மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 2013 மே 14 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில், “சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய் சிலை ஒன்று நிறுவப்படும், அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும், கட்டடக் கலை நாகரிகப் பெருமைகளையும் உலகுக்குப் பறைசாற்றும்படி தமிழ்த் தாய் சிலை அமையும்” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
ஜெயலலிதாவின் அறிவிப்பை ஆறு ஆண்டுகள் கழிந்து நிறைவேற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசின் ‘பூம்புகார் நிறுவனம்’ தமிழ் அன்னை சிலை வடிப்பதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை குறித்து ‘பாரம்பரிய விஸ்வகர்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச் சங்கம்’ சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள வேண்டுகோள் மடல் மூலம் தமிழ் அன்னை சிலை உருவாக்கம் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் அன்னை சிலை எப்படி வடித்தெடுக்கப்பட இருக்கிறது என்று, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருக்கின்றது.
“தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது; பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இந்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும், சங்க கால முறையையும் பின்பற்றி சிலை வடித்தெடுக்கப்பட வேண்டும்” என்று பூம்புகார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் ஊடுருவி உள்ள சில நச்சுக் கிருமிகள் தமிழர்களின் கலை இலக்கியம், பண்பாடு அனைத்தையும் இந்துத்துவா மயமாக்க முயற்சித்து வருகின்றன.
உலகமே வியக்கும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். திராவிடர்களின் கட்டடக் கலை மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரையில் பரவிய கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்புக்கு உரியது.
பேரரசர் இராசராச சோழன் எழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோவிலும், அவரது வீர மைந்தன் இராசேந்திரன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழர்களின் புகழை பறைச்சாற்றிக்கொண்டே இருக்கும்.
மாமல்லபுரத்தில் பல்லவர்கள் வடித்த கற்கோவிலும், சிலைகளும் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதவை ஆகும்.
ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் என்று ஆய கலைகள் அறுபதிலும் சிறப்புற்று விளங்கிய தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவு கூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாடு அரசு, பூம்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிலை வடித்தெடுக்கும் பணியை ஒப்படைத்து பளிங்கு கல், பைபர், கண்ணாடியைக் கொண்டு வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்குவோம் என்று திட்டமிடுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். சங்ககால மரபையும், வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும்?
தமிழர்களின் பண்பாடும், வேதகால இந்து பிராமணிய மரபும் ஒருபோதும் இணைக்கவோ பிணைக்கவோ முடியாதது என்கிற வரலாற்று அறிவை இவர்கள் எப்படி இழந்தார்கள்? சனாதன சங்கபரிவார கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி அரசை கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சீரழிக்க நினைக்கிறது.
அதனால்தான் தமிழ் அன்னை சிலைக்குப் பதிலாக ‘ஆரியமாதா’ சிலை வடித்து, சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்று கூறினால், முதல்வர் பழனிச்சாமிக்கு கோபம் வருகின்றது.
திராவிட இயக்கம் தழைத்த இந்த மண்ணில், தமிழர் மரபுகளை, பண்பாட்டு விழுமியங்களை விழுங்கத் துடிக்கும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 14-05-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment