Sunday, May 26, 2024

குமரி வெற்றிவேல் இல்ல மணவிழாவில் துரை வைகோ வாழ்த்து!

நாகர்கோவில் நகரில் எழுச்சிமிகு ஏற்பாட்டில் நடைபெற்ற குமரி மாவட்ட கழக செயலாளர், மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். வெற்றிவேல் அவர்களின் மகள் அபிசேகா MA Ph.D - அருண் பிரவீன் BE இணையர் திருமணம் இன்று 26-05-2024 காலை 10 மணி அளவில் நாகர்கோவில் எம் டி பி அரங்கில் நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வர இயலாத காரணத்தால், மணவிழாவிற்கு தலைமையேற்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் சாமிதோப்பு வைகுண்டபதி பால பிரஜாபதி அடிகளார், மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், அமைச்சர் மனோ தங்கராஜ், டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ,
திமுக மகளிர் அணி மாநிலச்செயலாளர் ஹெலன் டேவிட்சன்; தி.மு.க. அமைப்பு துணைச் செயலாளர், முன்னாள் எம்பி ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. எம்.சி. பாலன், முன்னாள் எம்.பி. பெல்லார் மின் , மதிமுக மாவட்ட செயலாளர்கள் என். செல்வராகவன், டிடிசி சேரன், சுதா பாலசுப்பிரமணியன் மற்றும் தென்றல் நிசார், சிவகாசி குமரேசன் நெல்லை கல்லத்தியான் நெல்லை ஷேக் முகமது நிஜாம் , குமரி மாவட்ட மாநில நிர்வாகிகள்
இராணி செல்வின், எம்.ஆர்.ராஜ்குமார், சுமேஷ் மாநகரச் செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார், மாவட்டக் கழக நிர்வாகிகள் உட்பட திரளான நிர்வாகிகள், முன்னணி தொழிலதிபர்கள், உறவினர்கள், திரளான பெருமக்கள் அனைத்துக் கட்சியினர், அரசு பணியாளர்கள் என பெருந்திரளாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமண நிகழ்வை மதிமுக துணை பொதுச் செயலாளர் திமு ராஜேந்திரன் தொகுத்து வழங்க மணமகளின் தந்தை வழக்கறிஞர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
திருமண நிகழ்விற்கு தோவாளை வரவேற்பு தொடங்கி 10 கிமீ தூரம் கொடிகள், சுவரொட்டிகள், பிள்க்ஸ் போர்டுகள் அமைக்கப்பட்டு நாகர்கோவில்
நகரமே திருவிழாக் கோலம் கண்டிருந்தது குறிப்பிடதக்கது.

Friday, May 24, 2024

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரளா மாநில அரசு முயற்சி! வைகோ MP கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரளா மாநில அரசு முயற்சி! வைகோ MP கண்டனம்!

கேரளா மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து  கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பத்தை ஒன்றிய அரசிடம் அளித்ததாகவும்,இந்த விண்ணப்பம் மே 28-ம் தேதி மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.


முல்லை பெரியாறு புதிய அணைதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 10 பேர் அடங்கிய சிறப்புகுழு தயார் செய்துள்ளது. இதன்படி பழைய அணையை முழுமையாக இடித்துவிட்டு ரூ.1,300 கோடிமதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும். அணை கட்டத் தொடங்கிய 5 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.


வண்டிப்பெரியாரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் புதிய அணையை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்றெல்லாம் கேரள மாநில அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.


முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் சார்பில், பல்வேறு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வுகள் நடந்தன.


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழுவின் அறிக்கை 2012 ஏப்ரல் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.


“முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை; நில நடுக்கம் ஏற்பட்டாலும முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது'' என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.


2014 மே 7 ஆம் தேதி அன்று அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியது. அத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடி என்ற அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,மத்திய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவும், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர், அணை பலமாக உள்ளதால் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று அறிவித்தது. தமிழக அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது.


ஆனால், கேரள அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறுஅணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியது.


தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2014 டிசம்பர் 3 ஆம் தேதி, கேரளாவின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், “முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே; அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று தனது முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.


இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதும் , திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளதும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.


முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்;


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

24.05.2024

Thursday, May 16, 2024

விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ MP கடும் கண்டனம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அண்மையில் அறிவித்துள்ளது. அதற்காக உண்மைக்கு மாறான பல செய்திகளையும் இட்டுக்கட்டி எடுத்துரைத்து தமது தவறான செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது மோடி அரசு.

“2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்று தடை நீட்டிப்பு ஆணையில் குறிப்பிடுகிற இந்திய ஒன்றிய அரசு, “விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் ரகசியமாக செயல்படுகிறது. அனைத்து தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் இயக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டையும் புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இனப்படுகொலை செய்த அநீதியை எதிர்த்து அறவழியிலும், அமைதி வழியிலும் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டு வந்தது; வருகிறது. இந்திய அரசு புலிகள் இயக்கத்தை வன்முறை அமைப்பாக சித்தரித்து தடை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் நான் வழக்காடியபோது, இதுகுறித்து பல்வேறு சான்றுகளுடன் விளக்கியுள்ளேன்.
இலங்கைத் தீவில் தமிழீழ மக்கள் அந்நாட்டு அரசினாலேயே படுகொலைக்கு ஆளானார்கள். அவர்களின் சொத்துக்கள், உடமைகள், நிலங்கள் ஆகியன இராணுவத்தின் துணையோடு கபளீகரம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் இதனை எதிர்த்து குரல் எழுப்பியபோது, அவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகள் அரசின் “வெள்ளை வேனில்” கடத்தி செல்லப்பட்டு இன்று வரை எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் அகதிகளாய் தமிழீழ மக்கள் அங்கே இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சிங்கள இனவெறி அரசு தமிழீழ பகுதியில் இந்துக் கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள், மருத்துவமனைகள், கல்விச்சாலைகள் என சகல இடங்களிலும் பேரழிவு விளைவிக்கும் நச்சுக்குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தும், தமிழீழ பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும், தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரச பயங்கரவாதத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் அந்நாட்டு ஆட்சியாளர்களைக் கூண்டிலேற்றி தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் நான் வலியுறுத்தினேன்.
சுதந்திரமான பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழம் மலர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் ஈழப் பகுதிகளில் இன்னமும் தொடர்கின்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்றும் ஜூன் 1, 2011 அன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கில் நான் வற்புறுத்தினேன். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமைகளில் அக்கறை கொண்டவர்களும் இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதைப்பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாத மோடி தலைமையிலான இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசை திருப்திப்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகள் அடங்கிய தமிழீழக் கோரிக்கையை மட்டுமே முன்வைத்து புலிகள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறதே தவிர, இந்தியாவில் உள்ள எந்தப் பகுதியின் மீதும் அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகமே அறிந்த உண்மையாகும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, இறையாண்மைக்கோ எதிராக விடுதலைப்புலிகள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பகை நாடுகளுடனும் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் இயக்கம் வைத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இலங்கை அரசு சீனா முதலான இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகளிடம் பொருளாதார உதவி பெற்று, இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தளங்களை அமைப்பதற்கும் துணையாக செயல்பட்டு வருகிறது என்பதை இந்திய அரசு எண்ணிப் பார்க்கவில்லை.
இராஜீவ்காந்தி அவர்களின் கொலையை சுட்டிக்காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மறைந்துவிட்டார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு புலனாய்வுக்குழு 20 ஆண்டுகாலமாக எவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும். இந்திய அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
16.05.2024

பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்; வைகோ MP அறிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அதே நாளில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.

பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர் பத்திரிக்கை ஊடகங்களைச் சந்தித்து கேள்விகளை எதிர்கொள்வதற்கு திராணி இல்லாத நிலையில், அவ்வப்போது தமது கருத்துக்களை விருப்பப்படுகிற அல்லது தனக்கு வேண்டிய தொலைக்காட்சி ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தாம் முஸ்லிம்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் கூறி இருக்கிறார்.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன என்று நான் அறிக்கை தந்தேன்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போன்றிருக்கிறது;

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்;

அதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தையைப் பெற்றவர்களுக்கும் ஊடுருவல் காரர்களுக்கும் பகிர்ந்து அளிப்பார்கள்;

பெண்களின் தாலியை கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்று மோடி பேசியது உண்மையா? இல்லையா?

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறித்து, மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்று குற்றம் சாட்டினாரே? மக்கள் மறந்து விடுவார்களா?

மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில், மதத்தின் அடிப்படையில் யாரும் இட ஒதுக்கீடு பெற முடியாது; சி ஏ ஏ சட்டத்தை யாராலும் திரும்ப பெற முடியாது; என்று குறிப்பிட்டாரே நரேந்திர மோடி, அது இஸ்லாமியர்களை குறி வைத்து தான் என்பதை மறுக்க முடியுமா?

பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று பிரகடனம் செய்திருப்பது இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு கூறு தானே?

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்துவோம் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி வருவது முஸ்லிம்களுக்கு எதிரானது தானே?

நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கின்ற போது பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை இப்போது வெளியிட்டு இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 84 சதவீதத்திலிருந்து 78 சதவீதமாக குறைந்துவிட்டது.

ஆனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை 9.84 சதவீதத்திலிருந்து 14.09 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அறிக்கை வெளியிட்டிருப்பதன் நோக்கம் எதை காட்டுகிறது?

1947 நாட்டு பிரிவினை காலகட்டத்தில் இந்து- முஸ்லிம் பிரிவினைவாத கருத்துக்களால் மக்களிடம் வேற்றுமை விதைகள் தூவப்பட்டதைப் போன்ற நிலையை இந்துத்துவா சக்திகள் உருவாக்க நினைக்கின்றன.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மிகக் கடுமையாக இஸ்லாமிய வெறுப்பை கக்கிவிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை பெருகி கொண்டிருப்பதனால், தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடி தான் பேசியவற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்.

“இந்து - முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்” என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் நோக்கத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

பிரதமர் அள்ளி வீசி வரும் அவதூறுகளையும் பொய் உரைகளையும் புறக்கணித்து இந்திய நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்பார்கள்;

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
16.05.2024

Monday, May 13, 2024

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவு! வைகோ MP இரங்கல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் அவர்கள் இன்று காலை இரண்டு மணி அளவில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இயற்கை அடைந்தார் என்ற செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளில் தன் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய செல்வராஜ் அவர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைநிலைக் குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், தேசியக் குழு உறுப்பினர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார்.

1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் விவசாயிகள் - தொழிலாளர்கள் நலன் காக்க தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர் செல்வராஜ் ஆவார். என் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டிருந்த இனிய தோழரான செல்வராஜ் அவர்களை இழந்துவிட்ட துயரில் நான் வருத்தம் அடைகிறேன்.

அவரை இழந்த துயரத்தில் உள்ள அவரது துணைவியார் கமலவதனம், அவரது மகள்கள் செல்வ பிரியா, தர்ஷினி ஆகியோருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை - ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2024

Sunday, May 12, 2024

மே 12: உலக செவிலியர் நாள் - அன்னையர் நாள்! வைகோ MP வாழ்த்து!

புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, அவர் பிறந்த மே 12-ஆம் நாள், 1965 -ஆம் ஆண்டு முதல் உலக செவிலியர் நாளாக அறிவிக்கப்பட்டது.

லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கை மாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் விளக்குக்கு வைக்கப்படுகின்றது. ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தமது அறிவையும், அனுபவத்தையும், மனிதநேயத்தையும் தோள் மாற்றம் செய்வதன் அடையாளம் இது ஆகும்.

1820 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள், இங்கிலாந்தில், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறை அருளால் தனக்கு இடப்பட்ட ஆணையாக, செவிலியர் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இப்பணியில் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி, அறத்தொண்டில் ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

போர்க்களங்களில் காயங்கள் அடைந்து, இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துக் கொண்டு இருந்த வீரர்களைத் தேடி கையில் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், தேவையான மருந்துகளை வழங்கினார். காயம்பட்ட வீரர்களின் கவலையைப் போக்கி விரைந்து நலம் பெறச் செய்தார். தங்களைக் காக்க, விண்ணுலகில் இருந்து மண் உலகிற்கு கையில் விளக்குடன் தேவதை வந்திருக்கின்றார் என்று வீரர்கள் மகிழ்ந்தார்கள்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி ஆகும். செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு

நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

நாம் பிறந்தநாட்டைத் ‘தாய்நாடு’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறோம். அன்னையைத் தெய்வமாகப் போற்றுகிறோம். சங்க காலத்திலேயே நம் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். மன்னர்களாகவும் நல்லாட்சி நடத்தியிருக்கிறார்கள். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் வாழ்க்கையில் முன்னேற அன்னையின் அரவணைப்பே முக்கியப் பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட அன்னையருக்கும், புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
12.05.2024

Thursday, May 9, 2024

தேவர்குளம் காவல்நிலையப் பிரச்சினை - முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வைகோ MP அறிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல்நிலையத்திற்கு வழக்கு சம்மந்தமாக வரும் பொதுமக்களிடம் அங்கு பணியாற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் அத்துமீறி நடந்து, இளைஞர்கள், மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

தேவர்குளம் காவல்நிலைய செயல்பாடுகளைக் கண்டித்து 08.05.2024 அன்று குறிப்பிட்ட ஒரு அமைப்பினர் காவல்நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன் ஒரு கட்டமாக வன்னிக்கோனேந்தல் சாலையில் திரண்டிருந்த வன்னிக்கோனேந்தல் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்ட பொதுமக்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தடியடி நடத்தி கைது செய்துள்ள காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவல்துறையினரின் செயலைக் கண்டித்து இன்று 09.05.2024 தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடையடைப்புப் போராட்டத்தை மக்கள் நடத்தி வருகிறார்கள்.

சுமார் 50 ஆண்டு காலமாக எனது அரசியல் பொதுவாழ்வுப் பயணத்தில் நான் நேரடியாக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் பகுதி என்பதால் இவ்வட்டார மக்களின் உணர்வுகளை நன்கு அறிவேன். காவல்துறை - பொதுமக்கள் மோதல் போக்கால் பன்னெடுங்காலமாக பாதிக்கப்பட்ட இப்பகுதியில் இதுபோன்ற மோதல் போக்கு நிகழாமல் முளையிலேயே கண்டறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சரிசெய்திட வேண்டும்.

தேவர்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களின் கடந்த கால அத்துமீறல்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்திட வேண்டும்.

எவ்வித முன்னறிப்பும் இன்றி தடியடி நடத்திய காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்குக் காரணமான காவல்துறையினரை உடனடியாக இடமாற்றம் செய்து, அப்பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலை தணிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மை நிலையை நன்கு அறிந்து அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
09.05.2024

Monday, May 6, 2024

தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் உரிமைகளை மீட்கவும் தொடர்ந்து 30 ஆண்டு காலம் அரசியலில் போராடி வரும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக, இனி வரும் நாட்களிலும் தமிழக மக்களுக்காக இப்போராட்டம் தொடரும்.

மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா!

மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று மே மாதம் 6 ஆம் தேதி, மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ MP அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்து, லட்டு, பொங்கல், பழங்கள் போன்ற இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் வைகோ MP தலைமையில், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இரத்ததானம் வழங்கி, இரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் - உயர்நிலைக் குழு உறுப்பினருமானசு.ஜீவன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ப.சுப்பிரமணி, திருவள்ளுர் மாவட்டச் செயலாளர் மு.பாபு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மா.வை.மகேந்திர, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் டார்த்திபன்
காஞ்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கருணாகரன், ஆவடி மாநகர மாவட்டச் செயலாளரும், துணை மேயருமான சூர்யகுமார், தீர்மானக் குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் சிக்கந்தர், எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக கண்மணிகள் என ஏராளமானவர்கள் கலந்து மதிமுகவின் 31 ஆம் உதய திருநாளை கொண்டாடினர்.

Wednesday, May 1, 2024

காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரேகர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?தலைவர் வைகோ கண்டனம்



காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் ஏப்ரல்-30 இல் நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், குழு செயலர் டி.டி.சர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில், 4 மாநிலங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28 ஆம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், 78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.

இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நிலுவையில் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 20.182 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசும்போது, ‘‘மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரை மட்டும் கர்நாடகா திறக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கர்நாடகாவின் நீர் நிலைமை இல்லை” என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவின் கருத்தையே ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வழிமொழிந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

‘வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
01.05.2024

மே 1 - உலக தொழிலாளர்கள் தினம்

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் மே 1 ஆம் நாளை சர்வதேச தொழிலாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றார்கள். உழைக்கும் வர்க்கத்தினரை பெருமைப்படுத்தும் வகையில் உழைப்பாளர்கள் தினம் அல்லது தொழிலாளர்கள் தினம் என்று அழைக்கப்படும் மே 1 ஆம் நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை மே தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் 1990 ஆம் ஆண்டிலிருந்து தான் அரசு விடுமுறை நாளாக கடைபிடித்து வருகின்றார்கள்.

அதற்கு வித்திட்டவர்.. மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் தான்.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய தலைவர் வைகோ அவர்கள், மே தினத்தை 'தேசிய விடுமுறை நாளாக' அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

குருதாஸ் குப்தா போன்ற கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்திய தேசிய காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

அதன்பிறகு, நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த பதிலில் திருப்தி அடையாத எங்கள் தலைவர் வைகோ அவர்கள் சௌத் பிளாக்கில் உள்ள பிரதமரின் அறைக்குச் சென்று, தொழிலாளர்கள் தினம் அறிவிக்கப்பட்டு நூற்றாண்டை சந்தித்து இருக்கின்ற இந்த வேளையில், உழைக்கும் வர்க்கத்தை போற்றுகின்ற வகையில் மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக உடனடியாக அறிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களிடம் வைத்தார்.

தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் வி.பி.சிங் அவர்கள், சில மணி நேரங்களிலேயே மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவித்து ஆணை பிறப்பித்தார்கள். 

மே தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கச் செய்த எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களைப் பாராட்டி 14.05.1990 அன்று வெளிவந்த தினமணி நாளிதழில் 'வை.கோபால்சாமியின் அதிவேக நடவடிக்கை' என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

8 மணி நேர உழைப்பு
8 மணி நேர ஓய்வு 
8 மணி நேர உறக்கம் என்ற,

தொழிலாளர் வர்க்கத்தின் பிதாமகர் உலகம் போற்றும் மாமேதை கார்ல் மார்க்ஸின் பிரகடனத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில்,

உழைக்கும் மக்களை போற்றுகின்ற நாளாக மே 1 ஆம் தேதியை பல நாடுகளில் பொது விடுமுறை தினமாக அறிவித்து உள்ளார்கள்.

இந்தியாவில் மே தினம் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதற்கு எங்கள் தலைவர் வைகோ அவர்கள் மிக முக்கிய காரணம் என்பது எங்களுக்கு பெருமை.

மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கச் செய்த எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் தொழிலாளர்கள் தின வாழ்த்துகளை உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
30.04.2024