12 ஆம் வகுப்பிற்கான தமிழ் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையாக வரைந்து இருப்பது, வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர். அட்டையில்தான் இந்த மாற்றமா? அல்லது, உள்ளே இருக்கின்ற பொருள்களிலும் மறைமுகக் காவித் திணிப்பு இருக்கின்றதா என்பதை, கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து அழித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற நிலைமையை உருவாக்க முனைகின்ற இந்துத்துவ சக்திகளின் பின்புலத்தில் இயங்கி வருகின்ற நரேந்திர மோடி அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்களைப் புகுத்தி விட்டது.
மத்திய அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டங்களை மாற்றி எழுதி வருகின்றார்கள். இந்திய விடுதலைப்போராட்ட வரலாறைத் திரித்து எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். செத்துப்போன சமற்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பதற்கும், இந்தி மொழியை இந்தியா முழுமைக்கும் திணிப்பதற்குமான முயற்சிகளில், மூர்க்கத்தனத்தோடு செயல்பட்டு வருகின்றார்கள். அனைத்து இந்திய அளவில் நீட் தேர்வைக் கொண்டு வந்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்க முனைகின்றார்கள்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றார். அப்படி அவர் நியமித்த, ‘அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, சர்வாதிகாரியாகச் செயல்பட முடியாது’ என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி இருப்பது, கல்வித்துறையில் மத்திய அரசின் திணிப்பு முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க வேண்டும் என வெளியிட்ட அறிவிப்பிற்கு, தமிழகம் மட்டும் அன்றி, கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதர மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தி கட்டாயம் அல்ல என்று கூறினாலும், அது மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும் என்கின்றார்கள். மத்திய அரசு இப்போதைக்குப் பதுங்குவது போலக் காட்டிக் கொண்டாலும், வேறு பல முனைகளிலும் அவர்கள் தமிழ்நாட்டின் மீது பண்பாட்டுப் படையெடுப்பு முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள்.
‘தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான்; இனி எதிர்காலத்திலும், எவராலும் இதை மாற்ற முடியாது’ என பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழகச் சட்டமன்றத்தில் தெளிவாகப் பிரகடனம் செய்து இருக்கின்றார்கள். தமிழகத்தின் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வோடு இருந்து, பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் அரணாகக் கடமை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 4-6-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment