Sunday, May 12, 2024

மே 12: உலக செவிலியர் நாள் - அன்னையர் நாள்! வைகோ MP வாழ்த்து!

புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, அவர் பிறந்த மே 12-ஆம் நாள், 1965 -ஆம் ஆண்டு முதல் உலக செவிலியர் நாளாக அறிவிக்கப்பட்டது.

லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கை மாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் விளக்குக்கு வைக்கப்படுகின்றது. ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தமது அறிவையும், அனுபவத்தையும், மனிதநேயத்தையும் தோள் மாற்றம் செய்வதன் அடையாளம் இது ஆகும்.

1820 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள், இங்கிலாந்தில், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறை அருளால் தனக்கு இடப்பட்ட ஆணையாக, செவிலியர் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இப்பணியில் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி, அறத்தொண்டில் ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

போர்க்களங்களில் காயங்கள் அடைந்து, இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துக் கொண்டு இருந்த வீரர்களைத் தேடி கையில் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், தேவையான மருந்துகளை வழங்கினார். காயம்பட்ட வீரர்களின் கவலையைப் போக்கி விரைந்து நலம் பெறச் செய்தார். தங்களைக் காக்க, விண்ணுலகில் இருந்து மண் உலகிற்கு கையில் விளக்குடன் தேவதை வந்திருக்கின்றார் என்று வீரர்கள் மகிழ்ந்தார்கள்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி ஆகும். செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு

நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

நாம் பிறந்தநாட்டைத் ‘தாய்நாடு’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறோம். அன்னையைத் தெய்வமாகப் போற்றுகிறோம். சங்க காலத்திலேயே நம் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். மன்னர்களாகவும் நல்லாட்சி நடத்தியிருக்கிறார்கள். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் வாழ்க்கையில் முன்னேற அன்னையின் அரவணைப்பே முக்கியப் பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட அன்னையருக்கும், புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
12.05.2024

No comments:

Post a Comment