இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் அவர்கள் இன்று காலை இரண்டு மணி அளவில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இயற்கை அடைந்தார் என்ற செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளில் தன் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய செல்வராஜ் அவர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைநிலைக் குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், தேசியக் குழு உறுப்பினர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார்.
1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் விவசாயிகள் - தொழிலாளர்கள் நலன் காக்க தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர் செல்வராஜ் ஆவார். என் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டிருந்த இனிய தோழரான செல்வராஜ் அவர்களை இழந்துவிட்ட துயரில் நான் வருத்தம் அடைகிறேன்.
அவரை இழந்த துயரத்தில் உள்ள அவரது துணைவியார் கமலவதனம், அவரது மகள்கள் செல்வ பிரியா, தர்ஷினி ஆகியோருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை - ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2024
No comments:
Post a Comment