மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 09.03.2022 புதன்கிழமை காலை, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு::
தீர்மானம் எண். 1
பிப்ரவரி 19, 2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகள் 132 நகராட்சிகள் மற்றும் 435 பேரூராட்சிகளில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எட்டுமாத கால ஆட்சிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ள அங்கீகாரம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும்.
திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணிக்குப் பேராதரவு வழங்கி, வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு மறுமலர்ச்சி திமுக நன்றி தெரிவிக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்புகளை ஏற்றுள்ள மறுமலர்ச்சி திமுக, திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண். 2
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திமுக போட்டியிட்ட இடங்களில் வாகை சூடவும், மாநகராட்சி துணைமேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பொறுப்புகளை கழகத் தோழர்கள் ஏற்று மக்கள் பணியாற்றிட வியூகம் அமைத்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறப்பாகச் செயலாற்றிய மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் திரு துரை வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் பெருவாரியான வெற்றியை ஈட்டுவதற்கு பாடுபட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண். 3
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் அளித்த இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கருத்துரு கர்நாடகத்தில் 2013 இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, உருவான நேரத்திலேயே மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் 2013 செப்டம்பர் மாதம் ஒகேனக்கலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன அறப்போராட்டத்தை நடத்தியது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ரூபாய் 9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருக்கும் கர்நாடகா, அதற்காக ஒன்றிய பா.ஜ,க, அரசின் அனுமதியைப் பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 4 ஆம் தேதி, கர்நாடக சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் சொட்டுநீர்கூட வராது. காவிரிப்படுகை மாவட்டங்கள் பாலைவனம் ஆகும். எனவே, எக்காரணம் கொண்டும் கர்நாடக மாநிலத்தின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் சார்பில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 4
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - நீட் நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 13, 2021 இல் “தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான சட்ட முன்வரைவு-2021” நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.இரவி அவர்கள் இதனை 4 மாத காலமாக எந்த முடிவும் எடுக்காமல், பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனையடுத்து பிப்ரவரி 8, 2022 அன்று தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் நீட் விலக்கு சட்ட முன் வரைவை நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பி இருக்கிறார். மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு உரிய மதிப்பு அளித்து, மீண்டும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் இச்சட்ட முன்வரைவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும்.
மருத்துவக் கல்வியில் உண்மையான சமூகநீதி நிலைபெறவும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதிமுக உறுதுணையாகச் செயல்படும் என்று இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண். 5
கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் போராடி வரும் நிலையில், அணுஉலை இயங்கும் வளாகத்தினுள்ளேயே அபாயகரமான அணுஉலைக் கழிவுகளைச் சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க. (Away From Reactor-AFR, Spent Fuel Storage Facility-SFSF) தேசிய அணுமின் கழகம் 2021 டிசம்பரில் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது.
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அணுஉலை வளாகத்தில் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகில் உள்ள மையத்தில் (AFR) சேமிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அணுக் கழிவுகளை சேமிக்க ஆழ்நில அணுக்கழிவு மையம் (Deep Geological Repository-DGR) தற்போது தேவைப்படவில்லை என்றும் கூறி உள்ளார். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும். ஏனெனில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை 2022 ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 24 இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது ஒன்றிய அரசு கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்படும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முனைந்து இருப்பது கண்டனத்திற்குரியது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய முயற்சிகள் நெல்லை மாவட்டத்திற்கே பேராபத்தை விளைவித்துவிடும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதுடன், கூடங்குளத்தில் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுமின் உலைகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண். 6
காவிரிப் படுகை மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த குறுவைப் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சுமார் 26 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 13 உள் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 66 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர்மழை காரணமாக திறந்தவெளிக் கிடங்குகளிலிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. மேலும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
இணையம் வழியாக பதிவு செய்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர். தொடர் மழையினால் திறந்தவெளி அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து விடுகின்றன. திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் போதிய அளவில் தார்பாய்கள் வழங்கவில்லை என்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், நெல் கொள்முதலின் போது ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல், நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 7
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே கழக உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியை வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 30, 2022 க்குள் முடிக்க வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணியை முடித்த பிறகு கழகத்தின் அமைப்புத் தேர்தலை நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திமுக
சென்னை – 8
‘தாயகம்’
09.03.2022
No comments:
Post a Comment