மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். 28 ஆவது பொதுக்குழு 23-03-2022 அன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...
தீர்மானம் எண் 1
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27 ஆவது பொதுக்குழு 06.03.2019 அன்று சென்னை, அண்ணாநகர் விஜய ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. அதன் பின்னர், இரண்டு ஆண்டுகளாக மனிதகுலத்தை அச்சுறுத்தி, பேரழிவுக்குத் தள்ளிய கொரோனா பெருந்தொற்று காரணமாக, கழகப் பொதுக்குழுவை நடத்த இயலவில்லை.
இன்று (23.03.2022) நடைபெறுகின்ற, கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் பங்கேற்று உள்ள அனைவரையும், தலைமைக் கழகம் வரவேற்கின்றது.
கடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில்,
“இந்துத்துவ சனாதனச் சக்திகளை, மக்கள் அவைத் தேர்தல் களத்தில் வீழ்த்தி, புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காக, திராவிட இயக்கங்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன், திராவிட முன்னேற்றக் கழகமும்-மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கரம் கோர்த்துள்ளன;
மக்கள் அவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறு கொண்டு பணியாற்றுவோம்”
என்று பிரகடனம் செய்தோம். அதற்காகக் களப்பணி ஆற்றினோம். 2019 மக்கள் அவைத் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் இடம்பெற்று இருந்த, திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 2021, ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும், திமுக அணி பெரு வெற்றி பெற்று, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தது. அதன் பின்னர் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற ஊர் ஆட்சி மன்றத் தேர்தல்களிலும், தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணிக்குப் பேராதரவை நல்கி வெற்றி பெறச் செய்தனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த அரசியல் நிலைப்பாட்டில் உறுதியுடன், திராவிட இயக்கத்தின் இலட்சியங்கள் கோட்பாடுகளின் வெற்றிக்குத் தொடர்ந்து துணை நின்று பாடுபடுவது என்று, இப்பொதுக்குழு உறுதி ஏற்கின்றது.
தீர்மானம் எண் 2
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வாகை சூடி, மே 7, 2021 இல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காடு, கடந்த பத்து மாத காலத்தில் நிறைவேற்றி இருக்கின்றது.
திமுக அரசு பொறுப்பு ஏற்ற நேரத்தில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. நெருக்கடி மிகுந்த பொருளாதாரச் சூழலிலும், மக்களைக் காப்பாற்ற வேண்டிய பெரும் கடமையை, மிகத் திறமையாகக் கையாண்டு கட்டுப்படுத்தியது.
தமிழக முதல்வர் பொறுப்பு ஏற்றுக் கொண்டபோது, திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இது ‘திராவிட மாடல்’ அரசு என்று பிரகடனம் செய்தார். அதன்படி, சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, அனைத்துத் தரப்பினருக்கும் சமத்துவமான வளர்ச்சி, தொழில்துறையில் புரட்சி, புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், கல்வி, வேளாண்மைத் துறைகளில் மறுமலர்ச்சி என தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ நல்லாட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மதிமுக பொதுக்குழு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 3
தமிழ்நாடு முழுமையும், ஊர் ஆட்சி மன்றங்கள், பேரூர் மற்றும் நகர் மன்றங்கள், மாநகர் ஆட்சி மன்றங்கள், ஊர் ஆட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊர் ஆட்சி உறுப்பினர் பொறுப்புகளுக்கு, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு, இப்பொதுக்குழு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கின்றது.
தீர்மானம் எண் 4
கழகத்தின் சட்ட திட்ட விதி எண் : 29, பிரிவு-21 ன்படி தேர்வு செய்யப்பட்டுள்ள, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் தி.மு.இராசேந்திரன், ஆடுதுறை இரா.முருகன்; தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ; தணிக்கைக்குழு உறுப்பினர் தி.சுப்பையா ஆகியோரை கழகப் பொதுக்குழு பாராட்டி வாழ்த்துகின்றது.
தீர்மானம் எண் 5
சமூக நீதி, சமத்துவக் கோட்பாடுகளைத் தகர்க்கும் வகையில், மருத்துவப்படிப்புகளுக்கு ஒன்றிய பாஜக அரசால் திணிக்கப்பட்ட ‘நீட்’ (NEET) எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வை எதிர்த்தும், அந்த நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017, பிப்ரவரியில் அப்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வரைவை, ஒன்றிய அரசு கிடப்பில் போட்டது.
அதனால், மருத்துவப் படிப்பு கனவு கரைந்து போனதால், அரியலூர் அனிதா தொடங்கி 17 உயிர்கள் பலியாகின.
இச்சூழலில், கடந்த ஆண்டு 2021, மே 7 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பு ஏற்றதும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 13, 2021 இல்,“தமிழ்நாடு இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கான சட்ட முன் வரைவு - 2021” நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.இரவி அவர்கள், நான்கு மாத காலமாக எந்த முடிவும் எடுக்காமல், பிப்ரவரி 1, 2022 அன்று தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு, நீட் விலக்கு சட்ட முன் வரைவு எதிராக இருப்பதால் திருப்பி அனுப்பியதாக விளக்கம் அளித்தார்.
உண்மையில், ‘நீட்’ தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெற முடியாத நிலையைத்தான் உருவாக்கி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், மருத்துவக் கல்வி பெற முடியாத வகையில் சமூக நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டு இருக்கின்றது.
‘நீட்’ தேர்வு என்பது, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலால் கொண்டு வரப்பட்டது என்று ஒன்றிய பாஜக அரசும், தமிழக ஆளுநரும் கூறுவதை ஏற்க முடியாது.
ஏனெனில், 2016, மே 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீட் தொடர்பாக அளித்த தீர்ப்பில்,
“நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் பொது நுழைவுத் தேர்வு என்ற ‘நீட்’ நடைமுறைக்கு வருமானால், அதன் விளைவாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மாறுபட்ட நிலைப்பாடு உருவானால், அத்தகைய முரண்பாடுகளை, இந்திய அரசு அமைப்புச் சட்டம், பிரிவு 254-ன்படி தீர்த்துக் கொள்ளலாம்; எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம், மாநில அரசுகளிடம் இருந்து கரைந்து போகவில்லை”
என்று, தெளிவாகக் கூறப்பட்டு இருக்கின்றது.
எனவேதான், தமிழ்நாடு சட்டப் பேரவை மீண்டும் கூடி, பிப்ரவரி 8, 2022 இல் நீட் விலக்கு சட்ட முன்வரைவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி உள்ளது.
கல்வித்துறை பொதுப் பட்டியல் என்பதால், மாநில அரசுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டு இருப்பதை உணர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள, நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்து, காலதாமதம் இன்றி, உடனடியாக, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று, தமிழக ஆளுநரை மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 6
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், இத்தகைய இட ஒதுக்கீடு அரசு அமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா? என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மருத்துவ இடங்களில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, ஒன்றிய பாஜக அரசு உயர்நீதிமன்றத்தில் வாதாடியதை, மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் திரு துரை வைகோ அவர்கள் செய்தியாளர்களிடம் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தினார்.
அதன்பிறகும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளித்தால் தகுதி, தரம் பாதிக்கப்பட்டு விடும் என்று, ஒன்றிய பாஜக அரசின் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு காரணமாகத்தான், அரசு ஆதரவில் அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகின்றார்கள். ஆனால் இதற்கு ‘நீட்’ தேர்வுதான் காரணம் என்று பாஜக கூறி வருவது, திசை திருப்பும் வேலை ஆகும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என, கழகப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 7
தேசிய மருத்துவ ஆணையம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களில், 50 விழுக்காடு இடங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு இணையாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.
ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசு ஆணைகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கட்டண வரையறை குறித்த ஆணையை, ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட்டால்தான், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர முடியும்.
எனவே, தமிழக அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ 13,650 என்பது, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என அரசு ஆணை வெளியிட வேண்டும்.
இக்கட்டண வரையறை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா? என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அமைக்க வேண்டும்.
கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனையைக் கடுமையாக்கிடவும் உரிய திருத்தங்களை ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 8
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு, கர்நாடக மாநில அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வரைந்து இருக்கின்றது. அதன்படி, கடந்த மார்ச் 4, 2022 இல், கர்நாடகச் சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, மேகேதாட்டு அணைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் அளித்த இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பொருட்படுத்தாமல், கர்நாடக மாநில பாஜக அரசு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. அதற்கு, ஒன்றிய பாஜக அரசு இணக்கமாக இருக்கின்றது.
மேகேதாட்டுவில் அணை கட்டினால், நீர்வரத்து முழுமையாகத் தடுக்கப்பட்டு, தமிழ்நாட்டின் காவிரிப் படுகை மாவட்டங்களின் வேளாண் நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும்.
சட்டநெறிமுறைகளை மீறிச் செயற்படும் கர்நாடக மாநில அரசுக்கு, நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு துணை போகக் கூடாது.
தமிழக சட்டமன்றத்தில் மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று 21.03.2022 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது.
இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 9
முல்லைப் பெரியாறு அணையில் பழுதுபார்க்கும் பணிகளையும், அணையை வலுப்படுத்தும் பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள, கேரள அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து இருக்கின்றது.
ஆயினும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தொடர்ந்து தடுத்து வருகின்றது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது, நீர்வரத்து உள்ளிட்ட தகவல்களைப் பெற, கேரள அரசு சார்பில் பொறியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கேரள மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறுவதுடன், கேரள அரசு சார்பில் அணையை ஆய்வு மேற்கொள்வது போன்றவற்றின் மூலம், தமிழ்நாட்டின் உரிமையில் தலையிட்டு வருகின்றது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து, உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் ஏ.எஸ்.ஆனந்த், ஏ.ஆர்.லட்சுமணன், கே.டி.தாமஸ் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. “முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்றது; அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்; புதிய அணை கட்டத் தேவை இல்லை” என்று தீர்ப்பு அளித்தது.
முன்னர் உச்சநீதிமன்றம் அமைத்த டாக்டர் டி.கே.மித்தல் குழு அறிக்கை, எஸ்.எஸ்.டிராய் குழு அறிக்கைகளை ஆய்வு செய்துதான், உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18, 2022 அன்று, கேரள சட்டப் பேரவையில் ஆளுநர் ஆரிப் முகமதுகான் ஆற்றிய உரையில், அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படாது என்றும், முல்லைப் பெரியாறில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கின்றது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு ஆளுநர் உரையில் அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
தமிழக அரசு விழிப்பு உணர்வுடன் கண்காணித்து, கேரள அரசின் முயற்சிகளை முறியடித்து, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும் என, இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 10
கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, அந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைப் புறக்கணித்து, இந்திய அணுவிசைக் கழகம் சார்பில், முதல் இரண்டு அலகுகளில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளை நிறுவி செயற்பாட்டுக்கு வந்த பின்னர்,
3 ஆவது மற்றும் 4 ஆவது அலகுகள் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடத்தி வருகின்றது. மேலும் 5 மற்றும் 6 ஆவது அலகுகளில் அணு உலைகள் நிறுவிட அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக்கழிவுகளை உரிய முறையில் சேமிக்கவும், பாதுகாப்பாக அகற்றவும் இந்திய அணுவிசைக் கழகத்திடம் திட்டங்கள் இல்லை.
2013 இல் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம்,
“அணுக்கழிவுகளைச் சேமித்து வைத்திட, தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) மற்றும் அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நில கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்; அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) 5 ஆண்டுகளில் அமைக்க வேண்டும்”
என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் வழங்கிய காலக் கெடுவிற்குள், இத்தகைய அணுக்கழிவு சேமிப்பு தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல் இருப்பதால், மேலும் 5 ஆண்டுகள் காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, இந்திய அணுவிசைக் கழகம் உச்சநீதிமன்றத்தில் கோரியது.
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆகஸ்ட்24, 2018 அன்று வழங்கிய உத்தரவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, கூடங்குளம் அணு உலை வளாகத்தினுள், ‘ஏ.எஃப்.ஆர்’ பாதுகாப்புக் கட்டமைப்பை அமைத்திடத் திட்டமிட்ட தேசிய அணுமின் கழகம், அதற்கான பணிகளைத் தொடங்கிட, 2019, ஜூலை 10 ஆம் நாள் நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பால், அக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கூடங்குளம் அணு உலை வளாகத்தினுள், அபாயகரமான அணுக்கழிவுகளைச் சேமிக்கும் கட்டமைப்பை உருவாக்க, தேசிய அணுமின் கழகம் 2021, டிசம்பரில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது.
இது தொடர்பாக, மதுரை மக்கள்அவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங், ‘கூடங்குளத்தில் வெளியாகும் அணுக்கழிவுகளை, முதலில் சில ஆண்டுகள் அந்த வளாகத்தினுள் தொட்டியில் பாதுகாத்து, பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப் போகும் வரை அருகில் உள்ள மையத்தில் (AFR) சேமிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
கூடங்குளத்தில் அணு உலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டும் அன்றி, இந்தியாவில் இயங்கும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டு வந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயற்படுத்த, ஒன்றிய பாஜக அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிகளை முறியடிப்பதுடன், கூடங்குளத்தில் அணு உலை
3 ஆவது மற்றும் 4 ஆவது அலகுகள் அமைத்திட, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; எக்காரணம் கொண்டும், கூடங்குளத்தில் அணு உலைக் கழிவுகளைச் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த அனுமதிக்கவும் கூடாது என்று மதிமுக வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 11
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க, ஒன்றிய அரசு ரூ 6230 கோடி நிதி வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வர், பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை, அத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை. எனவே, தமிழக அரசு கேட்டுள்ள நிதியை, ஒன்றிய பாஜக அரசு உடனே விடுவிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 12
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அவற்றைத் திரும்பப்பெறக் கோரியும், இலட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு, 2020, நவம்பர் 26 முதல் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்தனர். ஒன்றிய அரசும், பாஜக ஆட்சி நடைபெறும் உத்திர பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்கள், விவசாயிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டன.
ஆனால் விவசாயிகள் அஞ்சாமல், அறவழிப் போரைத் தொடர்ந்தனர். வெற்றி கிட்டும் வரை களத்தில் நிற்போம் என்று தீரமுடன் அறிவித்தனர். விவசாயிகளின் எழுச்சி பாஜக அரசை பணியச் செய்தது. நவம்பர் 19, 2021 அன்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதாக நரேந்திர மோடி அறிவித்தது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
அதேபோல, விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்யும் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை, விவசாய சங்கங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 13
இந்தியாவில் வேளாண் துறைக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளித்துறையை நம்பி, தமிழகத்தில் 31 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இந்தியாவின் மொத்த துணி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 19 விழுக்காடு ஆகும்.
நாடு முழுவதும் உள்ள நூற்பு ஆலைகளில் 45 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளன.
சென்ற ஆண்டு (2021) பருத்தி நூல் ஒரு கிலோ ரூ 210 ஆக இருந்தது. தற்போது ரூ 340 ஆக உயர்ந்து விட்டது. இதனால், ஜவுளித் தொழில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பருத்தி நூல் விலையை குறைக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், 2022, ஜனவரி 20 ஆம் தேதியும் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
“பருத்திக்கு விதிக்கப்படும் 11 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்க வேண்டும்;
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்த்தி, குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில், வணிக விதிமுறைகள், நிபந்தனைகளைச் சீரமைக்க வேண்டும்;
அதிகபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை 5 விழுக்காடு வட்டி மானியத்தை நூற்பு ஆலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்”
என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் ஒன்றிய அரசு, பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
எனவே, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜனவரி 17 மற்றும் 18, 2022 ஆகிய இரு நாட்கள், உற்பத்தியை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நிறுத்தி விட்டனர்.
ஜனவரி 21, 2022 அன்று, தமிழ்நாடு முழுவதும் விசைத்தறி, ஆடை மற்றும் பின்னல் ஆடை உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர்.
நிலைமையைச் சீர்படுத்தாவிட்டால், ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டுப் பயன்பாடு துணித் தொழிலகங்கள் நெருக்கடிக்குத் தள்ளப்படும். இதனால் தமிழ்நாட்டில் வேலை இழப்புகள் ஏற்படும்; தொழில்துறை அமைதி குலையும் சூழல் உருவாகும்.
எனவே, ஒன்றிய அரசு, பருத்தி நூல் விலை ஏற்றத்தைத் தடுத்து, சீரமைக்க, விரைந்து செயல்பட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 14
காவிரிப் படுகை மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில், இணையம் வழியாக முன்பதிவு செய்து, நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. எனவே, திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது. மழை, வெயிலில் நெல் மூட்டைகள் நனைந்து, பெருத்த சேதம் ஏற்படுகின்றது. எனவே, திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, போதுமான அளவு தார்ப்பாய்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நெல் ஈரப்பதத்தைக் கட்டாயப்படுத்தாமல் கொள்முதல் செய்யவும், ஒரு மூடைக்கு ரூ 30 முதல் 50 வரை லஞ்சம் கேட்பதைத் தடுக்கின்ற வகையிலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 15
தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து வெட்டி எடுத்துக் குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு, கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தீவிரம் காட்டி வருகின்றது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தலைவர் வைகோ 20.01.2015 அன்று வழக்கு தொடர்ந்தார். (வழக்கு எண் : WP(MD) 733/2015)
இந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதியரசர்கள் தமிழ்வாணன், இரவி அமர்வு முன்பாக 26.03.2015 அன்று நடந்தபோது, ஒன்றிய அரசின் ரூ 1500 கோடி மதிப்பிலான நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்குத் தடை ஆணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
2018, மார்ச் மாதம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை 13 நாட்கள் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மேற்கொண்ட விழிப்புணர்வு நடைப்பயணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, போராட்டம் வெற்றி பெற வாழ்த்தினர்.
அதற்கு முன்பு, தலைவர் வைகோ அவர்கள் தேனி மாவட்டத்தில், 658 ஊர்களுக்குச் சென்று, நியூட்ரினோ திட்டம் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டார். நீதிமன்றத்தில் வாதாடி நியூட்ரினோ ஆய்வகத்திற்கு தடையாணை பெற்றுத் தந்தார். கால் கடுக்க நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைத் திரட்டினார்.
நியூட்ரினோ நடைப்பயணம் தொடங்கிய அன்று, விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் சிவகாசி இரவி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார். கழகப் பொதுச்செயலாளரின் குடும்பத்தைச் சேர்ந்த சரவணசுரேஷ் தீக்குளித்து உயிர் இழந்தார்.
நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, பிப்ரவரி 17, 2022 அன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உலகப் பல்லுயிர்ப் பெருக்கத்தில் மிக முக்கியமான இடம்; புலிகள் சரணாலயத்தையும், கம்பம் பள்ளத்தாக்கையும் இணைக்கக் கூடிய பகுதியாக உள்ளது. சிறிய அளவிலான மனிதர்களின் அதிர்வுகள் கூட புலிகளின் நடமாட்டத்தைத் தவிர்க்கக் கூடியதாகி விடும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புதான் முக்கியம். எனவே நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கவே முடியாது” என, தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மதிமுக பொதுக்குழு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 16
ஆயுள் சிறைவாசிகள், நீண்டகாலமாகச் சிறைப்படுத்தப்பட்டு இருப்போர் முன் விடுதலை தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்து உள்ளார்.
இந்தக்குழு, தமிழ்நாட்டுச் சிறைகளில் 10 மற்றும் 20 ஆண்டுகளாக தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாமல் உள்ளவர்களில், வயது முதிர்ந்தவர்கள், பல்வேறு இணை நோய்கள் உள்ளவர்கள், உடல் நலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி, முன் விடுதலைக்குப் பரிந்துரை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக, தமிழக அரசு தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
இக்குழுவை அமைத்த தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுக்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 17
பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்தியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களின் மூலம் மேற்கத்தியத் தத்துவங்களைக் கொண்டு செல்லவும், ஆங்கிலேயர்கள் இந்த முறையை வடிவமைத்தனர். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த போதிலும், அதே நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்வுக் குழுவை, மாநில அரசு அமைக்கும். இந்தக் குழு, விண்ணப்பித்தோரின் தகுதிகளை ஆய்வு செய்து, ஆளுநருக்குப் பெயரை பரிசீலனை செய்யும். ஆளுநர், அரசுடன் கலந்து ஆலோசித்து துணைவேந்தர்களை நியமனம் செய்வார்.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் துணை வேந்தரைத் தேர்வு செய்யும் குழுவையே ஆளுநர் தேர்வு செய்தது மட்டும் அன்றி, துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் விருப்பம்தான் மேலோங்கியது. மாநில அரசுடன் பெயரளவில் கூடக் கலந்து ஆலோசனை செய்யாமல் ஆளுநர், துணை வேந்தர் நியமித்தார்.
நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் முதல்வர்தான் உண்மையான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அரசு அமைப்புச் சட்டப்படி, மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரையின்படிதான், ஆளுநர் இயங்க முடியும்.
ஆளுநரின் அதிகாரம் பரந்துபட்டது எனினும், பொதுவாக இவர் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று, உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், ஒருவர் ஆளுநராக இருப்பதால்தான் (Ex-officio) பல்கலைக் கழகங்களின் வேந்தராக உள்ளார். பல்கலைக் கழக வேந்தர் எனும் பதவி, மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழக சட்டவிதிகளின்படி வழங்கப்பட்டது ஆகும். எனவே, வேந்தர் என்ற அதிகாரத்தை, ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயல்படுத்த முடியாது.
கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகின்றது. மராட்டிய மாநில அரசு, பொதுப் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா மூலம், ஆளுநர் தமது விருப்பத்திற்கு ஏற்ப துணை வேந்தரை நியமிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் விருப்ப உரிமையைத் தவிர்க்கும் வகையில், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று, மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 18
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரித்து வருவதால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எரிபொருள் வாங்கப் பணம் இல்லாததால் மின்நிலையங்கள் முடங்கி விட்டன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு, இருள் சூழ்ந்துள்ளது.
இவ்வாறு, தொடர் சிக்கலைச் சந்தித்து வரும் இலங்கைக்கு, இந்தியா ஏற்கனவே உணவு மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்களுக்காக, 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ 7400 கோடி) நிதி உதவி வழங்கியது. மேலும், இந்தியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ 3700 கோடி) கூடுதலாக அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி இறுதியில், இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி உதவி கேட்டு இருப்பதாகவும், இது கிடைக்கும் என நம்புவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, டில்லியில் மார்ச் 17, 2022 அன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அண்டை நாடுகளுக்கு ‘முன்னுரிமை’ என்ற அடிப்படையில், இலங்கைக்கு மேலும் 7500 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் ஈழ மக்களை இலட்சக்கணக்கில் ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த கொலைகார மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே குடும்பம், ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு இன்றும் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றது.
இனப்படுகொலைக் குற்றம் இழைத்த இக்கூட்டம், பன்னாட்டு நீதிமன்ற குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவர். இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்கி, இராணுவ உதவி செய்து, தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோன இந்திய அரசின் செயல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதயத்தில் ஆறாத வடுவாக இருக்கின்றது.
தமிழ் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்கள இனவாத ராஜபக்சே அரசுக்கு, இந்தியா 18 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க ஒப்புதல் வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழர்களின் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் இத்தகைய நடவடிக்கையை, ஒன்றிய பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
ஈழத்தமிழர்களின் இறையாண்மையைத் தீர்மானிக்கின்ற வகையில், சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பது குறித்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா. மன்றம் ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 19
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, கடந்த பிப்ரவரி 9, 2022 இல் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி லாவண்யாவை, “மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால்” அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி பரப்புரை செய்தது, ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது தொடர்பாக மாணவி லாவண்யா பேசியதாக காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
பள்ளி நிர்வாகமும், விடுதிக் காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் இதனாலேயே மாணவி லாவண்யா நஞ்சு அருந்தியதாக ஒரு மாணவி பேசுவதாக ஒரு காணொளி திட்டமிட்டு வெளியிடப்பட்டது.
அதே நேரத்தில்தான், ‘குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதிக் காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும், இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்துத்தான் நஞ்சு அருந்தியதாகவும்’ மாணவி லாவண்யா கூறும் மற்றொரு காணொளியும் வெளியானது.
இது தொடர்பாக விசாரணை செய்து தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், “மதம் சார்பான பிரச்சாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை; மாணவி லாவண்யா தற்கொலைக்கு, கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது” என்று தெளிவாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ‘எங்கள் மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” என்று மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணையில், லாவண்யாவின் பெற்றோர், தமிழ்நாடு அரசு, தூய இருதய மேல்நிலைப்பள்ளி சார்பில் வழக்கு உரைஞர்கள் வாதம் நடைபெற்றது.
இந்த வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது.
இந்த நிலையில்தான், மாணவி லாவண்யா தற்கொலை குறித்த விசாரணையை நடத்திய தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மாணவி தற்கொலை விவகாரத்தில் திட்டமிட்டு அவதூறு பரப்பி, பாஜகவினர் செயல்படுவது அம்பலமாகி உள்ளதாகவும், மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
மாணவி லாவண்யா தற்கொலை நிகழ்வை முன் வைத்து, தமிழ்நாட்டில் மத வன்முறையைத் தூண்டி விடலாம் என்று முனைப்புடன் செயற்பட்ட பாஜக மற்றும் சனாதன சக்திகளுக்கு, தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா மற்றும் கத்யாயினி ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவின் அறிக்கை பதிலடி கொடுத்து உள்ளது.
திராவிட இயக்கம் செழித்து வளர்ந்துள்ள தந்தை பெரியார் மண்ணில், பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகள் மத வன்முறைகளைத் திட்டமிட்டுத் தூண்டுவதை, திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 20
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், குந்தபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு நிர்வாகம் தடை விதித்தது. ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கல்லூரிக்கு வெளியே அமர்ந்து போராடினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் அணி திரளத் தொடங்கியதும், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மூலம் ஹிஜாபுக்கு எதிராக காவித்துண்டு அணியும் போராட்டத்தை சங் பரிவாரங்கள் தூண்டி விட்டன.
கர்நாடகாவில் மேலும் 6 கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிரான இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் வலுப்பெற்றது. சிவமொக்கா, பாகல்கேட், தாவணகரே, கதக், மாண்டியா, ஹாசன், விஜயபுரா மாவட்டங்களில், ஹிஜாபுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். - பிஜேபி - சங்பரிவாரங்கள் மாணவர்களிடம் மதவெறி வன்முறையைப் பரப்பியது. சிவமொக்கா மாவட்டம் அரசுக் கல்லூரிகளில் நுழைந்த காவித்துண்டு அணிந்த மாணவர்கள், தேசியக் கொடியைக் கம்பத்தில் இருந்து இறக்கிவிட்டு, காவிக் கொடியை ஏற்றினர்.
ஹிஜாப் அணிந்து வந்த ஒரு இஸ்லாமிய மாணவியை, ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வேண்டும் என்றும், ஹிஜாப் அணியக் கூடாது என்றும் மிரட்டியபோது அஞ்சாமல், ‘அல்லாஹூ அக்பர்’ என்று முழங்கினர். அவருக்கு ஆதரவாக இந்து மாணவிகளும் ஹிஜாப் அணிந்து வந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனை அடுத்து, கர்நாடகா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள், இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவி வருகின்றன. பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, “பள்ளிச் சீருடையை மட்டுமே அணிய வேண்டும்” என்று உத்தரவிடுகின்றது. ஹிஜாப் அணிய விரும்புவோர் பாகிஸ்தானுக்குப் போகலாம் என்று அமைச்சர் ஒருவர் கூறுகின்றார்.
நாட்டின் பன்முகத் தன்மையை அழித்து, பல்வேறு தேசிய இனங்களின் அடையாளத்தைத் தகர்த்துவிட்டு இந்து ராஷ்டிரம் என்ற ஒற்றை தேசத்தைக் கட்டி எழுப்பத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்து இருப்பது, கடும் கண்டனத்திற்கு உரியது. மதச்சார்பு அற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு காவி பயங்கரவாதத்தை முறியடிக்க உறுதி ஏற்க வேண்டும்.
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மற்ற உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்துத்துவ சனாதன கூட்டத்தின் கைகளில் உத்திரபிரதேச மாநிலம் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி தொடரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, சங்பரிவார் பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்த வியூகம் அமைக்க வேண்டியதன் கட்டாயத்தை, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அந்த இலக்கை அடைவதற்கு, மாநிலக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று, இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 21
ஒட்டுமொத்த மக்களின் கழுத்தை நெறிக்கும் விலைவாசி உயர்வு; 44 தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்துக்கட்டி, மொத்தத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கும்
4 விதிமுறைத் தொகுப்புகள் திணிப்பு; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயம் ஆக்குவது; அதன் சொத்துகளை விற்றுச் சூறையாடும் பணமயமாக்கல் சதித்திட்டம்; பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்சாரத் திருத்தச் சட்டம், மக்களைப் பிரித்தாள குடி உரிமைச் சட்டத் திருத்தம் என எண்ணற்ற சட்டத் திருத்தங்கள் மூலமாக, பல்முனைத் தாக்குதல் நடத்துகின்றது மோடி அரசு.
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம், உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, சமூக நலப் பாதுகாப்பு ஆகிய உரிமைகளைப் பறித்து, தொழிலாளர்கள் நாடோடிகள் ஆக்கப்படுகின்றார்கள்; விவசாயிகள் வாழ்வாதாரம் சூறையாடப்படுகின்றது.
புதிய தாராளவாதக் கொள்கைகள் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் அதிகரிப்பதும், நடுத்தர-அடித்தள மக்கள் வாழ்வாதாரத்தைப் பறி கொடுத்து வீதிக்குத் தள்ளப்படுவதும் ஒரே சமயத்தில் அரங்கேறுகின்றது.
உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்கின்றது. அதே சமயத்தில் சர்வதேச பட்டினிக் குறியீட்டில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாகப் பின்தங்கி உள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு-குறுந் தொழில் புரிவோர், சிறு வணிகர், நெசவாளிகள், மீனவர்கள், சுய தொழில்புரிவோர் என எந்தத் தரப்பினரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. பணமதிப்பு இழப்பும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் இதைத் தீவிரமாக்கி உள்ளன.
எனவே, இவற்றைக் கண்டித்து, மார்ச் 28, 29, 2022 இரண்டு நாள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு, மதிமுக முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 22
திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களுள் ஒருவரும், ‘திராவிட லெனின்’ என்று தந்தை பெரியார் அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டவருமான, டாக்டர் தாராவாட் மாதவன் நாயர் எனும் டி.எம்.நாயர் முழு திருவுருவச் சிலையை, திராவிட இயக்க ஆட்சியாம் திமுக அரசு சென்னையில் நிறுவிட வேண்டும் என்று, நவம்பர் 19, 2021 இல் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வேண்டுகோள் அறிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், டாக்டர் டி.எம்.நாயரின் முழு உருவச் சிலையை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மதிமுக பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 23
பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக 137 நாட்களாக மக்களை ஏமாற்றி வந்த ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தி இருக்கிறது.
இதனால் பெட்ரோல் விலை ரூ 102.16 ஆகவும், டீசல் விலை ரூ 92.19 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்த்தப்பட்டு ரூ 967 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 9 தவணைகளில் சமையல் எரிவாயு விலை ரூ 255 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது 36 விழுக்காடு உயர்வு ஆகும்.
ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 24
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது, கழக சட்டதிட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் செயற்படுத்தி, உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான முழு உரிமையை கழகப் பொதுச்செயலாளருக்கு வழங்குவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
23.03.2022
No comments:
Post a Comment