Saturday, June 29, 2019

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் விபரீத விளைவுகளை உண்டாக்கும் - வைகோ எச்சரிக்கை!

இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக முனைந்து செயல்பட்டது. தற்போது இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முன்பைவிட மூர்க்கத்தனமான வேகத்தில் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

ஒரே தேர்தல்; ஒரே தேசிய கல்விக் கொள்கை; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே வரி என்பதில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்திற்கு அகரம் எழுதி உள்ளனர்.

டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறைக் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராம்விலாஸ் பஸ்வான் கூறும்போது, பொதுவிநியோகத் திட்டம் மூலம் இந்தியாவில் 81 கோடி பேர் மானிய விலையில் அத்தியாவசியமான உணவு தானியப் பொருட்களை பெற்றுப் பயன் அடைந்து வருகிறார்கள். நாடு முழுவதும் இந்திய உணவுக் கழகம், மத்திய உணவுக் கழகம், மாநில உணவுக் கழகங்கள் மற்றும் தனியார் உணவுக் கழகங்களின் கிடங்குகளில் சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. உணவு தானியப் பொருட்களை அரசு வாங்குவது முதல் மக்களுக்கு விநியோகம் செய்வது வரை அனைத்தையும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று மாநிலங்கள் அவையிலும் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுவிநியோகத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவிலிருந்து புலம்பெயரும் மக்களை ஊக்குவித்துத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றவும், ஏழை - எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு பொது விநியோக முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்த்தை அறிமுகம் செய்கிறது.

பொது விநியோகமுறை என்பது மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதும், அதனைக் கண்காணிப்பதும், முறைகேடுகள் இருந்தால் அவற்றைக் களைந்து, செம்மையாக செயல்படுத்துவதும் மாநில அரசுகளின் முழு முதற் கடமை. இது முழுக்க முழுக்க மாநிலங்களின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, மத்திய அரசு மூக்கை நுழைப்பது வேண்டாத வேலை.

இது மாநிலங்களை நகராட்சிகளைவிடக் கேவலமாக நடத்துவதற்கான சதித் திட்டமாகும்.

மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு பா.ஜ.க. அரசு ‘நிதி ஆயோக்’ வடிவமைத்துத் தருவதை செயல்படுத்த மோடி அரசு துடிப்பது கூட்டாட்சிக் கோட்பாட்டை சீர்குலைப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம். இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

குடும்ப அட்டைத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக அரசு, பா.ஜ.க. அரசின் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்கக் கூடாது. கடுமையாக எதிர்க்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 29-06-2019 தெரிவித்துள்ளார்.

Thursday, June 27, 2019

மதிமுக உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக்குழு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கும், சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமை கழகம் இன்று 27-06-2019 அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Wednesday, June 26, 2019

காவிரி தீரத்தில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. விண்ணப்பம் - வைகோ கண்டனம்!

காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் செயல்படுத்த உள்ள நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி பொதுமக்களும், விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்மைத் தொழில் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால் முழுமையாகச் சூறையாடப்பட்டுவிடும்.
காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசு மூர்க்கத்தனமாகச் செயல்படுத்த துடிக்கின்ற மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் வருங்கால தலைமுறையின் வாழ்வு வினாக்குறி ஆகிவிடும் பேராபத்து சூழ்ந்து வருவதால், தமிழகம் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
கடந்த 2018 அக்டோபர் மாதம் காவிரிப் படுகையில் சுமார் 6000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்ற வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை ஒப்பந்தம் போட்டது.
இத்திட்டங்களுக்காக வேதாந்தா நிறுவனம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி அளித்திருக்கிறது. வேதாந்தா நிறுவனம் இதற்கான அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 27 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சையில் 17 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகள், கடலூரில் 7 கிணறுகள், இராமநாதபுரத்தில் 3 கிணறுகள் என்று மேலும் 104 கிணறுகள் அமைக்கவும், இதற்காக ஒரு கிணற்றுக்கு ரூ.15 கோடி வீதம் மொத்தம் ரூ.1560 கோடி திட்டச் செலவு ஆகும் என்றும், ஓ.என்.ஜி.சி. சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் - இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது.
பா.ஜ.க. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும்.
எனவே, மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 26-06-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, June 25, 2019

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி போக்குவரத்து கழக நிர்வாகிகள் கூட்டம்!

இன்று(25.06.2018) தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் போக்குவரத்து கழக நிர்வாகிகள் கூட்டம், ம.தொ. முன்னணியின் தலைவர் ஆவடி அந்திரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.தொ.முன்னணியின் பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.


மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகம் தீவிர முயற்சிக்கு வைகோ கண்டனம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கீழ் படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் அலட்சியப்படுத்தி, மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டியே தீருவது என கர்நாடகா முனைப்புடன் செயல்படுகிறது.
மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் 2018 செப்டம்பர் மாதம், கர்நாடக அரசு செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது. இதில் மேகேதாட்டுவில் ரூ.5912 கோடியில் அணையும், சுமார் 400 மெகாவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு மத்திய அரசிடம் அளித்தது கர்நாடகம்.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய நீர் வளக் குழுமம் நவம்பர் 22, 2018 இல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கியது.
இதன்பின்னர் டெல்லியில் 2018, டிசம்பர் 3 இல் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய நீர்வளத்துறை மற்றும் வனத்துறை வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், அணைக் கட்டுமானப் பகுதியை நிபுணர் குழுவுடன் சென்று பார்வையிட்டு அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது என்றார்.
கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைகள் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை டிசம்பர் 5, 2018 இல் கர்நாடகா மாநிலம் மீது தமிழக அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி கர்நாடக அரசு, கர்நாடகாவின் வறட்சியை சமாளிக்கவும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
மேகேதாட்டு அணை திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.9 ஆயிரம் கோடி என்றும். 400 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும். நான்கு ஆண்டுகளுக்குள் அணை கட்டுமானம் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கர்நாடகம் தெரிவித்து உள்ளது.
மேலும் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு 5252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். இதில் 4996 ஹெக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கும். 3181 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்டது. 1869 ஹெக்டேர் நிலம் காப்புக் காடுகள் என்றும் கர்நாடக மாநில அரசு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டு அனுமதி கேட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட 5912 கோடி ரூபாய் ஒதுக்கிய கர்நாடகா தற்போது அதனை 9 ஆயிரம் கோடியாக திட்ட மதிப்பீட்டை உயர்த்தி இருப்பது இந்த அணையின் மூலம் பாசனப் பரப்பை அதிகரிக்கவும், நீர் பிடிப்புப் பகுதிகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதையே காட்டுகிறது.
மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுவிடும். உபரி நீர் கூட மேட்டூருக்கு வரக்கூடாது என்பதில் கர்நாடகா மாநிலம் மூர்க்கத்தனமாக செய்யப்படுவது கண்டனத்துக்கு உரியது.
மக்கள் எதிர்ப்புகளை மீறி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, தற்போது மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க முனைந்திருப்பது தமிழகத்தைப் பாலைவனமாக்கும் வஞ்சக நோக்கம் ஆகும். மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக் கூடாது. கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sunday, June 23, 2019

வைகோ தலைமையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் மரக்காணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு 23-06-2019 அன்று போராட்டம் நடத்தினார்கள். அந்த மனித சங்கிலி போராட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றார்கள்.

சிறப்பு முகாம்களா? சித்திரவதைக் கூடங்களா? வைகோ கண்டனம்!

சிங்கள அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைப்பதற்காகத் தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பது வழக்கம். ஆனால், ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கின்றார்கள்.
எந்தவிதமான குற்றச்சாட்டுப் பதிவும் இல்லாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்த இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது. இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது.
நான் பல அகதி முகாம்களைப் பார்வையிட்டு, அங்கே உள்ள அவலநிலையை நேரில் கண்டு அறிந்தேன். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன. அவர்களது வேதனைக் கண்ணீரைப் பல மேடைகளில் எடுத்துக் கூறி இருக்கின்றேன்.

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடிஉரிமையும் வழங்கி இருக்கின்றன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.
ஆனால், இந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 23-06-2019 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, June 22, 2019

கனடா நாடாளுமன்றத் தீர்மானம் வைகோ வரவேற்பு!

ஈழத் தமிழ் இன அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி, கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்தத் தீர்மானத்தில், வன்முறையாலும், போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு இரங்கலைத் தெரிவித்து இருப்பதுடன், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றது. 

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின்படி, தெளிவான கால அட்டவணை வகுத்துச் செயல்படுமாறு, இலங்கையிடம் கனடா அரசு முன்பு விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றது. 

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல், 2009 ஆம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்து இருக்கின்றது. 

கனடா நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற இந்தத் தீர்மானம், ஈழத்தமிழர் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. 

கனடா அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தப் பிரச்சினையில் உரிய நீதி கிடைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என‌ மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 22-06-2019  தெரிவித்துள்ளார்

Friday, June 21, 2019

ஜூன் 23 இல் மனிதச் சங்கிலி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிக்க கரம் கோர்த்து எழுவோம்-வைகோ அறிக்கை!

காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் அறவழிப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு, காவல்துறையை ஏவி அடக்குமுறை தர்பார் நடத்துகிறது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தால், சோழவள நாடு பாலைவன பூமியாக மாறிவிடும் என்ற அச்சத்தாலும், வாழ்வாதாரம் பறிபோய் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக அலையும் கொடுமை ஏற்பட்டுவிடும் என்ற கவலையாலும் மக்கள் போராடி வருகின்றனர்.

காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ‘ஹெல்ப்’ (HELP - Hydrocarbon exploration and Licensing Policy) எனும் ஒற்றை உரிமம் வழங்கும் முறையை மத்திய பா.ஜ.க. அரசு 2017 இல் அறிமுகம் செய்தது. பின்னர் ‘திறந்தவெளி அனுமதி’ (OALP -Open Acreage Licensing Policy) என்ற உரிமம் வழங்கும் திட்டத்தை அறிவித்து ஜனவரி 19, 2018 இல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதற்கு 110 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. மத்திய அரசு ஆகஸ்டு 28, 2018 இல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்தது.

இதன்படி காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு -1இல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு -2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும்.

இதற்கான ஒப்பந்தங்கள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் அளிப்பட்டிருக்கிறது.

‘நீரியல் விரிசல்முறை’ (Hydrological Fracturing) எனப்படும் தொழில்நுட்பத்தில் ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு எடுக்க அமெரிக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

நீரியல் விரிசல் முறை என்பது, பூமிக்கு அடியில் 3500 முதல் 5000 அடி மற்றும் அதற்கும் கீழே உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மேலே கொண்டு வரும் திட்டம் ஆகும். ஒவ்வொரு இடத்திலும் அமையும் கிணறுகளிலும் இதற்காக துளையிடும்போது 20 கோடி லிட்டர் தண்ணீர் பூமிக்குள் செலுத்தப்படும். அந்தத் தண்ணீருடன் 650 வகையான ரசாயனப் பொருட்கள், மணல் கலந்து மிக உயர்ந்த அழுத்தத்துடன் பூமிக்கு அடியில் செலுத்தும்போது அவை 5 ஆயிரம் அடி ஆழத்திற்குச் சென்று கீழே படிந்துள்ள எண்ணெய், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயுகளை மேலே கொண்டு வரும்.

அப்படி வரும்போது கீழே செலுத்தப்பட்ட 20 கோடி லிட்டர் தண்ணீரில் 60 விழுக்காடு நீர் வெளியேறும். அதனுடன் செலுத்தப்பட்ட ரசாயனங்களும் வெளியேற்றப்படுவதோடு, விளைநிலங்கள் சாகுபடித் திறனை இழந்து மலடு ஆகிவிடும் ஆபத்து நேரும்.

நிலத்தடி நீரும், காற்று மண்டலமும் நஞ்சாகும். சுற்றுச் சூழல் சீர்கேடு அடையும். கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீருடன் கலக்கும். இதனால் அதனைப் பயன்படுத்தவே முடியாத நிலைமை ஏற்படும். மக்கள் குடிநீருக்குக்கூட தவிக்கும் நிலைமை உருவாவதைத் தடுக்க முடியாது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா, மேற்கு வெர்ஜினீயா மாநிலங்களில் இதுபோன்ற நீரியல் விரிசல் முறை மூலம் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 2011 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பூமிக்குள் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான லிட்டர் வேதிப்பொருட்கள் கலந்த நீரில் மெத்தனால், ஹைட்ரஜன் புளுரைடு, கந்தக அமிலம், புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியவையும் அடங்கும். புற்று நோயை உருவாக்குபவை என்று வகைப்படுத்தப்பட்ட 650 இரசாயனப் பொருட்கள் சுமார் ஒரு கோடி காலன் அளவுக்கு பூமிக்குள் அமெரிக்க ஷேல் நிறுவனங்கள் செலுத்தி இருப்பதாக அமெரிக்க காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இதே நிலைமைதான் காவிரி டெல்டாவிலும் ஏற்படும். காவிரி படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வந்த வேளாண் தொழில் அழிவதோடு மட்டுமின்றி, சுற்றுச் சூழல் நாசமாகி, மக்கள் உடல்நலனும் கெட்டு, சொந்த மண்ணிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகிவிடும்.

காவிரி பாசனப் பகுதி வேளாண் மண்டலத்தைப் பேராபத்திலிருந்து பாதுகாக்கவும், ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நினைவில் வாழும் நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் ஜூன் 23 ஆம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜூன் 23 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவு வரை மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் பேராபத்தை விரட்டி அடிக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அலை அலையாக பங்கேற்க வேண்டும்.

மரக்காணத்தில் மனிதச் சங்கிலியில் நானும் இணைகிறேன். மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ஜூன் 23 மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-06-2019 தெரிவித்துள்ளார்.

Sunday, June 16, 2019

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடிக்கு வைகோ கண்டனம்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரம் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில், தேசிய அளவிலான முதுநிலைப்படிப்புகள், நுழைவுத்தேர்வு அடிப்படையிலான முதுநிலை பட்டப்படிப்புகள் வகை 1, நுழைவுத் தேர்வு இன்றி, இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலான முதுநிலை பட்டப்படிப்புகள் வகை 2, மற்றும் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு, என, முதுநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்தும் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தன.
இவை அனைத்திற்கும், இணைய வழியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முதல் இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 8.3.2019. அதற்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23, 24 ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும்; மூன்றாவது பிரிவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 5.4.2019; நான்காவது பிரிவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.5.2019 என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புவியியல், தமிழ், ஆங்கிலம், உடற்கல்வியியல் மற்றும் கல்வியியல் ஆகிய 9 பாடப்பிரிவுகள், நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும்;
மொழியியல், மலையாளம், பிரெஞ்சு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், வரலாறு, சமூக அறிவியல் உள்ளிட்ட 22 படிப்புகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும்;
ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, மேல்நிலைக் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நுழைவுத் தேர்வு உடைய படிப்புகளுக்கு ரூ 300, நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகளுக்கு ரூ 200 கட்டணமாக, இணைய வழியில் பெறப்பட்டது.
அதன்பின்னர், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியல், 19.3.2019 அன்று பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டது. அதே நாளில், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டுகளும் தரப்பட்டன. 24.3.2019 அன்று மதுரையில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டும் அன்றி, புதுச்சேரி, கேரளாவில் இருந்தும் மாணவர்கள் மதுரைக்கு வந்து தேர்வு எழுதினர். ஆனால் முடிவுகள் எதையும் வெளியிடவே இல்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. மாணவர்களுக்கும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை.
நுழைவுத் தேர்வு இல்லாத பிரிவுகளுக்கும், அவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரப்பட்டியல் எதுவும் வெளியிடவில்லை.
ஆனால் அவர்களை, 13.5.2019 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு வரும்படி, பல்கலைக் கழக நிர்வாகம் கடிதம் அனுப்பியது; நுழைவுத் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியது.
இந்தக் கடிதங்கள் அனைத்தும், மே 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் சாதாரண அஞ்சலில் அனுப்பப்பட்டு இருக்கின்றன. இடையில் உள்ள இரண்டு நாள்களில் ஒரு நாள் விடுமுறை. எனவே, பெரும்பாலான கடிதங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. எனவே, திங்கட்கிழமை கலந்தாய்வில் குறைந்த அளவு மாணவர்களே கலந்து கொண்டனர்.
மற்ற இடங்கள் அனைத்தும் காலி இடங்கள் என, பிற்பகல் இரண்டு மணிக்கே அறிவிப்பு வெளியிட்டு விட்டார்கள்.
அதன்பிறகு, பிற்பகல் 3 மணிக்கே, உடனடி மாணவர் சேர்க்கை (Spot admission) என அறிவித்து, அவசர அவசரமாக மாணவர் சேர்க்கை நடத்தி முடித்துள்ளனர்.
அதேபோல, அறிவியல் முதுநிலை பட்டப்பிரிவுகளுக்கு, 25.5.2019 அன்று கலந்தாய்வு நடத்தினர். அதற்கான அறிவிப்பும் மூடு மந்திரம்தான். நுழைவுத் தேர்வு முடிவுகளை அறிவிக்காமலேயே, இதற்கும் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தி இருக்கின்றனர்.
ஆனால், பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில், உடனடி மாணவர் சேர்க்கை குறித்து எந்தவிதமான அறிவிப்பும் கிடையாது. நாளிதழ்கள், ஊடகங்களில் எந்தவிதமான விளம்பரமும் செய்யவில்லை. கலந்தாய்வுக்கு முதல் நாள், பல்கலைக்கழக வாயிலில் ஒரு விளம்பரப் பதாகை மட்டுமே வைத்து இருந்தனர்.
இத்தகைய மோசடியான மாணவர் சேர்க்கையினால், தகுதி உள்ள பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; தகுதி இல்லாத பலர் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண்கள், இளநிலை பட்டப்படிப்பில் 50 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் என்ற அளவில் சேர்க்கை நடத்துகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அனைத்தும் மூடு மந்திரமாகவே நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த விவரங்கள் எதுவும் தெரியாத மாணவர்கள் பலர், இன்னமும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் தாங்கள் செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தையும் திடீரென நீக்கி விட்டனர். இது மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து, தக்க விசாரணை நடத்த வேண்டும்;
முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்;
தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்;
முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 16-06-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, June 15, 2019

இந்தி மட்டுமே ‘இந்திய’ மொழியா? தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு - வைகோ கண்டனம்!

நாடாளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க. ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர்.
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னக மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மீண்டும் பா.ஜ.க. அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலையை மூர்க்கத்தனத்துடன் செய்து வருகிறது.
மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியை விரும்பும் மாணவர்கள் கற்க ஏற்பாடு; இரயில்வே துறையில் தகவல் பரிமாற்றத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும்; தமிழ் மொழியில் அறவே உரையாடக் கூடாது என்று சுற்றறிக்கை.
தற்போது மேலும் ஒரு கேடாக, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் உள்ளிட்டவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக (Title) திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தத் தகவலைத் தெரிவித்து இருப்பதுடன், இந்திய மொழியான ‘இந்தி’யைத் தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே “இந்திய மொழிகள்” என்பதை முதலில் மத்திய அரசு ஏற்க வேண்டும். ‘இந்தி’ மட்டுமே இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவது, அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பது நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்குமே தவிர, இந்தி ஒருபோதும் ‘இந்தியா’வை ஒன்றிணைக்காது என்பதை பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்பதைக் கவனப்படுத்துகிறேன்.
தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 15-06-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Friday, June 14, 2019

இரயில்வே துறையில் இந்தி திணிப்பு, தமிழகம் சிலிர்த்து எழும், வைகோ எச்சரிக்கை!

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ‘இந்து - இந்தி - இந்தியா’ எனும் கோட்பாட்டில் முனைப்பாகச் செயல்படத் தொடங்கி உள்ளது. அதனால்தான் மூர்க்கத்தனமாக இந்தி மொழித் திணிப்பை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்தத் தீவிரப்படுத்தி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரை வரைவு அறிக்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இந்தி மொழியை மூன்றாவது மொழியாக 6-ஆம் வகுப்பிலிருந்து கற்பிக்க வேண்டும் என்று அக்குழு அளித்த பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து எழுந்தது. இந்தியைத் திணிக்கக் கூடாது என்று தென்னகத்தில் கர்நாடகம், தெலுங்கானா, மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே மத்திய அரசு மூன்றாவது மொழியாக இந்தியைப் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மாணவர்கள் விரும்பும் மொழியைக் கற்கட்டும் என்று கஸ்தூரிரங்கன் குழு வரைவு அறிக்கையில் திருத்தம் செய்திருப்பதாகக் கண்துடைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பப் பாடம் என்று சொல்லி மும்மொழிக் கொள்கையைத் திணித்து அதன் மூலம் இந்தியைக் கற்கச் செய்வதற்கு பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் சதித்திட்டம் தீட்டுகிறது. தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைதான் இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது 1968, ஜனவரி 23-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.
இதனை மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தமிழகம் போர்முரசு கொட்டியிருக்கின்ற வேளையில், தென்னக இரயில்வே வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, இந்தியை அப்பட்டமாகத் திணிப்பதற்கு வழி செய்து வெந்த புண்ணில் வேல் வீசி இருக்கிறது.
தென்னக இரயில்வே சார்பில் நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் தகவல் பரிமாற்றங்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் மேற்கொள்ள வேண்டும். இரயில்வே தொடர்பான பணிகள், ரயில்கள் இயக்கம் போன்ற அலுவல் சார்ந்த உரையாடல்கள் இந்தி, ஆங்கிலம் இரண்டைத் தவிர தமிழில் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
கடந்த மே மாதம் 9 ஆம் தேதி மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் இரு ரயில்கள் ஒரே பாதையில் எதிர் எதிரே சென்றபோது திருமங்கலத்தில் நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விபத்து ஏற்படாமல் காப்பாற்றினர். இதற்கு நிலைய அதிகாரிகளின் தகவல் தொடர்பு மொழி சிக்கல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த குழப்பத்திற்கு காரணம் இந்தி மொழி பேசும் வடமாநிலத்தவர் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் அதிகாரிகளாக பணி அமர்த்தியதுதான் என்பதை மறைத்துவிட்டு, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உரையாடல் இருக்க வேண்டும். தமிழ் அறவே கூடாது என்று இரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்திருப்பது கட்டாய இந்தித் திணிப்பு ஆகும். தென்னக இரயில்வே நிர்வாகத்தின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. உடனடியாக இந்தி சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் 1937 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 82 ஆண்டுகளாக இன்னும் நீறு பூத்த நெருப்புபோல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிட வேண்டாம். மொழி உரிமைப் போர்க்களத்தில் இரத்தம் சிந்தி, உயிர்களை பலி கொடுத்து களம் கண்ட தமிழகம், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்புக்கு எதிராக சிலிர்த்து எழும்; நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 14-06-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Thursday, June 13, 2019

நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி - வைகோ கண்டனம்!

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கி சாதாரண எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் கனவைத் தகர்த்து எறிந்தது பா.ஜ.க. அரசு. தமிழக சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதை, ஒரு பொருட்டாகவே பா.ஜ.க. அரசு கருதவில்லை; குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது.
‘நீட்’ தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இணையம் மூலம் விண்ணப்பத்தைத் தரவு இறக்கம் செய்து மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தது.
அதன்படி, விண்ணப்பத்தைத் தரவு இறக்கம் செய்த மாணவர்களுக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் எந்தெந்தச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டியல் தரப்பட்டு இருக்கின்றது. அதில் 5-ஆவது வரிசை எண்ணில், +2 தேர்வு எழுதியபோது அளிக்கப்பட்ட தேர்வு மைய நுழைவுச் சீட்டு (HSC Hall Ticket) கேட்கப்பட்டு இருக்கின்றது. கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் +2 தேர்வு எழுதியவர்கள், ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி இருக்கின்றனர். அவர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு +2 எழுதிய தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்டால் எங்கே போவார்கள்? அதைக் கேட்க வேண்டிய தேவை என்ன?
அதேபோல வரிசை எண். 14-இல் பெற்றோரின் சான்றிதழ்களின் நகல் இணைக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றுகள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டு இருக்கின்றது.
பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை அல்லது ஆதார் போன்றவை இணைக்கப்பட்டால் போதுமானது.
இதுபோன்ற சான்றுகளுடன் ஜூன் 20-ஆம் தேதிக்குள் ஆன் லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.
+2 தேர்வு மைய நுழைவுச் சீட்டு, பெற்றோர் படிப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் கேட்பதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் ‘வடிகட்டி’ வாய்ப்பை மறுக்கும் சதியோ இவை என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திருப்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 13-06-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, June 11, 2019

தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் தமிழகம்! போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!

தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, 22 மாவட்டங்களுக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிக்கின்றது. நாள்தோறும் குடிநீருக்காக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் செய்திகள் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் வெளியாகி வருகின்றன.

சென்னை பெருநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் 3872 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. தற்போது ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி 261 மில்லியன் கன அடி நீர்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு சென்னை மக்களின் தாகத்தைப் போக்க 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், மாநகர குடிநீர் வாரியம் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகிக்கிறது.

வீராணம் ஏரியிலிருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல் நீரை குடிநீராக்கி விநியோகம் செய்யப்படும் நீர், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சென்னையில் விநியோகம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் கேன் வாட்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டன. குடியிருப்புகளில் அன்றாட தேவைக்காக விலைக்கு வாங்கும் நீரை லாரி நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்திவிட்டன.

குடிநீரையும், மற்ற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையையும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உயர்த்திக் கொள்ளை லாபம் அடிப்பதை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கைப் பார்த்துக் கொhண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. எடப்பாடி பழனிச்சாமி அரசு இதில் உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்.

பருவ மழை பொய்த்து, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போவதையும், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே போனதையும் தமிழக அரசு முன்கூட்டியே கணித்துத் தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதால்தான் இன்று சென்னை மக்கள் தண்ணீருக்குத் தவித்து நடுத்தெருவில் போராடும் நிலைமையை உருவாகி இருக்கின்றது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி 3600 நீர் நிலைகள் உள்ளன. அவற்றை முறையாக தூர் வாரி பராமரித்திருந்தால் 80 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். பெய்த சொற்ப மழை நீரும் அரசின் அலட்சியப் போக்கால் வீணானது.

தமிழகம் முழுவதும் குடிநீர் இன்றி மக்கள் அல்லல்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கடந்த 7ஆம் தேதிதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழக அரசு இயந்திரம் போர்க்கால வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் இன்று 11-06-2019 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Monday, June 10, 2019

நடிகர் கிரிஷ் கர்னாட், நகைச்சுவை கலைஞர் கிரேஸிமோகன் மறைவு-வைகோ இரங்கல்!

பிரபல எழுத்தாளர் இயக்குநர் நடிகர் கிரிஷ் கர்னாட், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை கலைஞர்களில் ஒருவரான கிரேஸிமோகன் ஆகிய இருவரும் இன்று இயற்கை எய்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

ஆக்ஸ்போர்டு பல்கலைகக் கழகப் பட்டதாரியான கிரிஷ் கர்னாட் அவர்கள் அனைத்திந்திய அளவில் முத்திரை பதித்த கலைஞர். இந்திய இலக்கியத்தின் மிக உயர்ந்த ஞானபீட விருதைப் பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் சிறப்பித்தவர். தீவிர இடதுசாரி சிந்தனையாளர். மதவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக அவரது உயிருக்குக் குறிவைக்கப்பட்டு இருந்தாலும், அதற்காக அஞ்சாமல் ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். களப் போராட்டங்களில் முன்னணியில் பங்கேற்றார். அவரது படைப்புகள் தமிழிலும் வெளிவந்துள்ளன.

தமிழக நாடக உலகில்  தரமான நகைச்சுவை நாடகங்களை இயக்கிப் பெரும்புகழ் பெற்றவர் கிரேசி மோகன். ஆபாசக் கலப்பு இன்றி நல்ல நகைச்சுவையைத் தந்தவர். அவருடைய வசனங்கள் நினைத்து நினைத்துச் சிரிக்கத்தக்கவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லோராலும் பாராட்டப்படுபவை.

ஒரே நாளில் இரு பெருந்தகைகளின் மறைவு கலைத் துறையில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாகியிருக்கின்றது. அவர்களின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தனது இரங்கல் அறிக்கையில் இன்று 10-06-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, June 8, 2019

ஹைட்ரோ கார்பன் நாசகாரத் திட்டத்தைக் கைவிடக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர் - வைகோ அழைப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்தின் தலை மீது கல்லைத் தூக்கிப் போடும் வேலையை மத்திய பா.ஜ.க. அரசு தொடங்கிவிட்டது. காவிரி பாசன பகுதி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் அறவழியில் போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் உயிராதாரமான வேளாண்மைத் தொழிலை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி, சொந்த மண்ணிலே விவசாயிகளை அலைய விடுவதற்கு பா.ஜ.க. அரசு தீட்டி உள்ள ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு கைட்டி, வாய் பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு அனுமதி அளித்துவிட்டது.
காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து, மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் (பிரிவு -1) 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் (பிரிவு -2) 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைத்து, இலட்சக்கணக்கான மக்களின் உடல் நலனுக்குத் தீங்கு விளைவித்தும், விவசாய நிலங்களை மலடாக்கியும் பெரும் நாசத்தை உருவாக்கிய வேதாந்தா குழுமம், காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு இரண்டு உரிமங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு ஒரு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது,
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் பா.ஜ.க. அரசு மூர்க்கத்தனமாக செயல்படுத்தத் துடிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மாசு அடைந்து, நீர் மட்டமும் ஆயிரம் அடிக்குக்கும் கீழே சென்றுவிடும். விளைநிலங்கள் பாழாகி, விவசாயம் பொய்த்துப் போகும் நிலைமை உருவாகும். மக்கள் குடிநீருக்குக்கூட தவிக்கும் பேராபாயம் ஏற்படும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காவிரி நீரைப் பயன்படுத்தி, வேளாண் தொழிலில் சிறந்தோங்கி, நாட்டிற்கே உணவு அளிக்கும் நெற்களஞ்சியமான சோழ மண்டலம், பாலைவன பூமியாக மாற்றப்பட்டுவிடும்.
இந்திய அரசுக்கும், கார்ப்ரேட் பகாசுர நிறுவனங்களுக்கும் பல இலட்சக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் காவிரி டெல்டா விவசாயத்தை நம்பி இருக்கும் இலட்சோப இலட்சம் மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக இடம்பெற வேண்டிய துயரநிலை உருவாகும்.
தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹட்ரோ கார்பன், சாகர்மாலா, சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை, விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும், காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில், மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”

எனும் திருக்குறள் மொழியை நெஞ்சில் தேக்கி, காவிரி தீரத்தைப் பாதுகாத்திட திரண்டு எழுவோம்.
வேளாண்மைத் தொழிலைக் காக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதச் சங்கிலியில் நானும் பங்கேற்கிறேன்.
மத்திய, மாநில அரசுகளுக்கு தரப்படும் எச்சரிக்கை மணி என்பதைத் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள், மாணவர்கள், வணிகப் பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வாரீர் அன்போடு அழைக்கிறேன்.
மனிதச் சங்கிலி அறப்போர் வெற்றிகரமாக நடப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 8-6-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Thursday, June 6, 2019

நீட் தேர்வு இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகிறதோ? வைகோ வேதனை!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று, நம்பிக்கையுடன் நீட் தேர்வை எழுதி இருக்கிறார். தேர்வு முடிவுகளில் அவர் வெறும் 68 மதிப்பெண்கள் பெற்றதால், மனம் உடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவருடைய பெற்றோர் செல்வராஜ் - ராஜலட்சுமி இருவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது மருத்துவர் ஆகும் கனவு தகர்ந்துபோனதால், உயிரைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டையில் நம்பிராஜ் என்பவரது மகள் வைஷ்யா நீட் தேர்வில் 230 மதிப்பெண்கள் பெற்றதைப் பார்த்துவிட்டு, உடலில் மண்ணென்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக. நீட் தேர்வை வலிந்து திணித்ததால், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் 2017 இல் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1175 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நஞ்சு அருந்தி மாண்டு போனார். ஏழைத் தொழிலாளியின் மகளான பிரதீபா பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1125 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி, திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 907 மதிப்பெண் பெற்றும், நீட்டில் மிகக் குறைந்த மதிப்பெண் வந்ததால், தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்தார்.
சென்னை, சேலையூரில் ஏஞ்சலின் சுருதி என்ற மாணவியும் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டனர். நேற்று ரிதுஸ்ரீ, வைஷ்யா தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகள். மருத்துவராக வேண்டும் என்ற கனவைச் சுமந்த இந்தக் குழந்தைகள், நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள இலட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி மையங்களில் சேர முடியாதவர்கள்.
மத்திய பா.ஜ.க. அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் சாதாரண எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகின்றன?
மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, பயிற்சி மையத்தில் சேர்ந்தால்தான் நீட் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகிறது.
புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருப்பதும், மேல்நிலைப் படிப்பு பயில்வது கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் கல்வித்துறையின் அவலம் ஆகும்.
மருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு மாணவ - மாணவிகளுக்கும் கிடைக்க, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும்தான் ஒரே வழியாகும். அப்போதுதான் இதுபோன்ற தற்கொலைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும்.
நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத மாணவக் கண்மணிகளே, தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து, மனம் தளராது எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் வாழ்க்கையின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
உயிரிழந்த மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷ்யா குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 6-6-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Wednesday, June 5, 2019

அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலை; கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுக - வைகோ அறிக்கை!

கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளை சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் அணுமின் உற்பத்தி நடக்கிறது. மேலும் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும். எனவே, உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட, அணு உலைகள் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor -AFR), அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ் நில கருவூலம் (Deep Geological Repository -DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இதில் அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேசிய அணுமின் கழகத்திற்கு 2013 இல் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் 2018 மார்ச் மாதம் முடிந்த நிலையில், தேசிய அணுமின் கழகம், AFR தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதால் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது.
மேலும், இதைப் போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல் முறையாக கூடங்குளத்தில் உள்ளதால், AFR அமைப்பது மிகவும் சவாலான பணி என்றும் தேசிய அணுமின் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து உலைகளுக்கு உள்ளேயே அணுக் கழிவுகளை சேகரித்து வைப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளிலிருந்து மேலும் கழிவுகள் உருவாகாமல் இருக்க, AFR மற்றும் DGR பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வரையில் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக் கழிவுகளைப் பாதுகாக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும். இதுபற்றிய திட்ட அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று 2018 ஆகஸ்ட் 24 ஆம் தேதி உத்தரவிட்டு, அணுமின் உற்பத்தி தொடர அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்துதான் தற்போது, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளாகவே AFR பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கி, அணுக் கழிவுகளைச் சேமிக்க திட்டமிட்டுள்ள தேசிய அணுமின் கழகம், வரும் ஜூலை 10 ஆம் தேதி நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (DGR) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவிடம் இல்லாத நிலையில், கூடங்குளத்தில் தற்காலிகமாக AFR பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் கூடங்குளம் அணுக் கழிவுகளை மட்டுமின்றி, இந்தியாவில் இயங்கி வரும் மற்ற 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து சேமிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு பேரபாயம் ஆகும்.
ஏனெனில், கடந்த 2011 இல் ஜப்பான் புகுஷிமா நகரில் அணு உலை விபத்து ஏற்பட்டபோது, அணுக் கழிவுகளால்தான் மிகப்பெரிய பாதிப்புகள் உருவாகின. கதிர் வீச்சு அபாயம் மட்டுமல்ல, அணு குண்டு போல எந்த நேரமும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அணுக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டு இருக்கிறது.
அணு உலைக் கழிவுகள் என்பது உறங்கிக் கொண்டிருக்கும் அணுகுண்டு போன்றது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாக செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
இந்நிலையில், கூடங்குள வளாகத்துக்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்தியா முழுவதிலிமிருந்து அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் கொட்டி சேமிக்க என்பது கற்பனை செய்யத முடியாத பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், புதிய அணு உலைகளையும் நிறுவக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 5-6-2019 தெரிவித்துள்ளார்.

பண்பாட்டுப் படையெடுப்பைக் கண்காணிப்போம்; தடுப்போம் - வைகோ அழைப்பு!

12 ஆம் வகுப்பிற்கான தமிழ் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையாக வரைந்து இருப்பது, வன்மையான கண்டனத்திற்கு உரியது. 

இது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர்.  அட்டையில்தான் இந்த மாற்றமா? அல்லது, உள்ளே இருக்கின்ற பொருள்களிலும் மறைமுகக் காவித் திணிப்பு இருக்கின்றதா என்பதை, கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து அழித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற நிலைமையை உருவாக்க முனைகின்ற இந்துத்துவ சக்திகளின் பின்புலத்தில் இயங்கி வருகின்ற நரேந்திர மோடி அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்களைப் புகுத்தி விட்டது.

மத்திய அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டங்களை மாற்றி எழுதி வருகின்றார்கள். இந்திய விடுதலைப்போராட்ட வரலாறைத் திரித்து எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். செத்துப்போன சமற்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பதற்கும், இந்தி மொழியை இந்தியா முழுமைக்கும் திணிப்பதற்குமான முயற்சிகளில், மூர்க்கத்தனத்தோடு செயல்பட்டு வருகின்றார்கள். அனைத்து இந்திய அளவில் நீட் தேர்வைக் கொண்டு வந்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்க முனைகின்றார்கள். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றார். அப்படி அவர் நியமித்த, ‘அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, சர்வாதிகாரியாகச் செயல்பட முடியாது’ என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி இருப்பது, கல்வித்துறையில் மத்திய அரசின் திணிப்பு முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. 

இந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க வேண்டும் என வெளியிட்ட அறிவிப்பிற்கு, தமிழகம் மட்டும் அன்றி, கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதர மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 

எனவே, இந்தி கட்டாயம் அல்ல என்று கூறினாலும், அது மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும் என்கின்றார்கள். மத்திய அரசு இப்போதைக்குப் பதுங்குவது போலக் காட்டிக் கொண்டாலும், வேறு பல முனைகளிலும் அவர்கள் தமிழ்நாட்டின் மீது பண்பாட்டுப் படையெடுப்பு முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள். 

‘தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான்; இனி எதிர்காலத்திலும், எவராலும் இதை மாற்ற முடியாது’ என பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழகச் சட்டமன்றத்தில் தெளிவாகப் பிரகடனம் செய்து இருக்கின்றார்கள். தமிழகத்தின் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வோடு இருந்து, பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் அரணாகக் கடமை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ 4-6-2019 தெரிவித்துள்ளார்.