உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் மே 1 ஆம் நாளை சர்வதேச தொழிலாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றார்கள். உழைக்கும் வர்க்கத்தினரை பெருமைப்படுத்தும் வகையில் உழைப்பாளர்கள் தினம் அல்லது தொழிலாளர்கள் தினம் என்று அழைக்கப்படும் மே 1 ஆம் நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை மே தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் 1990 ஆம் ஆண்டிலிருந்து தான் அரசு விடுமுறை நாளாக கடைபிடித்து வருகின்றார்கள்.
அதற்கு வித்திட்டவர்.. மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் தான்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய தலைவர் வைகோ அவர்கள், மே தினத்தை 'தேசிய விடுமுறை நாளாக' அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
குருதாஸ் குப்தா போன்ற கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்திய தேசிய காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அதன்பிறகு, நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அந்த பதிலில் திருப்தி அடையாத எங்கள் தலைவர் வைகோ அவர்கள் சௌத் பிளாக்கில் உள்ள பிரதமரின் அறைக்குச் சென்று, தொழிலாளர்கள் தினம் அறிவிக்கப்பட்டு நூற்றாண்டை சந்தித்து இருக்கின்ற இந்த வேளையில், உழைக்கும் வர்க்கத்தை போற்றுகின்ற வகையில் மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக உடனடியாக அறிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களிடம் வைத்தார்.
தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் வி.பி.சிங் அவர்கள், சில மணி நேரங்களிலேயே மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவித்து ஆணை பிறப்பித்தார்கள்.
மே தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கச் செய்த எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களைப் பாராட்டி 14.05.1990 அன்று வெளிவந்த தினமணி நாளிதழில் 'வை.கோபால்சாமியின் அதிவேக நடவடிக்கை' என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.
8 மணி நேர உழைப்பு
8 மணி நேர ஓய்வு
8 மணி நேர உறக்கம் என்ற,
தொழிலாளர் வர்க்கத்தின் பிதாமகர் உலகம் போற்றும் மாமேதை கார்ல் மார்க்ஸின் பிரகடனத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில்,
உழைக்கும் மக்களை போற்றுகின்ற நாளாக மே 1 ஆம் தேதியை பல நாடுகளில் பொது விடுமுறை தினமாக அறிவித்து உள்ளார்கள்.
இந்தியாவில் மே தினம் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதற்கு எங்கள் தலைவர் வைகோ அவர்கள் மிக முக்கிய காரணம் என்பது எங்களுக்கு பெருமை.
மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கச் செய்த எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் தொழிலாளர்கள் தின வாழ்த்துகளை உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
30.04.2024
No comments:
Post a Comment