Monday, July 6, 2020

இணையம் மூலம் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று  06.07.2020 திங்கள் கிழமை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஜூன் 19 ஆம் தேதி இரவில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த மனித உரிமை மீறல் நிகழ்வு, தந்தை -மகன் படுகொலை நாட்டையே உலுக்கியது. தமிழக காவல்துறையின் மீது மக்கள் கடும் கோபமும், நம்பிக்கையின்மையும் கொண்டனர்.

இந்தக் காவல்நிலைய ‘லாக்-அப்’  படுகொலையைத் தாமாக முன்வந்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மாண்புமிகு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மிகச் சரியான முறையில் இந்த வழக்கைக் கையாண்டது. அடுத்தடுத்து நீதியரசர்கள் பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்ரவதை செய்து படுகொலைக்கு ஆளான கொடுமைக்குக் காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு இருக்கின்றது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக அரசு, இக்கொடூரப் படுகொலையை மூடி மறைத்திட முனைந்து நின்ற நேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தக்க நேரத்தில்தலையிட்டு, நீதியை நிலைநாட்ட உறுதியுடன் உத்தரவுகளைப் பிறப்பித்தது. மக்கள் மனதில் நீதித்துறை மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்தின் துரித நடவடிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வரவேற்பு தெரிவிப்பதுடன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு பாராட்டுகளை உரித்தாக்குகிறது.

தீர்மானம் 2:

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு  இந்திய தண்டனைச் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ்  அந்த வழக்குகளை கொலை வழக்காக மாற்றியது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் ‘லாக்-அப்’ படுகொலை வழக்கை விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைbத் தெரிவிப்பதுடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

உலக நாடுகளை நிலைகுலையச் செய்து வரும் கொரோனா தீநுண்மி தொற்றுப் பரவலால் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி நிலவரப்படி 6.48 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 18655 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7001 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1450 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1033 பேர் கொரோனாவிற்கு பலி ஆகி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 4 ஆம் தேதி வரையில் 13 இலட்சத்து 6884 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

கொரோனா பரிசோதனை மையங்கள் 94 ஆக அதிகரித்து இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சென்னையைப் போலவே மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கான பி.சி.ஆர். கருவிகள் தமிழக அரசின் அறிவிப்பின்படி, தற்போது கையிருப்பில் உள்ள 5 இலட்சம் கருவிகள் போதுமானவை அல்ல. தொற்றைப் பரவலாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் 13 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர், பொது மக்களின் பயணத்திற்கும், போக்குவரத்திற்கும் இன்றியமையாத சேவையாற்றி வரும் இரயில்வே துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு இத்துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு பல்வேறு கூறுகளாக இத்துறையை மத்திய பா.ஜ.க. அரசு சிதைத்து சீர்குலைத்து வருகிறது. இதன் முதல்படியாக 109 வழித்தடங்களில் 151 நவீன இரயில்கள் இயக்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முனைந்துள்ளது.

நாடு முழுமையும் பல்வேறு வழித்தடங்களில் தனியார் இரயில்களை இயக்க மும்பை -2, டெல்லி -2, சண்டிகர், சென்னை, செகந்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர், திருச்சி - சென்னை, கன்னியாகுமரி - சென்னை, சென்னை - புதுடெல்லி, சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக இரயில்வேத்துறை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இரயிலவேத்துறை தனியார் மயமானால், இரயில்வே பயணக் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி தாறுமாறாக பல மடங்கு உயரும். இரயில் பயணிகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உருவாகும். சேவைத் துறை என்பது மாற்றப்பட்டு, இரயில்வே வர்த்தகத் துறையாக மாறினால், மக்களுக்கு பெரும் சுமையாக ஆகிவிடும். எனவே இரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களைப் புகுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக குழாய்களைப் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கெயில் நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் அதே நிலங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனமும் எண்ணெய் குழாய் பதிக்க முனைந்து இருப்பது விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிடும் என்தால் 7 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஐ.டி.பி.எல். நிறுவனம் அளவீடு செய்யும் பணியை தொடங்கியபோது விவசாயிகள் அதைத் தடுத்து நிறுத்தி அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இத்திட்டக் குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா 35 அடிக்கு எந்த விவசாயப் பணியும் செய்யக் கூடாது. ஆழ்துளைக் கிணறு, பிற கிணறுகளை அமைக்கக் கூடாது. ஆழமாக வேர் விடும் மரம் நடக்கூடாது. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. பாசனப் பணிக்காக குழாய் அல்லது ரப்பர் டியூப் உள்ளிட்ட எதையும் எண்ணெய்க் குழாயைக் கடந்து செல்லக்கூடாது என்றெல்லாம் ஐ.டி.பி.எல். நிறுவனம் விதிகளை வகுத்துள்ளது.

மேலும் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் இடங்களில் அவற்றில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இச்சட்டத்தில் 2012 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்துவிட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும்.

விவசாயிகளின் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனம், தமிழக அரசின் துணையுடன் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன் கீழ் 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 1300 ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக்கொள்ள குறிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இருமுறை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விவசாயப் பணிகளைக்கூட தொடர்ந்து நிறைவேற்ற வழியின்றி விவசாயிகள் முடங்கி இருப்பது மட்டுமின்றி, குடும்ப வருவாய் இழப்புக்கும் ஆளாகி வரும் சூழலில், ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லா நிலையை நன்கு தெரிந்துகொண்டே பெயருக்குக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடித்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6-7-2020  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment