Thursday, March 7, 2024

உலக மகளிர் நாள்: பெண் இனத்தின் மாண்பு காப்போம். வைகோ MP வாழ்த்து!

“பெண்ணில் பெருந்தக்க யாவுள? பெண்மை வாழ்கவென்று போற்றுவோம்” எனக் கவிஞர்கள் உன்னதமாகப் பாராட்டிய தாய்க் குலத்தின் உரிமை முழங்கும் நாள்தான் உலக மகளிர் தினமாகிய மார்ச் 8 ஆம் நாள் ஆகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உரிமைகளுக்காகப் பெண்கள் போராடினார்கள். இங்கிலாந்து நாட்டிலும் அமெரிக்காவிலும் வாக்குரிமையையும் பெண்கள் போராடித்தான் பெற்றார்கள்.
சங்ககாலம் தொட்டு தாய்மார்கள் அறத்தின் வடிவமாகவும், மான உணர்ச்சியைப் பிள்ளைகளிடம் ஊட்டும் வீர மகளிராகவும் கருதப்பட்டனர். தந்தை பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காக சங்கநாதம் எழுப்பினார். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரும், டாக்டர் தருமாம்பாள் அவர்களும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் பெண்களின் உரிமைக்காகப் போராடினார்கள். பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார், அவர்தம் சகோதரி கண்ணம்மாள் அவர்களும் மதுவை எதிர்த்து போராடிய வீராங்கணைகள் ஆவார்கள்.
ஆனால், இன்றைய நிலைமை வேதனை தருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள், கொலைகள் நாளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்களின் கண்ணீருக்கு மது அரக்கனே காரணம் ஆகும். முழு மதுவிலக்கு ஒன்றுதான் தாய்மார்களுக்கு மகளிருக்கு துயரத்தைப் போக்கி பாதுகாப்பை அளிக்க முடியும்.
இலங்கைத் தீவில், சிங்களவர்கள் ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கும் படுகொலைகளும், கோரமான கற்பழிப்புக் கொடுமைகளும் இன்றளவும் தொடர்கின்றன. இந்த இனப் படுகொலைக்கு காரணமான சிங்கள அரசை சர்வதேச கூண்டில் நிறுத்துவதுதான், மனித குலம் மகளிருக்குச் செய்ய வேண்டிய கடமையாகும்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 விழுக்காடு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. அது சட்டமாக்கப்பட வேண்டும்.
உலக மகளிர் நாளில் பெண்ணினத்தில் மாண்பு காக்க உறுதி கொள்வோம்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
07.03.2024

No comments:

Post a Comment