Monday, February 12, 2024

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.


மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை ஆகிய கொள்கைகள் இன்றைய அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார். அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.


பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.


வைகோ

 பொதுச்செயலாளர் 

மறுமலர்ச்சி தி.மு.க

தாயகம்’

சென்னை- 8    

12.02.2024  

No comments:

Post a Comment