Thursday, February 29, 2024

நீதி வென்றது: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு. வைகோ MP அறிக்கை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது.

இறுதியாக உச்சநீதிமன்றத்தில், நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன்.
2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18ஆம் தேதி மாண்பமை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று(29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாக பாராட்டுத் தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகி விட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது.
இது மறுமலர்ச்சி திமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
29.02.2024

Monday, February 26, 2024

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் தலைவர் வைகோ MP!

சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடம் திறப்பு விழா இன்று 26.02.24 நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ MP அவர்களும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும்! வைகோ MP அறிக்கை!

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும்! வைகோ MP அறிக்கை!

கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் நுழைகிறது.

தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு. குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது.

இது தொடர்பாக அம்மாநில வனத்துறை அமைச்சர், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892 ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அது மட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது;

யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது.

எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது. மீறினால் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாக கருதப்படும்.

இதற்கான பணிகளை ஆய்வு செய்த ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும், தேர்தலுக்குப்பின் மேலும் 2 தடுப்பணைகள் பாலாற்றில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டுவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதுடன், வேளாண் தொழிலும் முற்றாக சீரழிந்து விடும்.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
26.02.2024

Sunday, February 25, 2024

தலைவர் வைகோ அவர்களிடம் வாழ்த்துப் பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், இன்று (25.02.2024) கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்களையும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களையும் அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் MC, தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை ப.சுப்பிரமணி MC ஆகியோர் உடன் இருந்தனர்.

மே 17 இயக்கத்தின் தமிழ் தேசிய பெருவிழா 2024 மாநாட்டு பொதுக்கூட்டம்-வைகோ MP பங்கேற்பு!

மே 17 இயக்கத்தின் தமிழ் தேசிய பெருவிழா 2024 மாநாட்டு பொதுக்கூட்டம் இன்று 25.02.2024 சென்னை சைதாப்பேட்டையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் ஐயா #வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். உடன் கூட்டணி கட்சித் தலைவர்களும், கழக முன்னணியினரும், தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Friday, February 23, 2024

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம். கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா புறக்கணிப்பு! ஒன்றிய பாஜக அரசின் அலட்சியப் போக்குக்கு வைகோ MP கண்டனம்!

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி-4 ஆம் தேதி இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேர், ஐந்து ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சிய 3 பேரில் இருவருக்கு 6 மாதம், ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிறையில் இருந்து வருகிறார்.
புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டத்தின்படி, தமிழக மீனவர்களைக் கைது செய்வது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை அரசுடமையாக்குவது மற்றும் மீனவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிப்பது போன்ற நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடுகிறது.
இலங்கை அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் பிப்ரவரி-18 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, “கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் இராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.
விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும்” என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் இராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்து இருப்பதையும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையும் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழக மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
23.02.2024

Thursday, February 22, 2024

சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு (21.02.2024)நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினேன்..!

சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு (21.02.2024)நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினேன்!

விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமுத்தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பாவித் தொழிலாளர்கள் 10 பேர் இறந்துவிட்டனர்.
வெடி விபத்து நடைபெற்ற அன்று, மாவட்ட ஆட்சியர் அவர்களும், சாத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்களும் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மூன்று இலட்ச ரூபாய் நிவாரண உதவியினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களும் வழங்கி இருக்கிறார்கள்.
பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் தலா ஐந்து இலட்ச ரூபாய் இழப்பீட்டு நிவாரணமாக வழங்கி உள்ளார்கள்.
ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அந்த நிவாரணத் தொகை இன்று வரை வந்து சேரவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடம் நேரில் முறையிட்டனர்.
அதனை விரைவாக வழங்கிட முன்வர வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மேலும் திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை செய்தியாளர்களின் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன் வைத்துள்ளேன்.
ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகளைத் தயாரித்ததன் விளைவாகத்தான் விபத்து நிகழ்ந்தது என்று எழுந்த புகாரின் பெயரில் வருவாய் துறை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்புத் தொழிலில் உயிரிழப்புகள் நேராவண்ணம் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.
தவிர, 9 இலட்சத்து 85 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 30 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் தமிழக அரசு, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் தொழில் பேட்டைகளை உருவாக்கி பல்வேறு தொழில்களைத் தொடங்கி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
22.02.2024

Friday, February 16, 2024

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு. வைகோ MP கண்டனம்!

கர்நாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்று நடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “ ‘நமது நீர், நமது உரிமை’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும்.
நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்தத் திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி-16 ) கர்நாடக சட்டப் பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது, “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேகதாது அணையைக் கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும்.
காவிரியில் நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.
கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
16.02.2024

Tuesday, February 13, 2024

மதிமுக நடத்திய தேர்தல் பயிலரங்கம்!

தலைநகர் சென்னையில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி, இளைஞர் அணி, இணையதள அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, ஆபத்து உதவிகள் அணி, வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் பயிலரங்கம் சென்னை சிராஜ் மஹாலில் இன்று 13-02-2024 மதியம் 2.30 மணி அளவில் உறுதிமொழியுடன் தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது.

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்ற நிர்வாகிகள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Monday, February 12, 2024

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.


மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை ஆகிய கொள்கைகள் இன்றைய அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார். அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.


பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.


வைகோ

 பொதுச்செயலாளர் 

மறுமலர்ச்சி தி.மு.க

தாயகம்’

சென்னை- 8    

12.02.2024