Tuesday, April 11, 2023

சென்னை சிராஜ் மகாலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் துரை வைகோ உரை!

‘இஸ்லாம்’ என்னும் அரபி சொல்லுக்கு ‘கீழ்ப்படிதல்’, ‘கட்டளைகளை நிறைவேற்றுதல்’ என்று பொருள். எல்லாம் வல்ல அல்லாவிடம் முற்றிலும் கீழ்ப்படிந்து அவருடைய ஏவல்களை நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் நிரம்பி இருப்பதால் ‘இஸ்லாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் ‘ஐந்து தூண்கள்’ என்று கருதப்படும் ‘ஐந்து கடமைகள்’ உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் - ஆகிய ஐந்து கடமைகள் ஒவ்வொரு இஸ்லாமியர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது.
‘கலிமா’ என்றால் ‘லாஇலாஹ இல்லல்லாஹு முகம்மதுர் ரஸுலுல்லாஹ்’ - எல்லாம் வல்ல அல்லா ஒருவரே இறைவன். அந்த அல்லாவின் தூதுவர் முகமது நபி என்பதை முழுமையாக நம்புவதுதான் இதன் பொருள்.
இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகை. இந்த இரண்டாவது கடமையின்படி ஒவ்வொரு இஸ்லாமியரும் நாள்தோறும் ஐந்து முறை ‘இறைவணக்கம்’ செய்ய வேண்டும்.
இஸ்லாத்தின் மூன்றாவது கடமை ‘நோன்பு’. அதன்படி இஸ்லாமிய மதத்தில் உள்ள நாள்காட்டி ‘ஹிஜ்ரீ’ படி ஒன்பதாவது மாதமான ரமலான் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருக்க வேண்டும். அந்த நோன்பை அனுசரிப்பவர்கள் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் முதல் மாலையில் சூரியன் மறையும் வரையில் உண்ணாமல், நீர் அருந்தாமல், புகைக்காமல் தீயப் பழக்கங்களில் ஈடுபடாமல், உள்ளத்தாலும் உடலாலும் தீமைகளின் பால் செலுத்தாமல் இருக்க வேண்டும்.
இஸ்லாத்தின் நான்காவது கடமை ‘ஜகாத்’தின் படி வசதி படைத்த இஸ்லாமியர்கள் தங்கள் செல்வத்தில் இரண்டரை சதவிகிதத்தை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஐந்தாவது கடமை ‘ஹஜ்’, இஸ்லாமியர்களுக்கான புனித யாத்திரையைக் குறிக்கும். பொருளாதார சக்தியும் உடல் வலுவும் உடைய இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது மெக்காவிற்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
இறைவனின் படைப்புகள் அனைத்தும் ‘முரண்பட்ட’ இருவகை சக்திகளாகப் படைக்கப்படுகின்றன. அதற்கு உதாரணமாக, ஆண் - பெண், ஒளி - இருள், வெப்பம் - குளிர், நேர்மம் ((Positive) - எதிர்மம் (Negative) என்று சொல்லலாம். பார்ப்பதற்கு இவை முரண்களாகத் தோன்றினாலும் உண்மையில் இவை இணைகளே என்று கூறுகிறது திருக்குரான். நேர்மமும் எதிர்மமும் இல்லையென்றால் மின்சாரம் ஒளி தராது. வலுவான எலும்புகளும் மென்மையான தசைகளும் இல்லையெனில் உடல் இயங்காது.
பறவை ஒற்றைச் சிறகால் பறக்க இயலாது. மனிதன் ஒற்றைக் காலால் ஓட இயலாது. மனிதனின் கால்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று முரணாக இயங்குவதால்தான் நடக்க முடிகிறது. கத்திரிக்கோலின் கத்திகள் எதிரெதிராக இயங்குவதால் தான் வெட்ட முடிகிறது. ‘கருப்பு மை’யில் எழுத வேண்டுமென்றால் வெள்ளைத்தாள்கள் தேவைப்படுகின்றது. ஆதலால் முரண்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. அதனால்தான் குரானும் முரண்களை ‘இணைகள்’ என்கிறது.
அதுபோல மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இணைகளாக இருக்கின்றன. இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் நதியைப் போல இன்ப துன்ப முரண்களை நாம் அரவணைக்க வேண்டும். அவ்வாறு அரவணைத்தால்தான் வாழ்க்கை சிறக்கும்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.04.2023

No comments:

Post a Comment