Wednesday, January 31, 2024

பழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க! தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP வலியுறுத்தல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது என்று கூறி, பழனியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், “இந்து அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. ‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்” என உத்திரவிட்டுள்ளார்.
மேலும் “மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்தப் பதிவேட்டில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாத உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம்” என்று உத்தரவிட்ட நீதிபதி, “இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
இத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது.
நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இந்துக்களும் பிற மதத்தினரும் வழிபட்டு வருகின்றனர்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
தாயகம்’
சென்னை - 8
31.01.2024

Tuesday, January 30, 2024

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ MP உரை!

இன்று 30.01.2024 டெல்லியில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், ஒன்றிய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று வைகோ எம்.பி. அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களே, அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களே, நாடாளுமன்ற விவகாரத்துறை பிரகலாத் ஜோஷி அவர்களே, கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்களே, இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள், இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.
எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார், இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.
நான், நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜி, சிங்கப்பூர் மைதானத்திலிருந்து,
“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களே, இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜி, மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.
ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே என்றார் பிரகலாத் ஜோசி.
வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும், அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.
இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.
தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்து, இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.
இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.
இவ்வாறு வைகோ உரையாற்றினார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
30.01.2024

சமூகநீதியைச் சாய்க்க முனையும் பாஜக அரசை வீழ்த்துவோம்! வைகோ MP அறிக்கை!

சமூகநீதியைச் சாய்க்க முனையும் பாஜக அரசை வீழ்த்துவோம்! வைகோ MP அறிக்கை!

ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு (UGC - University Grants Commission) வெளியிட்டிருக்கிறது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளின் பணியிடங்களை இட ஒதுக்கீடு முறையில் நிரப்புவதற்கு பொதுவான தடை இருப்பதாகவும், இந்தக் காலிப் பணியிடங்களை பொது நலன் கருதி தொடர அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, அந்தப் பணியிடத்தை நிரப்ப போதுமான விண்ணப்பங்களோ, தகுதியான ஆட்களோ கிடைக்காத பட்சத்தில், அந்தப் பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்யலாம் என சமூகநீதிக் கோட்பாட்டையே நீர்த்துப் போகும் வகையில் பரிந்துரைத்து இருக்கிறது.
அதாவது, “ஓ.பி.சி., எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்களை நிரப்ப போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையெனில், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி அதில் தகுதியானவர்களை கொண்டு நிரப்பலாம்!” என தெரிவித்திருப்பதுதான் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
யூ.ஜி.சியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது. இன்று, ஒன்றிய அரசின் 45 பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7,000 பேராசிரியர் பணியிடங்களில், 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7.1 விழுக்காடு தலித், 1.6 விழுக்காடு பழங்குடியினர் மற்றும் 4.5 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன. இதனால் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் சதிகளை முறியடிக்க அரசியல் கட்சிகளும், சமூக நீதி இயக்கங்களும் போராடுவோம் என்று அறிவித்த உடன் ஒன்றிய பாஜக அரசு பின்வாங்கி இருக்கிறது.
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகமும், யுஜிசியும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மழுப்பலான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி, சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைக்கின்ற வகையில் அதைச் செயல்படுத்தி இருக்கிறது பாஜக அரசு.
அதன் நீட்சியாகவே யுஜிசி மூலம் ஆழம் பார்ப்பதற்கு இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு, நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பின் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் பாஜக அரசின் நாடகம் அம்பலம் ஆகிவிட்டது.
சமூக நீதியைச் சாய்க்கத் தொடர்ந்து முனைந்து வரும் பாஜக அரசை வீழ்த்தினால்தான் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
30.01.2024

காந்தியார் நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம்! வைகோ MP அறிக்கை!

30.01.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை - 2024 எனும் அமைப்பின் சார்பில் காந்தியார் படுகொலை நாளை சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய இடங்களில் “காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா?” எனும் தலைப்பில் ஒன்றுகூடல் - கலை நிகழ்ச்சிகளை நடத்திட உள்ளதை அறிந்து பாராட்டுகிறேன்.
முன்னாள் நீதியரசர் திரு து.அரிபரந்தாமன், முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர் திரு கோ.பாலச்சந்திரன் ஆகியோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்த உள்ளதை அறிந்து மனநிறைவு அடைகிறேன்.
காந்தியாரை கொலை செய்த கூட்டம் அதனை விழா எடுத்து கொண்டாடுவதும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை மாலை சூட்டி வரவேற்பதும், நடைபெறுவதற்கு சங்பரிவார் கூட்டத்தின் தலைமையிலான பாஜக அரசே காரணம் என்பதை நாம் அறிவோம். அவர்களை டெல்லி செங்கோட்டையில் இருந்து அகற்றுவதன் மூலம்தான் நாட்டில் மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும், ஜனநாயக நெறிமுறையும் ஏற்படுத்த முடியும் என்பதை நெஞ்சில் நிலைநிறுத்தி, காந்தியார் நினைவு நாளில் சூளுரை மேற்கொள்வோம்.
தமிழ்நாடு பொதுமேடை - 2024 நடத்தும் காந்தியார் படுகொலை நாள் நிகழ்ச்சிகளில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும். கழகத் தோழர்களை இந்த நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
30.01.2024

Monday, January 29, 2024

ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு தாயகத்தில் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்-துரை வைகோ பங்கேற்பு!

தமிழீழ படுகொலையை கண்டித்து தமது இன்னுயிரை ஈந்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக நேற்று (29.01.2024) மாலை தலைமை அலுவலகம் தாயகத்தில் தியாகிகள் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, வீர முழக்கமிட்டு தனி ஈழம் அமைய சூளுரை மேற்கொள்ளப்பட்டது.

லட்சியங்கள் சாவதில்லை..!
கொள்கைகள் மறைவதில்லை..!
அவற்றை என்றும் அழியாமல் இலக்கியமாக ஆக்கித்தருபவர்கள் தியாகிகள். அவர்கள் தான் அதை வாழ வைக்கிறார்கள்..
எதிர்கால தலைமுறையை தலை நிமிர வைக்கிறார்கள்..!
என்றும்,
ஈழ உறவுகள் உரிமைகளைப் பெற வேண்டும்..
தன்மானத்துடன் வாழ வேண்டும்..
ஈழம் அமைய வேண்டும்..

என்று நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டு கழக முதன்மை செயலாளர் துரை வகோ உரை நிகழ்த்தினார்.

முன்னதாக கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன், தமிழர் தேசிய இயக்கத்தின் செயலாளர் தோழர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இனமான இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், கழக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி இரா.அந்தரி தாஸ், கழக தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன் ஆகியோரும் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள், மாநில ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் கழக கண்மணிகள் கலந்துகொண்டனர்.

Thursday, January 25, 2024

செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்கிடுக! வைகோ MP அறிக்கை!

திருப்பூர் மாவட்டம் - பல்லடம் வட்டத்தைச் சார்ந்த திரு நேசபிரபு என்பவர் நியூஸ்-7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு அவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பான சூழ்நிலையில், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுகலம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட நேச பிரபு அவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறும், செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
25.01.2024

Wednesday, January 24, 2024

சாத்தூர் 'எஸ்.ஆர்.நாயுடு' கல்லூரி பொன் விழாவில் வைகோ MP மற்றும் வெங்கையா நாயுடு பங்கேற்பு!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சடையம்பட்டியில் அமைந்துள்ள திரு எஸ். இராமசாமி நாயுடு நினைவுக் கல்லுரியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா இன்று (24.01.2024) நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் முன்னாள் இந்தியக் குடியரசுத் தல்துணைத் தலைவர் உயர்திரு வெங்கையா நாயுடு அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ MP அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள். 

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் உயர்திரு கணேஷ்ராம், தலைவர் உயர்திரு பெருமாள்சாமி, செயலாளர் உயர்திரு ஜெகதீசன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மருத்துவர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் தி.மு.இராசேந்திரன் அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும், தோழர்களும், மாணவ, மாணவியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tuesday, January 23, 2024

ஈரோடு-நெல்லை ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க அனுமதி பெற்று தந்தார் வைகோ MP!




 

தலைவர் வைகோ MP அவர்களுக்கு மதுரையில் வரவேற்பு!

இன்று 23-01-2024 மதுரை விமான நிலையம் வந்த மக்கள் தலைவர் மாமனிதர் வைகோ அவர்களை மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.  புதூர் பூமிநாதன் அவர்களுடன்,  மாவட்ட செயலாளர்கள்  திரு மார்நாடு திரு. முனியசாமி உள்ளிட்ட ஏராளமான கழக கண்மணிகள் வரவேற்பு கொடுத்தனர்.

சுதந்திர போராட்ட வீரர் டி.ஆர். இராமாமிர்த தொண்டைமான் சிலை திறப்பு விழாவில் துரை வைகோ!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி, பல்வேறு தியாகங்களை செய்து, தஞ்சை தரணிக்கு பெருமையை தேடித்தந்த சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயா டி.ஆர்.இராமாமிர்த தொண்டைமான் அவர்களின் சிலை திறப்புவிழா நிகழ்ச்சி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், தத்துவாஞ்சேரியில் இன்று ( 23.01.2024 ) நடைபெற்றது.

நிகழ்வில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அவர்கள் கலந்துகொண்டு டி. ஆர். இராமாமிர்த தொண்டைமான் அவர்களின் சிறப்பை பற்றி உரையாற்றினார்.

Sunday, January 21, 2024

தலைவை வைகோ MP அவர்களுக்கு 'தமிழ்நாட்டின் உரிமைக்குரல்' விருது!


Blacksheep மீடியா சார்பில், குரலின் ஆளுமைகள் என்றத் தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி 20.01.2024, சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னை காரமாரசர் அரங்கத்தில் நடைபெற்றது.
தலைவர் வைகோ MP, கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட அரசியல் மற்றும் கலைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய குரல் ஆளுமைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தமிழக வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகவும் கடந்த அறுபது ஆண்டுகளாக ஓய்வின்றி போராடி வருகின்ற களப்போராளித் தலைவர் வைகோ MP அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில் Blacksheep Media சார்பில் 'தமிழ்நாட்டின் உரிமைக்குரல்' என்ற விருது கொடுக்கப்பட்டது.