திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆதீன குருமகா சன்னிதானங்கள் கயிலைக் குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இயற்கை எய்தியது தமிழ்கூறு நல்லுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ள பேரூரில் ஆதீனத்தில் குருமுதல்வராக இருந்தவர். தன்னுடைய 15 ஆவது வயதில் சிரவை ஆதினத்தில் தங்கி சைவ சமய இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1947 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டம் மயிலம் சிவஞான பாலைய அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தனித்தமிழ் பயின்று, 1952 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். 1967 ஆம் ஆண்டு பேரூர் ஆதினத்தின் குரு முதல்வராக பட்டமேற்றுக் கொண்டார். மக்களின் வறுமைக்கும் அறியாமைக்கும் காரணம் கல்வி இன்மை என்பதை உணர்ந்து தமிழ்க் கல்லூரியை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்.
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், உலக சைவப் பேரவை, தமிழக துறவியர் பேரவை, சத்வித்ய சன்மார்க்க சங்கம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்குழு, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்கழகம், ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி போன்ற பணிகளில் தலைவராகவும், லண்டன் திருக்கோயில் திருப்பணிக்கு குறள் நெறி பரப்பும் குழு, சேக்கிழார் ஆய்வு மையம், மலேசியா அருள்நெறித் திருக்கூட்டம், மொரீசியஸ் சாந்தலிங்கர் திருத்தொண்டர் கூட்டம், தென்னாப்பிரிக்கா சிவமன்றம் போன்றவற்றில் புரவலராக இருந்து பணியாற்றினார்.
சென்னை, மதுரை, கோவை பல்கலைக்கழகங்களில் கல்விப்பணியில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முதுமுனைவர் (னு.டுவை)., பட்டம் வழங்கி சிறப்பித்தது.
உலக அளவில் தமிழ்மொழிக்காக நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அடிகளாரின் பெருமுயற்சியால் 5000க்கும் மேற்பட்ட கோவில்களில் தமிழ்வழியில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது. 4000க்கும் மேற்பட்ட புலவர்களை தமிழ்கூறு நல்லுலகிற்கு தந்துள்ளார். இவர் ஆற்றிய சமூக சேவை தமிழ்கூறு நல்லுலகம் உள்ளவரை போற்றப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 03-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment