Friday, February 12, 2021

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு வைகோ எம்பின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

தமிழக மீனவர்கள் படுகொலை: இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ எழுத்து மூலம் கேள்வி; அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் (11.02.2021)

கேள்வி எண்: 109
கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?
1. இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதித் தகர்த்த மீனவர்களின் படகில், எத்தனைப் பேர் இறந்தனர்?
2. அதற்கு, இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன? கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தீர்களா? இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்தீர்களா?
3. திட்டமிட்டு, தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த அவர்களிடம் இருந்து, இழப்பு ஈட்டுத் தொகை ஏதும் கோரி இருக்கின்றீர்களா?
4. அவ்வாறு இருந்தால், அதுகுறித்த தகவல்கள்;
5. இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நேராவண்ணம் தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், இந்திய மீனவர்களைக் கைது செய்வது, பிடித்துக் கொண்டு போய் சித்திரவதைகள் செய்வதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக.
அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்:
நமக்குக் கிடைத்து இருக்கின்ற தகவல்களின்படி, 2021 ஜனவரி 18 ஆம் நாள், இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு மீனவர்கள் இறந்தனர்.
இது தொடர்பாக, நமது கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை அயல் உறவு அமைச்சரிடம் தெரிவித்து இருக்கின்றார். அதேபோல, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரிடமும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றோம்.
உயிர்களை இழந்தது குறித்த நமது வேதனையைத் தெரிவித்ததுடன், மீனவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றோம். இதுகுறித்து, இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையே, இதற்கு முன்பு பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளை நினைவூட்டி, அவற்றைக் கவனத்தில் கொண்டு, இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதவண்ணம் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து, அரசு ஆகக்கூடுதலான அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் யாரேனும் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் கிடைத்தால், உடனடியாக அதுகுறித்து, இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்; தூதரகங்களின் வழியாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கைப் பிரதமருடன், இந்தியப் பிரதமர் அவர்கள் நடத்திய இருதரப்பு காணொளி சந்திப்பின்போது, இந்தப் பிரச்சினையை எழுப்பி இருக்கின்றோம்.
2021 ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாள்கள், நான் இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து மிக விரிவாகப் பேசினேன்.
இரண்டுக்கு இரண்டு (2+2) என்ற அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளின் விளைவாக, இரண்டு நாடுகளின் அயல் உறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள், தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினர். இருதரப்பினரும் இணைந்து செயல்படுகின்ற வகையில், ஒரு கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) அமைத்து, மீனவர்களின் பிரச்சினைகளை விரிவாக அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அந்தப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம், 2020 டிசம்பர் 30 ஆம் நாள் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கடல் எல்லை குறித்த மீனவர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டது.
இவ்வாறு, அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.
இந்தக் கேள்வி தொடர்பாக, நேற்று அவையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, அண்மையில் கொல்லப்பட்ட நான்கு பேரைத் தவிர்த்து, அதற்கு முன்பு, இலங்கைக் கடற்படை, 245 மீனவர்களைக் கொன்று விட்டது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்டார்.
அதற்கு விளக்கம் அளித்த அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வைகோ கேள்விக்கு எழுத்து மூலம் அளித்து இருக்கின்ற விளக்கத்தை எடுத்துக் கூறினார். எந்தக் காரணத்தைக்கொண்டும், இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என, கடுமையாக எச்சரித்து இருப்பதாகக் கூறினார்.
சஸ்மித் பத்ரா பேசும்போது, குழுவின் நான்காவது கூட்டம், டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றதாக, உங்கள் விளக்கத்தில் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்; ஆனால், உறுப்பினர் வைகோ எழுப்பி இருக்கின்ற கேள்வியில், 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக, எடுத்த நடவடிக்கைகளைக் கேட்டு இருக்கின்றார். அதுகுறித்து, விளக்குங்கள்.
அமைச்சர் ஜெய்சங்கர்: கடலோரக் காவல்படையினர் பேசி வருகின்றார்கள். தூதரகங்களின் வழியாகவும் தொடர்ந்து பேசி வருகின்றோம். நடவடிக்கை எடுப்பதற்குப் பல கட்டுப்பாடுகள், வரையறைகள் உள்ளன. அதற்கு உட்பட்டுத்தான் நாம் செயல்பட முடியும்.
திருச்சி சிவா: இது எதிர்பாராமல் நடந்த படகுகள் மோதல் என இலங்கை கூறுகின்றது. ஆனால், இது முதன்முறை நடந்த நிகழ்வு அல்ல. இதற்கு முன்பு, எண்ணற்ற முறை, இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. வழக்கமாகத் தொடர்ந்து நடக்கின்றது. இலங்கைக் கடற்படை, நமது மீனவர்களைக் கடுமையாகத் தாக்கி இருக்கின்றது; சுட்டுக்கொன்று இருக்கின்றது. படகுகளைப் பறித்துக்கொண்டார்கள். வெயிலிலும், மழையிலும் மீனவர்களை நிற்கவைத்துக் கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள். என்னுடைய கேள்வி, பறிமுதல் செய்த படகுகளைத் திரும்பப்பெறுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, இலங்கை அரசிடம் இருந்து இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுத் தருவீர்களா?
அமைச்சர் ஜெய்சங்கர்: இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்த படகுகளைத் திரும்பப்பெறுவதற்கும், ஆகக் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். கடைசியாக ஒன்பது மீனவர்கள் அவர்களுடைய பிடியில் இருந்தார்கள்.அவர்களை விடுவித்து விட்டோம்.
அவர்களுடைய பிடியில், முன்பு 173 படகுகள் இருந்தன. இப்போது 62 படகுகள் உள்ளன. அவற்றுள் 36 படகுகள் விடுவிக்கப்படும். அதுகுறித்த பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, எந்த அளவிற்கு மீட்க முடியுமோ, அவற்றை மீட்போம்; எஞ்சிய படகுகளையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவோம்.
இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.02.2021

தாயகத்தில் தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களுக்கு புகழஞ்சலி!

தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று 12-02-2021 மதிமுக தலைமை கழகம் தாயகத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுக முன்னணி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Thursday, February 11, 2021

அடக்குமுறைச் சட்டங்களைக் கைவிடுங்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுங்கள் - வைகோ கோரிக்கை!

சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act -UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A-(Sedition) ஆகியவை, மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானவை. இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள், அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வாழ்நாள் முழுமையும் முடக்கும் தன்மை கொண்டவை. இவற்றைப் பயன்படுத்தி, பாரதிய ஜனதா கட்சி அரசு, மக்களுக்காகப் போராடுகின்றவர்களையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் கைது செய்யும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ந்து வருகின்றது. இது, கொடுங்கோன்மைப் போக்கு ஆகும்.

2014 முதல் 2018 வரை ஊபா சட்டத்தின் கீழ், இந்தியாவில் 4878 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என, தேசிய குற்ற இயல் ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரம் சுட்டிக் காட்டுகின்றது.
பீமா கொரேகான் வழக்கில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) தேசியச் செயலாளர்களுள் ஒருவரான சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 16 ஆளுமைகள் ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 2019 இல் மட்டும் ஊபா சட்டத்தின் கீழ் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூருக்கு அடுத்து, இது அகில இந்திய அளவில் இரண்டாவது அதிக இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ. சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் 06.02.2021 அன்று ஊபாச் சட்டத்தின் கீழ், சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019 நவம்பர் 15 அன்று ஓர் இறப்பு அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றதற்காக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல் துறை தெரிவிக்கின்றது.
அவர்களைத் தவிர, ‘சிறைவாசிகள் விடுதலைக் குழு’ பொறுப்பாளர் விவேக் எனும் விவேகானந்தன் அவர்கள் மீது, இதே அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக, (வழக்கு எண் - 14/ 2020) இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குக் கீழ்படிய மறுத்தல்), 120 B (குற்றவியல் சதித் திட்டத்தின் தண்டனை), 121 (இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுவது உள்ளிட்டவை), 121A (பிரிவு 121 கீழ் குற்றம் புரிய சதி) மற்றும் UAPA பிரிவுகள் 10 (தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பவருக்கு தண்டனை உள்ளிட்டவை), 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை), 15 (பயங்கரவாத நடவடிக்கை), 18 (சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் ஏற்கனவே, ஒரு முகநூல் பதிவுக்காகவும், ஆங்கில நாளிதழில் (The Hindustan Times) வந்த ஒரு கட்டுரையைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதற்காகவும் கடந்த டிசம்பரில் ஊபாவில் கைது செய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள், அந்தச் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குகின்றது. இறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்து ஓராண்டிற்குப் பிறகு, தற்பொழுது மூன்று செயற்பாட்டாளர்களைத் திடீரெனக் கைது செய்து இருப்பது எதிர்க்கட்சியினரை மிரட்டும் நடவடிக்கை ஆகும். மிசா, தடா, பொடா என மூன்று அடக்குமுறைச் சட்டங்களையும் எதிர்கொண்டு இருக்கின்றேன். ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கின்றேன்.
எனவே, தேவை அற்ற, மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிரான, இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டு, பாலன், கோ.சீனிவாசன், செல்வராஜ் மற்றும் விவேக் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா மற்றும் 124A வழக்குகளை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.02.2021

Wednesday, February 10, 2021

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? வைகோ MP கண்டனம்!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட கற்றுத் தரலாம். பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.

2013 -14 ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓர் வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படும் என்றும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் பள்ளிகளில் தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பதை கடுமையாகக் கண்டனம் செய்திருந்தேன்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் செம்மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியும் கட்டாயம் என்று ஏற்கனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல.

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் தீவிரமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையும், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவனையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், சம வாய்ப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இல்லையேல், நான் நீண்ட காலமாக கூறி வருவதைப் போல் இந்திய ஒருமைப்பாடு என்பது வினாக்குறி ஆகும். எனவே தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க உரிய ஆசிரியர்களையும் நியமனம் செய்து, தாய்மொழிக் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தேட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.02.2021

Tuesday, February 9, 2021

வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்.எல்.சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி. வைகோ கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக இரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை.

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் எல்லா நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டு இருக்கிறது. பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து1582 பேரை அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கு என்.எல்.சி. நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.

ஜி.இ.டி. (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்.எல்.சி.யில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இ த்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

என்.எல்.சி. நிறுவனம் தேர்வு செய்து வெளியிட்டுள்ள நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை இரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.02.2021

Monday, February 8, 2021

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி. வைகோ கடும் கண்டனம்!

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்; மூன்று இணைச் செயலாளர்கள் (Joint Secretary) மற்றும் 27 இயக்குநர் பதவிகளுக்கு முறையே 15 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் பணியாற்றிய பயிற்சி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று யூ.பி.எஸ்.சி. குறிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வருவாய்த்துறை மற்றும் மத்திய நிதித்துறை, வேளாண்மைத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, வான் ஊர்திப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களாக தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 315 -இன்படி பொதுப்பணித் தேர்வு ஆணையம் (Public Service Commission) அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே மத்திய அரசுப் பணிகள் மற்றும் மாநில அரசுப் பணிகளின் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கியப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

அதன்படிதான், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி போன்ற முதன்மைப் பணிகளுக்கு அந்தந்தத் தேர்வு ஆணையங்கள் தனியே தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி, அதன்பின்னர் பயிற்சி அளித்து, மத்திய அரசுப் பணிகளுக்குச் சேர்க்கப்படுவர். பின்னர் மத்திய அரசின் துணைச் செயலாளர்கள் தொடங்கி பல அரசுத் துறைச் செயலாளர்கள் என பதவி உயர்வு பெறுவர்.

மத்தியப் பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு அளித்து, சமூக நீதி பின்பற்றப்படுகின்றது. இதனால் மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயலகப் பணி இடங்களில், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 23 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மத்திய பா.ஜ.க. அரசு, சமூக நீதிக்கு முடிவு கட்டும் வகையில், அரசு அமைப்புச் சட்டம் அளிக்கும் இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் உத்தரவுகளைத் தொடர்ச்சியாகப் பிறப்பித்து வருகின்றது.

மத்திய அரசின் மேலாண்மைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் ஆதரவாளர்கள், சிந்தனையாளர்கள் குழாமைச் சேர்ந்தவர்களை, குறுக்கு வழியில் நியமனம் செய்திட பா.ஜ.க. அரசு முனைந்து வருகின்றது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

சமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பு ஆணையை உடனே இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.02.2021

Friday, February 5, 2021

ஏழு தமிழர் விடுதலையில் மத்திய பா.ஜ.க. அரசு - ஆளுநர் - அ.தி.மு.க. அரசு மூவர் கூட்டணியின் கபட நாடகம் - வைகோ கடும் கண்டனம்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து இருக்கின்றார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ஏழு தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

தமிழக ஆளுநரின் முடிவுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.

ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 2018, செப்டம்பர் 6 இல் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அரசியல் சட்டப் பிரிவு 161 ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

அதன்பின்னர்தான் செப்டம்பர் 9, 2018 இல் தமிழக அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க அனுப்பியதாக தகவல் வந்தது.

மீண்டும் இதே வழக்கில் ஏழுபேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 2019, மே 9 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தியது. அதன் பின்னரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக ஆளுநர் ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் உள்ளதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த ஜனவரி 21 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல்நசீர் அடங்கிய அமர்வு தமிழக ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-இன்படி, சிறைக் கைதிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது என்பதை தொடர்ச்சியாக பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

மாரூராம் - எதிர் - இந்திய அரசு வழக்கில் 1981 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வு மிகத் தெளிவாக வழி காட்டுதல் அளித்திருக்கின்றது.

மாரூராம் வழக்கில் ஏற்கனவே மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கின்றது என்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கின்றது.

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163 (1) -இன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறதே தவிர, ஆளுநர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏழு தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது அநீதியாகும். மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக ஆளுநரும், அ.தி.மு.க. அரசும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

நாட்டின் சட்டத்தையும், நாடாளுமன்ற நெறிமுறைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்காமல், அலட்சியப்படுத்தி வரும் ஒரு கூட்டத்தின் கையில் அரசு அதிகாரம் சிக்கிக் கொண்டதன் விளைவை நாடு சந்தித்து வருகின்றது. மத்திய பா.ஜ.க. அரசு - தமிழக ஆளுநர் - எடப்பாடி பழனிச்சாமி அரசு மூவர் கூட்டணியின் சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான அராஜகப் போக்கை தமிழக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

05.02.2021

Thursday, February 4, 2021

உத்திரமேரூர் வெடி விபத்து! வைகோ இரங்கல்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, மாத்தூர் கிராமத்தில், ஒரு தனியார் கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது, வெடி வைத்ததன் காரணமாக மண் சரிந்து விழுந்ததில், சுமார் 40 பேர் சிக்கிக் கொண்டனர்; நான்கு பேர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

பொதுவாக, குவாரிகளில் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது, தொழிலாளர்கள் அனைவரையும் அந்த இடத்தை விட்டு வெகு தொலைவிற்கு அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் இங்கே, வெடி வெடிக்கும்போதும், தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். அப்படிச் சென்ற ஒரு லாரி மீது பாறைகளும், மணலும் சரிந்து விழுந்து மூடி விட்டது. அந்த வண்டியில் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டனர். பாதை அடைபட்டு விட்டது. எனவே, மற்றவர்களால் உடனே அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை. மண்ணை அகற்றாமல், உள்ளே இறங்க முடியாது, முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற முடியவில்லை. வெடியினால் ஏற்பட்ட பொறி பறந்து சென்று, வெடி மருந்து சேமிப்புக் கிடங்கின் மீதும் விழுந்ததாகத் தெரிகின்றது. எனவேதான், விபத்தின் கடுமை தீவிரம் ஆகி இருக்கின்றது. 

எனவே, குவாரிகளில் வெடி வைக்கும் நடைமுறைகள் குறித்த கட்டுப்பாடுகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை, தமிழக அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பெரிய அளவில் வெடி வெடிக்கும்போது, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து விட வேண்டும். 

இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பு ஈடு வழங்க வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் முழுமையாகக் கிடைத்திடவும், அவர்களுக்கும் தகுந்த இழப்பு ஈடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.02.2021

கோயம்பேடு மெட்ரோ தொடரி நிலையப் பெயர் மாற்றம்! வைகோ MP கடும் கண்டனம்!

சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவல் அகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகரத் தொடரி வெளியிடவில்லை. 

இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

யார் அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா? அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன? எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மாநகரத் தொடரி விளக்கம் அளிக்க வேண்டும். 

இந்தப் பெயர் மாற்றம், தமிழக அரசுக்குத் தெரியுமா? இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். 

நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகளாக, வான் ஊர்திகள், தொடரி நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்து வருகின்றன. இதுவரை எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது இல்லை. ஆனால், கேரளத்தில் திருவனந்தபுரம் வான்ஊர்தி நிலையத்தின் பராமரிப்புப் பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ எனப் பெயர் மாற்றம் செய்ததை, கேரள மாநில அரசு கடுமையாகக் கண்டித்து இருக்கின்றது. உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தன் பெயரை எழுதினால், ஒப்புக் கொள்வீர்களா? அதுபோல, வான் ஊர்தி மற்றும் தொடரி நிலையங்களைப் பராமரிக்கின்ற நிறுவனங்கள், அவற்றைச் சொந்தம் கொண்டாட முடியாது. 

சென்னை வான்ஊர்தி நிலையத்தின் முன்பு இருந்த அண்ணா, காமராசர் பெயர்ப்பலகைகளை நீக்கினார்கள். இன்றுவரை திரும்ப வைக்கவில்லை. ஒருவேளை, சென்னைக்கும் அதானி பெயரைச் சூட்டத் திட்டம் வைத்து இருக்கின்றார்களா? என்பதற்கு, மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும். 

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.02.2021

Wednesday, February 3, 2021

பேரறிஞர் அண்ணாவின் 52 வது ஆண்டு நினைவு நாளில் வைகோ எம்பி உள்ளிட்ட மதிமுகவினர் மலரஞ்சலி!

தமிழ்த் தாயின் தலைமகன், தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 வது நினைவுநாள் 03-02-2021 அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் துயில் கொண்டிருக்கும் பேரறிஞர் அண்ணா சமாதிக்கு திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் வைகோ எம்பி அவர்களின் தலைமையில் மதிமுக துணை பொதுச் செயலாளர்கள், பொருளாளர், மாநில அணிகளின் செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மதிமுக தலைமை கழக கூட்டம்!

மறுமலர்ச்சி தி.மு.க உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 03-02-2021 மதிமுக தலைமை கழகம் தாயகத்தில் நடந்தது. கழக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எம்பி அவர்கள் உணர்ச்சியுரை நிகழ்த்தினார்.

அதில் மாவட்ட செயலாளர்கள், உயர் நிலை குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டன்ர. 

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு கணேசமூர்த்தி, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்.பி., அவர்கள் தலைமையில் இன்று 03.02.2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் எண். 1
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 2020, நவம்பர் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்து, தலைநகர் தில்லி எல்லைகளில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமர்ந்து, அறவழியில் போராடி வருகின்றனர்.
வேளாண் சங்கத் தலைவர்களுடன், மத்திய அரசு ஒன்பது முறைகள் பேச்சுவார்த்தை நடத்தியது. மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் இருக்கின்றனர். மாபெரும் எதிர்ப்பைச் சந்திக்கும் நிலையிலும் மத்திய பா.ஜ.க. அரசு, இச்சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று ஆணவமாகக் கூறி வருகின்றது.
ஜனவரி 26 குடியரசு நாளில், டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி, டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிபூர் ஆகிய மூன்று சாலைகளில் இருந்து டெல்லியை நோக்கி அணிவகுத்து வந்த பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களைத் தடுத்து நிறுத்த, மத்திய அரசு காவல்துறை மூலம் தடைகளை ஏற்படுத்தியது. ஆனால், விவசாயிகளின் எழுச்சிக்கு முன்பு தடைகள் தகர்ந்து விட்டன.
டெல்லி செங்கோட்டை வரை அமைதியாகப் பயணித்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில், திட்டமிட்டு காவல்துறை கலவரத்தை ஏற்படுத்தி, விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது. காவல்துறையின் வன்முறைக்கு, விவசாயி நவ்நீத் சிங் என்பவர் பலி ஆகி உள்ளார். இதுவரையில், 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இப்போராட்டத்தில் உயிர் இழந்துள்ளனர்.
விவசாயிகள் மீது பழிபோட்டு, அவர்களின் தீரமிக்க தியாகப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் சதித் திட்டத்தை அரங்கேற்ற பா.ஜ.க. அரசு முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. இருந்தாலும், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நிலைகுலையாமல், அறவழிப் போராட்டத்தைத் தொடரும் நிலையில், ‘விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்; இல்லையெனில் மின்சாரம், குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்’ என்று, உத்திரப்பிரதேச பா.ஜ.க. அரசு மிரட்டி உள்ளது. மேலும், டெல்லி காவல்துறையினர், விவசாயச் சங்கத் தலைவர்கள் 37 பேர் மீது டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இச்செய்தியை வெளியிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்துள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
குலைநடுங்கும் குளிரில் பல்வேறு சோதனைகளைத் தாங்கிக் கொண்டு, தியாக உணர்ச்சியுடன் டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு, நாட்டு மக்கள் வழங்கி வரும் நல்லாதரவைச் சிதைப்பதற்கும், விவசாயிகளைத் தேச விரோதிகளாகச் சித்தரிப்பதற்கும் முனைந்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, குடியரசுத் தலைவர் உரையில் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முன்வந்திருப்பது கண்துடைப்பு அறிவிப்பாகும். இந்தியாவில் வேளாண்மைத் தொழிலைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்ல வழி வகுக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 2
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து, கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில், மேசிபா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள், மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் படகில் வேகமாக வந்து, தமிழக மீனவர்களின் படகின் மீது மோதி உடைத்து மூழ்கடித்தனர். கடலில் உயிருக்குத் தத்தளித்த மீனவர்களை, மற்ற மீனவர்கள் வந்து காப்பாற்ற விடாமல் தாக்கி விரட்டி அடித்த சிங்களக் கடற்படையினர், உயிருக்குப் போராடிய மீனவர்களைத் தடிகளால் மண்டையில் அடித்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தும் கொன்றனர். அவர்களது உடல்களை, யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து இருந்தபோது, தமிழகத்திற்குக் கொண்டு வந்து உடல் கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர் குடும்பங்கள் விடுத்த கோரிக்கையை, தமிழக அரசு ஏற்கவில்லை.
இந்து தமிழ் திசை நாளேடு (27.01.2021) எழுதி உள்ள தலையங்கத்தில், நான்கு தமிழக மீனவர்களும் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைபாதகன் கோத்தபய இராஜபக்சேவின் அரசுக்கு, இந்திய அரசு வெண்சாமரம் வீசி வருவதால், தமிழக மீனவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியும், அவர்களைக் கைது செய்து சித்ரவதை செய்து படுகொலை செய்யவும் துணிந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.
சொந்த நாட்டு மீனவர்களை அயல்நாட்டுக் கடற்படை கொடூரமாகக் கொன்று குவிப்பதை, இந்திய, தமிழக அரசுகள் வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். எனவே, மத்திய அரசு, இலங்கை அரசு மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஈடு அளிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 3
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இயல்புக்கு மாறாக, தை மாதம் முதல் வாரம் வரையில் பெய்த பெருமழையால் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தென்மாவட்டங்களில் பெருமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள், கடும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டன. விளைநிலங்களில் முற்றிய நெற்கதிர்களை அறுவடை செய்ய இயலாமல், அவை முளைத்துப் போனதுடன் நீரில் மூழ்கியதால் அழுகியும் விட்டன.
மழை வெள்ளச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வருவாய் குறுவட்ட வாரியாகக் கணக்கிடாமல், வருவாய் கிராம வாரியாக வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பு ஈடு வழங்கிட வேண்டும் என்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதனை ஏற்று, விவசாயிகளுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து, பெரும் துயரில் வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா பகுதி விவசாயச் சங்கங்கள், இந்தப் பாதிப்பினை ‘அறுவடை பேரிடராக’ அறிவித்து கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
1) ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் ரூபாய் செலவு ஆகும் அறுவடைக் கருவியின் வாடகைக்கு, அரசு உடனடியாக மானியம் வழங்க வேண்டும்;
2) விளைந்த பயிர்களை அறுக்கும் கருவிகளின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அரசு வாடகை மானியத்தோடு, வேறு பகுதிகளில் இருந்து அறுவடைக் கருவிகளை, உடனடியாக ஏற்பாடு செய்து தர வேண்டும். தாமதம் ஆனால், எஞ்சியுள்ள நெல்மணிகளும் முளை விட்டுவிடும்;
3)‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு மாற்றாக, புதிய தென்னங்கன்றுகளை மறு நடவு செய்ததில், இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், இளம் தென்னங்கன்றுகளில் தண்ணீர் தேங்கி, அவை முழுமையாக அழுகி விட்டன. அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்;
4) நெல் கொள்முதல் நிலையங்களில், ஈரப்பதம் 14 விழுக்காடுக்குக் கூடுதலாக இருந்தால், கொள்முதல் செய்வது இல்லை. பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு, 20 விழுக்காடு ஈரப்பதம் மிகுந்து இருப்பினும், அரசே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்;
5) நீண்டகாலத் திட்டமாக, வடிகால்களில் மீது கட்டி இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை நீக்கிடவும், வடிகால்களைத் தூர் வாருவதற்கான பணிகளை, இந்தக் கோடையில் துவங்கிடவும் வேண்டும்.
விவசாயிகளின் மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 4
விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமத்திற்கு இடையே, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, ரூ. 25 கோடியே 37 இலட்சம் மதிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு தடுப்பு அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தத் தடுப்பு அணை கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கவும் பட்டது. இந்தத் தடுப்பு அணை, கரைப்பகுதி ஒன்றரை மாதங்களுக்கு உள்ளாகவே உடைந்து நீர் வெளியேறியதால், தென் பெண்ணை ஆற்றின் நீர் முழுவதும் வீணாகியது. தடுப்பு அணையின் 14 அடி உயரத்திற்கு, வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் நீர் வழிந்தோடியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீர் தேங்கி இருந்தது. இந்த நீர், எனதிரிமங்கலம் அடுத்துள்ள நீர் வரப்புகளான சுமார் 14 ஏரிகளுக்குமே செல்கின்றது.
மேலும், விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் அடுத்துள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இது இருக்கின்றது. இந்நிலையில்தான், அணைக்கட்டின் கரைப் பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறி விட்டது.புதிதாகக் கட்டிய அணை ஒரு மாதத்தில் உடைந்து மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்து ஆடும் இலஞ்சம் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் ஊழல் புற்று நோய் பரவி உள்ளது. இதற்கு, பொதுப்பணித் துறையும் நீர்வளத் துறையும் விதிவிலக்கு அல்ல. ஆட்சியாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதால், அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் ஒப்பந்ததாரர்கள் செயல்படுவது இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல திரும்பும் திசையெல்லாம் ஊழலில் ஊறித் திளைக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்திற்கு தென்பெண்ணை ஆற்றுத் தடுப்பு அணை உடைந்தது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
ஊழல் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், நீர்வளத் துறை அதிகாரிகளை மட்டும் பணி இடை நீக்கம் செய்து, ஊழலைத் திரைபோட்டு மறைக்க முயற்சிக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு, இக்கூட்டம் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது. ஊழல் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இக்கூட்டம் ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண். 5
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் பத்து மாதங்களாக சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும், 12.94 இலட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், சுமார் 80.81 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
வேளாண் தொழிலுக்கு அடுத்து, அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் இந்நிறுவனங்கள், கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டதால், இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவானது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.
இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. ஸ்டெயின்லெஸ் விலை, 32 விழுக்காடு உயர்ந்து இருக்கின்றது. அலுமினியம் - 26 விழுக்காடு; இயற்கை ரப்பர் - 52 விழுக்காடு; காப்பர் - 77 விழுக்காடு என மூலப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருப்பதால், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மீண்டும் இயங்கவோ உற்பத்தியைத் தொடங்கவோ முடியாமல் நிலைகுலைந்து விட்டன.
பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்ற, இத்தகைய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
1) சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் தொழில் வரியை, இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்;
2) ரூ. 100 கோடி வரையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதுடன், கூடுதல் கடன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்;
3) நிலையான மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சீராக இயங்கவும், தொழிலாளர்களின் வேலை இழப்பைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 6
கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலைகளில் இருந்து பெருகி வருகின்ற தென்பெண்ணை ஆறு, தமிழகத்தின் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ. தொலைவு ஓடி,கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையை ஒட்டி, கர்நாடகா அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வுப் பணிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து, அப்போதைய இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது; தென்பெண்ணையாறுக்கு கர்நாடகா அரசு முழு உரிமை கோர முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த மனு மீது, கடந்த 2019 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தென்பெண்ணை ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விவகாரத்தில், இந்த நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்கக் கோரி, தமிழக அரசு இதுவரையில் தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரி, மத்திய அரசிடம் வலியுறுத்தவே இல்லை. எனவே, தமிழக அரசின் மனுவை ஏற்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு நதிநீரைப் பகிர்ந்து கொள்கையில் சிக்கல் ஏற்பட்டால், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-இன்கீழ், ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரி மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோர முடியும்.
ஆனால், தென்பெண்ணையாறு விவகாரத்தில் சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்ப்பு ஆயம் அமைப்பதை தெரிந்தே அரசு தவிர்த்து வந்துள்ளதால், மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை என்று கூறுவது தவறு எனவும், அடுத்த நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு, மத்திய அரசிடம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-இன்கீழ் இந்தச் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரலாம் எனவும் ஆணை பிறப்பித்து, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2007-ஆம் ஆண்டிலேயே இந்த அணை கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் கர்நாடகா அரசு பெற்று, சுமார் 70 விழுக்காடு பணிகளையும் முடித்து விட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடிக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசு, தென்பெண்ணையாற்று நீர் சிக்கலைத் தீர்க்க மத்திய அரசிடம் கோராதது கண்டனத்துக்கு உரியதாகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு, நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடந்த நவம்பர் 11, 2019-இல் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது.
தமிழக அரசின் கோரிக்கை குறித்து, தொடர்புடைய கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களிடம் கருத்து பெறுவதற்காகவும், சுமூகமாக சிக்கலைத் தீர்க்கவும், 2020, ஜனவரி 20-ஆம் தேதி பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவில் மத்திய நீர்வளத் துறையின் தலைவர், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர்கள், மத்திய வேளாண்மைத் துறையின் இணைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணைச் செயலாளர், நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆ~ப் ஹைட்ராலஜியின் இயக்குநர், மத்திய நீர்ப்பாசன மேலாண்மை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆகிய 9 பேர் இடம் பெற்று இருந்தனர்.
பேச்சுவார்த்தைக் குழு 2020, பிப்ரவரி 24 மற்றும் ஜூலை 7 ஆகிய இரண்டு நாட்களில் தென்பெண்ணையாறு நதிநீர் சிக்கல் குறித்து விவாதித்து, இறுதி அறிக்கையை ஜூலை 31, 2020 இல் மத்திய அரசுக்கு அளித்தது.
அதில், பேச்சுவார்த்தை மூலம் தென்பெண்ணையாற்று நதிநீர்ப் பகிர்வு சிக்கலைத் தீர்க்க முடியாததால், ஒரு தீர்ப்பு ஆயம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956, பிரிவு 3-இன் கீழ், நதிநீர் சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரி, மாநில அரசு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து ஓராண்டுக்குள் தீர்ப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்தது போலவே, தென்பெண்ணை ஆற்றுப் பிரச்சினையிலும் கேடு செய்து வருகின்றது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய அ.இ.அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க. அரசின் பாதம்தாங்கியாகச் செயல்படுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.
தீர்மானம் எண். 7
பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார்.
“அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி, மாநில அமைச்சரவை கூடி, 7 பேரையும் விடுவிக்க 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் முடிவு எடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று சட்ட அறிஞர்கள் கூறினர். ஏழு பேரை விடுவிப்பதில், ஆளுநருக்கு உடன்பாடு இல்லை எனில், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளைத் திருப்பி அனுப்பலாம் எனவும் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக ஆளுநர் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவு எடுப்பார்”
என்று மத்திய அரசின் கருத்தை வழக்கறிஞர் துஷார் மேத்தா முன் வைத்தார்.
இதனையடுத்து, உச்ச நீதி மன்ற நீதிபதிகள், எல். நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழக ஆளுநர், ஒரு வார காலத்திற்குள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்திரவிட்டனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டு ஒரு வார கால அவகாசம் முடிந்த பின்னரும், தமிழக ஆளுநர் ஏழு தமிழர் விடுதலை பற்றி முடிவு எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருவதற்கு, இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்திட ஆளுநர் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 8
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான காலத்தில் இருந்து, கடந்த 27 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில், எதிர் நீச்சல் போட்டு நெருப்பு ஆறுகளைக் கடந்து சோதனைகளைப் புறங்கண்டு இயக்கம் எழுச்சியுடன் பீடுநடை போடுவதற்கு, இலட்சக்கணக்கான கழகத் தொண்டர்களும், கழகத்தைக் கட்டிக் காக்கின்ற படை வீரர்களாக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், சிற்றூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும்தான் அடித்தளமாகத் திகழ்கின்றனர்.
2021, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு கழகப் பாசறை ஆயத்தமாகும் வகையில், கடந்த மூன்று மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி முகவர் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழு அமைக்கும் பணிகளை, தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக நிறைவேற்றிய மாவட்டக் கழகங்களுக்கு, தலைமைக் கழகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
திராவிட இயக்கத்தின் ஆணிவேரையே அறுத்து எறியத் துடிக்கும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கவும், சனாதனச் சக்திகளுக்குத் துணைபோகும் ஆளும் அ.இ.அ.தி.மு.க., அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தொலைநோக்குப் பார்வையுடன், கொள்கை அடிப்படையில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்ற முடிவை எடுத்தது. அதே நிலை, தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் கழகம் உறுதியாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு மக்களிடம் நிதி திரட்டும் கடமையைக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்று, கடந்த டிசம்பர் 5, 2020 அன்று காணொளி மூலம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் வலியுறுத்தினர்.
கொரோனா பேரிடர் பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலிலும், தேர்தல் நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் மாவட்டச் செயலாளர்களும், கழக முன்னணியினரும் தெரிவித்த உறுதியான கருத்தின் அடிப்படையில், தலைமைக் கழகத்தின் சார்பில் தேர்தல் நிதி திரட்டுவதற்கான நிதிச் சீட்டுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்ற சூழலில், நிதி திரட்டும் பொறுப்பை விரைந்து நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
எனவே, தேர்தல் நிதி திரட்டும் கடமையை திட்டமிட்டவாறு நிறைவேற்ற வேண்டும், என இக்கூட்டம் மாவட்டக் கழகங்களைக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண். 9
மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக இரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை.
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் எல்லா நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டிருக்கிறது. பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து1582 பேரை அடுத்த கட்ட நேர்காணலுக்கு என்.எல்.சி. நிறுவனம் அழைப்பு விடுப்பதற்கு பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்தில் வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.
ஜி.இ.டி. (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்.எல்.சி.யில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இ த்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களை புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டு பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது. இல்லையேல் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
03.02.2021