Sunday, March 14, 2021

இயக்குநர் ஜனநாதன் மறைவு - வைகோ MP இரங்கல்!

இனிய நண்பர், இயக்குநர் ஜனநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

தஞ்சை மாவட்டம், வடசேரியில் பிறந்தவர். சென்னை நொச்சிக்குப்பத்தில் எளிய மக்களோடு வாழ்ந்தவர், கப்பல் தொழிலாளியாகப் பணி ஆற்றியவர்; மார்க்சியம் பயின்றார். ருஷ்ய இலக்கியங்களின் மீது நாட்டம் கொண்டார். திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டு, ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, தஸ்தாயேவஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற புதினத்தைத் தழுவி, 2003 ஆம் ஆண்டு, ‘இயற்கை’ என்ற தலைப்பில், தன்னுடைய முதல் படத்தை இயக்கினார். 

சிறந்த அழகியல் நுணுக்கங்களுடனும், தொழில் நுட்பத் திறனுடனும் ஆக்கப்பட்ட அந்தப் படம், இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றது. அதனால், இந்தியத் திரைப்படத் துறை அவரைத் திரும்பிப் பார்த்தது. 2006ஆம் ஆண்டு, ‘ஈ‘ என்ற தலைப்பில் இரண்டாவதாக இயக்கிய படத்தின் மூலம், மருத்துவக் கார்ப்பரேட்டுகள், எளிய மக்களைச் சுரண்டுவதை அம்பலப்படுத்தினார். பெரும் வரவேற்பைப் பெற்றது. 

2009 பரீஸ் வசிலியேவ் என்கின்ற ரஷ்ய எழுத்தாளரின், உலகப் புகழ்பெற்ற ‘அதிகாலையின் அமைதியில்’ என்கின்ற நாவலின் பாதிப்பில், ‘பேராண்மை’ என்கின்ற படத்தை ஆக்கினார். அது பெருவெற்றி பெற்றது; மக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. 

2015 ஆம் ஆண்டு, புறம்போக்கு என்கின்ற பொது உடைமை என்ற படத்தை இயக்கினார். அதன் மூலம், பொது உடைமைக் கருத்துகளை, எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடமை ஆற்றினார். 

ஜனநாதன், திருமணம் செய்து கொள்ளவில்லை. தான் ஈட்டிய பொருள் அனைத்தையும், நண்பர்களுக்கும் சமூகத்திற்கும் உதவிடும் வகையில் செலவிட்டார். பிறருக்குக் கொடுத்து உதவிய அந்தப் பெருமகன், கொரோனா காலத்தில், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டேன் என்று கூறிய செய்தி, வேதனை அளித்தது.  

கார்ல் மார்க்சின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ‘லாபம்’ என்கின்ற படத்தை ஆக்கி, அதன் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். படத்தொகுப்பு இடைவேளையின் போது, உணவு அருந்தச் சென்றவர், மயங்கி விழுந்தார்,மூளைச்சாவு அடைந்தார். திரைப்படத் துறையின் எளிய தொழிலாளிகள் முதல், உச்ச நட்சத்திரம் வரை கலங்கிடுகின்ற அளவிற்கு, நன்மதிப்புப் பெற்று இருக்கின்ற அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.03.2021

No comments:

Post a Comment