Thursday, March 4, 2021

தினமலர் கிருஷ்ணமூர்த்தி மறைவு! வைகோ MP இரங்கல்!

தினமலர் நாள் இதழின் ஆசிரியர் பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.


கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள், 1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள்இதழ், 57 முதல் திருநெல்வேலி தச்சநல்லூருக்கு இடம் பெயர்ந்து வந்தது.

அவரது மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றபிறகு, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆக மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதை விட, நாள் இதழ் மூலமாக அடித்தட்டு மக்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்ற முடியும் என்ற வேண்டும் என்ற தந்தை இராமசுப்பு அவர்களின் அறிவுரையை ஏற்று, தினமலர் நாள் இதழ் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதழ் இயல் துறையில் பல புதுமைகளைப் புகுத்தினார். அயல்நாடுகளில் இருந்து புதிய அச்சுப்பொறிகளை இறக்குமதி செய்து பொருத்தினார்.

இந்திய நாள் இதழ்களில், டெலிபிரிண்டர்களைப் பயன்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் ஆனார்.

இன்று, கணிணிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, உலக அளவில் முதன்மையான பல மொழிகளுடன் போட்டி இடுகின்ற இடத்தில் இருக்கின்றது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்றால் அது மிகை அல்ல.

எழுத்து உருக்களைக் கையால் அச்சுக்கோர்த்து அச்சிடுகின்ற முறையில் இருந்து மாறி, கணிணிகளில் தட்டச்சு செய்து கோர்ப்பதற்குத் தேவையான, தமிழ் எழுத்து உருக்களை (Fonts) ஆக்கிய முன்னோடி அவர்தான். அதற்காகப் பல நாடுகளுக்குப் பயணித்து, பல்வேறு தமிழ் எழுத்து உருக்களை ஆக்கினார். ஆனால், அந்த எழுத்து உருக்களுக்குக் காப்பு உரிமை செய்து கொள்ளாமல், அனைவரும் பயன்படுத்திக்கொள்கின்ற வகையில், பொதுப்பயன்பாட்டுக்கு அளித்தார். அதன் காரணமாகவே, இன்று கணிணிகளில் தமிழ் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது.

அதேபோல, தினமலரில் வெளிவருகின்ற சிறப்புக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட வேண்டும் என சிலர் கூறியபோதும், அது புத்தகங்கள் அச்சிடுகின்ற பதிப்பகங்களைப் பாதிக்கும் எனக்கூறி, அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதழியல் அறத்துடன் இயங்கினார். தினமலர் நாள் இதழுக்கு என தனிப்பட்ட கருத்து இயலை ஆக்கினார்.

பழந்தமிழர் வாழ்வியல் தடங்களை ஆய்வு செய்து, தமிழரின் தொன்மையை நிறுவுவதில், மிகப் பெரும் ஆர்வலராகத் திகழ்ந்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே, காவிரிப்பூம்பட்டினம் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் நாணய இயலின் தந்தை என்கின்ற அளவிற்கு, பழந்தமிழ் நாணயங்கள் சேகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவரது நாணய சேகரிப்புகளும், அந்தத் துறையில் அவர் எழுதி இருக்கின்ற ஆய்வு நூல்களும், தமிழரின் வரலாற்று ஆவணங்கள் ஆகும்.

நான் வேலூரில் பொடா சிறைவாசம் இருந்தபோது, என்னைச் சந்திப்பதற்காக, சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.

அப்போது என்னிடம், “நான் இதுவரை சிறை வாயிலை மிதித்தது இல்லை. இந்த வழக்கை நீங்கள் எதிர்கொள்கின்ற விதமும், உங்கள் மன உறுதியும், நேர்மையும்தான் என்னை இங்கே வரச் செய்தது. உங்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வந்தேன்” என்று சொன்னார்.

பலமுறை அவரைச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். என் தந்தை போல, என் மீது பாசமும், பற்றும் பரிவும் கொண்டு இருந்தார். என் அழைப்பினை ஏற்று, என் இல்லத் திருமண நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வாழ்த்திச் சிறப்பித்தார்.

அவருடைய மறைவு, தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு. இந்திய அரசின் உயர் விருதுகள் பெற்றவர் என்றாலும், அன்னாருக்கு தமிழக அரசு தனிச்சிறப்பு செய்ய வேண்டும்.

பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவால் துயருறும் தினமலர் குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
04.03.2021 

No comments:

Post a Comment