Friday, September 18, 2020

ராணி பொறுப்பு ஆசிரியர் இராமகிருஷ்ணன் மறைவு. வைகோ இரங்கல்!

ராணி வார இதழின் பொறுப்பு ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களின் தாயார் கடந்த வாரம் இயற்கை எய்திய நிலையில் ஊருக்குச் சென்ற அவர், நேற்று ஏழாம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தபோது திடீரென இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எப்போதும் முகத்தில் புன்னகை தவழும் இராமகிருஷ்ணன், மிகச்சிறந்த பண்பாளர்.  பழகுகின்ற விதத்தில் எவரையும் எளிதில் ஈர்க்கக்கூடியவர். பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களோடு பழகி, அவர்களின் அன்பைப் பெற்றவர்.

என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். அவ்வப்போது வந்து சந்திப்பார். நடுநிலையோடு, என்னுடைய பல கட்டுரைகளை, ராணி வார இதழில் வெளியிட்டார். சிறந்த எழுத்தாளரான  அவர் எழுதிய கண்ணதாசன் கதை நூலுக்கு, தமிழக அரசின் விருது கிடைத்தபோது அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். அந்தப் புத்தகத்தால் அவர் நினைவு கூரப்படுவார். வணங்காமுடி என்ற பெயரில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கின்றார்.

தமிழ் ஆர்வம் மிக்கவர். இளைஞர்களை, புதிய எழுத்தாளர்களை, எழுத்து உலகில் அறிமுகம் செய்வதில் ஆர்வம் மிக்கவர். வரலாற்றுப் பதிவுகளைத் தேடிப் பதிவு செய்தார். அரசியலில் நேர்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். காலத்திற்கு ஏற்ற வகையில், ராணி வார இதழின் வடிவமைப்பில் நிறைய மாறுதல்கள் செய்தார்.

ஒரு வழக்கமான பத்திரிகையாளராக இல்லாமல், நண்பராகப் பழகிய இராமகிருஷ்ணன் மறைவு வேதனை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
 மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’ 
சென்னை - 8
18.09.2020

No comments:

Post a Comment