Thursday, September 6, 2018

குட்கா லஞ்ச ஊழலில் சந்தேக நிழல் படிந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாதது ஏன்? வைகோ அறிக்கை!

தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.இராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் றஆகியோரின் இல்லங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர்.

தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குட்கா நிறுவனம் ஒன்றில் சென்னையில் கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பின்னர் வருமான வரித்துறை சார்பில் 2016 ஆகஸ்டு 11 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும், காவல்துறை தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் குட்கா நிறுவனத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், வருமான வரித்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது.

வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை காவல் ஆணையர் டி.கே.இராஜேந்திரன் காவல்துறை தலைவராகவும், பதவி உயர்வு பெற்ற அவலம் நடந்தது. ஊழல் கறைபடிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் பின்னர் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களும் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததும், வருமான வரித்துறை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்லில் அப்போது அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளருக்கு ரூ. 89 கோடி தொகை செலவு செய்யப்பட்டு, இருந்ததாகவும், அது எந்தெந்த வகையில் யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. இதிலும் முதன்மையான குற்றச்சாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் எழுந்தது என்பதை மறுக்க முடியாது.

இதன் பின்னர்தான் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னணியில்தான் சிபிஐ தற்போது சோதனை நடத்தி இருக்கிறது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி தமிழக முதல்வர் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சந்தேகத்தின் நிழல் படிந்த ஒருவரை அமைச்சர் பொறுப்பில் நீடிக்க விட்டது ஏன் என்பதற்கு முதல்வர் பதில்கூற கடமைப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் சிபிஐ சோதனையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட முதல்வர் எடப்பாடிபழனிசாமி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக காவல்துறைக்கு தீராத களங்கம் ஏற்படுத்தும் வகையில் லஞ்ச ஊழல் புகாருக்கு உள்ளான காவல்துறை தலைவர் டி.கே.இராஜேந்திரன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 06-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஏழுபேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உன்னதமானது - வைகோ அறிக்கை!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் எள் அளவும் தொடர்பு அற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும், 27 ஆண்டுகளாக கொடிய நரக வேதனையை, தாங்க முடியாத மன சித்ரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் இளமை வாழ்வே இருண்டு சூன்யமானது.

2014 பிப்ரவரி 18 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் அவர்கள் அமர்வு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது. மறுநாள் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சிறையில் இருந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய அரசு, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று, நான்கு ஆண்டுகளாக உச்சநீதி மன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இந்தப் பின்னணியில், தங்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு விண்ணப்பம் கொடுத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனுவைத் தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வு ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று அறிவித்து விட்டது.

ஏழு பேரும் துன்ப இருட்சிறையில் இருந்து வெளி உலகத்துக்கு வரப்போகின்றார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தலைவணங்கி, வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன். ஏனெனில் இதுமாதிரியான வழக்குகளில், இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேல் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்சினைகளில் குறுக்கிட முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 06-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, September 5, 2018

30 லட்சம் மதிப்பீடு நிவாரணம் வழங்கிய வைகோ!

கேரள மாநில வெள்ள நிவாரணமாக 10 இலட்சம் ரூபாய் காசோலை - 20 இலட்சம் மதிப்பிலான பொருட்களை முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பு தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் வைகோ வழங்கினார்

கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா உடன் இருந்தார்.


கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தற்போது முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்.

20 இலட்சம் மதிப்புள்ள 15 டன் அரிசி, வேட்டிகள், துணிகள், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களை ஐந்து லாரிகள், இரண்டு டிரக்குளில் கொண்டுசென்று திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா அவர்கள் உடன் இருந்தார்.

வைகோ அவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் புதுக்கோட்டை செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், ஆபத்து உதவிகள் அணி இணைச் செயலாளர் கோ.கலையரசன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராபின்சன் ஜேக்கப், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, நாகர்கோவில் நகரச் செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

என்ற செய்தியை மதிமுக தலைமை கழகம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 05-09-2018 தெரிவித்துள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மாணவி சோபியா மீது வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!

இந்திய நாடெங்கும் மதவெறிப் போக்குடன் மனித உரிமைகளை நசுக்கி, சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை படுகொலை செய்யும் இந்துத்துவ சக்திகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து, மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மீது பொய் வழக்குப் போடும் போக்கு நீடிக்கின்றது.

இந்திய ஜனநாயகத்துக்கே உலை வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி, மாணவி சோபியா கருத்துத் தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும். அதற்காக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்திய அரசின் மதவெறிப் போக்குக்குத் தமிழக அரசும் உடந்தையாகச் செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிக்றது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் கல்வி கற்று முன்னேறிய மாணவி சோபியா டெல்லியில் இளநிலை பட்டம் பெற்று, பின்னர் ஜெர்மனியில் எம்.எஸ்.சி., இயற்பியல் பட்டம் பெற்று, கனடாவில் எம்.எஸ்.சி., கணிதம் படித்து முடித்து தற்போது கனடா மாண்ட்டிரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகின்றார். அவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்ததும், கீழமை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ததும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நீதிமன்றம் அவரை பினையில் விடுதலை செய்துள்ளது. ஆனால் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி, முடக்க முயல்வதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அவர் கனடாவில் கல்வியைத் தொடரத் தடையாக அமையும்; பெரும் அநீதிக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் நான் வழக்கைத் திரும்பப் பெறமாட்டேன் என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மிகுந்த அக்கறையோடு படித்து, மேல் நாட்டில் ஆராய்ச்சிக் கல்வி பயில்கிற ஒரு மாணவியின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதை மனிதாபிமானத்தோடு எண்ணிப் பார்த்து, தானாகவே முன்வந்து புகாரைத் திரும்பப் பெறுகிறேன். அரசு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அறிவிப்பதுதான் பெருந்தன்மையும், மனிதநேயமும் கொண்ட அணுகுமுறையாக அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் என 05-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, September 4, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மத்திய, மாநில அரசுகளின் பகல் கொள்ளை-வைகோ கண்டனம்!

மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 கhசுகள் டீசல் விலை லிட்டர் ரூ 75.39 கhசுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.72 கhசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.31 கhசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று மத்திய அரசு வழக்கமான பல்லவி பாடுகிறது.

பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 71 ஆக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. நடப்பு 2018 இல் மட்டும் ரூபாய் மதிப்பு 10 விழுக்கhடு சரிந்துவிட்டது.

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளைத் தாறுமாறாக உயர்த்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 34க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ 37க்கும் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 கhசும், டீசல் மீது ரூ.15.33 கhசும் உற்பத்தி வரி விதிக்கின்றது. இதனுடன் தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு 34 விழுக்கhடு என்றும், டீசலுக்கு 25 விழுக்கhடு என்றும் வரி விதிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் உற்பத்தி வரி மற்றும் வாட் வரி கhரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்துக்கு போய்க்கொண்டு இருக்கின்றன.

இதன் சங்கிலித் தொடர் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. மக்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ‘பகல் கொள்ளை’ போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, வாட் வரி விதிப்புகளை உடனடியாகக் குறைப்பதுடன், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தனது இன்றைய 04-09-2018 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, September 3, 2018

பேரூர் சாந்தலிங்க அடிகளாருக்கு புகழ் அஞ்சலி-வைகோ அறிக்கை!

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆதீன குருமகா சன்னிதானங்கள் கயிலைக் குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இயற்கை எய்தியது தமிழ்கூறு நல்லுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ள பேரூரில் ஆதீனத்தில் குருமுதல்வராக இருந்தவர். தன்னுடைய 15 ஆவது வயதில் சிரவை ஆதினத்தில் தங்கி சைவ சமய இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1947 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டம் மயிலம் சிவஞான பாலைய அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தனித்தமிழ் பயின்று, 1952 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். 1967 ஆம் ஆண்டு பேரூர் ஆதினத்தின் குரு முதல்வராக பட்டமேற்றுக் கொண்டார். மக்களின் வறுமைக்கும் அறியாமைக்கும் காரணம் கல்வி இன்மை என்பதை உணர்ந்து தமிழ்க் கல்லூரியை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்.

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், உலக சைவப் பேரவை, தமிழக துறவியர் பேரவை, சத்வித்ய சன்மார்க்க சங்கம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்குழு, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்கழகம், ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி போன்ற பணிகளில் தலைவராகவும், லண்டன் திருக்கோயில் திருப்பணிக்கு குறள் நெறி பரப்பும் குழு, சேக்கிழார் ஆய்வு மையம், மலேசியா அருள்நெறித் திருக்கூட்டம், மொரீசியஸ் சாந்தலிங்கர் திருத்தொண்டர் கூட்டம், தென்னாப்பிரிக்கா சிவமன்றம் போன்றவற்றில் புரவலராக இருந்து பணியாற்றினார்.

சென்னை, மதுரை, கோவை பல்கலைக்கழகங்களில் கல்விப்பணியில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முதுமுனைவர் (னு.டுவை)., பட்டம் வழங்கி சிறப்பித்தது.

உலக அளவில் தமிழ்மொழிக்காக நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அடிகளாரின் பெருமுயற்சியால் 5000க்கும் மேற்பட்ட கோவில்களில் தமிழ்வழியில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது. 4000க்கும் மேற்பட்ட புலவர்களை தமிழ்கூறு நல்லுலகிற்கு தந்துள்ளார். இவர் ஆற்றிய சமூக சேவை தமிழ்கூறு நல்லுலகம் உள்ளவரை போற்றப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 03-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, September 2, 2018

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டி மாணவி அட்சயா ரூபாய் ஒரு இலட்சமும் - தங்கப் பதக்கமும் பெற்றார்!

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பில், பெரியார் - அண்ணா என்ற தலைப்பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

முதல் கட்டமாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜூலை 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்றது. இதில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் முறையே மூன்று மாணவ - மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக 6 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகள் சென்னை, கடலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டு முறையே 10ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான போட்டிகளில் 120 மாணவ - மாணவிகள் பங்கேற்று, மாநிலப் போட்டிக்கு 21 பேர் தகுதி பெற்றனர்.

இன்று (02.09.2018) மாநில அளவிலான பேச்சுப் போட்டி சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பான்செக்கர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தி.அட்சயா முதல் பரிசு ஒரு இலட்சமும், 30 ஆயிரம் மதிப்பிலான பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும் பெற்றார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆ.நாகமுத்துப்பாண்டியன் இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 50 ஆயிரமும், பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் இ.பிரதீப் மூன்றாம் இடம் பிடித்து ரூபாய் 25 ஆயிரமும், பெரியார் - அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.

பேச்சுப் போட்டி நடத்துவதன் நோக்கங்கள் குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் உரையாற்றினார்.

இப்போட்டிக்கு மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன் வரவேற்றார்.

நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செ.செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினரும், சட்டத்துறைச் செயலாளருமான வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, ஊனை ஆர்.இ.பார்த்திபன், மா.வை.மகேந்திரன், வேலூர் வ.கண்ணதாசன், ஆற்க்காடு பி.என்.உதயகுமார், சேலம் மாநகர் ஆனந்தராஜ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் ப.த.ஆசைத்தம்பி, துரை.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

முனைவர் கு.திருமாறன், பேராசிரியை விமலா அண்ணாதுரை, இலக்கியச் சொற்பொழிவாளர் கங்கை மணிமாறன் ஆகியோர் பேச்சுப் போட்டியில் நடுவர்களாக இருந்தனர் என மதிமுக மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தனது செய்தியறைக்கையில் 02-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை