Saturday, January 29, 2022

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும்! வைகோ MP அறிக்கை!

இந்திய ஆட்சிப்பணி விதிகள், 1954 இல், விதி எண் 6 இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய பாஜக அரசு குறிப்பு ஆணை வெளியிட்டு, அவற்றை மாநில அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அனுப்பி கருத்துக்களை கேட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு நினைத்தால் மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம். மாநில அரசின் ஒப்புதலுடன்தான் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை ஒன்றிய அரசிற்கு பணி இடமாற்றம் செய்ய முடியும் என்று நடைமுறையில் உள்ள விதியைத்தான் பாஜக அரசு திருத்தம் செய்ய முனைந்து இருக்கிறது.
மாநில அரசுகளுடன் கலந்தாய்வு செய்யத் தேவை இல்லை; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., அலுவலர்களை விடுவிக்க மாநில அரசின் தடை இல்லா சான்று அவசியம் இல்லை;
ஒன்றிய அரசு வரையறுத்துள்ள காலக்கெடுவிற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியை மாநில அரசு விடுவிக்காவிடினும், அவர் குறிப்பிட்ட தேதியில் இருந்து ஒன்றிய அரசு அதிகாரியாகவே கருதப்படுவார்.
ஒன்றிய அரசின் பணியிட மாற்றத்தில் மாநில அரசுக்கு கருத்து வேறுபாடு எழுந்தால், இறுதியில் ஒன்றிய அரசின் முடிவை ஏற்பதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழி இல்லை.
ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு இருக்கும் இந்திய ஆட்சிப்பணி விதி 6 இன் திருத்தங்கள், முழுக்க, முழுக்க ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தை மாநில அரசுகளின் மீது திணிக்கும் முயற்சியாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்த்து எறிந்து, கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு உலை வைக்கும் இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளன.
‘ஒன்றிய பா.ஜ.க. அரசு உத்தேசித்துள்ள இந்திய ஆட்சிப்பணிகள் விதி திருத்தங்கள், மாநில சுயாட்சிக்கு எதிரானது; ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழலுக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும்’ என்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரும் எதிர்த்து இருக்கின்றனர்.
மாநில அரசுகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றிய அரசு, இந்திய ஆட்சிப்பணிகள் விதிகள் திருத்தம் குறித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
மாநில அரசுகளை நகராட்சிகளைப் போல கருதி நசுக்கி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு, ஆட்டிப்படைத்து ஆதிக்கம் செய்ய நினைப்பது மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை செல்லரிக்கச் செய்துவிடும்.
இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களாக ஆட்சிப்பணி தேர்வு எழுதாமல், வெளியாட்களையும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களையும் நியமிக்கலாம் என்பதை நடைமுறைப்படுத்தி, ஆட்சிப்பணி முறைமையை சீர்குலைத்துவிட்டது பா.ஜ.க. அரசு. தற்போது விதிகளில் திருத்தம் கொண்டு வந்து மாநில அரசுகளை கிள்ளுக் கீரையாக கருதி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை விருப்பம்போல பந்தாடலாம் என்று முடிவெடுத்து இருப்பது அரசுப்பணி நிர்வாகத்தையே நிலைகுலையச் செய்துவிடும்.
எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.01.2022

Thursday, January 27, 2022

அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை! வைகோ MP அறிக்கை!

நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலை வீரர்கள், தலைவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து இருந்தார். இந்திய தேசிய இராணுவத்தை கட்டி எழுப்பி பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக ஆயுதம் தரித்துப் போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தியாகத்தையும், அவரது படையில் அணிவகுத்த தமிழர்களின் வீரத்தையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழக அரசின் பணிகளை பாராட்டியுள்ள ஆளுநர், பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்பதையும் தமது அறிக்கையில் ஆளுநர் சிறப்பித்து கூறி இருக்கின்றார்.
ஆனால், ஆளுநரின் அறிக்கையை முழுமையாக ஆழமாக உள்வாங்கினால்தான் தெரிகிறது, பூவினூள் வாசம் போல் பொதிந்திருக்கும் கருத்துக்கள், ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளையும், அதற்கு பின்னணியில் இருந்து இயக்கி வரும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இருக்கின்றது என்பது;
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்; எந்த தத்துவத்தின் சாயலும் ஆளுநர் மீது படர்ந்து விடலாகாது; ஆனால் தமிழ்நாட்டு ஆளுநரின் வாழ்த்துச் செய்தி அந்த எல்லைகளை கட்டறுத்து தாண்டி இருப்பதை ஏற்க முடியாது.
உலகப் பொதுமறை 'திருக்குறளை' வேத சட்டகத்தினுள் அடைக்க முயற்சிப்பதையும் தமிழர்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள்.
மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' கட்டாயம் என்பதை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்தியும் கூட ஆளுநர் 'நீட்' விலக்கு சட்ட முன்வரைவுக்கு இசைவு அளித்து ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு அனுப்பவில்லை. இந்நிலையில் 'நீட்' தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்தை அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாடு கடைபிடித்து வரும் நிலையில், தமிழக மாணவர்கள் இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்று, இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலையும் ஆளுநர் வழங்கி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
சென்னை - 8
27.01.2022

குடியரசு நாள் விழாவுக்கு கருப்புத்துண்டு அணிந்து சென்ற புதுச்சேரி மதிமுக செயலாளருக்கு அனுமதி மறுப்பு! வைகோ MP கண்டனம்!

புதுச்சேரியில் ஜனவரி 26 அன்று நடந்த குடியரசு நாள் விழாவில் பங்கேற்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளர் திரு கபேரியல், புதுச்சேரி அரசின் அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். விழா நடைபெற்ற இடத்தின் நுழைவு வாயிலில் இருந்த காவல்துறையினர், கபேரியல் அணிந்திருந்த கருப்புத்துண்டை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அவரை தடுத்துள்ளனர்.

கருப்புத்துண்டு என்பது திராவிட இயக்கத்தின் அடையாளம்; திராவிட இனத்தின் இன அழிவைத் துடைப்பதற்காக களத்தில் நின்று போராடிய அறிவாசான் தந்தை பெரியார் கருப்பு சட்டை அணிவதையே திராவிட இயக்கத் தொண்டர்களுக்கு பெருமிதமாக வழிகாட்டி உள்ளார். பெரியாரின் தொண்டரும், மதிமுக மாநில அமைப்பாளருமான கபேரியல், கருப்பு துண்டை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை அடாவடியாக கூறியபோது, “கருப்புத்துண்டு அணிந்ததால் விழாவுக்கு அனுமதிக்கவில்லை என்று எழுதி தாருங்கள்” என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டு, போராட்டம் நடத்த அவர் முனைந்த பிறகுதான் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுச்சேரி காவல்துறையினரின் அத்துமீறலை வன்மையாக கண்டிப்பதுடன், புதுச்சேரி அரசு எல்லை மீறி நடந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
சென்னை - 8
27.01.2022

Tuesday, January 25, 2022

இலங்கை அரசு கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்! வைகோ MP கண்டனம்!

இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் அவர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்துவதும், படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகளைக் கைப்பற்றி வருவதும், மீனவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதும் சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகுலுக்குவதும் சிங்கள இனவெறி அரசுக்கு மென்மேலும் துணிச்சலைக் கொடுத்துள்ளது.

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கைக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும், உயிர்ப் பலி ஆனாலும் டில்லி ஆட்சியாளர்கள் இலங்கை அரசைப் பெயரளவுக்குக் கூட கண்டிப்பது இல்லை. எனவேதான் இலங்கை அரசின் அட்டூழியங்கள் நிற்கவில்லை.
கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகள் இலங்கைத் துறைமுகங்களில் 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் அவற்றை அழித்து விடுமாறு இலங்கை நீதிமன்றங்கள் உத்திரவிட்டன. அவற்றை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15.12.2020 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அப்போதும் மிக அலட்சியமாக இருந்தது.
தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன் இலங்கை அரசு தனது கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வரும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 60 இலட்சம் முதல் ரூ. 1.75 கோடி வரை அபராதம் விதிக்கவும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
இலங்கை அரசின் இச்சட்டம் தமிழக மீனவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களைக் குறிவைத்து இலங்கை அரசு கொண்டு வரும் இக்கொடிய சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை 2016, டிசம்பர் 15-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
அதன்பின்னர் 2017, மே 11-இல் இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது அந்நாட்டு அரசிடம் இலங்கைக் கடற்தொழில் சட்டம் குறித்து நமது மீனவர்களின் கவலையைத் தெரிவிக்கவில்லை.
இந்திய அரசின் இத்தகைய அலட்சியப் போக்குதான் தற்போது 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இலங்கை அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
உடனடியாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் தலையிட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க வேண்டும்; இலங்கை அரசின் பிடியிலிருந்து இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்துப் படகுகளையும் மீட்க வேண்டும்; இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் 56 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
சென்னை - 8
25.01.2022

Friday, January 21, 2022

குடியரசு நாள் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் புறக்கணிப்பா? திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ MP அறிக்கை!

இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் சனவரி 26 - குடியரசு நாளில், புதுதில்லியில் நடைபெறும் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றதமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது.
தமிழ்நாடு முதல்வரும்,தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டில்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்கமறுத்துவிட்டது.
பலமுறை இதுகுறித்து எடுத்துவிளக்கிய பின்பும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும்வகையிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்!
தில்லி அரசு அனுமதிக்க மறுத்தஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின்அவர்கள் அறிவித்த பின்பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது.
குடியரசு நாள் விழாஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கினைக்கண்டித்து, சனவரி 26 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை மறுமலர்ச்சிதி.மு.கழகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது!
அனைத்துக் கட்சி அலுவலகங்கள்முன்பும், வீடுகளின் முன்பும் தனி நபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்கள்அனைவரையும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
21.01.2022

Monday, January 17, 2022

குடியரசு நாள் அணிவகுப்பு;மாநிலங்களுக்கு அவமதிப்பு! வைகோ MP கண்டனம்!

ஜனவரி 26, தில்லியில் நடைபெறுகின்ற குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான  தமிழக அரசு ஊர்தியில் பாரதி, வ.உ.சி., வேலு நாச்சியார் படங்கள் இடம் பெறத் தமிழக அரசு முடிவு செய்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி இருந்தது.

அந்த ஊர்திக்கு, அணிவகுப்பில் இடம் தர முடியாது என ஒன்றிய அரசு மறுத்து இருப்பது, ஏழரைக் கோடித் தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். கேரளம், மேற்குவங்கம், ஆந்திர அரசுகளின் ஊர்திகளுக்கும் இடம் தரவில்லை. இது தான்தோன்றித்தனமான போக்கு ஆகும். கூட்டு ஆட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் ஆகும்.  

பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்புகள், இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக, வெறுப்பு உணர்வை விதைக்கின்ற வகையிலேயே அமைந்து இருக்கின்றது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறைத் திரித்து எழுதுகின்றார்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கின்றார்கள்

காந்தி, நேரு மற்றும் முன்னணித் தலைவர்களின் பங்களிப்பை மறைத்து, காவித் தலைவர்களை முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள். மறைக்கப்பட்ட வீரர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றோம் என்று கூறி, கட்டுக்கதைகள், கற்பனைகள், பொய்யான புனைந்துரைகளை வரலாறாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். போலிகளை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.

பாரதி ஒரு தேசிய கவி என அறிவித்து, நாடாளுமன்றத்தில் பாரதிக்குச் சிலை அமைத்து, தலைநகர் தில்லியில் சாலைக்குப் பெயர் சூட்டி, ஏற்கனவே ஒன்றிய அரசு பெருமைப்படுத்தி இருக்கின்றது.

பிரதமர் நரேந்திர மோடியும், எத்தனையோ முறை புகழ் ஆரம் சூட்டி இருக்கின்றார். பாரதி, வ.உ.சி., வீரத்தாய் வேலு நாச்சியாரின் தியாகம், வட இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களின் பங்களிப்பிற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போரில், தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது.

இந்தியாவுக்கு வெளியே, உலக அரங்கில் நடைபெறுகின்ற கண்காட்சிகளிலும் இத்தகைய வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து வருகின்றார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் நடைபெறுகின்ற தொழில் வணிக கண்காட்சி எக்ஸ்போ, தற்போது துபாயில் நடைபெற்று வருகின்றது. 200 நாடுகள் பிரமாண்டமான அரங்குகளை அமைத்து உள்ளன. பிற நாடுகளின் அரங்குகளில், அந்த நாடுகளின் தலைவர்கள் படங்கள் கிடையாது; நாடுகளின் சாதனைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் இந்திய அரங்கில், சர்தார் வல்லபாய் படேல் சிலை, இராமர் கோவில், பிரதமர்  நரேந்திர மோடி அரசைப் புகழ்கின்ற காணொளிகளையே முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த பல ஆண்டுகளாகவே, குடியரசு நாள் அணிவகுப்பில், தமிழகம், கேரளம், மேற்கு வங்க மாநிலங்களின் ஊர்திகளுக்கு உரிய இடம் தருவது இல்லை. அடிமை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தில்லி எஜமானர்களின் எண்ண ஓட்டத்திற்கு இசைவாகவே நடந்து கொண்டார்கள். தமிழகத்தின் பெருமைகளை முன்னிலைப்படுத்தவில்லை.

குடியரசு நாள் அணிவகுப்பு என்றால், ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மாநிலங்களின் சார்பிலும் ஊர்திகள் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். அந்த உரிமையை மறுக்கின்ற அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இல்லை.

எனவே, தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

‘தாயகம்’                                                       வைகோ
சென்னை - 8                                                பொதுச்செயலாளர்
17.01.2022                                                       மறுமலர்ச்சி தி.மு.க

Friday, January 14, 2022

தன்னம்பிக்கை, தமிழ் உணர்ச்சி ஊட்டும் தைப்பொங்கல்! வைகோ MP வாழ்த்து!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு, காலம் காலமாகத் தமிழர் கொண்டாடி வரும் திருநாளாம் தைப்பொங்கல், இன்று உலகெங்கும் பல நாடுகளில் பரந்து  வாழ்கின்ற தமிழர்களால் உவகையுடன் கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் துள்ளிக் குதித்து ஆனந்தப் பள்ளுப் பாட, புதுப்பானை உலையில் ஏற்றி, அதில் புத்தரிசி இட்டு, முந்திரியும் ஏலமும் மணக்க மணக்க, கன்னல் தமிழோடு, பால் பொங்கிற்றா? எனத் தமிழர்கள் ஒருவரையொருவர் உசாவி மகிழும் நன்னாள் இது.

அறிஞர் அண்ணா அவர்கள், தம்பிக்கு எழுதிய இறுதி மடலில், பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, ‘நலந்தானா? நலந்தானா?’ என்ற பாடலைக் குறிப்பிட்டு, ‘இன்று இந்த நாடே என்னைப் பார்த்து நலந்தானா? என்று கேட்பது போல உணர்கின்றேன்’ என எழுதி இருந்தார். பொடா சிறைவாசத்தின் போது, அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் படைப்புகள் அனைத்தையும் படித்து ஆய்வு செய்து, சங்கொலியில் தொடராக எழுதினேன். அன்று அவர் எழுதியது, இன்று என் நினைவுக்கு வருகின்றது.

ஆண்டு முழுமையும் நான் எங்கே சுற்றித் திரிந்தாலும், தைப்பொங்கல் காலத்தில், கலிங்கப்பட்டிக்குச் சென்று, ஒரு வார காலம் தங்கி இருந்து, உங்கள் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். தெருத்தெருவாக நடந்து கழகக் கொடிகளை ஏற்றுவேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்துகின்றது; அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்புத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 

 ஒவ்வொருவரும், அவரவருடைய கோணத்தில் கொண்டாடி மகிழும் தமிழர் திருநாள்,  உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாள்; உலகெங்கும் வாழும் தமிழர்க்குப் புத்தெழுச்சியையும், மறுமலர்ச்சியையும் தந்திடும் பெருநாளாக இந்த ஆண்டும் பொங்கல் விடிந்துள்ளது.

எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்கின்ற உணர்வோடு கொண்டாடப்படுகின்ற, தமிழர் திருநாளாம் பொங்கல் நமக்குத் தன்னம்பிக்கைiயும், தமிழ் உணர்ச்சியையும் ஊட்டுகின்றது.

தலைநிமிர்ந்த தமிழகத்தின் தன்னிகர் அற்ற முதல்வராக உலா வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி, மேலும் எழுச்சியோடு வீறுநடை போட, 2022 இல், எட்டிப் பார்க்கும் ஓமைக்ரானை விரட்டுவோம்; இனப்பகை வெல்வோம் எனச் சூளுரைப்போம்; சுழன்று பணி முடிப்போம்.
உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தைப்பொங்கல் மகிழ்ச்சியைத் தரட்டும்; தன்னம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்!


வைகோ  
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8 
13.01.2022

Monday, January 10, 2022

மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை! வைகோ MP கண்டனம்!

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர் என்றான் பாரதி. ஆனால், உலகின் பல்வேறு திசைகளில் இருந்து இந்தியாவுக்கு, தமிழகத்திற்கு வந்த கிறித்துவப் பெருமக்கள், அடித்தட்டு ஏழை எளிய மக்களின் உடல் நலன் காக்க, அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் நினைக்குந்தோறும் நெஞ்சு நெகிழச் செய்பவை.

தமிழ்நாட்டில் மட்டும் அன்றி, கிறித்துவத் தொண்டு நிறுவனங்கள், இந்தியாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைத்த, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள்,  கடந்த 200 ஆண்டுகளாக ஏற்படுத்திய மாற்றங்களை அனைவரும் அறிவோம்.

அல்பேனிய நாட்டில் பிறந்த அன்னை தெரசா அவர்கள், இந்தியாவுக்கு வந்து கொல்கத்தாவில் அமைத்த ‘ மிசனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ்’ அறக்கட்டளை, இலட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் அளித்து இருக்கின்றது; அவரது நற்பணிகளைப் பாராட்டி, நோபெல் விருது வழங்கிச் சிறப்பித்தனர்; போப் ஆண்டவர், புனிதர் தகுதி வழங்கி மேன்மை செய்தார்; இந்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கிப் பெருமை சேர்த்து இருக்கின்றது.

அத்தகைய பெருமை வாய்ந்த அறக்கட்டளை மட்டும் அன்றி, நாடு முழுமையும் சுமார் 6000 தொண்டு நிறுவனங்கள், அயல்நாடுகளில் இருந்து நன்கொடை பெற, ஒன்றிய பாஜக விதித்த தடை, இந்திய அரசு அமைப்புச் சட்டத்திற்கு, தான்தோன்றித்தனமான அடக்குமுறையே ஆகும்.

அமெரிக்க நாட்டின் முன்னணி ஆங்கில ஊடகங்கள், Crackdown on Christianity in India எனத் தலைப்பு இட்டுச் செய்திகள் எழுதின. இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், இந்திய அரசின் அடக்குமுறை நடவடிக்கை குறித்துத் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்; இதுகுறித்து, பிரித்தானிய அரசு, இந்திய அரசுடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவை எல்லாம், இந்திய மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு, அரசு அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பு அற்ற தன்மைக்கு மாண்பு சேர்ப்பதாக இல்லை. 

இவ்வாறு, உலக அளவில் எழுந்த கண்டனங்களுக்குப் பிறகு, இந்திய அரசு, அன்னை தெரசா அறக்கட்டளைக்கு மட்டும், அயல்நாட்டு நன்கொடைகள் பெறத் தடை இல்லை என அறிவித்து இருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்ற மக்கள் கண்காணிப்பகத்தின் சட்ட அமைப்பான சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) மீது, ஒன்றிய அரசு 2012 ஆம் ஆண்டே இத்தகைய அடக்குமுறைகளை மேற்கொண்டது. அயல்நாடுகளில் இருந்து நிதிபெற 16.07.2012, 18.02.2013, 16.09.2013 ஆகிய நாட்களில் 3 முறை தடை விதித்தனர்; ஒவ்வொரு முறையும் 180 நாட்கள் தடை நீட்டிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் விதித்த தடை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து மக்கள் கண்காணிப்பகத்தின் (CPSC) வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. 

அதன்பிறகு, மீண்டும் 29.10.2016 ஆம் தேதி வெளிநாட்டில் நிதிபெறும் புதுப்பித்தலை மறுத்தனர். அப்போது மக்கள் கண்காணிப்பம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, 2012 முதல் 2016 வரை சுமார் 2600 நாட்கள் தங்களின் வெளிநாட்டில் இருந்து நிதி வரும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாமலேயே செயல்பட்டு வருகின்றனர். 

ஆனால், எப்படியாவது மக்கள் கண்காணிப்பகத்தை முடக்கி விட வேண்டும் என்ற வெறியுடன், இப்போது, சிபிஐ அமைப்பின் மூலமாக அடுத்த மிரட்டல் விடுத்துள்ளனர். 

2012 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, அப்போது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் பொறுப்பாளர்கள் மீது, பத்து ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு, 06.01.2022 அன்று வழக்கு பதிவு செய்து இருக்கின்றார்கள். 

07.01.2022 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பெற்று 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்கு வந்து சோதனையிட்டுள்ளனர். மீண்டும் வருவோம் என்று கூறிச் சென்றுள்ளனர். இத்தகைய மிரட்டலுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் வன்முறையிலும், 1998 குண்டுப்பட்டி வன்முறையிலும், வீரப்பன் தேடுதல் வேட்டையில்  ஏற்பட்ட மனித உரிமை மீறல்களிலும், 2011 ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூடு வன்முறை, 2015 ஆம் ஆண்டு ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை வழக்கு, 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி காவல்துறை தாக்குதல்களை எதிர்த்தும், ஆயிரக்கணக்கான அரசு அரசுப் பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியினைக் கொண்டு செல்வதிலும், பொது மக்களுக்கு மனித உரிமைப் பயிற்சி கொடுப்பதிலும், மக்கள் கண்காணிப்பகம் ஆற்றி இருக்கின்ற பணிகளை அனைவரும் அறிவோம்.  இந்தப் பணிகளை முடக்க வேண்டும்; முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான், ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

மராட்டியம், ஆந்திரம், மேற்கு வங்கம் உட்படப் பல மாநிலங்கள், சிபிஐ அமைப்பு,மாநில அரசின் ஒப்புதல் இன்றி,  தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதற்குத் தடை விதித்து உள்ளனர். அதுபோல, சிபிஐ அமைப்பின் இதுபோன்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசும் மூக்கணாங்கயிறு போட வேண்டும்; மாநிலத் தன்னாட்சி உரிமைக்கு வலுச் சேர்க்க வேண்டும்; ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறைகளில் இருந்து சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.01.2022