இன்று 26.7.2019 மாநிலங்கள் அவை கூடியதும், பூஜ்ய நேரத்தில் முதல் வாய்ப்பாக, அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, வைகோ அவர்களைப் பேச அழைத்தார்.
அப்போது வைகோ பேசியதாவது:-
“தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக் கூடிய பெருங்கேடான, மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை நடுவண் அரசு செயல்படுத்த முனைகின்றது.
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.
ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப் போகின்றார்கள். ஏற்கனவே தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் வேதாந்தா நிறுவனம், காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கி இருக்கின்றார்கள். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டி கொண்டு இருக்கின்றார்கள்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்காக அவர்கள் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்திற்குள் உட்செலுத்தப் போகின்றார்கள்.
அதுமட்டும் அல்ல, அத்துடன் 636 நச்சு வேதிப் பொருட்களையும் கலந்து நிலத்திற்குள் செலுத்தப் போகின்றார்கள்.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்து விடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
எந்த எதிர்ப்பைப் பற்றியும் கவலை இல்லை என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மிகுந்த ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கூறி இருக்கின்றார். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று, கடந்த 17 ஆம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
இந்த அழிவுத் திட்டங்களை எதிர்த்து இலட்சக்கணக்கான விவசாயிகள், சாதி மத கட்சி எல்லைகளைக் கடந்து வீதிக்கு வந்து போராடி கொண்டு இருக்கின்றார்கள்.
கடந்த ஜூன் 23ஆம் நாள் இலட்சக்கணக்கான மக்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக “ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவிற்கு, கைகளை ஒன்றாகப் பிணைத்து மனிதச்சங்கிலி உருவாக்கி, அறப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லிக்கு வந்து ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்றார்கள்.
இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் எந்தக் கூடிய நிலைமை உருவாகும்.
எனவே இந்தக் கேடான அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன்.”
இவ்வாறு வைகோ பேசினார்.
அப்போது அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் குறுக்கிட்டு, “மின்னல் வேகத்தில் உங்களுடைய கருத்துகளை கூறினீர்கள். அரசுக்கு கோரிக்கை விடுங்கள். ஆனால் எச்சரிக்கை செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று 26-07-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment