Wednesday, October 20, 2021

எங்கள் கோரிக்கையை ஏற்ற பொறுப்பு வழங்கிய தலைவருக்கு நன்றி

கடந்த 15 அக்டோபர் 2021 ல் ஒமான் மதிமுக நடத்திய முப்பெரும் திராவிட தலைவர்கள் பிறந்த நாள் கருத்தரங்கில் சிறப்பு தீர்மானமாக Durai Vaiko Duraivaikoofficial  அவர்களுக்கு ஜனநாயக கட்சியான நம் கழகத்தில் உரிய நேரத்தில் பதவி வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்ததையடுத்து, எங்கள் உணர்வுகளை மதித்து தலைமை கழக செயலாளர் என்ற  பொறுப்பை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் வழங்கிய உலக தமிழர்களின் ஒளிவிளக்கு அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் மதிமுக.
20-10-2021

Thursday, October 14, 2021

அணி திரண்டு வாரீர்! உள்ளாட்சி தேர்தலில் மதிமுக வெற்றி பெற்றதையடுத்து சென்னையில் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியில், மறுமலர்ச்சி தி.மு.க போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடியுள்ளது. 

வெற்றிக்கான வியூகங்களை வகுத்து, வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த தலைவர் வைகோ அவர்கள், 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணி அளவில், மதுரையில் இருந்து வான் ஊர்தியில் சென்னைக்கு வருகின்றார்கள். 

பாலைவனத்தில் ஒரு சோலையாய், சதுப்பு நிலத்தின் ஊன்றுகோலாய் அமைந்திட்ட வெற்றியைக் கொண்டாட, திராவிட இயக்கப் போர்வாள் தமிழ் இனக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களை வரவேற்க, கைகளில் கழகக் கொடி ஏந்தி சென்னை விமான நிலையத்திற்கு அணி திரண்டு வாருங்கள் என, கண்ணின் மணிகளை அன்புடன் அழைக்கின்றேன்.

மல்லை சி.ஏ.சத்யா
துணைப் பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
13.10.2021

பத்திரிகை செய்தி! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பம்பரம் சுழன்ற இடங்கள் பட்டியல்!

9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘பம்பரம்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 (இரண்டு) மாவட்டக் கவுன்சிலர்கள் மற்றும் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் :

தென்காசி மாவட்டம்- மாவட்டக் கவுன்சிலர்
வார்டு எண். 3 தேவி ராஜகோபால்

ஒன்றியக் கவுன்சிலர்கள்

குருவிகுளம் ஒன்றியம்
வார்டு எண்.  2 அருள் குமார்
வார்டு எண்.  3 சங்கீதா கணேஷ்குமார்
வார்டு எண்.  4 சித்ரா சங்கர்
வார்டு எண்.  5 கனகேஸ்வரி ராஜேஸ்கண்ணா
வார்டு எண்.  8 கிருஷ்ணம்மாள் என்ற சுகுணா கனகராஜ்
வார்டு எண்.  9 விஜயலெட்சுமி கனகராஜ்
வார்டு எண். 12 விஜயலட்சுமி தர்மர்
வார்டு எண். 14 வீரலட்சுமி செல்வகுமார்

மேலநீலிதநல்லூர் ஒன்றியம்

வார்டு எண்.  8 இராமலெட்சுமி ராஜ்
வார்டு எண். 10 அமுதா சசிக்குமார்
வார்டு எண். 11 கா. சுசிதா சண்முகராஜ்

சங்கரன்கோவில் ஒன்றியம்
வார்டு எண். 2 
தங்கச்செல்வி

கீழப்பாவூர் ஒன்றியம்
வார்டு எண். 
15 இராம உதயசூரியன்

காஞ்சிபுரம் மாவட்டம் -மாவட்டக் கவுன்சிலர்
வார்டு எண்.  7 
திருமதி அமுதா செல்வம்
 
செங்கல்பட்டு மாவட்டம்
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்
3-ஆவது வார்டு  
திருமதி அம்சவள்ளி

விழுப்புரம் மாவட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்
7-ஆவது வார்டு  
ஏமப்பூர் திரு. ஆர். சுபாஷ்

கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருநாவலூர் ஒன்றியம்
9-ஆவது வார்டு 
திருமதி இந்திராணி கணேஷ்குமார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8  
13.10.2021

அருளானந்தம் மறைவு! வைகோ MP இரங்கல்!

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர், இராமே°வரம் மீனவர்களின் பாதுகாவலர் அருளானந்தம் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

எண்பதுகளின் தொடக்கத்தில், இலங்கைக் கடற்படையினர் ராமே°வரம் மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை எதிர்த்துக் களம் புகுந்தார்.

தீவு மீனவர் சங்கத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களின் பாதுகாப்பான நல்வாழ்வு ஒன்றையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார்.

தற்போது தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் குற்றக் கூண்டில் நிறுத்திய போதெல்லாம் அங்கே சென்று அவர்களுக்காக வழக்கு உரைஞர்களை வைத்து வாதாடி னார். அதேபோல, ராமே°வரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இலங்கை மீனவர்களுக்கும் வழக்கு உரைஞர்களை ஏற்பாடு செய்து வாதாடி விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவியாக இருந்தார்.

மீனவர் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது என்னுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு களநிலவரங்களை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். நானும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன்.

தேசிய நிரபராதி மீனவர் கூட்டமைப்பு ஏற்படுத்தினார்.

ராமே°வரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த போது அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார்.

தமிழக முதல்வருடன் தொடர்பு கொண்டு அரசுத்தரப்பில் வழக்கு உரைஞர்களை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்று வாதாடி, விடுதலை பெற பெரும் பங்கு வகித்தார்.

ராமே°வரத்தில் மறுமலர்ச்சி திமுக கழகம் நடத்திய மீனவர் பாதுகாப்பு அறப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் உதவியாக இருந்தார்.

அவரது மறைவு, மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரது குடும்பத்தினர், மீனவ சமுதாயத்தினரின் வேதனையில் பங்கேற்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
10.10.2021

Saturday, October 9, 2021

"நாகர்கோவில் - கோவை தொடரி எண் 02667 "கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும். வைகோ கோரிக்கை

கோவில்பட்டி நகரம், தென் தமிழ்நாட்டில் முதன்மையான வணிக மையங்களுள் ஒன்று ஆகும். பருத்தி, மிளகாய் மற்றும் தீப்பெட்டிகள், கோவில்பட்டியில் இருந்து நாடு முழுமையும் செல்கின்றன. கோவில்பட்டிக்கும், கோவை மாநகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிறைய உண்டு. எனவே, நாள்தோறும் மக்கள் இரண்டு நகரங்களுக்கும் சென்று வருகின்றார்கள். 

ஆனால், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் தொடரி எண் 02667, கோவில்பட்டியில் நிற்பது இல்லை. 

எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட தொடரி, கோவில்பட்டியில் நின்று செல்கின்ற வகையில் ஏற்பாடு செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 

இவ்வாறு, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்-நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, மின்அஞ்சல் கோரிக்கை விடுத்து இருக்கின்றார்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
08.10.2021

உயர்நிலைக்குழு - மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு,அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  வருகிற 20.10.2021 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
07.10.2021

Tuesday, October 5, 2021

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம்!

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கி இருக்கிறது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2013 இல் பிறப்பித்த உத்தரவில், அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட, அணு உலைகள் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor -AFR) அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நிலக் கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் 2018, மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தேசிய அணுமின் கழகம் ஏ.எஃப்.ஆர். தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதால், மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.

மேலும் இதைப் போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல் முறையாக கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஏ.எஃப்.ஆர். தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது சவாலான பணி என்று தேசிய அணுமின் கழகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

மீண்டும் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அணுக்கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும்; இது குறித்த திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று 2018 ஆகஸ்ட் 24 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் ஏ.எஃப்.ஆர். பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கி, அணுக்கழிவுகளைச் சேமித்திட தேசிய அணுமின் கழகம் பணிகளைத் தொடங்க திட்டமிட்டது. இதற்காக 2019 ஜூலை 10 ஆம் நாள் நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்ற கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது மீண்டும் ஒன்றிய அரசு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தின் உள்ளே அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்ய அனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்கு உரியது.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலக் கருவூல மையம் (DGR)” அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவில் இல்லை. இந்தச் சூழலில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை கட்டமைத்து, அதில் கூடங்குளம் அணுஉலை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மற்ற 22 அணுஉலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பாக இருக்கிறது.

அணுக் கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இதுவரையில் இல்லை என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே அணுக்கழிவுகளை முழுமையாக செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திலேயே அணுக் கழிவு மையத்தை உருவாக்கி, அணுக்கழிவுகளைக் கொட்டி சேமிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது தென் தமிழ்நாட்டையே சுடுகாடாக ஆக்கும் முயற்சியாகும்.

இந்த நாசகார திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
05.10.2021

Friday, October 1, 2021

மறைந்த மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சை மாவட்ட செயலாளர் கோ.உதயகுமார் குடும்பத்தினருக்கு பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள் நேரில் ஆறுதல்.!

மறுமலர்ச்சி திமுகவின் துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சை மாவட்ட செயலாளர் கோ.உதயகுமார் சில மாதங்களுக்கு முன்பு இயற்கை எய்தினர். அவர்களுக்கு இல்லங்களுக்கு இன்று (30.09.2021) மாலை நேரில் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள், இருவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இரண்டு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் மதுரை தெற்கு தொகுதி உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் தமிழரசன், தஞ்சை நகர கழகச் செயலாளர் துரை.சிங்கம் உள்ளிட்ட கழக தோழர்கள்.

அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்ற வேண்டாம்! வைகோ வேண்டுகோள்!

தமிழக அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் அரசின் முடிவைக் கைவிட்டு, பனிரெண்டாயிரம் வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 12000 பேர்  வணிகத் தொடர்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

முதியோர் உதவித் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை வழங்கும் பணியினை, ஒவ்வொரு மாதமும் இவர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

இந்தப் பணிகளில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகள் அளிக்கும் ஊக்கத் தொகை மட்டுமே வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வாதாரம் ஆகும். கிராமப்புற  மக்களுக்கான வங்கிச் சேவைகள் அனைத்தும், இவர்கள் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றது.

கொரோனா பேரிடர் காலத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கிராமப்புறங்களில் உள்ள வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று  உதவித் தொகை வழங்கி வருகின்றார்கள்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் முக்கிய நோக்கமான, அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கிடும் சேவையை மிகச்சிறப்பாகச் செய்வதற்கு, வங்கித் தொடர்பாளர்கள் பெரிதும் காரணமாக இருந்துள்ளனர்.

இதுதவிர, ஆதார் எண் இணைக்கும் பணிகள், ஒன்றிய அரசு வழங்கும் 2 லட்சம் ஆயுள் காப்பீடு, 2 லட்சம் விபத்துக் காப்பீடு இவற்றை வழங்கிட மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தி, அவர்களை இணைத்து வருகின்றார்கள்.

கடந்த வருடம் மகளிருக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1500-ஐ வீடு வீடாகச் சென்று வழங்கியதுடன், கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான ரூ.6000, தமிழக அரசின் மகப்பேறு உதவித் தொகை, தமிழக அரசின் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, 100 நாள் வேலை வாய்ப்பு ஊதியம் மற்றும் எரிவாயு மானியம் உள்ளிட்ட அரசின் அனைத்து உதவித் தொகைகளையும், இந்த வங்கித் தொடர்பாளர்கள் மூலம் பூஜ்ஜியம் கணக்கில் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை அஞ்சலக வங்கிக்கு மாற்ற முயலும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவானது, இதுவரை மிக எளிதாக மக்களுக்கு உதவித் தொகை வழங்கிடும் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும்.

மேலும், ஆயிரக்கணக்கான வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். பத்து ஆண்டு காலமாக இதனை மட்டுமே நம்பி வாழும், அவர்களது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படும்.

ஆகவே, அரசின் உதவித் தொகையினை வழங்குவதற்கு, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசும் ஏற்கனவே வழங்கி வரும் அரசின் உதவித் தொகையை, வங்கி வணிகத் தொடர்பாளர்களின் மூலமே தொடர்ந்து வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.09.2021