பாரதிய ஜனதா கட்சி 2014 இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததும், புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு 2016 இல் தனது வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களை புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன. பல்கலைக் கழகக் கட்டுமானங்களில் மாற்றம் செய்தல், பல்கலைக் கழக ஆட்சிமன்றங்களில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெறச் செய்தல், உயர்கல்வி பாடத் திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டு சந்தைக்கு ஏற்ப கல்விமுறை என்ற வகையில் தனியாரிடம் ஒப்படைத்தல் போன்றத் திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும்.
மேலும், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிப்பiத் தடுத்து, அவற்றை வணிகமயமாக்கி, கல்லூரிகள் தமக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து நிற்பது போன்ற பரிந்துரைகள் மூலம் உயர் கல்விச் சூழலை முற்றிலுமாக தனியார் மயமாக்குவதற்கு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு திட்டம் வகுத்தது.
உயர்கல்வி நிறுவனங்களில் மிக முக்கியமான பிரச்சினை கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை, மேலும் தேவையான அளவுக்குக் கட்டுமான வசதிகள் இல்லாமல் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் இயங்கி வருவது; இவை போன்ற பிரச்சினைகளில் அரசோ, நீதிமன்றங்களோ தலையிடக்கூடாது. இதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவந்து கல்வித்துறைக்குத் தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பல்கலைக் கழக மானியக் குழு போன்ற கல்வித்துறைச் சார்ந்த உயர் அமைப்புகள் இனி தேவை இல்லை என்றும் புதிய கல்விக் கொள்கை வரையறுத்தது.
மோடி அரசு உருவாக்கிய நிதி ஆயோக் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று மூன்றாண்டு செயல்திட்டத்தை வடிவமைத்து, கல்வி மற்றும் திறன் வளர்ச்சியை மையமாகக் கொண்டு உயர்கல்வித் துறையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கு ஏற்ப பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று ‘நிதி ஆயோக்’ திட்டமிட்டதால், பல்கலைக் கழக மானியக்குழுவை ஒழித்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் அமைக்கவும், அதனைத் தொடர்ந்து கல்வித்துறையில் ஏகபோக அதிகாரம் செலுத்தும் ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கவும் பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்தது.
உயர்கல்வித்துறையைத் தனியாரிடம் தாரைவார்க்கும் வகையிலும், மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலும் உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு 2018, ஜூன் 29 இல் நான் அறிக்கை வெளியிட்டு, வலியுறுத்தி இருந்தேன்.
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு புதிய கல்விக் கொள்கைகளை வடிவமைத்திட வழங்கிய வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கருத்துக் கூறி வந்த நிலையில், 2017 ஜூன் 26 இல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட இன்னொரு குழு ஒன்றை அமைத்தது. தேசியக் கல்விக்கொள்கையை வடிமைக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ் கன்னம்தானம், முன்னாள் துணைவேந்தர் ராம்சங்கர் குரீல், எம்.கே.ஸ்ரீதர், மொழியியல் அறிஞர் டி.வி.கட்டிமணி, குவாஹாட்டி பேராசிரியர் மஸார் ஆசி~ப், உத்திரப் பிரதேச கல்வித்துறை முன்னாள் இயக்குநர் கிஷன் மோகன் திரிபாதி, கணிதவியல் மேதை மஞ்சள் பார்கவா, முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
கடந்த ஆண்டு 2018 டிசம்பர் 15 ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை தயார் ஆகிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்றும் அறிவித்தார்.
தற்போது மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.
கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்.
ஆறாம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.
பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.
கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 01-06-2019 அன்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment