Tuesday, March 15, 2022

இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருக! நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில் இன்று (15.03.2022) வைகோ MP கோரிக்கை!

1980 களின் தொடக்கம் முதல் இன்று வரையிலும், கடந்த 40 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்றது. 800 க்கும் மேற்பட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்று விட்டனர்; ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கை, கால்களை முறித்து விட்டனர்; மீன்பிடிப் படகுகளை உடைத்து நொறுக்கினர்; வலைகளை அறுத்து எறிந்தனர். கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு, எந்தவிதமான இழப்பு ஈடும் வழங்கவில்லை. அண்மைக்காலமாக, அவர்கள் மீன்பிடிப் படகுகளைப் பறித்துக்கொண்டு போய் ஏலம் விடுகின்றனர்.

கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படை 12 மீனவர்களைச் சிறைப்பிடித்தது; இரண்டு படகுகளைப் பறிமுதல் செய்தனர். அதற்கு முன்பு, பிப்ரவரி 8 ஆம் நாள், 11 மீனவர்களைச் சிறைப்பிடித்தனர் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்தனர்; பிப்ரவரி 1 ஆம் நாள், 21 பேரைப் பிடித்துச் சென்றனர்.
பாக் நீரிணையில், இதுபோன்று எத்தனையோ முறை, இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுடுவதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நிகழ்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளக் கடலோரம் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு மீனவர்கள் மீது, இத்தாலியக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர்; படகுகளைத் தகர்த்து விட்டனர். இத்தாலிய வீரர்கள் இருவரை, கேரளக் காவல்துறை சிறைப்பிடித்தது; நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். கடைசியில், இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு கோடி ரூபாய், படகுக்கு 2 கோடி ரூபாய் என பத்துக் கோடி ரூபாய் இழப்பு ஈடு தந்தபிறகு, அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, இலங்கை அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றதால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை அருகே ஹெலிகாப்டரில் வந்து, மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது குண்டுகளை வீசியதில், ஆறு மீனவர்களின் உடல்கள் சிதறி சின்னாபின்னமாகிப் போனது. அப்போது நான் அங்கே சென்று, உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
இலங்கைக் கடற்படை இதுவரை 800 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று இருக்கின்றது; ஆனால் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பு ஈடு வழங்க வேண்டும் என்றும், உடைத்து நொறுக்கிய படகுகளுக்கும் இழப்பு ஈடு தர வேண்டும் என்றும்; இலங்கை அரசிடம் இருந்து இந்திய அரசு அதைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் நான் வலியறுத்துகின்றேன். அத்துடன், இலங்கைக் கடற்படை வீரர்கள், இந்திய நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; தற்போது அந்த நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

No comments:

Post a Comment