Saturday, April 3, 2021

ஈஸ்டர் வாழ்த்து - வைகோ MP!

மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக நிகழ்வு, மீட்பர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.

அந்தகார இருள் விலகி ஒளி வெள்ளம் பாய்வது போல், மூன்றாம் நாள் இயேசுபெருமான் உயிர்த்து எழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றார்கள்.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதயத்தில் அமைதியையும், இளைப்பாறுதலையும் வழங்குகின்ற இயேசுநாதரின் அறிவுரைகள், இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை ஆகும். கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை, அவர்களது மனங்களில் ஈஸ்டர் ஏற்படுத்துகின்றது.

மீட்பரின் போதனைகள் மனித குலத்துக்கு வழிகாட்டின. ஊழல் நரகத்தில் சிக்குண்டு நலிந்துள்ள தமிழகத்தில், நேர்மையான நல்லாட்சி மலரும் என்ற நம்பிக்கையுடன்  கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.04.2021

No comments:

Post a Comment