இன்று 30.01.2024 டெல்லியில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், ஒன்றிய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று வைகோ எம்.பி. அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களே, அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களே, நாடாளுமன்ற விவகாரத்துறை பிரகலாத் ஜோஷி அவர்களே, கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்களே, இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள், இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.
எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார், இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.
நான், நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜி, சிங்கப்பூர் மைதானத்திலிருந்து,
“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களே, இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜி, மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.
ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே என்றார் பிரகலாத் ஜோசி.
வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும், அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.
இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.
தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்து, இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.
இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.
இவ்வாறு வைகோ உரையாற்றினார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
30.01.2024
No comments:
Post a Comment