மையார், 
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறப்பு விழாவோடு, 

பெற்ற தாய்க்கு ஒரு தனயன் செய்கின்ற பெரும் கடமையாக, தானும் தன் துணைவியார் உஷாவும் கட்டி எழுப்பி இருக்கின்ற இல்லத்துக்கு, 
தன்னுடைய அன்னை தமயந்தி அவர்களுடைய பெயரையும் சூட்டி, 
அனைவரையும் வரவேற்ற, திராவிடர் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், பாராட்டுக்கு உரிய பணிகளைச் செய்து வருகின்றவர்  என்று எல்லோராலும் போற்றப்படுகின்ற  அன்புச் சகோதரர் இளந்திரையன் அவர்களைப் பாராட்டுகின்றேன். 

தமிழர் தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையைத் திறந்து வைக்க இருக்கின்ற, மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களே,

நாளைய தினம் பிறந்தநாள் காண்கின்ற, சமூகநீதிப் போராளி, தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகின்ற, என்னுடைய ஆருயிர்ச் சகோதரர், நாடாளுமன்ற உறுப்பினர், 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர், எழுச்சித் தமிழர் 
தொல். திருமாவளவன் அவர்களே,

இந்த அழைப்பு இதழில் இடம்பெற்று இருக்கின்ற, 
மானமிகு கருஞ்சடைப்படை வீரர்களே,

இந்த நிகழ்ச்சியிலே நேரடியாகக் கலந்துகொண்டும், காணொளி வாயிலாகக் கண்டுகொண்டும் இருக்கின்ற கருஞ்சட்டை உறவுகளே, தமிழ்ப் பெருமக்களே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை, 
நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, 
எனக்குக் கிடைத்து இருக்கின்றது. 

திராவிட இயக்கப் போர்வாள் என்று எனக்குப் பட்டம் சூட்டியவரே மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள்தான். அவருக்கு வயது 88.

10 வயதில் மேடையேறி, 78 ஆண்டுகள் தொடர்ந்து மேடைகளிலே முழங்கிய ஒரு தலைவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே கிடையாது என்கின்ற அந்தப் பெருமைக்கு உரிய அண்ணன் வீரமணி அவர்களுடைய 88 ஆவது வயதில், 
அவர் போற்றிய தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு  88 ஆவது வயதில் சிலை திறந்து வைக்கப்பட்டது போலவே, 
தமிழ்நாட்டில் முதன்முதலாக, 
அண்ணன் வீரமணி அவர்களின் சிலையையும்  திறந்து வைக்கின்ற வாய்ப்பை, இந்த எளியவனுக்கு வழங்கிய திராவிடர் கழகத்துக்கு, திராவிடர் கழகத்தின் இளைஞர்அணி பாசறைக்கு, 
நான் என்னுடைய இதயமெல்லாம் நிரம்பி இருக்கின்ற, ததும்பி வழியக்கூடிய நன்றி உணர்வைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் நாள், திண்டுக்கல்லில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சிலையை, 
குன்றக்குடி அடிகளார் தலைமையில், 
அண்ணன்  முத்தமிழ் அறிஞர் டாக்டர்  கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பேசுகின்ற பொழுது, தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:  

“பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வருகின்ற எனக்கு சிலை எழுப்பி இருக்கின்றீர்கள். 
அதே பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பி வருகின்ற வீரமணிக்கும்  சிலை எழுப்புங்கள்” என்று, 
அன்றைக்கு திண்டுக்கல்லில் சொன்னார்,  
மற்ற மாநாடுகளில் சொன்னார்.  
அது இன்று நிறைவேறி இருக்கின்றது.

2021 ஆக°ட் 16 ஆம் நாள், திருமுதுகுன்றத்தில் இந்தச் சிலையைத் திறக்கின்ற வாய்ப்பை நான் பெற்று இருக்கின்றேன்.

எளிய குடும்பத்திலே பிறந்தார்  அண்னன் வீரமணி. அவரது பெயரைச் சொல்லும்போது, 
நமக்கு நினைவு வருவதெல்லாம்,

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்
தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என் என் பதியே கூறியதைப் போலவே,

பழந்தமிழ் மன்னர்களின் மணி மாளிகையின்  முகப்பிலே, துன்பத்திலே தவிப்போர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்காகக் கட்டப்படுவது ஆராய்ச்சி மணி ஆகும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையிலே, 
அர்ச்சகர்களும் உள்ளே சென்று அந்த ஆலயங்களிலே ஆறுகால பூசை நடைபெற ஒலிப்பது ஆலய மணி  ஆகும். விழிகளில் சுடர் விடுவது கண்ணின் மணி ஆகும்.  

ஆனால் மடமையைக் கொளுத்துவோம்;  
பகுத்தறிவைப் பரப்புவோம்; மௌடீகத்தைச் சாய்ப்போம்; சமூக நீதியைக் காப்போம் என்ற அறைகூவலை எழுப்புவது எங்கள் வீரமணி ஆகும்.  

அவருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பது என்பது, வரலாற்றிலே வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று 
நான் கருதுகின்றேன்.

அவர், என்னை நெஞ்சார நேசிக்கின்றார்; 
நான் நெடுநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்;  நான் உடல் நலனோடு இருக்க வேண்டும் என்று கவலைப்படுகின்றார்; 
அவருடைய சிலையை நான் திறந்து வைப்பது என்பது, உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரிய கருவூலமான பொக்கிசம் என்று நான் கருதுகிறேன்.

எளிய குடும்பத்திலே பிறந்து, நாள்தோறும் தொடரிவண்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் படிப்பதற்குச் சென்றார்.  
பி.ஏ. ஹானர்° தேர்வு பெற்றார்.

10 வயது மாணவனாக மேசையைப் போட்டு, அங்கு மாணவச் சிறுவன் வீரமணி  பேசுகின்றார் என்று விளம்பரப்படுத்துவார்கள். 
அந்தக் கணீர் வெண்கலக் குரல் எழும்; 
கூட்டம் திரளும். இப்படியே சிதம்பரம் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல்,  கடலூர் வட்டாரத்தில் மட்டும் அல்ல பல்வேறு இடங்களுக்குச் சென்று 10 வயதிலே கொள்கைப் பரப்புரையைத் தொடங்கி விட்டார்.  

1943 ஆம் ஆண்டு, அவர் கடலூரில் சுயமரியாதை மாநாட்டை நடத்தி, அதிலே பேரறிஞர் அண்ணாவின் கரங்களிலே கொடுக்க வேண்டும் என்பதற்காக நிதி திரட்டி, 112 ரூபாய் அண்ணா அவர்களுடைய திருக்கரங்களில் ஒப்படைத்தார் அண்ணன் வீரமணி அவர்கள். நான் அதையும் எண்ணிப் பார்க்கின்றேன்.

அவர்  பி ஏ ஹானர்° படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு கட்டத்தில் பண நெருக்கடி. தந்தை பெரியாருக்கு  எழுதுகின்றார். பெரியார் அவர்கள், 
84 ரூபாய் தந்தி மணி ஆர்டர் அனுப்பி வைக்கின்றார். அவர் எளிதில் பணம் கொடுக்க மாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். 
காரணத்தோடுதான் கொடுக்க மாட்டார். 
அவர், 84 ரூபாய் அனுப்பி வைத்தார் என்றால், 
அது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரும் உதவி. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார்.

அண்ணன் வீரமணி அவர்கள் படித்து முடித்து விட்டு வழக்கு உரைஞர் தொழில் புரிந்தார். 
அதில் வெற்றியும் பெற்றார் சிறந்த வழக்கு உரைஞர் எனப் பேரையும் புகழையும் நிலை நாட்டினார். 
அந்த வேளையில், அறிவாசான் பெரியார் அவர்கள், அண்ணன் வீரமணி அவர்களை அழைத்து, 
‘விடுதலை ஏட்டினை நடத்துவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கின்றது; எனவே, அந்தப் பணியை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன்; 
நீங்கள் வந்து இந்த பத்திரிகையை நடத்துங்கள்’ என்று அழைத்தார்.

அண்ணன் வீரமணி அவர்கள் தயங்கினார். 

‘உங்களுக்கு, 300 ரூபாய் 400 ரூபாய் வருமானம் வந்தது; இப்போது 500 ரூபாய் 1000 ரூபாய் வருமானம் வருகிறது எனவே, நான் ஊதியம் தந்து விடுகிறேன்’ என்று ஐயா சொன்னார். 
நான் ஊதியம் வாங்க மாட்டேன் என்று அண்ணன் வீரமணி அவர்கள் மறுத்தார்கள். 
கொஞ்சம் தொகையாவது வாங்கிக் கொள்ளலாமே? என்றார்.
‘இரண்டும் ஒன்றுதானே அய்யா; எனக்கு எதுவுமே வேண்டாம்; நான் எதையும் எதிர்பார்க்காமல் எதையும் வாங்காமல், விடுதலை ஏட்டினை நடத்த என்னாலான கடமையைச் செய்கிறேன்’ என்று கூறினார்.

இதற்கு பின்னர் ஐயா சொல்கிறார்:

‘வீரமணி அவர்கள் பி ஏ ஹானர்° படித்து இருக்கின்றார்கள்; நல்ல புத்திசாலித்தனமும் கெட்டிக்காரத் தனமும் உடையவர்; 
வழக்கு உரைஞர் தொழிலில் அவருக்கு 300,400, 500 அல்லது 1000 வரை வருமானம் வருகின்றது; 
இவ்வளவு வருமானம் பெரிய அளவிலே வருகின்றபோது, அவரை நான் விடுதலை பத்திரிகையில் பொறுப்பு ஏற்று நடத்த அழைக்கின்ற பொழுது, எதுவுமே வேண்டாம் ஊதியமும் வேண்டாம்;  எனக்கென்று எதுவும் தர வேண்டாம் என்று கூறி, பொதுத்தொண்டு ஆற்றுகின்ற மனப்பான்மை எளிதில் வந்து விடாது.  ஆனால் அப்படிப்பட்டவர் வருவார் வரக்கூடும் வந்துவிட்டார். 
அவர்தான் வீரமணி. அவர்களிடம் விடுதலை பத்திரிகையின் ஏகபோக பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன்’ என்று,

அறிவாசான்  பெரியார் அவர்கள் அறிவித்தார்கள் .

விடுதலை பத்திரிக்கைக்கு 86 வயது என்றால், 
அதில் 58 ஆண்டுகள் ஆசிரியராக அண்னன் வீரமணி அவர்கள் பணியாற்றி இருக்கின்றார் என்று சொன்னால், அது சாதாரணமான காரியம் அல்ல. 

அப்படிப் பட்ட அண்ணன் வீரமணி அவர்கள், தமிழகத்தில் சமூக நீதியைக் காப்பதற்கும், பகுத்தறிவை  வளர்ப்பதற்கும், மடமையை ஒழிப்பதற்கும், தந்தை பெரியார் அவர்களுக்கு அவர் வலதுகரமாக இருந்து செயல்பட்டதால், சிறைச்சாலை சென்றார்; மிசா கொடுமையைக் கண்டார்; தாக்கப்பட்டார்.  மம்சாபுரத்திலே அவரது உயிருக்குக் குறி வைத்துத் தாக்கினார்கள். இப்படிப் பல்வேறு தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டார்.

பொதுவாழ்கையிலே இத்தனைத் தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டதால், 
உடல்நிலை கெடவும் செய்கிறது; 
இருதய நோயும் எற்பட்டது; அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் இன்றைக்கும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றார்; அய்யா வழியில், அய்யாவைப் போலவே, ஊர் ஊராக ஊர்தியிலே சென்று, பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றார் 
எண்ணற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார் என்று சொன்னால் அது தமிழ்நாட்டின் தவப்பயன் என்றுதான் நான் கருதுகின்றேன்.

அண்ணன் வீரமணி அவர்களை, ஒரு நாள் அய்யா பெரியார் அவர்கள் அழைக்கின்றார்கள். 
உங்களுக்கு நான் பெண் பார்த்து இருக்கின்றேன்; திருமணம் செய்து கொள்கின்றீர்களா? என்று கேட்கிறார்.
‘அய்யா சொன்னால் சரி’ என்கிறார்.
‘பெண்ணைப் பார்த்து விட்டு வந்து விடுங்கள்’ என்கிறார் ஐயா.
 ‘வேண்டாம்’ என்கிறார்
‘இல்லையில்லை; போய்ப் பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.’
அப்போதும்கூட, ‘அய்யா சொன்னால் சரி அவ்வளவுதான்; நான் போய்ப் பார்க்க வேண்டிய தேவை  இல்லை’ என்று கூறி விடுகின்றார்.

‘அந்தப் பெண் யார்? 

அழ. சிதம்பரம் என்பவர் மனைவியை இழந்தவர். 
அவர் இன்னொரு விதவைப் பெண் 8 வயதில் விதவையான ரெங்கம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொள்கின்றார். அந்த சிதம்பரம் ரங்கம்மாள் அவர்களுடைய மகள்தான், அண்ணன் வீரமணி அவர்களுடைய துணைவியார் மோகனா அம்மையார் அவர்கள்.

அவர்கள் வாழ்க்கையைப் பாருங்கள். மேடையில் சொல்வதை வாழ்க்கையில் செய்து காட்டக்கூடிய ஒரு குடும்பமாக அண்ணன் வீரமணி அவர்கள் குடும்பம் இருப்பதை எண்ணி நான் பெருமைப்படுகின்றேன்.

பெரியார் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தளகர்த்தர் கிடைத்தது போல வேறு யாருக்கும் கிடைப்பது மிகமிக அரிது. 
தந்தை பெரியாருக்கு, அவர் வாழ்நாள் முழுதும் போராடுவதற்கு கிடைத்தவர்களிலே மிகப் பெரிய ஆயுதம், எதிரிகள் நெருங்க முடியாத ஆயுதம் அண்ணன் வீரமணி அவர்கள் ஆவார்கள்.

டெல்லி மாநகரத்திலே பெரியார் மையம் கட்டினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு நசுக்கப்பட்டவர்களின்  பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்து, 
அவர்கள் வாழ்வை உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பெரியார் மையம் இடிக்கப்பட்ட வேளையில், நான்  நாடாளுமண்டத்தில் மாநிலங்கள் அவையில் இருந்தேன். 
நண்பகல் வீட்டுக்கு வந்தேன். தொலைபேசி ஒலிக்கின்றது மறுமுனையிலே பதட்டத்தோடு அண்ணன் வீரமணி பேசுகின்றார்; ‘
பெரியார் மையத்தை பொக்லைன்  வைத்து இடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்; 
எப்படியாவது நீங்கள் தடுக்க வேண்டுமே  வைகோ’ என்கிறார்

நான் உணவு அருந்தவில்லை. 
திரும்ப நாடாளுமன்றத்துக்கு ஓடினேன். 
அங்கே நகர்ப்புற வளைச்சித் துறை அமைச்சராக அனந்தகுமார் இருந்தார். 
அவருடைய அறைக்குச் சென்றேன். 
அவரிடம்  சொன்னேன்,
 ‘எங்கள் பெரியார் மையத்தை இடிக்கிறார்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும்; பெரும் விபரீதத்தை விலைக்கு வாங்குகிறீர்கள் நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்; அங்கே அண்னன் வீரமணி அவர்கள், திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்கள் சென்னையிலே துடித்துக்கொண்டு இருக்கின்றார்; அவரிடம் பேசுங்கள்’ என்று, தொலைபேசியில் அண்ணன் வீரமணியை அழைத்து இதோ அமைச்சர் உங்களிடம் பேசுகிறார் என்று அமைச்சரிடம் தொலைபேசியை கொடுத்தேன். இவர் பேசினார்.

அடுத்து, உள்துறை அமைச்சரிடம் சொல்லலாம் என்று நினைத்தால் அங்கே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அமைச்சர் எல் கே அத்வானி இடையில் எழுந்து வர முடியாது என்கிறார்கள். 
தில்லி துணைநிலை ஆளுநர் போனை எடுத்து வைத்து விட்டார் தொலைபேசிக்கே வரவில்லை.  
இடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி விட்டார்கள்.

மறுநாள் காலையிலே அங்கே சென்றேன். 
சந்திர ஜித் யாதவ் அங்கு வந்தார். நானும் அந்த இடத்திற்குச் சென்று விட்டேன்.  
சாயங்காலம் அண்ணன் வீரமணி அவர்கள் வந்து விட்டார்கள்.
 என் வாழ்க்கையில் அவர் கண்கலங்கி நான் பார்த்தது இல்லை. அவர் கண் கலங்குகின்றார். கண்ணீர்த் துளிகள் கன்னங்கள் வழியே வழிந்து ஓடுகின்றது.

‘பெரியார் மையத்தை இடித்து விட்டார்களே வைகோ? எப்படியாவது இங்கே மீண்டும் பெரியார் மையத்தை எழுப்பியாக வேண்டுமே’ என்கிறார்.

நான் இன்று உள்துறை அமைச்சரைப் பார்த்தேன். நம்முடைய பதற்றத்தையும் நம்முடைய வேதனையும், கோபத்தையும் கவலையையும் ஆத்திரத்தையும் எடுத்துச் சொன்னேன். 
பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டேன். நாளை முடியாதே என்றார். 
‘இல்லை ஆசிரியர் வீரமணி வருகிறார் நீங்கள் அவசியம் சந்திக்க வேண்டும்’ என்று சொன்னேன். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒப்புக்கொண்டார் வாருங்கள் போவோம் என்று, 
நானும் அண்ணன் வீரமணி அவர்களும், சமூக நீதிக் காவலர் வி பி சிங்,  அண்ணன் இரா.செழியன் ஆகியோரும், அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை சாயங்காலம் 4 மணிக்கு சந்திக்க சென்றோம். பேசினோம்.

இவர்தான் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி என்றவுடன்,
 ‘அவரை எனக்குத் தெரியும்; மதுரை டெசோ மாநாட்டில் சந்தித்து இருக்கின்றேன்’ என்றார். 

அவர்தான் திராவிடர் கழகத்தின் தலைவர். 
அவர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்; திராவிட இயக்கக் கொள்கைக்காக உறுதியாக இருப்பார்கள் உயிரையும் கொடுப்பார்கள். 
எங்கள் தென்னாட்டிலே, வடநாட்டுத் தலைவர்கள் பெயர் இருக்கின்றன. 
திலகர் பெயர் இருக்கின்றது, நேரு பெயர் இருக்கின்றது, படேல் பெயர் இருக்கின்றது. பூங்காக்களில் அரங்கங்களிலே இருக்கின்றன. 
ஆனால், எங்கள் தலைவர்கள் பெயர், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவிற்கே வழிகாட்டிய வீராதி வீரர்கள் எங்களுடைய மண்ணிலே தோன்றினார்களே, அவர்களுடைய பெயர் தில்லியில் இருக்கின்றதா? வட இந்தியாவில் இருக்கின்றதா? கிடையாது.

நாங்கள் தனி நாடு கேட்டவர்கள்; 
திராவிட நாடு கேட்டவர்கள். அதற்காகப் போராடியவர்கள், சிறை சென்றவர்கள்; இன்றைக்கும் அந்த உறுதியோடு போராடி தனித்துச் செல்ல வேண்டும் என்கிற உறுதி கொண்டவர்கள். தந்தை பெரியாரின் எண்ணத்தைக் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். 
நீங்கள் இதை சரி செய்து கொடுக்காவிட்டால் மீண்டும் எங்களை அந்தப் பாதையில் தள்ளாதீர்கள்; 
அதே பாதையில் தனிநாடு கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தை நோக்கி எங்களைத் தள்ளாதீர்கள்
அண்ணன் வீரமணி அவர்கள் தேர்தலில் நிற்க மாட்டார். ஆனால் இந்தக் கொள்கையை நோக்கிச் செல்வதற்கு நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள்’ என்று சொன்னேன்.

‘பதற்றப்படாதீர்கள் வைகோ, 
என்ன செய்ய வேண்டுமோ செய்வோம்’ என்று கூறி, உடனே தொலைபேசியில் ஆனந்தகுமார் அவர்களை அழைத்தார். 
‘வைகோ வந்திருக்கின்றார்; அவர்களோடு தலைவர்கள் வந்திருக்கிறார்கள் பெரியார் மையம் இடிக்கப்பட்டு விட்டதாம்.  அவர்கள் எந்த இடத்தைக் கேட்கின்றார்களோ, அந்த இடத்தைக் கொடுங்கள்’ என்று தொலைபேசியிலே உத்தரவு போட்டார் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்.

அதன் பிறகு தேடிச்சென்று அப்போலோ மருத்துவமனை அருகில், 
முன்பு இருந்த இடத்தை விட மிக சிறப்பான இடத்தை பெரியார் மையத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அன்றைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது;  
அந்த நாளையும் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

ஆரிய மாயையா? திராவிட மாயையா? என்ற கேள்வி எழுந்தது. 
திராவிட மாயை என்று சிலர் எழுதினார்கள். 
திராவிட இயக்கத்தினர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் துரோகம் செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வந்தபோது, 
ஆரிய மாயையா? திராவிட மாயையா? ‘விடுதலைப் போர்: இந்திய வரலாறு’ என்ற நூலை எழுதியவர் அண்ணன் வீரமணி அவர்கள். 
ஆங்கிலத்திலும், தமிழிலும் ஏராளமாக எழுதி, அவற்றை நமக்கு வாளும், கேடயமுமாக ஆக்கி வைத்து இருக்கின்றார்.

உலகில் தமிழன் எங்கே தாக்கப்பட்டாலும், 
அதற்காகத் துடிப்பவர். தமிழனின் உயிருக்கு ஆபத்து என்றால், முதல் குரல் கொடுக்கக் கூடியவர் அண்ணன் வீரமணி அவர்கள். 

இலங்கைத் தீவில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய பிறகு, சிங்களவர்கள், ஈழத்தமிழர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். இனக்கொலையை அரங்கேற்றினார்கள். 
தமிழர்களை வெட்டிக் கொன்றார்கள். அந்த வன்முறைகளை எதிர்த்து, ஈழத்துக் காந்தி தந்தை செல்வா அவர்கள் அறவழியில் போராடினார்கள். வட்டக்கோட்டையில் மாநாடு கூட்டினார்கள். 
இனி சிங்களவர்களோடு சக வாழ்வு சாத்தியம் இல்லை. தனி இறையாண்மை கொண்ட தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு; இதை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்.

அந்தக் கொள்கைக்காகப் பிரபாகரன் களம் கண்டார். உலகின் ஏழு வல்லரசு நாடுகளின் ஆயுதங்களை எதிர்த்துப் போராடினார். 
ஆனை இறவுச் சமரில் சிங்களவர்களின் பெரும்படையைத் தோற்கடித்த புலிப்படையை உருவாக்கினார். 
வங்கக் கடலில் கடற்படை அமைத்தார்; வன்னிக் காட்டுக்கு உள்ளே வான்படை அமைத்தார். 
அவருடைய நெஞ்சில் அண்ணன் வீரமணி இருக்கின்றார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, தில்லியின் உத்தரவை ஏற்று, சென்னையில் இருந்த புலிகளின் ஆயுதங்களைப் பறித்தார்கள். 
வீரத்தம்பி பிரபாகரன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். 
எல்லோருக்கும் கவலை சூழ்ந்தது. அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் ஈழத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். பெங்களூருவில் நடைபெற்ற சார்க் மாநாட்டுக்கு நான் வர மாட்டேன் என்று பிரபாகரன் அவர்கள் சொல்லி விட்டார்கள். 
அதன்பிறகு, எம்ஜிஆர் அவர்கள் காவல்துறை அதிகாரியை அழைத்து, ஆயுதங்களைத் திரும்பக் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். 
அப்போது, பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரதத்தை அண்ணன் வீரமணி அவர்கள்தான் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்கள்.

ஆக ஒரு பெரிய வரலாறு அவருக்கு இருக்கின்றது. மடமையைக் கொளுத்துகின்ற வரலாறு, மௌடீகத்தைச் சாய்க்க, சமூக நீதியைக் காக்கப் போராடிய வரலாறு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகப் போராடிய வரலாறு; சமூக நீதியைக் காப்பதற்கு, இந்திய ஒன்றியத்தின் அரசு அமைப்புச் சட்டத்தில்  31 சி என்ற பிரிவை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் திருத்தம் வருவதற்கு முழுமுதற் காரணம் அண்ணன் வீரமணி அவர்கள்தான் என்பதை நான் பதிவு செய்யாவிட்டால், 
கடமை தவறியவன் ஆவேன்.

அத்தகைய பெருமைக்கு உரிய அண்ணன் வீரமணி அவர்களுடைய சிலையை காணொளி வாயிலாகத் திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

அவர் 100 ஆண்டுகள் வாழ்வார்; அந்த விழாவிலும் கலந்து கொண்டு பேசுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும். நல்ல உடல்நலத்துடன் அவர் நமக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.  நாம் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் சிலையை அவமதித்து விடலாம் உடைத்து விடலாம் எனச் சிலர்  கருதுகின்றார்கள். 
அப்போது நான் சொன்னேன்: இந்த இடத்தில் நாங்கள் பெரியார் சிலையை உடைக்கப் போகின்றோம் என அறிவித்து விட்டு வா, உன் கை உன்னிடம் இருக்காது என்று பகிரங்கமாக எச்சரித்தேன். 
அதேபோல, இன்றைக்கு நாம் திறந்து இருக்கின்ற அண்ணன் வீரமணி சிலை, ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் ஆட்சி ஏற்பட்டு இருக்கின்றது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நிறைவேற்றுகின்ற அரசு அமைந்து இருக்கின்றது. 
அந்த அரசுக்குப் பக்க பலமாக உரிய ஆலோசனைகளை அண்ணன் வீரமணி அவர்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். 
அவர் வாழ்க; தந்தை பெரியார் புகழ் வாழ்க; 
பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க.

வணக்கம்.     
இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.     
                                                                                  பதிவு 
அருணகிரி 
9444 39 39 03   
19.08.2021

No comments:

Post a Comment