Tuesday, March 22, 2022

தமிழக மின்வாரியத்தில் விடுபட்ட 5493 கேங்மேன் பணியாளர்களை பணிநியமனம் செய்திட ஆய்வுக்குழு அமைத்துள்ள தமிழக அரசுக்கு துரை வைகோ நன்றி!

தமிழக மின்வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் என்ற பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வில் 90000 பேர் கலந்துகொண்டதில் 14956 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல வழக்குகளைக் கடந்து நமது தொழிற்சங்கம் எடுத்த முயற்சி, பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அரசுக்கு வைத்த வேண்டுகோள் அடிப்படையில் கடந்த 22.02.2021 அன்று 9613 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அதில் பணிநியமனம் செய்யப்படாமல் விடுபட்ட 5493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என நமது தொழிற்சங்கம் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து, மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களை பலமுறை சந்தித்து முறையிட்டது. பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களும் மின்துறை அமைச்சருக்கு கோரிக்கையை பரிசீலிக்கும்படி கடிதம் அனுப்பினார்கள். சட்டமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், நமது சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பேசினார்கள். மின்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். அதன் பயனாக கடந்த 07.09.2021 அன்று மின்துறை மானியக்கோரிக்கைக்கு பதிலுரை வழங்கிய மின்துறை அமைச்சர் அவர்கள், விடுபட்ட கேங்மேன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்ற மகத்தான அறிவிப்பை வெளியிட்டார்கள். நமது தொழிற்சங்கம் இதற்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 10.19.2021 அன்று நன்றி அறிவிப்புக்கூட்டத்தை நடத்தியது.
தொடர்ந்து காலதாமதமாகி வந்த நிலையில். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கடந்த 07.01.2022 அன்று சென்னை வாரிய தலைமையகம் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் கடந்த 19.03.22 அன்று மாநில நிர்வாகிகள் மற்றும், விடுபட்ட கேங்மேன் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள
மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சங்க தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு தொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு, நானும் அவர்களுக்கு நமது தொழிற்சங்கமும் கட்சியும் துணைநிற்கும் என்று உறுதி அளித்த நிலையில், விடுபட்ட கேங்மேன் குறித்து ஆய்வு செய்து ஒருமாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க. தமிழக மின்வாரியம். அதன் செயலாளர் தலைமையில், மேலும் மூன்று தலைமைபொறியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை வாரிய ஆணை எண்: 56 நாள் 19.03.2022 அன்று அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நமது தொழிற்சங்கம் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதற்கான உத்தரவை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த வாரியத் தலைவர் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றிகளைதத் தெரிவித்துக்கொள்கிறேன். விடுபட்ட கேங்மேன் தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற் சங்கத்தின் பின்னால் ஓரணியில் திரண்டு வெற்றிபெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதோடு. இந்தப்பணிகளை ஒருங்கிணைத்த நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
"தாயகம்"
சென்னை
21.03.2022

Monday, March 21, 2022

மறுமலர்ச்சி தி.மு.க. உட்கட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகத்தின் 09.03.2022 ஆம் நாளிட்ட அறிவிப்புக்கு இணங்க, துணைப் பொதுச்செயலாளர்கள் (2), தலைமைக் கழகச் செயலாளர் (1), தணிக்கைக்குழு உறுப்பினர் (1) ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் பெறும் நிகழ்ச்சி 21.03.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளரும், கழக அமைப்புச் செயலாளருமான வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்களிடம் வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்னிலையில், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறுப்புகளுக்கு திரு ஆடுதுறை இரா.முருகன்,

திரு தி.மு.இராசேந்திரன் ஆகியோரும், தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு

திரு துரை வையாபுரி அவர்களும், தணிக்கைக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு திரு தி.சுப்பையா அவர்களும் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையாளரிடம் தாக்கல் செய்தார்கள்.

இவர்களைத் தவிர வேறு எவரும் வேட்பாளராக மனு அளிக்கவில்லை. வேட்புமனுக்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விவரம் முன்மொழிவோர், வழிமொழிவோர் விவரங்கள், இதற்குரிய கட்டணத்திற்கான வங்கி வரைவோலை ஆகியவைகளை ஆய்வு செய்து, முழுமையாகவும், சரியாகவும் இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.

தேர்தல் முடிவுகள் கழக சட்டதிட்டங்களின் விதிப்படி வருகின்ற 23.03.2022 அன்று சென்னையில் நடைபெறும் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அறிவித்துள்ளார்.

இவண்
வழக்கறிஞர் இரா.பிரியகுமார்
தேர்தல் ஆணையாளர்
கழக அமைப்புச் செயலாளர்

Friday, March 18, 2022

இளையரசனேந்தல் பகுதி இணைப்பு பிரச்சினை - விரைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்க்காவில் உள்ள 12 ஊராட்சிப் பகுதிகளையும் இளையரசனேந்தலை தனி ஒன்றியமாக்கி தூத்துக்குடி வருவாய் மாவட்டத்துடன் இணைத்திட வேண்டும்;
அவ்வாறு இயலாத பட்சத்தில் 12 ஊராட்சி பகுதிகளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்பதை நான் தலைமைக் கழக செயலாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே
அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு இணங்க மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் திரு . பெரியகருப்பன் அவர்களை சந்தித்து எனது முதல் கோரிக்கையாக வலியுறுத்தினேன்.
நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும் தமது 15.08.2021 தேதியிட்ட கடிதம் மூலமும், தொலைபேசி வழியாகவும் மாண்புமிகு அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளார்கள்.
இதற்கிடையே இப்பகுதியை மீண்டும் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகவும் ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டு, இந்த செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நான் உடனடியாக மாவட்ட செயலாளர்கள் தி.மு. இராசேந்திரன் (தென்காசி ) ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி) இருவரையும் தொடர்பு கொண்டேன்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாக புறப்பட்டு சென்னைக்கு வர ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினேன்.
அதன்படி இன்று மார்ச் 18
காலை கீழ்கண்ட 21 மக்கள் பிரதிநிதிகள் தனி பேருந்தில் சென்னை வந்தனர்.
அவர்கள் அனைவரையும் இன்று மதியம் 01 மணி அளவில் மாண்புமிகு அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்களிடமும்,
மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.
ஆர் அவர்களிடமும் நேரில் அழைத்துச் சென்று நிலைமையை விளக்கினேன்.
நம் தலைவர் வைகோ எம்.பி..,அவர்கள்,
மக்கள் விரும்புகிற கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைத்திட பரிந்துரை செய்து வழங்கிய கடிதத்தையும் மாண்புமிகு அமைச்சர்களிடம் வழங்கினேன்.
மாண்புமிகு அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் தமக்கு இந்த பிரச்சனையில் தனிப்பட்ட நலன்கள் எதுவும் இல்லை என்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கோவில்பட்டியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க துணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
அதேபோன்று மாண்புமிகு அமைச்சர் அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து முறையிடுமாறும், தாம் இதில் தனிக்கவனம் செலுத்தி உதவுவதாகவும் உறுதி அளித்தார்.
விரைவில் நானும் தலைவரும் முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
எனவே தமிழக அரசின் ஒத்துழைப்போடு இளையரசனேந்தல் பகுதியின் ஊரக வளர்ச்சித் துறை உட்பட அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இணைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்பதை அப்பகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கேட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் தனி பேருந்து ஏற்பாடு செய்து சென்னைக்கு வருகை தந்து கடமையாற்றிய அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும்மாவட்ட செயலாளர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இளையரசனேந்தல் பகுதி மக்கள் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
தலைவர் வைகோவும் நானும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சனையில் மக்கள் விரும்பும் தீர்வை கொடுப்போம்.
மாண்புமிகு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விவரம்...
தி.மு. இராசேந்திரன் ( தென்காசி மாவட்ட செயலாளர்
மதிமுக ) ஆர்.எஸ்.ரமேஷ் ( தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மதிமுக)
கே.விஜயலட்சுமி (ஊராட்சி மன்ற பெருந்தலைவர், குருவிகுளம்)
என்.ராஜகோபால் (கிழக்கு ஒன்றிய செயலாளர்),
ராமசாமி - ஊராட்சி மன்ற தலைவர் ஜமீன் தேவர்குளம், பாலகிருஷ்ணன் - துணை தலைவர் ஜமீன் தேவர்குளம்,
பி. குணசேகரன் - ஊராட்சி மன்ற
தலைவர் நக்கலமுத்தன்பட்டி
ஜி.கேசவன் ஊராட்சி மன்ற தலைவர் - சித்திரம்பட்டி,
எஸ்.சுரேஷ் - ஊராட்சி மன்ற தலைவர் அப்பனேரி ,
கமல் - ஊராட்சி மன்ற தலைவர் அய்யனேரி,
ஜெயக்குமார் - ஊராட்சி மன்ற தலைவர் புளியங்குளம்,
ஆர்.லிங்கராஜ் - ஊராட்சி மன்ற துணை தலைவர் பிள்ளையார்நத்தம்,
வி. ரங்கராஜ் - வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்,
எஸ்.ரேவதி - பிச்சை தலைவன் பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர்,
சுகுணா கனகராஜ் - ஒன்றியக் குழு உறுப்பினர், வலசை கனகராஜ் - 8 வது வார்டு குருவிகுளம்,
எஸ். செந்தில் - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,
பி.செந்தில் - முன்னாள் துணைத் தலைவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் பிள்ளையார்நத்தம், பி.சௌந்தரராஜன் - சமூக ஆர்வலர், பிள்ளையார்நத்தம்
முத்துக்குமார் -சமூக ஆர்வலர், எஸ். அமுல்ராஜ் - சமூக ஆர்வலர், டி. கார்த்திகேயன் - சமூக ஆர்வலர், கனகராஜ் - பிள்ளையார் நத்தம்
நம்பிக்கையுடன்
உங்கள்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
18-03-2022 

தத்துவக் கவிஞர் குடியரசு குடும்பத்தினருக்கு மக்கள் தலைவர் வைகோ MP ஆறுதல்

மறைந்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் குடியரசு அவர்களின் துணைவியார் அமராவதி அவர்கள் 16.03.2022 அன்று இயற்கை எய்தினார்கள்.

தகவல் அறிந்த மக்கள் தலைவர் வைகோ அவர்கள் டெல்லியிலிருநது, கவிஞர் குடியரசு அவர்களின் மகனும் உயர்நிலைக்குழு உறுப்பினருமான இசைவாணன் அவர்களைத் தொடர்புகொண்டு குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இன்று 18.03.2022 பகல் 12 மணி அளவில், கவிஞர் குடியரசு அவர்களின் இல்லம் சென்று அமராவதி அம்மையார் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

Thursday, March 17, 2022

அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பணி இடங்களுக்கு ஆள் சேர்ப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதா? வைகோ MP, சண்முகம் கேள்விகளுக்கு மாநிலங்கள் அவையில் அமைச்சர் அளித்த விளக்கம்!

கேள்வி எண் 1616

கீழ்காணும் வினாக்களுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?
1 அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தென் மண்டல மையங்களில், பல்வேறு பணி இடங்களுக்கு, முறைகேடாக ஆள் சேர்த்தது தொடர்பாக, அரசுக்கு ஏதேனும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள், பகுதி வாரியாக மற்றும் பணி இடங்கள் குறித்த தரவுகளைத் தருக.
2. இது தொடர்பாக, அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வேலை தேடுவோர் இடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த தரவுகளைத் தருக.
3. கடந்த மூன்று ஆணடுகளில் நடைபெற்ற தேர்வுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதா? அந்தப் பணி இடங்களை நிரப்புவதற்காக, புதிய தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டதா?
கல்வித்துறை இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்கார் அளித்த விளக்கம்
1,2 வினாக்களுக்கு விளக்கம்
அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில், சில பணி இடங்களுக்காக சில ஏமாற்றுப் பேர்வழிகள் போலியாக நேர்காணல்கள் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்தன.
உடனே, அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை, கழகத்தின் இணையதளத்திலும் பதிவு செய்து இருக்கின்றது. அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இத்தகைய ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதை, அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கின்றது.
இது தொடர்பாக, கழகம் அளித்த குற்றச்சாட்டின் பேரில், காவல்துறையினர் 8 பேரைக் கைது செய்து இருக்கின்றனர்.
3. இல்லை.
திறன் அலைபேசி பயன்படுத்தும் குழந்தைகள் வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்
கேள்வி எண் 1759 நாள் 16.03.2022
மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், கீழ்காணும் வினாக்களுக்கு, விளக்கம் தருவாரா?
1. கொரோனா முடக்கத்தின்போது, குழந்தைகள் அலைபேசி கையாள்வது பெருகி இருக்கின்றதா? அதனால், இணையதளங்களுக்கு அடிமையாகி இருக்கின்றார்களா? அவ்வாறு இருப்பின், முடக்கத்திற்கு முன்பும், பின்பும் அதுகுறித்த தரவுகள் ஏதேனும் இருக்கின்றதா?
2. இந்தப் பிரச்சினையில், ஏதேனும் மாநில அரசுகள் கவனம் கொண்டு, குழந்தைகளுக்கு உளவியல் அற உரைகள் வழங்கி இருக்கின்றதா? அவர்களுடைய இணையதள செயல்பாடுகளைக் குறைப்பதற்காக, நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றார்களா?
3. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்
4. இல்லை என்றால், எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த விளக்கம்
1 முதல் 4 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.
உறுப்பினர் கேட்டு இருக்கின்ற தரவுகள் எதுவும் அரசிடம் இல்லை. இருப்பினும், தேசிய குழந்தைகள் உரிமை காப்பு ஆணையம், அலைபேசிகள் இணையதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் அவர்களுடைய உடல் நலம், நடத்தை மற்றும் சமூக உள இயலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றது.
அந்த ஆய்வில், 23.80 விழுக்காடு குழந்தைகள் உறங்குவதற்கு முன்பு, படுத்துக்கொண்டே, திறன் அலைபேசிகளைப் பயன்படுத்துகின்றார்கள் / வயதுக்கு ஏற்ப, 37.15 விழுக்காடு குழந்தைகள், எப்போதும் அல்லது அடிக்கடி திறன் அலைபேசிகளைப் பயன்படுத்துவதால், அவர்களுடைய கவனம் குறைகின்றது. இந்த ஆய்வு குறித்த தரவுகள், https://ncpcr.gov.in என்ற இணைப்பில் கிடைக்கின்றன.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
17.03.2022

Wednesday, March 16, 2022

சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு நாளை மாற்றுக! சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு வைகோ MP வேண்டுகோள்!

கொரோனா முடக்கத்தின் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு, அண்மையில்தான் திறக்கப்பட்டுள்ளன. மேனிலைப்பள்ளித் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் ஆயத்தம் செய்வதற்கு, குறுகிய காலமே கிடைத்து இருக்கின்றது.

சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, அனைத்து இந்திய அளவில் நடைபெறுகின்றது. வருகின்ற மே மாதம் 8 ஆம் நாள் அந்தத் தேர்வு நடைபெறுவதாக அறிவித்து இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மேனிலைப்பள்ளித் தேர்வு எழுதுகின்ற மாணவர்களுள், சட்டக் கல்லூரிகளில் சேர விழைகின்ற மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளித் தேர்வுகள், மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு நடைபெறுகின்ற நாளில் தேர்வு இல்லை என்றாலும், அதற்கு மறுநாள் 9 ஆம் தேதி ஒரு பாடத் தேர்வு இருக்கின்றது.
சட்டக்கல்வி நுழைவுத் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற குறிப்பிட்ட மையங்களில்தான் எழுத வேண்டும். எனவே, 9 ஆம் தேதி மேனிலைத் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள், 7 ஆம் தேதி இரவிலேயே மேற்கண்ட ஏதேனும் ஒரு ஊருக்குப் பயணித்து, 8 ஆம் தேதி சட்டக் கல்வி நுழைவுத்தேர்வு எழுதிவிட்டு, மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, மறுநாள், மேனிலைத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
வழக்கமாக, மேனிலைப்பள்ளித் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும். சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு, மே மாதம் நடைபெறும். கொரோனா முடக்கத்தின் காரணமாக, பெரும்பாலான மாநிலங்களில், மேனிலைத் தேர்வுகள், மே மாத வாக்கில்தான் நடைபெறுகின்றன.
இரண்டு தேர்வுகளுக்கும் மாணவர்கள் நிறையப் படிக்க வேண்டும். எனவே, போதுமான இடைவெளி தேவை என்பதால், சட்டக் கல்வி நுழைவுத் தேர்வை வேறு தேதியில் மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
16.03.2022

Tuesday, March 15, 2022

ரஷ்ய உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது. மாநிலங்கள் அவையில் வைகோ MP கருத்து!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்ற தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான்.

கடந்த இருபது நாட்களாகப் போர் தொடர்கின்றது. இதற்கு முன்னர், உலகில் பல இடங்களில் இப்படிப்பட்ட மோதல்கள் நடைபெற்றபோதெல்லாம், இந்தியா நடுநிலைமை நாடுகளுக்குத் தலைமை தாங்கி, அணி சேராக் கொள்கையை நிலை நிறுத்தியது. அதனால், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகள் இடையே உயர்ந்து ஓங்கி இருந்தது. ஆனால், இம்முறை இந்தியா ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபையிலும், விவாதம் எழுந்தபோது, இந்திய அரசு, தன் கடமையைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றேன்.
இவ்வாறு, வைகோ பேசினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருக! நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில் இன்று (15.03.2022) வைகோ MP கோரிக்கை!

1980 களின் தொடக்கம் முதல் இன்று வரையிலும், கடந்த 40 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்றது. 800 க்கும் மேற்பட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்று விட்டனர்; ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கை, கால்களை முறித்து விட்டனர்; மீன்பிடிப் படகுகளை உடைத்து நொறுக்கினர்; வலைகளை அறுத்து எறிந்தனர். கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு, எந்தவிதமான இழப்பு ஈடும் வழங்கவில்லை. அண்மைக்காலமாக, அவர்கள் மீன்பிடிப் படகுகளைப் பறித்துக்கொண்டு போய் ஏலம் விடுகின்றனர்.

கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படை 12 மீனவர்களைச் சிறைப்பிடித்தது; இரண்டு படகுகளைப் பறிமுதல் செய்தனர். அதற்கு முன்பு, பிப்ரவரி 8 ஆம் நாள், 11 மீனவர்களைச் சிறைப்பிடித்தனர் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்தனர்; பிப்ரவரி 1 ஆம் நாள், 21 பேரைப் பிடித்துச் சென்றனர்.
பாக் நீரிணையில், இதுபோன்று எத்தனையோ முறை, இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுடுவதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நிகழ்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளக் கடலோரம் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு மீனவர்கள் மீது, இத்தாலியக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர்; படகுகளைத் தகர்த்து விட்டனர். இத்தாலிய வீரர்கள் இருவரை, கேரளக் காவல்துறை சிறைப்பிடித்தது; நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். கடைசியில், இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு கோடி ரூபாய், படகுக்கு 2 கோடி ரூபாய் என பத்துக் கோடி ரூபாய் இழப்பு ஈடு தந்தபிறகு, அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, இலங்கை அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றதால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை அருகே ஹெலிகாப்டரில் வந்து, மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது குண்டுகளை வீசியதில், ஆறு மீனவர்களின் உடல்கள் சிதறி சின்னாபின்னமாகிப் போனது. அப்போது நான் அங்கே சென்று, உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
இலங்கைக் கடற்படை இதுவரை 800 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று இருக்கின்றது; ஆனால் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பு ஈடு வழங்க வேண்டும் என்றும், உடைத்து நொறுக்கிய படகுகளுக்கும் இழப்பு ஈடு தர வேண்டும் என்றும்; இலங்கை அரசிடம் இருந்து இந்திய அரசு அதைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் நான் வலியறுத்துகின்றேன். அத்துடன், இலங்கைக் கடற்படை வீரர்கள், இந்திய நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; தற்போது அந்த நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

வைகோ MP விடுத்த கோரிக்கைகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம்!

1. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அளித்து இருக்கின்ற விளக்கம்

அன்புள்ள திரு வைகோ அவர்களுக்கு,
16.12.2021 அன்று தாங்கள் எழுதிய கோரிக்கை விண்ணப்பம் கிடைக்கப் பெற்றேன். இந்திய உணவுக் கழத்திற்குச் சொந்தமான, சத்தியமங்கலம் இணைப்புச் சாலையில் இருந்து, கோவை கணபதியில் உள்ள அவர்களுடைய கிட்டங்கிக்குச் செல்கின்ற சாலையை, முறையான பராமரிப்பு மேற்கொள்வதற்காக, கோவை மாநகர் ஆட்சி மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றீர்கள்.
இதுகுறித்து ஆய்வு செய்தேன். 1.5 கிலோமீட்டர் நீளம், 100 அடி அகலம் உள்ள அந்தச் சாலையின் மொத்த நிலப்பரப்பு 11.30 ஏக்கர் ஆகும். அதன் வழியாக, கோவை பீளமேட்டில் உள்ள அவர்களுடைய கிட்டங்கி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த நிலத்திற்கான சொத்து வரியை, இந்திய உணவுக் கழகம், கோவை மாநகர் ஆட்சி மன்றத்திற்குச் செலுத்தி வருகின்றது.
அந்த இடத்தின் உரிமையை விட்டுத் தர இயலாது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும்கூட, கோவை மாவட்ட இந்திய உணவுக் கழகத்தின் மண்டல மேலாளர், கோவை மாநகர் ஆட்சி மன்றத்துடன் இதுகுறித்துப் பேச வேண்டும் என்றும், அந்தச் சாலையைப் பராமரிக்கவும், கழிவு நீர்க் குழாய்கள் அமைப்பதற்கும், தெரு விளக்குகள் நிறுவிடவும், கோவை மாநகர் ஆட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், அதைக் கேட்டுப் பெறவும், வழிகாட்டி இருக்கின்றோம். அதற்காக, அந்த இடத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தால், அதற்கு உரிய இழப்பு ஈட்டை, இந்திய உணவுக் கழகத்திற்குத் தர வேண்டு
இவ்வாறு, அமைச்சர் பியுஷ் கோயல், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
2. தொடரித்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்
அன்புள்ள திரு வைகோ,
12.08.2021 அன்று தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தை, கேரளத்தின் கொச்சி துறைமுகத்துடன் இணைப்பதற்காக, புதுக்கோட்டை, வல்லநாடு, திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை வழியாக புதிய தொடரித் தடம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருக்கின்றீர்கள்.
இதுகுறித்து ஆய்வு செய்தேன். தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள், திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் வழியாக, ஏற்கனவே இணைக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, செங்கோட்டைக்கு இடையே, ஏற்கனவே தொடரித் தடம் உள்ளது. மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடம், இரட்டைத் தடமாக ஆக்குகின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவு பெற்றால், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேலும் விரைவு பெறும்.
இவ்வாறு, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது. வைகோ MP, சண்முகம் கேள்விக்கு, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அளித்த உறுதிமொழி!

கேள்வி எண் 1339

கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation-DRDO) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதா?
2, அவ்வாறு இருப்பின், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விவரம் தருக.
3. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் என்ன?
4. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை, தனியாரிடம் கொடுக்கும் திட்டம் உள்ளதா?
5. அவ்வாறு இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன?
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த விளக்கம்
1. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
2. ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆராய்ச்சிகள் குறித்த விவரம், அட்டவணையில் தரப்பட்டுள்ளது. (Annexure A)
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை...
1. ஏவுகணை அமைப்புகள்
2. வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு
3. தாக்குதல் வான் ஊர்திகள்
4. பீரங்கி போல மூடப்பட்ட தாக்குதல் ஊர்திகள்
5. உடனடித் தேவைப் பாலங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கு குழிகள் வெட்டுதல்.
6. வெடிமருந்துகள்
7. பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள்
8. சிறிய தாக்குதல் கருவிகள் மற்றும் வெடிமருந்துகள்.
9. மேம்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் நீரில் மூழ்கிய பொருட்களை, ஒலி அலைகள் கொண்டு அறியும் முறை.
10. மின் போர்க்கருவிகள்
11. நீண்ட தொலைவு கண்காணிப்புக் கருவி (ரேடார்)
12. செயற்கை நுண்அறிவுத் திறன் அடிப்படையிலான கருவிகள்
13. கண்ணிவெடிகள் மற்றும் சோனார் கருவிகள்
14. தானியங்கி முறைகள்
15. மின்னணு போர் முறைமைகள்
கேள்வி எண் 3 க்கு விளக்கம்
டிஆர்டிஓ நிறுவனம் ஆக்கிய புதிய தொழில்நுட்ப முறைமைகள் குறித்த விளக்கம், இணைப்பு B யில் தரப்பட்டுள்ளது.
4. டிஆர்டிஓ நிறுவனம், தனியார் மயம் ஆகாது.
5. பொருந்தாது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

Monday, March 14, 2022

தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக! வைகோ MP வேண்டுகோள்!

தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக அப்பகுதி மக்களால் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வந்த இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம், திமுக அரசின் விரைவான செயல்பாட்டின் காரணமாக நிலம் கையகப்படுத்துதல் நிலையை அடைந்துள்ளது.
மேலும் இத்திட்டத்தில் நிலம் கையப்படுத்துதல் பணிகளுக்காக அரசுப் பணியாளர்கள் நியமனமும், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான ஆணை மற்றும் ஓராண்டு திட்டத்திற்கான கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அரசு மீதான நன்மதிப்பை உயர்த்தி உள்ளது.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மேலே குறிப்பிட்டவாறு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகள் படி, வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகிறது. வனம் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
எனவே, வன உயிரின நலக் குழுவிற்கு, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகளின் படி தேவையான தகுதியான உறுப்பினர்களை நியமித்து, இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்கு தடையின்மைச் சான்று வழங்கிட வேண்டுகிறேன்.
இதுகுறித்து மாண்புகுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அன்பான கவனத்திற்கு 10.03.2022 அன்று கடிதம் அனுப்பியுள்ளேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.03.2022

Sunday, March 13, 2022

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் வைகோ அறிக்கை

தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார்.
அதாவது, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டம் என்ன பேசி வருகின்றதோ, தில்லி முதலாளிகள் என்ன சொல்கின்றார்களோ, அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி, அந்த மாநாட்டில் முன்வைத்து இருக்கின்றார்.
அப்படியானால், 1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடு, எங்கே இருந்தது? என்பதை அவர் விளக்க வேண்டும்.
200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு வரையிலும், இந்தியாவில் 565 சிற்றரசுகள்தான் இருந்தன என்பது வரலாறு. அதற்கு முன்பும், மொகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, தமிழ்நாடு ஒருபோதும், வட இந்திய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது இல்லை.
1947 வரையிலுமான ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, இப்போதைய இந்தியா என்ற அமைப்பு கிடையாது. தெற்கு இந்தியாவில், ஆந்திராவின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய ஹைதராபாத் நிஜாம் அரசு ஒரு தனி நாடுதான்; கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய மைசூரு சமஸ்தானம் ஒரு தனிநாடுதான்; கேரளத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு தனிநாடுதான். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம், 1947 வரையிலும் ஒரு தனி நாடுதான்.
வெள்ளைக்காரனின் துப்பாக்கியும், லத்திக் கம்புகளும்தான் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியது என்று, இந்தியக் குடிஅரசின் முன்னாள் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் பேசி இருக்கின்றார்கள். அந்த வரலாறு, ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; பல்வேறுபட்ட பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம்தான். இந்திய அரசு அமைப்புச் சட்டம் கூட, Union of India யூனியன் ஆஃப் இந்தியா, அதாவது இந்திய ஒன்றியம் என்றுதான் கூறுகின்றது.
அரசு அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்தில், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களின் முடிவில் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த அறிஞர்கள்தான், இந்தச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதி இருக்கின்றார்கள். அதுவும், ஆளுநருக்குத் தெரியவில்லை.
அந்த மாநாட்டில், காணொளி உரை ஆற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அருமையான விளக்கம் அளித்து இருக்கின்றார்.
புதிய கல்விக்கொள்கை என்பது, பிற்போக்குவாதம்; ஒன்றிய அரசு தனது பழமைவாதக் கருத்துகளை, பாடத்திட்டத்தின் வழியாக, மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது;
மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும்; மாநில அரசுகளின் கல்விக்கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்குவது மட்டும் பல்கலைக்கழகங்களின் கடமை அல்ல; அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக்கழகங்கள் பொறுப்பு ஆகும். எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும்;
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, நிலையான தீர்வு என்பது, முன்பு மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து பறித்துக்கொண்ட கல்வியை, மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என அவர் பேசி இருக்கின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1960 களில் மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகளில், இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றார். நான் மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகளிலும், அந்தக் கருத்தையே வலியுறுத்திப் பேசி வருகின்றேன்.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது ஒரு துணைக்கண்டம். பல்வேறு பழக்கவழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்த ஒன்றியம். எனவே, United States of America என்பது போல, இந்த நாட்டை, United States of India என்றுதான் அழைக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து பேசி இருக்கின்றேன். அதை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கின்றேன்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர். மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார் ஜெகதீப் தங்கர். 7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார்.
எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.03.2022