1878 செப்டம்பர் 5 ஆம் நாள் தோன்றிய வ.உ.சிதம்பரம் அவர்களின் அரசியல் வாழ்வில், 1905 முதல் 1908 வரை, நான்கு ஆண்டுகள், எழுச்சி மிக்கவை.
வீரபாண்டிய கட்டபொம்மன், கயத்தாறு புளியமரத்தில் தூக்கு மரத்தை முத்தமிட்ட அக்டோபர் 16 ஆம் நாள் அன்று, 1906 இல் தூத்துக்குடி கிரேஸ் காட்டன் ரோடு, 85 ஆம் எண் இல்லத்தில் சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சி. துவக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள், ஆங்கிலேய அரசு வ.உ.சி. மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தி, 1908 ஜூலை 7 ஆம் நாள் இரட்டை ஆயுள் தண்டனை, அத்துடன் நாடு கடத்தல் தண்டனை விதித்து, கோயமுத்தூர், கண்ணனூர் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைபட்டார்.
கோவை சிறையில்தான் செக்கு இழுத்தார். அவரது உயிர் நண்பர் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு, பத்து ஆண்டுகள் சிறையும், நாடு கடத்தல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
வீர சிதம்பரம் 1912 டிசம்பர் 24 இல் விடுதலை பெற்றார். புதுச்சேரியில் அரவிந்தர், பாரதியார், வ.வே.சு. ஐயர் ஆகிய தேசபக்தர்களைச் சந்தித்தார்.
1912 முதல் 1919 வரை மைலாப்பூரிலும், பெரம்பூரிலும் வணிகம் செய்தார்.
1919 முதல் 1922 வரை கோவையில் வாழ்ந்தார்.
1922 முதல் 1932 வரை கோவில்பட்டியில் வாழ்ந்தார்.
1932 முதல் 1936 நவம்பர் 18 வரை தூத்துக்குடியில் வாழ்ந்தார்.
தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டு இருந்தார். 1927 நவம்பர் 5 ஆம் தேதி, சேலம் மாவட்ட காங்கிரஸ் அரசியல் மாநாட்டுக்குத் தலைவர் ஆனார். வரதராஜூலு நாயுடு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் விடுதலை முழக்கம் எழுப்பி வந்தார்.
1936 நவம்பர் 13 இல் உணர்வு குறைந்து பேச்சு நின்றது.
பாரதியின் சுதந்திரப் பாடல்களைக் கேட்க விரும்பினார்.
தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி கந்தசாமி பிள்ளை, தொண்டர்களை அழைத்து வந்து, பாரதி பாடல்களைப் பாடச் செய்தார். காது குளிர அப்பாடல்களைக் கேட்ட வ.உ.சி., என்னைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே? என்று தன் மனவேதனையைக் கொட்டினார்.
தொல்காப்பியம், திருக்குறள் நூல்களைப் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை எழுதினார். பொருட்பால், இன்பத்துப்பாலுக்குத் தான எழுதிய உரைகள் நூலாக வெளிவரவில்லையே என்ற ஆதங்கத்துடன் மறைந்தார்.
வ.உ.சி. அவர்களையும், அவர் நாட்டு விடுதலைக்காக ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளையும், தியாகத்தையும் மக்கள் மறக்க முடியாது.
பெயரையும், புகழையும் விரும்பாமல், ஆடம்பரம்அற்ற எளிய வாழ்வு நடத்தி, ஒப்பற்ற சேவை புரிந்தவர் சிதம்பரனார்.
என் மனமும், என் உடம்பும், என் சுகமும், என் அறமும்
என் மனையும், என் மகவும், என் பொருளும்
என் மனமும் குன்றிடினும்
யான் குன்றேன்
கூற்றுவனே வந்திடினும்
வென்றிடுவேன் காலால் உதைத்து
என்று எழுதினார்.
1943 ஜனவரி 7 இல், வரகவி ஆ.சுப்பிரமணியர் எழுதிய கட்டுரையில், வ.உ.சி.யை ‘கப்பல் ஓட்டிய தமிழர்’ என்று முதன் முதலாகக் குறிப்பிட்டார். அதே பெயரில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நூல் எழுதினார்.
1972 இல் சுதந்திர தின வெள்ளி விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கோவை சிறையில் சிதம்பரனார் இழுத்த செக்கினை நினைவுச் சின்னமாகக் கருதி, சிறப்புமிக்க இடத்தில் வைக்கப்படும் என கலைஞர் அறிவித்து, சென்னை அரசினர் தோட்டத்தில் காந்தி இல்லத்துக்குப் பக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வ.உ.சி.யின் நூறாம் ஆண்டு விழாவில், கலைஞர் தலைமையில் தூத்துக்குடி துறைமுகத்தில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். மத்திய அஞ்சல் துறை அமைச்சர் பகுகுணா, வ.உ.சி.யின் அஞ்சல் தலையை வெளியிட்டார்.
வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான அறிவிப்புகளைச் செய்து இருக்கின்றார்.
தூத்துக்குடியில் மேல பெரிய காட்டன் சாலை இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்; வ.உ.சி. அவர்களின் முழு உருவச் சிலை, கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும்; ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள சிதம்பரனார் அவர்களின் மணி மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு, ஒளி, ஒலி காட்சி அமைக்கப்படும்.
இவ்வாறு, 14 அறிவிப்புகளை முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கின்றார்; உ.வ.சி.யின் புகழை உலகு அறியச் செய்து இருக்கின்றார்.
நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்தவர்களை இந்த அரசு இமயத்தின் உச்சியில் வைத்துப் போற்றுகின்றது; தமிழகம் பெருமிதம் கொள்கின்றது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.09.2021
No comments:
Post a Comment